Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சமயம்
அழகர்கோவில்
- சீதா துரைராஜ்|ஜூலை 2012|
Share:
அழகர்கோவில் என அழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோயில் மதுரை நகருக்கு வடக்கே சுமார் 21 கி.மீ. தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது. இதில் அழகரான பெருமாள் கோயில் கொண்டிருப்பதால் ‘அழகர் மலை' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு திருமாலிருஞ்சோலை, சோலைமலை, மாலிருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி, இடபகிரி என பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும், 320 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் தென்புற அடிவாரத்தில் அழகர்கோவில் அமைந்துள்ளது.

கோயில் பெருமை:
இம்மலை எப்போது தோன்றியது என அறிய இயலாத பழமை உடையது. பழைய தமிழ் நூல்களிலும் வராக புராணம், பிரமாண்ட புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் போன்ற வடமொழி புராணங்களிலும் இதன் சிறப்பு பேசப்பட்டுள்ளது. இங்கு இறைவனின் பெயர் அழகர். வடமொழியில் சுந்தர்ராஜப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் என ஆறு ஆழ்வார்களால் மங்காளாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். வடவேங்கடம் போல் இம்மலையும் அலங்காரன் மலை, குலமலை, கோலமலை, குளிர் மாமலை, கொற்றமலை, நீலமலை, நீண்டமலை என ஏழுமலைகளாக அமைந்துள்ளது. பல்வேறு ஆறுகளையும், தன்னகத்தே கொண்டது இம்மலை. அவற்றைப் பெரியாழ்வார் ஆயிரம் ஆயிரமாகக் காட்டிப் புகழ்ந்திருக்கிறார். இம்மலைகளில் உள்ள தீர்த்தங்களின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் புகழ்ந்து கூறப்பட்டிருப்பதன் மூலம் இம்மலையின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அவை எவை என சரிவரத் தெரியவில்லை. நூபுர கங்கை எனப்படும் சிலம்பாற்றின் பெயராகவே அவை கருதப்படுகின்றன. அழகரை ‘கள்ளழகர்' என அழைப்பதற்கு தம்பாடல்கள் மூலம் அடிகோலியவர் நம்மாழ்வார். பாண்டிய, சோழ, விஜயநகர, நாயக்க மன்னர்கள் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, பிராமி, வட்டெழுத்து உட்படக் கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன.

கோயில் அமைப்பு:
இக்கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. வெளிக்கோட்டைப் பகுதியில் தேர் மண்டபத்தை அடுத்து இரணியம் வாசல் உள்ளது. அதனுள்ளே நுழைந்தால் இடப்புறம் யானை வாகன மண்டபம், இதன் வடக்கே இராசகோபுரம், கல்யாண மண்டபம், தொண்டைமான் கோபுரம், சுந்தர பாண்டியன் மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. கொடிக்கம்பத்தை அடுத்த கருட மண்டபம், ஆரிய மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதற்குப் படியேற்ற மண்டபம் என்ற பெயரும் உண்டு. வசந்த மண்டபத்திற்கு கிழக்கே சற்றுத் தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள மண்டபத்தை இராயகோபுரம் என அழைக்கின்றனர்.
மூலவர் பெயர் ஸ்ரீபரமஸ்வாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பஞ்சாயுதங்களுடன் சேவை சாதிக்கிறார். கையில் சக்கரம் பிரயோக தோரணையில் உள்ளது. உற்சவ மூர்த்திக்குத்தான் அழகர் என்றும் சுந்தர்ராஜன் என்றும் திருநாமங்கள். நூபுர கங்கை நீர் தவிர வேறு நீரால் அபிஷேகம் செய்தால் மூர்த்தி கருப்பாக மாறிவிடும் அதிசயம் இங்கு மட்டும்தான். இது தவிர, 'அபரஞ்சி' எனும் உயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட வேறு விக்ரகமும் உள்ளது. இதேபோல திருவனந்தபுரத்தில் உள்ள உற்சவ மூர்த்தியும் அபரஞ்சியினால் செய்யப்பட்டதுதான். இவை தவிர, வேறெங்கும் அபரஞ்சியால் செய்யப்பட்ட மூர்த்திகள் இல்லை.

கர்ப்பகிரகத்தை அடுத்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சேவை சாதிக்கிறார். அவரைத் தொடர்ந்து க்ஷேத்ர பாலகர். பின் தாயார் சன்னதி. மூலவருக்கு அடுத்தபடியாக ஸ்ரீ கல்யாண சுந்தரவல்லித் தாயார். வடக்கு பிரகாரத்தில் ஆண்டாள் சேவை சாதிக்கிறார். ஸ்ரீசுதர்சனர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர், பார்த்தசாரதி, மண்டூக மகரிஷி, கிருஷ்ணர், ராமானுஜர், ஆழ்வார்கள் சன்னதிகள் உள்ளன. இம்மலைக்கும், அதில் உள்ள தீர்த்தங்களுக்கும் காவல் தேவதை ஸ்ரீ ராக்காயி அம்மன். பதினெட்டாம்படி கருப்பரும் காவல் தெய்வமாக இங்கே வீற்றிருக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

ஸ்ரீகள்ளழகர் நித்யோத்ஸவப் பெருமாள். வருடந்தோறும் நடக்கும் ‘சித்ரா பௌர்ணமி' விழா வெகு விசேஷமானது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவோடு தொடர்புடையது இத்திருவிழா. கள்ளழகர் தன் சகோதரி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்திற்காக ஆடை. அலங்காரம் புனைந்து, படை, பரிவாரங்களுடன் புறப்படுகிறார். பல்வேறு மண்டபங்களில் தங்கி சகல கோலாகலத்துடன் மதுரை நோக்கி வருகிறார். வைகை ஆற்றில் அவர் இறங்கி வந்து கொண்டிருக்கும் போது எதிர்சேவையாக மக்களும், வீரராகவப் பெருமாளும் எதிர்கொண்டு அழைத்து சேவை சாதிக்கின்றனர். இந்த வைபவமே “கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்” என்று மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கள்ளழகர் பின் தன் மலைக்குத் திரும்புகிறார். இத்திருவிழா சைவ, வைணவ மதங்களை ஐக்கியப்படுத்தும் விழாவாகக் கருதப்படுகிறது.

அழகர் மலைக்கு வந்து அவன் அருளமுதத்தைப் பருகிச் செல்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிககள் என்பதில் ஐயமில்லை.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline