Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
அன்னை அபிராமி
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2012|
Share:
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று இது. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம். வில்வ வனம், பிஞ்சில வனம், கடவூர் போன்ற வேறு பல பெயர்களும் உண்டு. மார்க்கண்டேயனின் உயிரைக் காக்க காலனைக் காலால் உதைத்து காலசம்ஹார மூர்த்தியாகச் சிவன் எழுந்தருளிய தலம் இது. ஒருமுறை பிரம்மா ஞானோபதேசம் வேண்டிச் சிவனை வழிபட, சிவன் வில்வ விதை ஒன்றினைத் தந்து "இது இட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளைக்கிறதோ அங்கு தங்கி என்னை வழிபடுவாயாக" எனக் கட்டளையிட்டார். பிரம்மன் விதைத்த அந்த வில்வ விதை முளைத்த தலம் இதுதான். அதனால் இறைவனுக்கு வில்வ வனேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

தேவரும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து, அதனை ஒரு கடத்தில் (பானையில்) இட்டு, இந்த வில்வ வனத்தில் வைத்துவிட்டு நீராடச் சென்றனர். அவர்கள் திரும்ப வந்து கடத்தை எடுக்க முயலும்போது எடுக்க இயலவில்லை. கடம் பாதாளம்வரை ஊடுருவிச் சுயம்பு லிங்கமாக மாறியிருந்தது. கடத்தோடு அமுதமே ஈசனாக மாறியதால் இறைவனுக்கு அமிர்தகடேஸ்வரர், அமுதலிங்கம் என்ற பெயர்கள் உண்டாயின.

இறைவனுக்கு அமிர்தகடோத்பவர், அமுதகடேசர், காலசங்கரர், கடவூர் வீரட்டேஸ்வரர் என்று பல பெயர்கள் உண்டு. அன்னையின் பெயர் அபிராமவல்லி. அழகில் தன்னை ஒப்பார் இல்லாததால் இப்பெயர். வலக்கரத்தில் ஜபமாலை; இடக்கரத்தில் செந்தாமரை. வலது கரம் அபய ஹஸ்தம்; இடக்கரம் வரத முத்திரையோடு காட்சி தருகிறாள். பிரம்மன் இறைவனை பூஜித்து அருள் பெற்றதுபோல், பிரம்மனின் தேவியான சரஸ்வதி, அன்னையைப் பூஜித்து அருள்பெற்ற தலம் இது. தீர்த்தங்களாக அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் போன்றவை விளங்குகின்றன. மார்க்கண்டேய தீர்த்தம் திருக்கடவூர் மயானத்தின் பக்கம் கிணறாக உள்ளது. மார்க்கண்டேயரின் வேண்டுகோள்படி கங்கை இங்கே எழுந்தருளியிருக்கிறாள். இத்தீர்த்ததை சுவாமி அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அமுதலிங்கத்தைப் பூசித்த பிரமன் "ஞானாமிர்தத்தினை ஞானவாவியில் தந்தருளினோம். நீவிர் அருந்துக" என தேவர்களிடம் சொல்ல, தேவர்கள் தேடிச்சென்ற போது அதைக் காணவில்லை; அவர்கள் பிரார்த்திக்க, சிவபெருமான் காட்சி தந்து, கணபதியை வணங்குங்கள், எக்காரியம் தொடங்கினும் கணபதியை வணங்க வேண்டும் எனச் சொன்னார். தேவர்கள் விநாயகரை வணங்க, அவர் தோன்றி, "எம்மை மறந்ததால் நாம் அமுதக் குடத்தை மறைத்தோம். இனி அமுதம் வாவியில் தோன்றும்" என்றார். இவ்வாறு அமுதத்தை மறைத்த விநாயகர், சோரகணபதி அல்லது கள்ளவாரணப் பிள்ளையார் என்ற பெயருடன் அங்கே எழுந்தருளியுள்ளார். இவர் அமிர்தசித்தி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார்.

தல விருட்சம் பிஞ்சிலம் எனப்படும் சாதி மல்லிகை. ஆண்டு முழுவதும் பூக்கும் இது இறைவனுக்கு மட்டுமே சாற்றப்படுகிறது. மூன்று சமயக் குரவர்களாலும் பாடப்பெற்ற புகழையுடையது இத்தலம். கலிய நாயனார், குங்கிலிய நாயனார், அபிராமி பட்டர் போன்றோர் வாழ்ந்த பெருமைக்குரிய தலம் இது.
ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கிய சன்னிதியுடன் விளங்குகிறது. பஞ்சப் பிரகாரங்கள் சிறப்பைத் தருகின்றன. நூற்றுக்கால் மண்டபம், திருக்குளம், அம்மன் ஆலயம் ஆகியவை அழகுற அமைந்துள்ளன. முருகன், கஜலக்ஷ்மி, சோமாஸ்கந்தர், நடராஜர், பிட்சாடனர், அகத்தியர், அரசர், அமைச்சர் திருவுருவங்கள் அனைத்தும் சிறப்புற அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் வடபுறம் காலசம்ஹார மூர்த்தி தெற்குமுகமாக எழுந்தருளியிருக்கிறார். வலது திருக்கரங்களில் சூலமும், மழுவும் உள்ளன. இடது திருவடியால் உதையுண்டு தலைகீழாக விழுந்து கிடக்கும் எமனை ஒரு சிவபூதம் கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனின் வலப்புறம் பக்திப் பெருக்குடன் மார்க்கண்டேயர் காட்சி தருகிறார். இடப்புறத்தில் பாலாம்பிகை, திருமகள், கலைமகள் தத்தம் சேடியருடன் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை அபிஷேகம் நடைபெறுகிறது.

ஒருமுறை தஞ்சை சரபோஜி மன்னர் அபிராமி அன்னையை தரிசிக்க வந்திருந்தார். அப்போது அன்னையை தரிசித்து அளவற்ற பரவசத்தில் இருந்த அபிராமி பட்டரிடம், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்க, அவர் அமாவாசையான அன்று பௌர்ணமி என்று பரவசத்தில் சொல்லி விடுகிறார். "அமாவாசையான இன்று பௌர்ணமி என்கிறீரே, இன்று வானில் பௌர்ணமி நிலவு தோன்றாவிட்டால் அரசாணை உம்மைத் தண்டிக்கும்" என அறிவிக்கிறார் மன்னர். அபிராமி பட்டர் அன்னையைத் தொழுது ‘உதிக்கின்ற செங்கதிர்’ எனத் தொடங்கி அந்தாதி பாட, எழுபத்தொன்பதாவது பாடலான ‘விழிக்கே அருளுண்டு’ பாசுரத்தைப் பாடத் தொடங்கும் போது, அன்னை தன் காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வீச, அது வானில் நிலவாய் ஒளிவீசிச் சுடர் விட்டதாம். பட்டரும் அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதியை முழுமையாகப் பாடி முடித்தார். மன்னன் முதல் மக்கள்வரை அபிராமி பட்டரின் மேன்மையை உணர்ந்து தொழுதனர்.

கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு நடக்கும் சங்காபிஷேகம் இங்கு மிகவும் விசேஷம். பிரகதீச மஹாராஜா தனக்கு ஏற்பட்ட தீராத நோயினை இந்த சங்காபிஷேகம் மூலம் செய்து தம் பிறவிப் பிணி நீங்கியதாக வரலாறு. இத்தீர்த்தத்தை அருந்துவோருக்கு எல்லா நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, சதாபிஷேகம், ஆயுஷ்ய ஹோமம் போன்றவற்றைச் செய்து கொள்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline