Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓ.எஸ். அருண்
பிரகதி குருபிரசாத்
- வடிவேல் ஏழுமலை, மீனாட்சி கணபதி|ஜனவரி 2013||(1 Comment)
Share:
தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் பிரகதி குருப்ரசாத். இந்தப் பதினைந்து வயது அழகு மயில் பாடினாலோ தேன் குயில். சூப்பர் சிங்கர் ஜூனியரின் இறுதிச்சுற்றுவரை கலக்கிய பின் முதலிடத்தைத் தவறவிட்டது திறமின்மையால் அல்ல. இவரைப் பற்றிய அறிமுகத்தைத் தென்றலின் மார்ச் 2012 இதழில் பார்க்கலாம். அருமையான போட்டி, சினிமாவில் பாடும் வாய்ப்பு, நட்பு, பிரிவு, கலாசார அதிர்ச்சி என்று பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் பிரகதி....

*****


வடிவேல்: நீங்க சூப்பர் சிங்கர்ல கலந்துகறதுக்கு நம்ம பே ஏரியாலேந்து போனது எல்லோருக்கும் சந்தோஷம். எல்லா எபிஸோடையும் விடாமப் பார்த்தோம். அந்த பரபரப்பெல்லாம் முடிஞ்சப்பறம் எப்படி இருக்கு?
பிரகதி: இது ஒரு மிகப்பெரிய லர்னிங் எக்ஸ்பீரியன்ஸ். இசையிலயும் நிறைய கத்துக்கிட்டேன். பொதுவாவும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். காமிரா முன்னால என்ன பேசணும், எப்படி உடை உடுத்தறது, எப்படி தன்னம்பிக்கையோட, முதிர்ச்சியோட நடந்துக்கிறதுன்னு இப்படி பல விஷயங்கள நான் கத்துக்கிட்டேன். ஒன்பது மாசத்தில இந்தியப் பழக்கவழக்கம், நடைமுறை எல்லாம் பழக்கமாயிடுச்சு. யார்கிட்டே எப்டி பேசணும் எல்லாம் கத்துக்கிட்டேன். நிறைய ஏத்த இறக்கங்கள். சில சமயம் நல்லா, சில சமயம் மோசமா, ஏன், உடம்பு சரியில்லாமக் கூடப் போய்ப் பாடிருக்கேன். எல்லாத்தையும் எப்படிக் கையாள்றதுன்னு கத்துக்கிட்டேன். ஒரு ரியாலிடி ஷோ பாக்கிறவங்களுக்கு திரையில வரது மட்டுந்தான் தெரியும். பின்னால என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. எங்களுக்காக, நாங்க வெற்றி அடையணும்னு எவ்வளவு பேர் ராப்பகலா பின்னணில வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அம்மாகிட்ட நான் இப்போ ரொம்ப நெருக்கமாய்ட்டேன். இவங்களைவிட நல்ல அம்மா எனக்குக் கிடைச்சிருக்க முடியாது. இதுல நிறைய பேருக்கு என் மேல பொறாமைன்னு கூட சொல்லலாம்.

வடி: உண்மைதான்.
பிர: நான் அம்மாவப் பத்தியும், அம்மா என்னப் பத்தியும் நிறையத் தெரிஞ்சிக்கிட்டோம்னு சொல்லலாம். அம்மான்னு மட்டுமில்ல அப்பா, அக்கா, மாமா, பாட்டி இப்படி எல்லாருமே தங்களோட வேலையை விட்டுட்டு எனக்கு உதவினாங்க. அப்பா ராத்திரியெல்லாம் தூங்காம ஃபோன் பண்ணி எல்லாத்தைப் பத்தியும் விசாரிப்பார். இங்க இருந்தபடியே ரொம்ப பின்பலமா இருந்தார். இப்படி ஒரு குடும்பம் இல்லேன்னா நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமுடியாது.

வடி: பாக்கிறவங்களுக்கு அப்பா இவ்வளவு செய்தது தெரியாது, இல்லையா?
பிர: அதுதான். அம்மாவைத் தெரிஞ்சிருக்கும். அப்பா இவ்வளவு செய்தது தெரியாது. அக்கா பெர்க்லில நாலாவது வருஷம் படிக்கிறாங்க. ரொம்ப பிஸி. ஆனாலும் அடிக்கடி என்னக் கூப்பிட்டு நான் நல்ல பண்றேனா, இந்தியாவில செட்டில் ஆயிட்டேனா, அம்மா எப்படி இருக்காங்க, ஹெல்த்தைப் பார்த்துக்கோன்னு விசாரிப்பாங்க. நான் பாடினதே அக்காவாலதான். She is the singer in our family. குடும்பத்தைத் தவிரவும் பல பேர் உதவினாங்க.

வடி: அவங்களைப்பத்தி சொல்லுங்க....
பிர: நாம்தேவ் அங்கிள், திருமுடி அங்கிள், வாசுதேவன் அங்கிள், கிருஷ்ணா அங்கிள் இவங்கள்ளாம் நான் ஒவ்வொரு பாட்டையும் நல்லா பாடணும், என்னோட ஒவ்வொரு ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸும் நல்லா இருக்கணும்னு நிறைய உதவினாங்க. எவ்வளவு உதவினாங்கன்னு வார்த்தையால சொல்லமுடியாது. என்னோட குரலுக்குப் பொருந்தற மாதிரியான பாடலத் தேர்வு செய்யறதுலேந்து, நான் நல்ல மூட்ல இருக்கும்படியா பாத்துக்கிறதுன்னு எல்லாத்துலயும் உதவியா இருந்தாங்க. இவங்க இல்லாம நான் என்ன செய்திருப்பேன்னு தெரியாது.

வடி: நீங்க சென்னைல தங்கிடப் போறதா பத்திரிகைகள்ல படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மை?
பிர: இப்ப எதுவுமே தெளிவா இல்லை. நிறைய வாய்ப்புக்கள் வருது. இந்தியாவில செட்டில் ஆகணும்னுதான் இருக்கு. ஆனா அப்பா, அக்கா இவங்களோட இங்க கொஞ்சநாள் இருக்கணும்னு தோணுது. ஸ்கூல் படிப்பைக் கண்டிப்பா முடிக்கணும். அதை முடிச்சுட்டுத் திரும்பி வரலாம்னு நினைக்கிறோம்.

வடி: ஃப்ரீமாண்ட்லேயிருந்து ஒரு பொண்ணு போய்ப் பாடறாளேன்னு நினைச்சோம். நீங்க கடைசி 5 பேர்ல வருவீங்கன்னு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல.
பிர: டாப் 30ல வரணும்கற வெறி இருந்தது. டாப் 5ல வருவேன், ஜெயிப்பேன் அப்படிங்கற நம்பிக்கையும் இருந்தது. ஆனா நிறைய சுற்றுக்கள், போகப்போக நிறைய ஏற்ற இறக்கங்கள் எல்லாம் பார்த்ததும் விட்டுடலாமான்னு கூட நினைச்சேன்.

நடுவில என்னால பண்ண முடியாது, சென்னை பிடிக்கலை, அப்பாவோட பிறந்தநாளை மிஸ் பண்ணறோம் அது இதுன்னு ஏதாவது ஒரு பிரச்சனை. என் ஃப்ரண்ட்ஸ் கூப்பிட்டு நாங்க சேர்ந்து அதைச் செய்யறோம், இதைச் செய்யறோம்னு சொல்லும்போது சூப்பர் சிங்கரும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்னு நினைச்சது உண்டு. அதையெல்லாம் மீறி எனக்கு ஜெயிப்போம்னு நம்பிக்கை இருந்தது. ஃபைனல்ல பாடியே ஆவேன்னு நினைச்சேன். ஒருவேளை நமக்கு இது ஏத்த இடமில்லையோன்னு தோணியிருக்கு. ஆனா ஒரு கட்டத்தில, இவ்வளவு தூரம் வந்தப்பறம் விட்டோம்னா என்னோட எல்லா உழைப்புக்கும், எல்லோரோட சப்போர்ட்டுக்கும் அர்த்தம் இல்லாமப் போயிடும்னு புரிஞ்சது. அப்ப விட்டிருந்தேன்னா வாழ்நாள் முழுவதும் அதுக்காக வருத்தப்பட்டிருப்பேன். அதுக்கப்புறம் ரொம்ப உழைச்சேன், நல்லாப் பாடினேன், தன்னம்பிக்கை அதிகமாயிடுச்சு.

வடி: (புன்னகைக்கிறார்). ஒ.கே. ஒவ்வொறு சுற்று முடியும்போதும் எப்படி ஃபீல் பண்ணினீங்க. மத்த போட்டியாளர்கள் போட்டிலேந்து விலகற கட்டம் வரும்போது அவங்களை எப்படிச் சமாதானப் படுத்தினீங்க?
பிர: எனக்கு அது ரொம்பக் கஷ்டமான விஷயம். மத்த போட்டியாளர்களைப் பத்தித் தெரியாது. ஆனா நான் ரொம்ப உணர்ச்சிவசப்படுவேன். எனக்கு எல்லாப் போட்டியாளர்கள் கிட்டயும் ஒட்டுதல் ஜாஸ்தி. முப்பது பேரோட 24*7 சேர்ந்தே இருக்கும்போது ஒரு ஒட்டுதல் உணர்வு வந்திடும். அப்புறம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தரா விலகிப் போகும்போது மனசு கஷ்டப்படும். அவங்களும் எங்கிட்டே ரொம்ப அன்பா இருந்தாங்க. வித்யாசம் பார்க்காம ஏத்துக்கிட்டாங்க.

வடி: ஓ.கே. 24*7 அனுபவம்னா எப்படி?
பிர: சாதாரணமா எபிஸோடுக்கான ஷூட்டிங் 3, 4 நாளைக்கு ஒருமுறை நடக்கும். ஷூட்டிங்க்கு முதல்நாள் இசைக்குழுவோட சேர்ந்து ரிகர்ஸல் இருக்கும். நாள்முழுக்க நடக்கும். ஒரே நேரத்துல யாருக்கு ரிகர்ஸல் இருக்கோ அவங்கள சந்திப்போம். ஆனா நிறையப் பேர் விலகி 5 பேர் ஆனப்புறம் எல்லாருக்கும் ரிகர்ஸல் ஒண்ணாவே வரும். ஒருத்தர் பாடும்போது மத்தவங்க கேட்போம். அவங்களுக்கு உதவி செய்வோம். அதுலேயே நாள் போயிடும்.

ரிகர்ஸலுக்கு முதல் நாள் அனந்த் ஸார் கிட்ட தனித்தனியா பாடிக் காட்டுவோம். அவர் டிப்ஸ் குடுப்பார். போகப்போக ஒவ்வொருத்தருக்கும் அவர்கூட அரை மணி நேர செஷன் இருக்கும். தவிர காஸ்ட்யூம் செக். அதனால போட்டியாளர்கள் நிறைய நேரம் சேர்ந்து இருப்போம். வெளியூர்லேந்து வந்தவங்க ஒரே ஹோட்டல்ல தங்கியிருந்தாங்க. நான் பாட்டி வீட்லதான் இருந்தேன்.

ஷூட்டிங் போது காலைல 7 மணிலேந்து 12 மணிவரைக்கும் டிரஸ், மேக்கப் எல்லாம் பண்ணிக்குவோம். 1.30 மணிக்கு ஷூட்டிங் தொடங்கினா மறுநாள் காலை 3 அல்லது 4 மணிவரை கூட நடக்கும். எல்லோரும் சேர்ந்தே இருப்போம். ஜாலியா இருக்கும். சில சமயம் ராத்திரி ரொம்ப லேட்டானா தூங்கி விழுவோம்.
வடி: பாடினதுல நீங்க ரொம்பக் கஷ்டம்னு நினைச்ச பாட்டு எது?
பிர: எவர்கிரீன் மெலடீஸ்ல 'நாளை இந்த வேளை' பாட்டுதான்.

வடி: கர்நாடக சங்கீதப் பயிற்சி இந்த மாதிரிப் போட்டிகளுக்கு அவசியமா?
பிர: கண்டிப்பா. நான் கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டதனாலதான் இவ்வளவு தூரம் வர முடிஞ்சது. முதல் 10-15 சுற்று வரைக்கும் நான் ரொம்ப கிளாஸிகலா பாடறேன்னு குறை சொல்வாங்க. அப்பல்லாம் கிளாஸிகல் கத்துக்கிட்டு இங்க எதுக்கு வந்தேன்னு எரிச்சலா வரும். போகப்போக அது ரொம்ப உதவியா இருந்தது. பாடறது ஈஸியா இருந்தது. நிறையப் பேருக்கு சங்கதியெல்லாம் பாடறது கஷ்டமா இருந்தது. 'உதயா, உதயா' மாதிரி பாட்டுலயும் ஸ்வரப்படுத்திக்க, அதைக் குரலில் கொண்டு வர சங்கீதப் பயிற்சி உதவியா இருந்தது. இல்லேன்னா அந்தச் சங்கதியெல்லாம் பாடி இருக்க முடியாது. குத்துப்பாட்டு, மெலடி, வெஸ்டர்ன் எல்லாம் திறமையிருந்தா பாடமுடியும். ஆனா கிளாஸிகலுக்கு கண்டிப்பா முறையான பயிற்சி வேணும்.

வடி: கௌதம் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடினபோது நீங்கதான் முதல்ல போய் கட்டிப் பிடிச்சு அவனை ரொம்பப் பாராட்டினீங்க. ஆஜித் பாடின போது பாராட்டினீங்க. எல்லாருக்கும் ஓட்டுப் போடச் சொன்னீங்க. இங்க வளர்ந்ததுனாலதான் அப்படின்னு நினைக்கிறீங்களா?
பிர: கண்டிப்பா. அதுக்கு முழுக் காரணம் அப்பா, அம்மாதான். மத்தவங்களுக்கு அந்த மனப்பான்மை இல்லன்னு சொல்லறதவிட அவங்களுக்கு அந்த அனுபவம் இல்லன்னுதான் சொல்லணும். ஒரு போட்டின்னு வந்தா மத்த போட்டியாளர்களோட பேச்சு வச்சுக்கக் கூடாதுங்கற மாதிரியே பழக்கப்பட்டிருக்காங்க. யூ.எஸ்.ல மத்தவங்க நல்லாப் பாடினா அதைப் பாராட்டறதுல தப்பு இல்லன்னு நினைப்பாங்க.

அந்த அனுபவம் மத்தவங்களுக்கு என்கிட்டே இருந்து கிடைச்சதுங்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். சுகன்யா, கௌதம், யாழினி, அனு எல்லோருமே கடுமையா போட்டி போட்டாங்க. அவங்க ஒரு நாள் நல்லா பாடி நான் ரசிச்சா, போட்டி மனப்பான்மையைத் தாண்டி, அவங்ககிட்ட "நல்லா பாடினீங்க. உங்களை இன்னிக்கு யாரும் அடிச்சுக்கமுடியாது" அப்படின்னு சொன்னா நமக்கு ஒரு சந்தோஷம். நம்மகூட போட்டி போடற ஒருத்தர் வந்து நம்ம நல்லா பாடினோம்னு சொன்னா வர சந்தோஷம், ஜட்ஜஸ், அம்மா, அப்பா, அனந்த் சார் இவங்கல்லாம் சொல்லும்போது வர சந்தோஷத்த விடவும் அதிகமா இருக்கும். ஏன்னா அவங்களும் நம்மளை மாதிரி போட்டி போட்டு நம்மோட அதே நிலமையில இருக்காங்க.

அம்மாவும் அவங்களைப் பாராட்டினாங்க. மத்தவங்களும் அதிலே தப்பு இல்லன்னு கத்துக்கிட்டாங்க. நாங்க எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி ரொம்ப நெருக்கமாயிட்டோம்.

வடி: பாபா ஸேகல் எபிஸோட் ரொம்ப நல்லா இருந்தது. சிறப்பு விருந்தினர்கள்கூட உங்க அனுபவம் என்ன?
பிர: அது ஜாலியான அனுபவம். என்னோட பெரிய பிரச்சனை என்னன்னா நான் சென்னைக்கும், மீடியாவுக்கும் ரொம்ப புதுசு. யாராவது புதுசா கெஸ்ட் வந்தா எனக்கு அவங்களத் தெரியாது. அவங்ககூட ஃபோட்டோ எடுத்துக்கணும், ஆட்டோக்ராஃப் வாங்கணும் ஒண்ணும் தோணாது. மத்தவங்க எல்லாம் சூரியா வந்திருக்காரு, விக்ரம் வந்திருக்காருன்னு சொல்லும்போது எனக்கு அவங்கள்ளாம் பெரிய நடிகர்கள்னு ஓரளவுக்குப் புரியும். பாபா ஸேகல் என் பாட்டைக் கேட்டு "நீ இந்தியாவோட பிரிட்னி ஸ்பியர்ஸ். மத்தவங்களுக்கு ஒரு முன்மாதிரி" அப்படின்னு சொல்லி எழுந்து நின்னு கைதட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

போகப் போக அதாவது, டாப்-15, டாப்-20 எல்லாம் வந்தப்புறம், யார் சினிமால பெரிய ஆள் எல்லாம் தெரிஞ்சது. தனுஷ் சார், கார்த்தி சார் இவங்கள்ளாம் வந்தப்ப அவங்க யார்னு தெரிஞ்சது.

வடி: தனுஷ் சார் வந்தப்ப நீங்களும், உங்க அம்மாவும் டான்ஸ் ஆடினீங்க. சிவகார்த்திகேயன் சார்கூடக் கேலி பண்ணினார்.
பிர: ஐய்ய! இந்தக் கேள்வி கேட்டே ஆகணுமா?

வடி: இல்ல. அந்த எப்பிஸோட் ரொம்ப ஜாலியா இருந்தது.
பிர: நாங்க டான்ஸ் ஆடினப்பறம் தனுஷ் சார் நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி மாதிரி இருக்கீங்கன்னு கமெண்ட் சொன்னார். ரொம்ப நாளா எல்லாரும் சொல்லற கமெண்ட் தான்னாலும் அவர் சொன்ன போது it hit me. நிஜமாவே அப்பிடித்தான் இருக்கோமான்னு.

வடி: அப்பறம். மாகாபா, பாவனா ரெண்டு பேரும் நிறைய ஜோக்ஸ் சொன்னாங்க. எப்டி சிரிக்காமப் பேச முடிஞ்சது.
பிர: பாவனா அக்காவும், நானும் ரொம்ப க்ளோஸாயிட்டோம். நிறைய பேர் அது ஸ்க்ரீன்ல தெரிஞ்சதுன்னு சொன்னாங்க. மாகாபா அண்ணா ரொம்ப ரொம்ப வேடிக்கைப் பேர்வழி.

ஆரம்பத்திலெல்லாம் அவர் தமிழ்ல ஜோக் சொல்லும்போது எனக்கு அவ்வளவாப் புரியாது. சினிமா சம்பந்தப்பட்ட ஜோக்ஸ் இருக்கும். எல்லாரும் விழுந்து, விழுந்து சிரிப்பாங்க. என்ன ஜோக்னு கேட்டா அதெல்லாம் திருப்பிச் சொன்னா உனக்குப் புரியாதுன்னு சொல்லுவாங்க. I felt so out of place. யூ.எஸ்.லேந்து வந்தா பெரிய பருப்பா அவன்னு நிறைய பேச்செல்லாம் இருந்தது. போகப்போக மாகாபா அண்ணன் எவ்வளவு தமாஷான ஆளுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவரும், பாவனா அக்காவும் இல்லன்னா இந்த ஷோ இவ்வளவு நல்லா வந்திருக்குமான்னு சந்தேகம்தான்.

வடி: சித்ரா மேடம், மனோ சார், மத்த ஜட்ஜஸ் எல்லாம் ஆதரவா இருப்பாங்க, இல்லயா?
பிர: ஆமாம். ரொம்ப ஊக்கப்படுத்துவாங்க. ஆரம்பத்துல சித்ராம்மா, மனோ சார், சுபாஜீ இவங்க முன்னால பாடறதுக்கு பயமா இருந்தது. போகப்போக ரொம்ப ஃப்ரெண்ட்லி ஆயிட்டாங்க. நாங்க போய் "மேடம், இன்னிக்கு இந்தப் பாட்டு பாடப் போறேன். உங்க அபிப்ராயம் சொல்லுங்க" அப்படின்னு கேக்கற அளவுக்கு நல்லாப் பழகினாங்க. அவங்ககூட ஃபோட்டோ எடுத்துக்கணும்னா, "ஐய! என்கூடத் திருப்பி ஃபோட்டோ எடுத்துக்கப் போறியா? வா" அப்பிடின்னு சொல்லி மடியிலல்லாம் உட்கார வெச்சுப்பாங்க. இந்த தடவை தீபாவளிக்கெல்லாம் நாங்க எல்லாரும் மத்தவங்க வீட்டுக்கெல்லாம் போனோம். சித்ராம்மா எல்லாப் போட்டியாளர்களுக்கும் டிரஸ் வாங்கிக் கொடுத்தாங்க. சுபாம்மா சாக்லேட் வாங்கிக் கொடுத்தாங்க. மனோ சார் எல்லாருக்கும் டின்னர் கொடுத்தார். நாங்க ஒரு பெரிய ஃபேமிலி மாதிரி பழகினோம்.

வடி: என்னோட பெண் மூணாவது கிரேடு படிக்கிறா. அவ அந்த சாக்லேட் ஷவர்ல வர பாக்ஸ் நிறைய சாக்லெட் இருக்குமான்னு கேட்டா?
பிர: (சிரிக்கிறார்) ஸ்டேஜ்ல குடுக்கும் போது சாக்லெட் இருக்காது. அப்புறம் கொடுத்தாங்க.

வடி: 'பரதேசி' படத்துல பாட வாய்ப்பு கிடைச்சதும் எப்படி இருந்தது?
பிர: சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் 26ம் தேதி. மறுநாள் பாலா சார் ஆஃபீஸ்லே இருந்து ஃபோன், "பிரகதி, உன்னோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. நான் ஒன்னோட பெரிய விசிறி. நீ இந்தப் படத்தில கண்டிப்பா ஒரு பாட்டுப் பாடணும்" அப்படின்னார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பின்னணிப் பாடகி ஆகணும், ஒரு படத்திலயாவது பாடணுங்கற கனவு நிச்சயமா இருந்தது. அம்மாதான் ஃபோன்ல பேசினாங்க. அவங்களுக்கு ரொம்பவுமே ஷாக்கா இருந்தது. 'நான் கடவுள்', 'பிதாமகன்' எல்லாம் பார்த்திருக்கேன். அவரோட படங்களெல்லாம் அப்ப எனக்கு பயமா இருக்கும். இப்ப அந்தப் படங்களுக்குப் பின்னால இருக்கிற சென்டிமெண்ட்ஸ் புரியற வயசு வந்துருச்சு.

அவர் அந்தப் படங்களை எடுத்தப்பறம் 'இவன்தான் பாலா' அப்படின்னு தன் வாழ்க்கையப் பத்தி ஒரு புத்தகம் எழுதி இருக்கார். எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும்னாலும், புஸ்தகம் படிக்கற அளவுக்குத் தெரியாது. அபிராமின்னு என்னோட நல்ல சிநேகிதி, அவ அதை முழுசாப் படிச்சு எனக்கு அர்த்தம் சொன்னா. ரொம்ப ஆச்சரியமான மனிதர். அவர் வீட்டுக்குப் போய் அவரைப் பாத்தபோது காலை வணக்கம் எல்லாம் சொல்லி, கோடான கோடி ரசிகர்கள்ள நானும் ஒருத்தன்னு சொல்லி என்னை உட்காரச் சொன்னார். அந்த வார்த்தை, அந்தக் காட்சி, அதை நான் என்னிக்கும் மறக்கவே மாட்டேன். நான் வெளிய வந்ததும் அவரோட உதவியாளர் 'நான் பாலா சார் வாயிலேந்து இப்படி வார்த்தையெல்லாம் கேட்டதில்ல. பேசவே மாட்டார். எதுவா இருந்தாலும் கண்ணாலயே ஜாடை காட்டுவார். அவர் உன்னோட விசிறின்னெல்லாம் சொல்லி இருக்காருன்னா பெரிய விஷயம்' அப்பிடின்னார்.

வடி: நல்லது. ஃபைனல்ஸுக்கு ரஹ்மான் சார் வருவார்ன்னு எதிர்பார்ப்பு இருந்ததா?
பிர: எதிர்பார்ப்புன்னு சொல்லமாட்டேன். ஏதோ சர்ப்ரைஸ் இருக்கும்னு மட்டும் தெரிஞ்சது. எப்பவுமே யாராவது பெரிய ஆள் வராங்கன்னா ஒரு ஹின்ட் கூடக் குடுக்கமாட்டாங்க. யாரோ ஃபோன்ல ரஹ்மான் சாரோட ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்குன்னு சொல்றதக் கேட்டுட்டோம். நாங்க அஞ்சு பேரும் இப்பவே சொல்லுங்க இல்லன்னா விட மாட்டோம் அப்பிடின்னு அடம் பிடிச்சோம். அதுக்கு அவங்க 'இல்லை. ஏதோ சர்ப்ரைஸ் இருக்கு. ஆனா சொல்ல மாட்டோம். சொன்னா விஜய் டி.வி.லேர்ந்து எங்களை விரட்டிடுவாங்க' அப்பிடின்னு சொல்ற அளவுக்குப் பண்ணிட்டோம். எங்களுக்குள்ள ஜோக்கா ரஹ்மான் சார் வரப்போறார், நாம பாடறதைப் பார்க்கப் போறார்னு சொல்லி சிரிச்சுப்போம். ஆனா நாங்க 5 பேருமே ஃபைனல்ஸ்ல பாட ரஹ்மான் சாரோட பாடல்களைத் தேர்ந்தெடுத்திருந்ததை முதல்ல கவனிக்கல. அது தற்செயலா நடந்தது.

வடி: நல்லா பாடறீங்க. பின்னால ஒரு சமயம் நடிக்கக் கூப்பிட்டா ஒத்துப்பீங்களா?
பிர: நிறைய சான்ஸ் வந்துட்டிருக்கு. ஆனா இப்ப எந்த முடிவும் எடுக்கற நிலமையில இல்ல. பின்னணி பாடணும், அதுல முன்னுக்கு வரணும்னு ஆசை இருக்கு. ஆனா நடிக்கறது எவ்வளவு முடியும்னு எனக்குத்தெரியல. பார்க்க ஈஸியா இருந்தாலும் அது கஷ்டமான விஷயம். ரெண்டு நிமிட ஸீனா இருந்தாலும் சரியா வரலேன்னா அதே ஷாட், அதே டயலாக் எல்லாம் நூறு தடவைகூடத் திருப்பித் திருப்பி எடுப்பாங்க. எனக்கு அந்தப் பொறுமை இருக்குமான்னு தெரியல.

இப்போதைக்குப் பாடறதுதான் என்னோட விருப்பம். பாட ஆரம்பிச்சுட்டு நடிக்கப் போயிட்டா, திரும்பப் பாடவே வர மாட்டாங்க அப்பிடிங்கறதும் இருக்கு. நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஒரு ரெண்டு, மூணு வருஷம் கழிச்சு என்னோட பாட்டு வாய்ப்பு எப்படிப் போகுதுன்னு பார்த்துட்டு முடிவு செய்யணும்.

வடி: போட்டி முடிஞ்சப்புறம் மத்த போட்டியாளர்களோட உங்களுக்குத் தொடர்பு இருக்கா?
பிர: ஆமாம். எல்லாருமே T20 புரோக்ராம்ல பங்கெடுத்துக்கறாங்க. ஆனா யூ.எஸ். திரும்பப் போறதால நான் அதுல இல்ல. அப்பப்ப சந்திச்சுப்போம். போட்டி முடிஞ்சு ஒரு வாரத்துல அருண்-எக்ஸெல்லோ டீம் கூட டின்னருக்குப் போனோம். ஆஜீத்தைத் தவிர டாப்-5ல இருந்த அஞ்சு பேரும் போயிருந்தோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் நிஜமாவே சூப்பர் சிங்கரை மிஸ் பண்ணறேன். பரதேசி ரிலீஸ் முடிஞ்சவுடனே முதல் அஞ்சு ஃபோனும் மத்த போட்டியாளர்கள் கிட்டே இருந்துதான். சுகன்யா, கௌதம், யாழினி, ஆஜித், ரக்ஷிதா எல்லாரும் கால் பண்ணி பாட்டு நல்லா வந்திருக்குன்னு சொன்னபோது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

உரையாடல்: வடிவேல் ஏழுமலை, கலிஃபோர்னியா
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


வந்தார் ஏ.ஆர். ரஹ்மான்!
ஸ்டேஜ்ல எங்களைக் கூப்பிட்டு உங்களுக்கு ஒரு பெரிய ஸர்ப்ரைஸ் இருக்குன்ன போது கூட 'என்ன ரஹ்மான் சார் வரப் போறார்னு ஜோக் அடிக்கப் போறீங்களா?' அப்படின்னுதான் நினைச்சோம். அவர் வந்தா கட்டிப் பிடிச்சுப்போம், கால்ல விழுவோம் அப்பிடின்னெல்லாம் திரைக்குப் பின்னால பேசினாலும், அவர்லாம் வரமாட்டார் கவுண்டமணிதான் வருவார்னு ஜோக்கும் அடிச்சுப்போம். ஆனா நிஜமாவே ரஹ்மான் சார் வந்தபோது எங்களுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அவர் கால்ல விழுந்துட்டோம். ரொம்ப சிம்பிளான, அடக்கமான மனிதர். நிஜமாவே அவர் வந்து எங்க எதிர்ல நிப்பார், எங்க பாட்டைக் கேட்பார்னு நினைச்சுக்கூட பார்க்கல.

பிரகதி

*****


சூப்பர் சிங்கர் ஆக விரும்புவோருக்கு......
உங்களுக்கு சங்கீதத்துல ரொம்ப விருப்பம் இருந்தா மட்டும் பாடுங்க. இல்லன்னா பாடாதீங்க. கிளாஸிகல் கண்டிப்பா கத்துக்கணும். பாட்டு, டான்ஸ் எந்தப் போட்டியா இருந்தாலும் நல்லாக் கத்துக்கிட்டு, பயிற்சி பண்ணிட்டுத்தான் செய்யணும். அப்புறம் உங்க அம்மா அப்பாவுக்கு அந்த சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியணும். இந்தியாவுக்குப் போய் இந்தப் போட்டில பங்கெடுத்துக்கறதுன்னா நிறைய விஷயத்தைப் பத்தி யோசிக்கணும். முக்கியமா கலாசாரத்தப் பத்தி. நிஜமாவே அது ரொம்ப கஷ்டமான விஷயம். இந்தப் போட்டியெல்லாம் மைண்ட் கேமும் கூட. அதுக்கேத்த மாதிரி மாற முடியணும். உங்க மேலயே உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும் ஒரு வருஷம் ஸ்கூல விட்டுட்டு இந்தியா போறது ரொம்பக் கஷ்டமான விஷயம். நிஜமாவே உங்க பெற்றோருக்கு உங்களால முடியுங்கற நம்பிக்கை இருக்கா? இவ்வளவு தியாகம் பண்ணற அளவுக்கு உங்களுக்கு சங்கீதத்துமேல காதல் இருக்கா? யோசிக்கணும். ஏன்னா, இது உங்க வாழ்க்கையை 180 டிகிரி திருப்பிப் போட்டுடும்.

பிரகதி

*****


"லூஸ் மாதிரி சொல்லாதீங்க!"
நாங்க ஒருத்தொருக்கொருத்தர் கருத்து சொல்வோம், மத்தவங்ககிட்ட எங்க பாட்டைப் பத்திக் கேட்போம். உதாரணமா நான் சுகன்யாகிட்டப் போய் இந்த சங்கதி போட்டா நல்லா இருக்குமான்னு கேட்பேன். 'அவகிட்ட கேக்கறாளே. தப்பாத்தானே சொல்லுவா' அப்பிடின்னு மத்தவங்களுக்குத் தோணும். ஆனா எங்களுக்குள்ள வேற மாதிரியான உறவுமுறை இருந்தது.

நான் 'சொர்க்கம் மதுவிலே','மழையே மழையே' எல்லாம் முன்னாலயே பாடிட்டேன். கௌதம், சுகன்யா எல்லாம் அதை அரையிறுதிக்கு முந்தின சுற்று எல்லாத்துலயும் பாடினாங்க. அவங்க எங்கிட்ட வந்து தங்களோட ரெகார்டிங்கை போட்டுக்காட்டி கருத்து கேப்பாங்க. சரி செய்துப்பாங்க. சுகன்யா, கௌதம் இவங்க பாடின நிறைய பாட்டை நான் ஏற்கனவே பாடி இருக்கேன். 'பொய் சொல்லக்கூடாது காதலியே' எல்லாம் நான் பாடி ஹிட் ஆச்சு. நான் அவங்ககிட்ட 'நீ ஒரு சங்கதி எடு, நான் அதைச் சொல்லித்தரேன், பாடமுடியுமா பாரு'ன்னு சொல்வேன். அவங்ககூடப் பல மணிநேரம் செலவு செய்திருக்கேன்.

ஃபைனல்ஸ்ல யாழினி வந்து "அக்கா நீங்க கொஞ்சும் நிலவு பாட்டை யாருமே அடிச்சுக்கமுடியாத அளவுக்குப் பாடினீங்க. எனக்கு உங்களை பீட் பண்ணணும்னு ஆசை. சொல்லித்தாங்க" அப்டீன்னு கேட்டா. நான் அவகூட 2 மணிநேரம் உட்கார்ந்து எல்லாம் சொல்லிக்குடுத்தேன். அவ அதை நல்லாப் பாடினபோது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

ராஜ கணபதி 'மேகம் கொட்டட்டும்' பாட்டை ரொம்ப நாள் முன்னால பாடினான். நான் சும்மா விளையாட்டா ஒரு சங்கதி சொன்னேன். அந்தப் பாட்டுக்கும் அந்த சங்கதிக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லாம இருந்தது. அவன் 'அக்கா, சும்மா லூஸ் மாதிரி சொல்லாதீங்க. அந்த சங்கதியெல்லாம் போட்டா ஒரு மாதிரிப் பாப்பாங்க' அப்பிடின்னான். ஆனாலும் ஸ்டேஜுல அதைப் பாடிப் பாப்போமேன்னு பாடி பெரிய ரிஸ்க் எடுத்தான். சித்ராம்மா அந்த சங்கதிக்காகவே அவனுக்கு ஒரு சாக்லேட் பார் தனியாக் கொடுத்தாங்க. அன்னிக்கு நான் அவனுக்காக ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

பிரகதி
மேலும் படங்களுக்கு
More

ஓ.எஸ். அருண்
Share: 




© Copyright 2020 Tamilonline