டாக்டர். அழகப்பா அழகப்பன்
|
|
|
|
|
'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டிலிருந்து 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றதால் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸின் சாதனைப் பக்கங்களில் இடம் பெற்றவர். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சமூக சேவகர். அன்னை தெரஸாவைச் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வை இங்கே கூறுகிறார். படியுங்கள்.....
*****
கே: 'வெளிச்சத்தின் மறுபக்கம்', 'இவர்கள்' எனத் தொலைக்காட்சிக்காக நீங்கள் பாலியல் தொழிலாளிகள், பிக்பாக்கெட்காரர்கள், அரவாணிகள், மாற்றுத் திறனாளிகள் எனச் சமூகத்தின் கடைக்கோடி மனிதர்கள் பலரை நேர்காணல் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்... ப: இவற்றை எட்டு வருடமாகப் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்திருக்கிறேன். இரண்டுமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அதுவரை நேர்காணல் என்றால் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் வருவார்கள். முதன்முதலில் பூக்காரர், பால்காரர், ரிக்ஷாக்காரர், மீன் விற்பவர், பிக்பாக்கெட்காரர், கொலைகாரர், அரவாணிகள், பாலியல் தொழிலாளி போன்றவர்களை நான் காட்சிப்படுத்தினேன். மக்கள் அறியாத சமூகத்தின் பல முகங்கள் தெரிய வந்தன. அரவாணிகள் என்றால் அதுவரை இருந்த வெறுக்கத்தக்க பிம்பத்தை மாற்றி அமைத்தது 'வெளிச்சத்தின் மறுபக்கம்'. திருநங்கைகள் எப்படிப்பட்ட அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், எவ்வளவு திறன் மிக்கவர்கள் என்பதைக் காட்டினேன். சமூகம் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தினேன். "உங்கள் குடும்பத்தில் இப்படி ஒருவர் பிறக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்ற கேள்வியோடு நான் முடித்த அந்த நிகழ்ச்சிகள் பலரைச் சிந்திக்கத் தூண்டின. தமிழக அரசு திருநங்கைகளுக்காக ஒரு வாரியம் அமைத்துள்ளது. இதற்கு ஒரு பொறியாக அமைந்தது 'வெளிச்சத்தின் மறுபக்கம்'.
கே: நீங்கள் சந்தித்தவர்களில் மறக்க முடியாதவர்கள் குறித்து... ப: 1995ல் இந்திய ட்ராவல் ஏஜென்சிகளின் வருடாந்திர மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலிருந்தும் 1200 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். நான் என் நண்பர்களோடு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். முதல் நாள் மாநாடு முடிந்தது. மறுநாள் காலை 10 மணிக்கு மேல்தான் மாநாடு. என்ன செய்யலாம் என யோசித்த எனக்கு மதர் தெரசா இங்குதானே இருக்கிறார், சந்திக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களது மிஷனைத் தொடர்பு கொண்டேன். "அன்னையைச் சந்திக்க முன் அனுமதி தேவையில்லை. இப்போது வந்தால்கூடப் பார்க்கலாம்" என்றார்கள். எல்லோரும் அன்னையைப் பார்க்கப் புறப்பட்டோம். அப்போது என்னிடம் பகட்டு அதிகம். விரல்களில் பல மோதிரங்கள், கையில் தங்கத் தோடா, கழுத்தில் தங்கச் சங்கிலிகள் என நடமாடும் நகைக்கடையாக இருந்தேன். மிஷனை அடைந்தோம். அது மரத்தாலான வீடு. மரப்படியில் ஏறி மேல்தளத்தை அடைந்தோம். அங்கே வெள்ளை உடை தரித்த ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்டோம். "வெயிட் வெயிட். மதர் ஈஸ் இன்சைட். வில் கால் யூ" என்றார் அவர். அங்குள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்து காத்திருந்தோம். வெள்ளுடையில் பலர் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் அங்குள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். மற்றொருவர் ஏதோ டைப் அடித்துக் கொண்டிருந்தார். சொல்ல முடியாத அமைதி அந்தச் சூழலில் அங்கே இருந்தது. அன்னை எப்போது எங்களை அழைப்பார் எனக் காத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்வது தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். வெள்ளுடை தரித்த குள்ளமான ஒருவர் என் அருகே அமர்ந்திருந்தார். 'யார்றா இவர், இப்படி என் பக்கத்துல வந்து உட்காருகிறாரே' என நினைத்தவாறே அவரை உற்றுப் பார்த்தேன். என் தோள்பட்டை அளவுகூட இல்லை அவர் உயரம். தலையைக் கீழே குனிந்து அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன். சிறு குழந்தையின் கண்களைப் போன்று இருந்தன அவரது விழிகள். முகத்தில் பல சுருக்கங்கள். இந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற சந்தேகத்துடன் மெல்ல 'மதர்?' என்றேன். அவர் உடனே, "யெஸ் யெஸ். மதர். மதர். மதர்" என்றார். அவ்வளவுதான் எனக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை அப்படியே உடும்புப் பிடியாகக் கட்டிக் கொண்டு விட்டேன். அவரது தலை என் கைகளுக்குள்ளும், என் நெஞ்சுக்குள்ளும் சிக்கிக் கொண்டுவிட்டது. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவரது உடல் முழுவதையும் நனைக்கிறது. ஒன்றுமே தெரியாத ஒரு பரவச நிலை. மெல்ல மெல்ல அந்த நிலையிலிருந்து மீளும்போது, அன்னையைக் கட்டிக் கொண்டிருக்கிறோம், அவரை விடுவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணத்தைச் செயல்படுத்த முடியவில்லை. பின் சில நிமிடங்கள் கழித்து நான் என் நிலைக்கு மீண்டேன். அன்னையை விடுவித்தேன். அவரது முகத்தைத் தடவினேன். முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தேன். கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனை போல் நடந்து கொண்டேன். உடன் வந்திருந்த நண்பர்கள் எல்லாம் 'இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தான். திடீர்னு இவனுக்கு என்ன ஆச்சு' என்று அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதரோ புன்சிரிப்புடன் என் தோளில் தட்டி, "கூல் டவுன், கூல் டவுன். ரிலாக்ஸ்" என்றார்கள். நான் எழுந்து மதரின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் என் தலையைத் தடவி ஆசிர்வதித்து அனைவருக்கும் சிலுவை பரிசாக அளித்தார்.
அந்தக் கணம் முதல் நான் மோதிரமோ, தங்க நகைகளோ, வாட்ச் போன்றவற்றையோ அணிவதை விட்டுவிட்டேன். சேவையின் இமயமே கழுத்தில் சிலுவையுடன் கூடிய ஒரு கறுப்புக் கயிறை மட்டும் அணிந்திருக்கும்போது வெகு சாதாரணனான நான் இவற்றை அணிவதைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை என்ற எண்ணம் வந்ததுவிட்டது. அதுமட்டுமல்ல, எனக்குள் இருந்த ஆணவம், கோபம், திமிர், ராங்கித் தனம், எல்லாம் 90 சதவீதம் என்னை விட்டுப் போய்விட்டன. இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவும் இல்லாவிட்டால் தொழில் செய்ய முடியாது என்பதால் அதை வைத்துக் கொண்டிருக்கிறேன். அன்னை தெரசாவைக் கண்ட அந்த நிமிடங்கள்தான் என் மனநிலை மாற்றத்திற்கும், என் எண்ணங்களின் மாற்றத்திற்கும், என் ஆளுமையின் மாற்றத்திற்கும், என் வாழ்க்கையின் மாற்றத்திற்கும் மிக முக்கிய காரணம். அவர்தான் மனித உருவில் தெய்வம். |
|
|
கே : விருமாண்டி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறீர்கள் அல்லவா? ப: ஆம். பள்ளிப் பாடங்களை விடப் பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் எனக்கு மனப்பாடம். அதுவே அன்றைய வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எங்கள் ட்ராவல்ஸைப் பொறுத்தவரை கலைஞர்கள், அரசியல்வாதிகள் எனப் பலர் வாடிக்கையாளர்கள், நண்பர்கள். அவர்களுள் கமலும் ஒருவர். அவர் ஒருமுறை என்னை ஃபோனில் அழைத்து "விருமாண்டியில் நீங்கள் நடிக்க வேண்டும்; ஒரு பஞ்சாயத்து சீன். நீங்கள் சும்மா தலைகாட்டினால் போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். அவர் அழைப்பை மறுக்க முடியவில்லை, நடித்தேன். படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. சீமானின் அழைப்பை ஏற்று 'வாழ்த்துக்கள்' படத்தில் ஒரு ஆசிரமத் தலைவராகத் தோன்றினேன். பின் நெப்போலியனின் 'வீரண்ணா', சேரனின் 'தவமாய்த் தவமிருந்து' படங்களில் நடித்தேன். வில்லன் பாத்திரத்தில் நடிக்கச் சொல்லிப் பலர் கூப்பிடுகின்றனர். ஆனால் நடிப்புக்குக் கூட நான் வில்லனாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம். எதிர்மறையாகப் பேசுவதையோ, எழுதுவதையோ நான் விரும்பவில்லை. நடிப்பு என் தொழிலும் அல்ல. நேரமும் இல்லைதான். ஆனாலும் நண்பர்கள் அழைப்பைத் தட்ட முடியாததாலும், ஒரு ஆசை இருப்பதாலும் தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
கே: உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து... ப: என் வளர்ச்சிக்கு வித்திட்டவர், நீரூற்றியவர், வழிகாட்டியவர் எல்லாமே சந்திரா அம்மையார்தான். அவர் அந்தணர். என்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். வெறும் தொழில்சார்ந்த கல்வி மட்டும் அவர் கொடுக்கவில்லை; அவர்தான் என்னை ஆளாக்கி விட்டார். என் பணத்தேவைகளுக்கு உதவினார். என்னிடம் தனது IATA சான்றிதழைக் கொடுத்து நான் IATA Approval பெற உதவினார். எனக்குச் சிக்கல்கள் வந்தபோது, உறவுகளோ நண்பர்களோ உதவ முன்வராதபோது அவர் உதவினார். என் வாழ்வின் அஸ்திவாரம், என் தொழிலின் அஸ்திவாரம் எல்லாமே அவர் செய்த உதவிகள்தான். சந்திரா அம்மையார்தான் 'மதுரா ட்ராவலஸ்' அலுவலகத்தை குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார். ஒவ்வொருமுறை உண்ணும் போதும் அவரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். அவர் அமரர் ஆகிவிட்டார். ஆனால் என் நெஞ்சில் நிற்கும் தெய்வங்களில் அவரும் ஒருவர்.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: என் மனைவி சுசீலா. மகள் சரண்யாவுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் ஸ்ரீஹரன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கிறார். நான் உழைத்து உயர்வடைந்த பின்பு அதைப் பார்க்கத் தந்தை இல்லை. நாம் உழைத்து அப்பாவுக்கு ஒருவேளைச் சோறு போட முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அதனால் என் தாயையே தந்தையாகவும் பாவித்து, பராமரித்துப் போற்றி வருகிறேன். அவருக்கு வயது 91.
"நான் கயிறில்லாத ஒரு பட்டம். காற்றடிக்கும் திசைக்கேற்ப சைக்கிள் கம்பியில் மாட்டிக் கொள்வேன். விளக்குத் தூணிலும் சிக்கிக் கொள்வேன். கோபுரத்திலும் சென்று அமர்வேன். கோபுரத்தை வணங்குபவர்கள் பட்டத்தையும் சேர்த்து வணங்குவதாக அந்தப் பட்டம் நினைக்கக் கூடாது. அடுத்த காற்றடித்தால் அது எங்கே செல்லும் என்று யாருக்கும் தெரியாது. அது மாதிரித்தான் நானும். தொழில், வாழ்க்கை இரண்டிலும் நாணயத்தையும் நன்றியையும் நூறு சதவீதம் கடைப்பிடிக்கிறேன். அதுதான் எனது பலம். 1981ல் நான் சென்னைக்கு ட்ரெய்னில் 'வித்-அவுட்' டிக்கெட்டில் வந்தேன். இன்றும் வித்-அவுட்' டிக்கெட்தான், ஆனால் விமானத்தில்" என்கிறார் பாலன். வெளிப்படையாகப் பேசுகிறார். அதில் அனுபவத்தின் சாரமும், உண்மையின் ஒளியும், நம்பிக்கையின் உறுதியும் தெரிகின்றன. அவற்றில் திளைத்த மகிழ்ச்சியில் விடைபெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
பாம்பன் பாலத்தின் மீது தவழ்ந்து போனேன் 1982ம் ஆண்டில் ஒரு த்ரில்லிங்கான சம்பவம் நடந்தது. அக்காலத்தில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை அங்கு சென்று கொடுக்கும் பணியை ஒரு ட்ராவல் நிறுவனம் எனக்கு வழங்கியது. வேலையை முடித்தால் நூறு ரூபாய் கமிஷன். கிட்டத்தட்ட நூறு பேருக்கான விசா, பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். நான் போய் அங்குள்ள ஏஜெண்டிடம் கொடுத்தால்தான் பயணிகள் கப்பல் ஏற முடியும். மாலை 5 மணிக்கு எக்மோரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு ராமேஸ்வரம் போகும். காலை 4 மணி இருக்கும். தூங்கிக் கொண்டிருந்தேன். வண்டியில் கூக்குரல் கேட்டு எழுந்து பார்த்தேன். ரயில் இருளில் நின்று கொண்டிருந்தது. அது மண்டபம் ஸ்டேஷன். பாம்பன் பாலத்தில் ஏதோ ரிப்பேர், அதனால் வண்டி மேலே போகாது என்று சொல்லி விட்டார்கள். கப்பலில் போகவேண்டிய பயணிகளும் ரயிலில் இருந்தார்கள். பாம்பன் பாலம். எப்போது சீராகும் என்று தெரியாது என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லி விட்டார். நான் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் பயணிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்காவிட்டால் அடுத்த டோக்கன் ஒரு மாதத்திற்குப் பின்னர்தான் கிடைக்கும். அதனால் ஏஜெண்டுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஆகிவிடும்.
மணி ஐந்தானது. திடீரென ஒரு யோசனை வந்தது. இந்தப் பாலத்தில் இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும். நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும். கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலை வைத்து நடந்தால் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. அந்த வயதுக்கே உரிய தைரியத்தில் பையை முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பாலம் எப்படியும் ஒரு 2 கி.மீ. நீளமாவது இருக்கும். பார்த்தால், பாலத்திற்கு இடையே தூண்கள், ஸ்லீப்பர் கட்டை, தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை. இடைவெளிதான் இருக்கிறது. சரி, ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து, பாலம் இரண்டாகப் பிரியும் பகுதிவரை வந்து விட்டேன். அதற்கு மேல் ஸ்லீப்பர் கட்டைகளில் ஒரே க்ரீஸ். கால் வழுக்குகிறது. காற்று வேறு புயல்போல வீசுகிறது. கீழேயோ அலை எழும்பித் தண்டவாளத்தைத் தாக்குகிறது. உடலெல்லாம் நனைந்து விட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை. கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்துவிடும். முன்னால் போக வேண்டாம்; திரும்பிப் போகலாம் என்றாலும் இதே க்ரீஸ் வழுக்கும் பகுதியைக் கடந்துதான் போக வேண்டும். என்ன ஆனாலும் சரி என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து, அதில் கைகளையும் ஸ்லீப்பரில் கால்களையும் வைத்து மாறி மாறி தண்டவாளத்தைப் பற்றிக் கொண்டு தவழ்ந்து செல்ல ஆரம்பித்தேன்.
அப்படியே தவழ்ந்து தவழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். மணி 9 ஆகி இருந்தது. 2 கி.மீ. தூரத்தைக் கடக்க எனக்கு 3 மணி நேரம் ஆகியிருந்தது. என் கை, கால், முகம், ஆடைகள் எல்லாவற்றிலும் க்ரீஸ். அங்கிருந்து பஸ் பிடித்து ராமேஸ்வரம் சென்று, அங்கிருந்து வண்டி பிடித்து நான் துறைமுகம் செல்லும் போது மணி 11 ஆகிவிட்டது. 12 மணிக்கெல்லாம் கப்பல் புறப்பட்டு விடும்.
என்னைப் பார்த்ததும் எங்கள் ஏஜெண்ட் ஓடி வந்தார். "டிக்கெட்டுகளைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார் பதட்டத்துடன். நான் பையைக் கொடுத்ததும் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அங்கே காத்துக் கொண்டிருந்தவர்களிடம் கொடுத்து, கப்பலில் ஏற்றினார். வேலையை முடித்துவிட்டு என்னிடம் அவர் வரும்போது 1 மணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் அதுவரை குளிக்காமல் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தேன். மற்ற ஏஜெண்டுகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். "எப்படி உன் ஆட்களை மட்டும் கப்பலில் ஏற்ற முடிந்தது? ட்ரெயின் நடுவழியில் நின்று விட்டதே" என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் என்னைக் கை காண்பித்தார். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். என் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதன் பின் எனக்குத் தொழில் வாய்ப்புகள் அதிகமாயின. என் சைதாப்பேட்டை ரூமே ட்ராவல் ஏஜென்சி ஆனது. பின்னால் நான் மதுரா ட்ராவல்ஸ் ஆரம்பிக்க அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. நான்மட்டும் அன்று அந்தப் பாலத்தைக் கடக்கும் முடிவை எடுக்காமலிருந்தால் இன்றும் ஏதாவது ஒரு ட்ராவல் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளனாகத் தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பேன். |
மேலும் படங்களுக்கு |
|
More
டாக்டர். அழகப்பா அழகப்பன்
|
|
|
|
|
|
|
|