|
ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் |
|
- அரவிந்த்|ஜனவரி 2013| |
|
|
|
|
|
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனப் பல திறக்குகளில் இயங்குபவர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன். இவர், மே 18, 1947 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் பிறந்தார். பள்ளிப்படிப்பு அங்கேயே. பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பயின்றார். சிறுவயது முதலே கேட்ட மேடைப்பேச்சுக்களும் படித்த நூல்களும் தமிழின் மீது ஆர்வத்தைத் தூண்டின. கல்லூரி அதற்கு வாசல்களைத் திறந்து விட்டது. கல்லூரி நூலகத்துக்கு வந்த சிற்றிதழ்கள் இவரது வேட்கையை வளர்த்தன. கவிதை எழுத ஆர்வம் பிறந்தது. முதல் கவிதை கல்லூரி ஆண்டுமலரில் வெளியானது. லால்பகதூர் சாஸ்திரியின் மீது இரங்கற்பாவான 'என்று இனி காண்போம்' எனும் அக்கவிதை மாணவர்கள், பேராசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றது. சிற்றிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் எழுத ஆரம்பித்தார். பல கட்டுரைகளையும் எழுத அவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின்னர் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. தமது எழுத்துப் பணியினையும் தொடர்ந்தார். அப்போது 'கண்ணதாசன்', 'முல்லைச்சரம்' போன்ற இலக்கிய இதழ்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன. ராதாகிருஷ்ணனின் கவிதைத் திறனால் ஈர்க்கப்பட்ட கண்ணதாசன், இவரைப் பாராட்டியதுடன், தொடர்ந்து 'கண்ணதாசன்' இதழில் எழுத வாய்ப்பளித்தார். ராதாகிருஷ்ணனின் முதல் கவிதை நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார். அடுத்து வானொலிமீது இவரது கவனம் திரும்பியது. கவிதைகள், நாடகங்கள், உரைச்சித்திரங்கள் என இவரது படைப்புகள் வானொலியில் ஒலிக்கத் துவங்கின. முதலில் நகைச்சுவை நாடகங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், அப்போது அகில இந்திய வானொலியின் இயக்குநராக இருந்த விஜய திருவேங்கடத்தின் ஊக்குவிப்பால் 'நிழல் தேடும் நெஞ்சங்கள்' போன்ற சமூக அம்சங்கள் கொண்ட நாடகங்களை எழுதி கவனம் பெற்றார்.
கவிதையின் மீது இவருக்குத் தனிப்பட்ட ஆர்வம். எனவே 1972ம் ஆண்டில் 'கவிதை உறவு' என்ற இலக்கியச் சிற்றிதழை ஆரம்பித்தார். அதில் இளம் கவிஞர்கள் பலருக்கு எழுத வாய்ப்பளித்தார். 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து அந்த இதழ் வெளிவருவது சிற்றிதழ் உலகில் குறிப்பிடத்தக்கதாகும்.
அம்மாவின் சேலை அது பருத்தியால் மட்டுமன்று பாசத்தாலும் நெய்யப்பட்டது தான் அழுத கண்ணீரை அந்த முந்தானையில்தான் அவள் துடைத்திருப்பாள்.
அவள் உடுத்திய சேலைகள் கிழிந்திருக்கலாம் அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும் இன்னும் அப்படியே!
***** |
|
|
கவிதை சிலருக்கு கவிதை பலருக்கு விதையாக இருக்கிறது விளைவிக்கிறார்கள் .
கவிதை சிலருக்குதான் கவிதையாக இருக்கிறது காலத்தை வெல்கிறார்கள் .
*****
மகாத்மா காந்தி மீண்டும் பிறக்க வேண்டும் ராட்டையோடு அல்ல சாட்டையோடு!
போன்ற கவினழகும் கருத்தாழமும் கொண்ட ஏர்வாடியாரின் கவிதைகள் பலரது பாராட்டைப் பெற்றவை. 'யாரும் யாராகவும்' என்ற இவரது கவிதைத் தொகுப்பு பரவலாகக் கவனத்தைக் கவர்ந்த ஒன்று. 'வெளிச்சம் வருகிறது', 'கனவின் பெயர் கவிதை', 'கவிதை மின்னல்கள்', 'ஆதலினால்', 'கல்யாணக் கனவுகள்', 'நிழல்கள் பொய்யல்ல' போன்றவை முக்கியமான கவிதை நூல்களாகும். ராதாகிருஷ்ணன் 1982ல் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கண்ணதாசன் உள்ளிட்ட கவிஞர்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். கிரீஸ், தாய்லாந்தில் நடைபெற்ற 8வது, 12வது உலகக் கவிஞர்கள் மாநாட்டிலும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். துபாய், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். இவர் வங்கியில் ஆட்சி மொழித்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் 15000 வங்கிக் கலைச் சொற்களைத் தொகுத்து 'வங்கிச் சொற்கள் அகராதி'யைத் தயாரித்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதை வெளியிட்டார். இவரது பொன்விழாவின் போது, இவரது இலக்கியச் சேவையை கௌரவிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டதுதான் 'பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது'. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க விருதாக இது கருதப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சிறப்பு விருந்தினராக, விமர்சகராக, பேட்டியாளராக, கவிவாணராக இவர் பங்குபெற்று வருகிறார். தமிழகத்தின் புகழ்பெற்ற பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளின் பயிற்சிப் பட்டறைகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காந்தியச் சிந்தனைகள் படிப்பில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள இவருக்கு, அமெரிக்காவின் உலகப் பல்கலைக்கழகம் டி.லிட். பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. 5 கவிதைத் தொகுதிகள், 12 சிறுகதைத் தொகுப்புகள், 7 நாடகங்கள் உள்பட 86 நூல்களைப் படைத்துள்ள இவரது சிறுகதைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் துணைப்பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. ஐநூறுக்கும் அதிகமான வானொலி, தொலைக்காட்சி நாடகங்களைத் தந்துள்ளார். நூறுக்கும் அதிகமான இவரது இசைப்பாடல்களைப் பிரபல பாடகர்கள் பாடியிருக்கின்றனர். திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ளார். 'கவிதை உற'வில் இவர் எழுதிவரும் 'என் பக்கம்' தொகுக்கப்பட்டு இதுவரை 12க்கும் மேற்பட்ட பகுதிகள் வெளியாகியுள்ளன. 'திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல' என்ற இவரது சிறுகதை 'அமுதசுரபி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன், தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசும் பெற்றது. பின்னர் அரசின் ஃபிலிம் டிவிஷன் அதே கதையைக் குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டது. 'இன்னும் ஒரு மீரா' என்ற நூலுக்கும் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு கொடுத்துள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி, தமிழ் வளர்ச்சித்துறையின் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருது, சென்னை கம்பன் கழகம் வழங்கிய ச.கு. கோதண்டராமன் விருது, இலக்குவனார் இலக்கியப் பேரவை வழங்கிய இலக்குவனார் விருது, கவிச்சிற்பி, இலக்கிய ரத்னா, இலக்கியப் பேரொளி, நாடகப் பேரொளி உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். வருடந்தோறும் கவிஞர்களை அழைத்துக் கவிதைத் திருவிழா ஒன்றை நடத்தி வருகிறார். தனது இலக்கிய இதழின் பெயரிலேயே 'கவிதை உறவு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் சிறந்த சமூகப் பணியாளர்களுக்கு, மனித நேய ஆர்வலர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். தனது கவிதை உறவு அறக்கட்டளை மூலம் நூல்கள் வெளியிட வாய்ப்பில்லாத கவிஞர்களின் நூல்களை வெளியிடவும் நிதியுதவி செய்திருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் தமது ட்ரஸ்ட் மூலம் ஏழைச் சிறார்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறார். பாரத வங்கியில் 40 ஆண்டுகள் பணியாற்றி பணி ஓய்வு பெற்றிருக்கும் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், தற்போது முழுக்க முழுக்கக் கவிதை மற்றும் எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அரவிந்த் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|