|
தென்றல் பேசுகிறது... |
|
- |மார்ச் 2013||(1 Comment) |
|
|
|
|
|
அமெரிக்கப் பெண்களைப் போன்ற சுதந்திர மனோபாவமும் கல்வியறிவும் இந்தியப் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர். அதனால்தான் அவர் சகோதரி நிவேதிதாவின் மூலம் கொல்கத்தாவில் பெண்களுக்கான கல்விச்சாலை ஒன்றைத் தொடங்கினார். தமிழின் மகாகவியான சுப்ரமணிய பாரதிக்குப் பெண்கள் சமத்துவம், விடுதலை என்ற சமகாலத்தவரைத் தாண்டிய எண்ணங்கள் வந்ததென்றால் அது விவேகானந்தரிடம் தொடங்கி, சகோதரி நிவேதிதா மூலம் பாரதிக்கு வந்ததே. பாரதி கொல்கத்தா காங்கிரசுக்கு நண்பர்களுடன் போயிருந்தார். அங்கே அவர் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். மனைவியாரை அழைத்துவரவில்லையா என்ற நிவேதிதாவின் கேள்விக்கு, காங்கிரஸ் மாநாட்டில் பெண்களுக்கு என்ன வேலை என்பதாக விடையிறுத்த பாரதியாருக்கு நிவேதிதாதான் ஆணும் பெண்ணும் ஒரே முகத்தின் இரண்டு கண்கள் போன்றவர்கள் என்பதை உணர்த்தி, பாரதியை அடியோடு திருப்பிப் போட்டார். "புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்" என்று பாரதி அவரை ஞானத்தாயாகவே வணங்கி நிற்பதைக் காண்கிறோம்.
"துன்பந் தீர்வது பெண்மையினாலடா" என்று பாடிய பாரதியை, அவருக்கு உந்துசக்தியாக இருந்த விவேகானந்தரை, சகோதரி நிவேதிதையை இந்த அற்புதமான 'மகளிர் சிறப்பிதழ்' நேரத்தில் நினைவுகூர்கிறோம். ஆனால், அதே பெண்மைக்கு இன்றைய இந்தியாவில் ஏற்பட்டு வரும் துன்பங்கள் எண்ணற்றவை என்பதையும் மிகுந்த சோகத்துடன் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது. இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தேசத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் 'நிர்பயா நிதி' என்ற பெயரில் மகளிரைச் சமூகரீதியாக வலுப்படுத்தவென ரூ. 1000 கோடி நிதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இது நல்லதே. ஆனால், இதனால் அவர்கள்மீது ஏவப்படும் பாலியல்ரீதியான வன்கொடுமைகளைத் தடுக்கமுடியுமா என்பது விவாதத்துக்கு உரியதாகக் கருதப்படலாம்.
தன் இச்சைக்கு இணங்காத காரணம், வரதட்சணை கேட்டுத் தராத காரணம் என்பது போல எண்ணற்ற காரணங்கள் காட்டிப் பெண்கள் உடலாலும் மனதாலும் பெருங்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, சிறு குழந்தைகளும் சிதைக்கப்படுகிறார்கள். இதைச் செய்கிறவர்கள் ஏதோ படிக்காதவர்கள்தாம் அல்லது ஆண்கள்தாம் என்றில்லை. பல சமயங்களில் பெண்களும் இத்தகைய கொடுமைகளுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன. எல்லாத் தரப்பு மக்களுக்கும் இது குறித்து உணர்வுறுத்தல் (sensitizing) மிக அவசியமாக இருக்கிறது. குறிப்பாக திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் பெண்களைக் கொச்சைப் படுத்துவதும் நுகர்பொருளாகக் காண்பிப்பதும் கறாராகத் தடுக்கப்படுவது அவசியம். அதற்கு முதல் படியாக, ஒரு ஆரோக்கியமான மரியாதையையும் மதிப்பையும் நம் வீட்டுப் பெண்டிருக்கு நாம் தருவதன் மூலம், நம் குழந்தைகளுக்கு நாம் முன்னோடியாக இருக்கலாம். பண்பு என்பது நடத்தையாலே போதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
***** |
|
இந்த இதழின் அட்டையைப் பார்த்தாலே மகளிரில் எத்தனை வகைச் சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரலாம். மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகளைக் கொண்டிருந்தபோதும் மிகக் குறைந்த ஊதியமே பெறும் அமெரிக்க உணவகத் தொழிலாளிகளின் உயர்வுக்கு வெற்றிகரமாகப் போராடும் சாரு ஜெயராமன்; வாரியார் வழியில் ஹரிகதை கூறும் தேச. மங்கையர்க்கரசி; மோட்டர்பைக் வீராங்கனை சித்ரா ப்ரியா; ஆட்டோ ஓட்டுபவருக்கு மகளாகப் பிறந்து, இந்திய அளவில் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் தேர்வில் முதலாவதாக வந்த பிரேமா; புகைப்பட உலகில் சாதிக்கும் ராமலக்ஷ்மி என சாதனைப் பெண்களின் அணிவகுப்பு ஒன்று இந்த இதழில் உள்ளது. டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டிகளில் மிக அதிகத் திருக்குறள்களைப் பொருளோடு கூறி முதலாவதாக வந்த சீதாவை நினைத்தும் தென்றல் பெருமிதம் அடைகிறது. பெண்மை வாழ்கென்று கூத்திடும் கதை, கவிதை, கட்டுரைகளோடு இந்த நேர்த்தியான இதழை உங்கள் கையில் பணிவோடு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறோம்.
வாசகர்களுக்கு மகா சிவராத்திரி, புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!
ஆசிரியர் குழு
மார்ச் 2013 |
|
|
|
|
|
|
|