|
பட்டுக்கோட்டை பிரபாகர் |
|
- அரவிந்த்|டிசம்பர் 2012| |
|
|
|
|
|
வெகுஜன எழுத்திலும் தரமான படைப்புகளைத் தர முடியும் என்று நிரூபித்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர். தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் ராதாகிருஷ்ணன், சந்திரா தம்பதியினருக்கு ஜூலை 30, 1958 அன்று மகனாகப் பிறந்தார். அங்கே பள்ளிப்படிப்பை முடித்தபின் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்றார். தாயார் இலக்கிய ஆர்வலர். அதனால் பள்ளியில் நாட்களிலேயே கல்கி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சாண்டில்யன் நூல்கள் அறிமுகமாயிருந்தன. கல்லூரி எழுத்தார்வத்தை வளர்த்தது. நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழு அமைத்து கல்லூரி நாடக விழா, ஆண்டுவிழா, விடுதி தினம் போன்றவற்றிற்கு நாடகங்களை நடத்தினார். மாணவர்களது ஆதரவும், பேராசிரியர்களது ஊக்கமும் எழுத்தார்வத்தைத் தூண்டின. நிறைய வாசித்தார். நகைச்சுவை நாடகங்களை கதை, வசனம் எழுதி அரங்கேற்றியதுடன் நடிக்கவும் செய்தார். படிப்பை முடித்தபின் குடும்பத் தொழிலை மேற்கொண்டார். அஞ்சல்வழியில் எம்.ஏ. பொருளாதாரப் படித்துக்கொண்டே, சிறுகதைகள் எழுதினார்.
முதல் சிறுகதை 'அந்த மூன்று நாட்கள்' ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில் வெளியானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது போல, தந்தையின் ஆலோசனைக்கிணங்க 'பட்டுக்கோட்டை பிரபாகர்' ஆனார். எஸ்.ஏ.பி., சாவி எனப் பலரும் ஊக்குவிக்கவே சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இதழின் துணையாசிரியராகச் சாவி இவரை நியமித்தார். அதில் இவர் எழுதிய 'ஒரு வானம்: பல பறவைகள்' என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாவல் 'அங்கே இங்கே எங்கே?' சாவி நடத்திய மோனாவில் வெளியானது. அப்போது துப்பறியும் நாவல்களுக்கு வரவேற்பு இருந்ததால் அவற்றில் கவனம் செலுத்தினார். சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் பாணியில் பரத்-சுசீலா கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி உலவ விட்டார். பரத்தின் துப்பறியும் திறனும், சுசீலாவின் இளமைக் குறும்புகளும் (பனியன் வாசகங்களும்) வாசகர்களைக் கவர்ந்தன. நல்ல வரவேற்பைப் பெற்றன.
பிரபாகர் நாவல்களின் தலைப்பிலும் கவனம் செலுத்துவார். 'அவன் தப்பக்கூடாது', 'ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரி', 'மே, ஜூன், ஜூலி', 'ஆரம்பத்தில் அப்படித்தான்', 'டிசம்பர் பூ டீச்சர்', 'என்னைக் காணவில்லை', 'கனவுகள் இலவசம்' போன்றவை வித்தியாசமான தலைப்புகளாக வெளிவந்தன. கிரைம் கதைகளோடு குடும்பக் கதை, காதல் கதை என நிறைய எழுதியிருக்கிறார். காதலை மையமாக வைத்து அவர் எழுதிய 'தொட்டால் தொடரும்' விகடனில் வெளியான முதல் தொடராகும். கதாநாயகன் ஸ்ரீராம் பாத்திரம் அக்கால வாசகர்களால் மறக்க முடியாதது. 'ஒரு நிஜமான பொய்', 'பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்' போன்றவை நல்ல நகைச்சுவை நாவல்களாகும். வரலாற்று நாவல், சிறுகதை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். சக எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா)வுடன் இணைந்து 'உங்கள் ஜூனியர்', 'உல்லாச ஊஞ்சல்' இதழ்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.
இவரது எழுத்துக்கு இருக்கும் வரவேற்பைக் கண்டு இவருக்காகவே பாக்கெட் நாவல் ஜி. அசோகன் 'எ நாவல் டைம்' என்ற இதழை ஆரம்பித்தார். மணியன் செல்வனின் முகப்பு ஓவியங்களோடு பல நாவல்கள் அதில் வெளியாகின. பரத்-சுசீலாவை மையமாக வைத்தே ஏராளமான நாவல்களைப் பிரபாகர் எழுதியிருக்கிறார். வெறும் வர்ணனைகளைக் கொண்டே சிறுகதை எழுதியிருக்கிறார். வர்ணனைகளே இல்லாது வசனங்களை மட்டும் வைத்தே நாவல்கள் எழுதியிருக்கிறார். (தா, மறுபடி தா) ஒரு நாவலுக்கு மூன்று கிளைமாக்ஸ், பாதி அத்தியாயத்தில் இருந்து நாவலை ஆரம்பிப்பது, ஒரே கதையில் இரண்டு கதைகள் (டபுள் ட்ராக்), ஒரே கதையை வேறு வேறு பார்வையில் சொல்வது (நெருங்கி... விலகி... நெருங்கி) எனத் தனது படைப்புகளில் பல புதுமைகளைப் பட்டுக்கோட்டை பிரபாகர் செய்திருக்கிறார். |
|
இயக்குநர் கே. பாக்யராஜூடன் ஏற்பட்ட அறிமுகமும் நட்பும் பட்டுக்கோட்டை பிரபாகர் வாழ்வில் திருப்புமுனையானது. பாக்யராஜின் உதவியாளராகச் சேர்ந்து திரைக்கதை நுணுக்கங்களையும், திரைப்பட அனுபவங்களையும் கற்றுக் கொண்டார். சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. சென்னைத் தொலைக்காட்சியில் இவரது நாடகங்கள் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றன. 'பரமபதம்', 'சத்தியம்', 'கோபுரம்', 'ஜெயிப்பது நிஜம்', 'பரத் சுசீலா' எனப் பல சீரியல்களுக்கு வசனம் எழுதினார். பாலுமகேந்திராவின் 'கதை நேரம்', ரேவதியின் 'கதை கதையாம் காரணமாம்' போன்ற தொடர்களிலும் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் குறுந்தொடர்களாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன. கன்னடத்திலும் இவரது கதை ஒன்று சீரியலாக வெளியாகியுள்ளது. 'மகா பிரபு' படம் மூலம் திரைக்கதை வசன எழுத்தாளராகும் வாய்ப்பு வந்தது. அப்படத்தின் வெற்றி தொடர்ந்து பல படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பைத் தந்தது. 'கண்டேன் காதலை', 'நான் அவனில்லை' எனக் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் வசனம் எழுதியிருக்கிறார்.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியிருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'மரம்' சிறுகதையும், 'கனவுகள் இலவசம்' நாவலும் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதமியின் பொன்விழா ஆண்டை ஒட்டி வெளியான மாற்றுமொழிச் சிறுகதைகளில் இவரது 'இன்னொரு தாய்' சிறுகதை ஆங்கிலத்தில் வெளியாகிச் சிறப்புப் பரிசை வென்றது. ஊஞ்சல் என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கும் பிரபாகர் தன் மகள்கள் ஸ்வர்ண ரம்யா, ஸ்வர்ணப் ப்ரியா பெயரில் ரம்யா ப்ரியா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மனைவி சாந்தியுடன் சென்னையில் வசித்து வரும் இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் கோலோச்சி வருகிறார்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|