Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2013||(1 Comment)
Share:
1. ஒரு தேடலின் தொடக்கம்

நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்' என்று ஒரே வரியில் விமரிசிக்கப்படும் துரோணரைத்தான் சொல்கிறேன்.

மிகச்சிறிய வயதில் ராஜாஜியின் வியாசர் விருந்து--தற்போது மகாபாரதம் என்ற பெயரில் வெளிவரும்--புத்தகத்தைப் படித்த காலத்திலிருந்து எனக்கிருந்த மகாபாரத ஆர்வம், பாரதியின் பாஞ்சாலி சபதத்தால் அதிகரித்து, பேராசிரியர் நாகநந்தியால் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. 1977-78ம் ஆண்டில் நடிகர் ஆர்.எஸ். மனோகருக்காக 'துரியோதனன்' நாடகத்தை ஆசிரியர் எழுதினார். அது அந்த ஆண்டின் இயல் இசை நாடக மன்ற விருதைப் பெற்றது. அவருடன் பழகப் பழகத்தான், மகாபாரதத்தை நாம் எவ்வளவு தவறான முறையில் புரிந்து கொண்டிருக்கிறோம், ஒற்றை வரி விமரிசனங்களால் பெரும்பாத்திரங்களைச் சிறுமைப்படுத்தியும், சற்றும் பொருந்தாத பெருமைகளை வேறு சில பாத்திரங்களுக்கு அளித்தும் வருகிறோம் என்பது புலனாகத் தொடங்கியது.

சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து என்ற பெயர்களில் வெளிவந்திருந்த ராஜாஜியின் ராமாயண, பாரதங்களை நான் படிக்கத் தொடங்கியபோது எனக்கு ஏழெட்டு வயதிருந்திருக்கலாம். எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலத்தில் இவற்றை என் தாயார் கொடுத்து வாசிக்கச் சொன்னார். ராஜாஜியின் எளிய, இனிய, அதேசமயம் செறிவான நடை என்னுடைய எட்டுவயது மனத்தையும் எட்டியது. இந்தப் புத்தகங்கள் என்னுள் விளைவித்த பசி இன்னமும் அடங்கவில்லை. பொதுவாகப் படிப்பார்வமும், குறிப்பாக ராமாயண பாரதங்களை மேலும் மேலும் தேடிக்கண்டடையும் என் வேட்கையும் ராஜாஜிடமிருந்தே தொடங்குகின்றன. அதன் பிறகு, 'ஆதாரபூர்வமானது' என்றும் 'மூலத்துக்கு நெருக்கமானது' என்றும் குறிக்கப்பட்டு வெளிவந்த எத்தனையோ ராமாயண பாரதப் பதிப்புகளைப் படித்தாகிவிட்டது. ஒவ்வொரு புதிய பதிப்பை வாங்கும்போதும், 'இந்தப் பதிப்பிலாவது நாம் தேடும் எல்லா விவரங்களும் கிட்டும்' என்ற நம்பிக்கையுடன் தொடங்குவதும், படித்து முடிக்கும்போது, ஒருசில விடைகளைத் தேடிப்பிடித்திருந்த போதிலும், பற்பல கிளைக்கேள்விகள் முளைப்பதுமே வழக்கமாகிப் போனது. இந்த வேட்கை பூர்த்தி அடையுமா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படித்தான் ராஜாஜியில் தொடங்கிய ராமாயண ஆர்வம் கம்பனைப் பலமுறை வாசிக்கும்வரை அடங்கவில்லை. கம்பனில் முளைத்த ஆர்வம் என்னை வால்மீகி வரையில் துரத்தியது.

மகாபாரத விஷயத்திலும் இவ்வாறேதான். ராஜாஜியின் எளிய நடை சிறுவர்களுக்கும் புரியக்கூடியதாக இருந்தபோதிலும், ராமாயணத்தைப் போலவே, ராஜாஜியின் பாரதத்திலும் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தரவில்லை. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்காமல் ஒதுங்கிக் கொண்டார் என்று இதற்குப் பொருளில்லை. இந்த இதிகாசங்களின் மையக்கரு சிதையாமலும், பாத்திரங்களின் தன்மை குன்றாமலும் ஒரு சாதாரண வாசகனுக்குச் சுருக்கமாக இவற்றைச் சொல்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. கதையோட்டத்திலேயே அவருடைய கவனம் இருந்த காரணத்தால், கதாபாத்திரங்களின் தன்மையைச் சித்திரிப்பதில் முழுமையைக் காட்ட இயலாமல் போனது. காரணம் அவர் எடுத்துக்கொண்ட வடிவமைப்பு மிகமிகச் சுருக்கமானது. ராமாயணத்தில் நூற்றில் ஒருபங்கு சொல்லியிருக்கிறார் என்றால் பாரதத்தில் ஆயிரத்தில் ஒருபங்கு சொல்லியிருப்பாரோ என்று கூறத் தோன்றுகிறது. பாரதக் கதையின் யுத்தப் பகுதியில்தான் பாத்திரங்கள் முழுமை பெறுகின்றன. அவருடைய விவரிப்பில் பாரத யுத்தப் பகுதி, ஒரு துளியிலும் துளியளவே இடம் பெற்றிருக்கிறது. அவர் எடுத்துக்கொண்ட பணியை மிகச்சிறப்பாக ஆற்றியிருக்கிறார் என்றபோதிலும், பாரதக் கதையைக் குறித்து எழும் பற்பல கேள்விகளுக்கு விடையளிக்க அவருடைய வடிவம் போதுமானதாக இல்லை.

ஆனால், வாசகர்களில் பலரும் ராஜாஜியுடைய வடிவத்தையே முழுமையானது என்று கருதிவிடுகிறார்கள். எங்கெல்லாம் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையோ, அங்கெல்லாம் தத்தமக்குத் தோன்றிய விடைகளை, பொருத்தமாகவும் இயற்கையாகவும் தொனிக்கும் விதத்தில் விளக்க முற்படுகிறார்கள். இணையத்தில் இப்படிப்பட்ட பல விளக்கங்களைப் பார்த்தும் படித்தும் வருகிறேன். கதையைப் படித்து அதிலிருந்து விடையை வடித்தெடுப்பதற்கு மாறாக, விடையை முன்கூட்டியே கற்பித்துக்கொண்டு, அதற்குப் பொருத்தமான பாரத மேற்கோள்களைத் தேடி எடுத்துத் தயாரிக்கப்பட்ட விளக்கங்கள் நிறையவே வந்திருக்கின்றன. கேள்விகள், குழப்பங்களாக மாறி வெகுகாலம் ஆகின்றது. இப்படிப்பட்ட முயற்சிகளால் நம் விவாதத் திறன் வேண்டுமானால் வெளிப்படலாமே ஒழிய, உண்மை என்பது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் எட்டாத் தொலைவுக்குப் போய்விடுகிறது. மூலநூல் என்ன சொல்கின்றது, மூலத்தை இயற்றியவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்தாலொழிய, நம்முடைய வரைபடத்தை மூலநூலை ஒட்டியவாறு தயாரித்தாலொழிய, சத்திய தரிசனத்துக்கான பாதை சரியாக அமையாது. இது அனுபவம் கற்றுத்தந்த பாடம்.

இப்படித்தான் நான் ராஜாஜியின் வியாசர் விருந்திலிருந்து வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட வியாச பாரத தமிழ்மொழிபெயர்ப்புக்கு மாறினேன். 'நம் தேடல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது' என்றுதான் இதனை வாசிக்கத் தொடங்கிய சமயத்தில் கருதினேன். ஆனால், இந்த மொழிபெயர்ப்பும் ஒரு சுருக்கமான வடிவம்தான். முழுமையானதன்று. எங்கெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்கு அவசியமில்லை என்ற பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மூலநூலின் பகுதிகள் விடுபட்டிருக்கின்றன. இதனால் கதையோட்டம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கதையின் சிக்கல்களுக்கான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முக்கியமான இழையோட்டங்கள் கைகளுக்கு எட்டாமல் போய்விட்டன. நீளத்தைக் கருத்தில் கொண்டும், விவரிப்பின் சுவாரசியத்தை மனத்தில் இருத்தியும் மொழிபெயர்ப்பாளர் செயல்பட்டிருக்கிறார் என்ற போதிலும், விடுபட்ட இடங்களில் மிகமிக முக்கியமான குறிப்புகள் அடிபட்டுப் போய்விட்டன. உதாரணமாக, ஆநிரை கவர்வதற்காக சுசர்மன் கிளம்பியது கிருஷ்ண பட்ச ஸப்தமியன்று எனவும்; துரியோதனாதியர்கள் அதற்கடுத்த நாளான அஷ்டமியன்று கிளம்பினர் எனவும் வியாசர் குறிக்கிறார். இந்தக் கணக்கு மொழிபெயர்ப்பில் விடுபட்டுவிட்டது. ஆதாரமான இந்தக் குறிப்பை விட்டுவிட்டபடியால், ஆநிரை கவர்ந்த பர்வத்தில் அர்ஜுனன் வெளிப்பட்ட நாளில் பாண்டவர்களுடைய அக்ஞாத வாச காலம் முடிந்திருந்ததா என்ற கணக்குக்கு விடைகிட்டாமல் போய்விடுகிறது. அக்ஞாத வாசம் கிருஷ்ணபட்ச அஷ்டமியன்றே (அதாவது துரியோதனாதியர் ஆநிரை கவர்வதற்காகக் கிளம்பிய அன்றே) முடிவடைந்திருந்தது. இதுபோன்ற மிக நுட்பமான குறிப்புகள் ஏராளமாக விடுபட்டுப் போயிருக்கின்றன.
வர்த்தமானன் பதிப்பும் போதாத நிலையில், ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள மகாபாரத ஸாரத்தை வாங்கினேன். வியாசருடைய மூல ஸ்லோகங்களையும் அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்பையும் வரிசைக் கிரமமாகத் தந்திருக்கிறார்கள். ஜராசந்த வதத்தின்போது, ஒரு புல்லை எடுத்து இரண்டாக வகிர்ந்து, தலைமாற்றிப் போட்டு, பீமனுக்கு கிருஷ்ணன் குறிப்பு தருவதாக வரும் நிகழ்வு ஒரு இடைச்செருகலே என்பது போன்ற பல முக்கியமான குறிப்புகள் இந்தப் பதிப்பில் கிட்டின. ஆனாலும், இது ஒரு சுருக்கமன பதிப்புதான். இங்கேயும் எனக்கான விடைகள் கிட்டியபாடில்லை.

பிறகு பவன்ஸ் வெளியீடான கமலா சுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்கு மாறினேன். மிக அருமையான விவரிப்பு. வாசகனுடைய மொத்த கவனத்தையும் ஈர்த்து, புத்தகத்தை முடிக்கும்வரையில் கீழே வைக்கவிடாத அழகான, அருமையான நடை. இருந்தபோதிலும், கமலா சுப்பிரமணியம் விவரித்திருக்கும் சில சம்பவங்கள், வியாச மூலத்தில் இல்லை என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டேன். எந்தக் கதையையானாலும், இன்னொருவர் எடுத்துச் சொல்லும்போது நடக்கும் இயல்பான ஒன்றுதான் இது. அங்கங்கே சில விஷயங்கள் விடுபட்டுப் போகும்; பல விஷயங்கள் வந்து சேரும். கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இடம் கமலா சுப்பிரமணியத்தின் விவரிப்பில் படிக்கும்போது கண்ணில் நீர் வரவில்லை என்றால் அந்த மனம் இரும்பினும் கடினமான ஒன்று. ஆனால், இந்த விவரிப்பு வியாசரின் விவரிப்புடன் ஒத்துப் போகவில்லை என்பதே உண்மை. இதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

ராமாயணத்தில் பெற்ற அனுபவத்தின் காரணமாக, 'மூலநூலையோ, அல்லது மூல நூலுக்கு வெகு நெருக்கமான—கூடுமானவரையில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தந்திருக்கும்—மொழிபெயர்ப்பையும், வடமொழி மூலத்தையும் இணையாக வைத்துப் படித்தாலொழிய நமக்கு ஒரு தீர்வு கிட்டப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து, கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தேன். இந்த மொழிபெயர்ப்பு அச்சிலும் கிடைக்கிறது; இணையத்திலும் இருக்கிறது. கூடுதலாக, இணையத்தில் வடமொழி மூலமும் கிடைக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு வாசிக்கும்போது சித்திரம் மெல்ல மெல்லப் பிடிபடுகிறது என்பதை உணர்ந்தேன். வில்லி பாரதத்தையும் இதற்கு முன்னர் வாசித்திருந்த காரணத்தால், வியாசரும் வில்லியும் வேறுபடும் இடங்கள் பிடிபட்டன. வியாசருடைய சித்திரத்துக்குச் சற்றே விளக்கமாகச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் வில்லி ஆங்காங்கே சில காட்சிகளையும், விவரங்களையும் சேர்த்திருக்கிறார். ஆனாலும், நாடகப் பாங்கு என்பதிலும், பாத்திரப் படைப்பு என்ற திறக்கிலும் கம்பனுடைய திறம் வேறு; வில்லியுடைய திறம் வேறுதான். சில இடங்களில் (குறிப்பாக திரௌபதியின் பாத்திரப் படைப்பு) வில்லியின் சித்திரத்தில் பிறழ்வுகள் நேர்ந்திருக்கின்றன என்பது ஓர் இலக்கியவாதியாக என்னுடைய அபிப்பிராயம்.

இதிகாசங்களுள் புகும்போது எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது என்பது மட்டுமே ஒருவருடைய நோக்கமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. தாம் கண்ட அந்தத் தீர்வு, மூலநூலாசிரியனுடைய கருத்துக்கு ஒத்ததாக இருக்கிறதா, நாம் கண்டிருக்கும் இந்த விளக்கத்தை மூலநூல் ஏற்கிறதா, அத்துடன் இந்த விளக்கத்தைப் பொருத்திப் பார்த்தால் இது நிற்குமா என்று தோய்ந்து பார்த்து, நடுவுநிலைமை தவறாமல் ஒரு கருத்தை உள்ளது உள்ளபடி எடுத்து வைப்பதே ஆய்வுநிலை வாசகன் ஒவ்வொருவனின் நோக்கமாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.

2001ம் வருடம் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு அன்றாடம் ராமாயண கதாபாத்திரச் சித்திரங்களை வழங்கி வந்தவன் என்ற முறையில் சென்னைஆன்லைன் வாசகர்கள் என்னை அறிவர். என்னுடைய அந்த முயற்சி பயனுள்ளதாக இருந்தது என்பதை—சில சொந்தக் காரணங்களால்—அந்தப் பத்தி நின்று மூன்றாண்டுகளுக்குப் பிறகும் வந்துகொண்டிருக்கும் வாசகர் கடிதங்களின் மூலம் அறிகிறேன். ராமசேது விஷயத்தில் என்னுடைய விளக்கங்களும் ஆவணங்களின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கின்றன என்பது எனக்குக் கிடைத்த பேறு.

இதோ, மீண்டும் உங்கள்முன் வந்திருக்கிறேன். இந்தமுறை மகாபாரதத்துடன். மற்ற பதிப்புகளைக் காட்டிலும் கும்பகோணம் பதிப்பு என்றறியப்படும் தமிழில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பையும், கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பையும், வடமொழி மூலத்தையும், வில்லி பாரதத்தையும் துணையாகக் கொண்டு, பலகாலங்களாக விவாதிக்கப்பட்டுவரும் பல வினாக்களுக்கு விடைகாண முற்படுகிறேன். இந்த வினாக்களுக்கு இவை மட்டும்தான் விடை என்பதல்ல என்னுடைய நிலைப்பாடு. இவை, மூலநூலாசிரியர்களால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு அணுக்கமானவை என்பதே நான் சொல்ல விழைவது. தேவையான இடங்களில் மூலநூலிலிருந்தும், மொழிபெயர்ப்பிலிருந்தும் மேற்கோள்களைத் தருகிறேன்.

கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பை நான் பெரிதும் நம்புவதற்குக் காரணம் உண்டு. அவர் பல பதிப்புகளை ஒப்பிட்டு, மாறுபாடுகள் உள்ள இடங்களில் அடிக்குறிப்பாக 'இந்த இடத்தில் பம்பாய் பதிப்பில் இவ்வாறு உள்ளது; வங்காளப் பதிப்பில் இவ்வாறு உள்ளது. நான் இன்ன காரணத்துக்காக இன்ன பாடத்தை ஏற்றிருக்கிறேன்' என்ற விளக்கம் உட்பட, நடுவுநிலை பிறழாமல் செய்திருக்கிறார் என்பது முக்கியமான காரணம். பொருத்தமான பாடத்தைத் தேர்ந்ததோடு மட்டுமல்லாமல், பிற பாடங்களையும் வாசகன் அறியச் செய்கிறார் என்பது, மற்ற பதிப்புகளில் பார்க்க முடியாத அமைப்பு. என் தாகம் பல பதிப்புகளை மேய்ந்து கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஓரளவு தணிந்து, தற்போது கும்பகோணம் பதிப்பால் முழுமை பெற்றிருக்கிறது.

வாருங்கள். நம் பாரதப் பயணத்தைத் தொடங்குவோம். வாசகர்களுக்குக் கேள்விகளிருந்தால் அவற்றை எனக்கு அனுப்பி வைக்கலாம். உரிய இடங்களில் விடைகளைத் தொகுத்துத் தர முயல்கிறேன். இந்த முயற்சியில் தெய்வத் திருவருளும், உங்களுடைய ஆசியும் எனக்குத் துணை நிற்கட்டும்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்<>
Share: 




© Copyright 2020 Tamilonline