Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
திருப்பரங்குன்றம்
- சீதா துரைராஜ்|ஜூன் 2012|
Share:
மதுரையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களுள் திருப்பரங்குன்றமும் ஒன்று. இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூரில் 300 மீ. உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பாண்டி நாட்டின் 14 பாடல்பெற்ற தலங்களுள் பரங்குன்றமும் ஒன்று. ஞானசம்பந்தர், சுந்தரர் போன்றோர் இத்தல இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர். மூலவர் சுப்பிரமணியராக அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் தெய்வானையுடன் தேவசேனாதிபதியாகக் காட்சி தருகிறார். திருப்பரங்குன்றம், திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசரத்தலம், குமாரபுரி, வீட்டுணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, தென்பரங்குன்றம், சத்யகிரி போன்ற பல பெயர்கள் இம்மலைக்கு உண்டு. முருகனுக்கு மட்டுமல்லாமல் சிவனுக்கும் உகந்த மலை என்பதால் 'தென்கைலாய மலை' என்றும் இத்தலம் போற்றப்படுகிறது. சிவனின் பெயர் பரங்கிரி நாதர். அம்பாள் ஆவுடைநாயகி. தலவிருட்சம்: அத்திமரம். திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றிலிருந்துதான் 'ஆறுபடை வீடுகள்' என வழக்கத்தில் வந்தது. அவற்றுள் முதல் படைவீடு பரங்குன்றம்தான்.

தீர்த்தங்களால் சிறப்புடைத்து இக்கோயில். சரவணப்பொய்கை, (குன்றின் அடிவாரத்தில் முருகன் கை வேலினால் உண்டாக்கப்பட்டது) சத்ய தீர்த்தம் (தெப்ப விழா நடக்கும் குளம்), பாதாள கங்கை, (மலையின் உச்சியில் உள்ளது) இலக்குமிதீர்த்தம் (தெய்வானைக்காக முருகனால் உண்டாக்கப்பட்டது), சன்யாசி தீர்த்தம் (நான்முகனுக்காக முருகனால் உண்டாக்கப்பட்டது), போன்றவை முக்கியமான தீர்த்தங்களாகும். இவை தவிர புஷ்ப மார்த்தவ தீர்த்தம், புத்திர கூவம், பாண்டவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சித்த தீர்த்தம், மண்டல தீர்த்தம் போன்றவையும் புண்ணிய தீர்த்தங்களாகும்.

இம்மலை கடல் மட்டத்திலிருந்து 1050 அடி உயரத்தில் உள்ளது. அடிவாரத்தில் உள்ள முருகன் கோயில் கலையழகும் சிற்பச் சிறப்பும் கொண்டது. ராணி மங்கம்மாள் மண்டபம், திருவாட்சி மண்டபம் போன்றவை கலையெழில் மிகுந்தவை. முருகன் திருக்கல்யாணம், பங்குனி உத்திர விழா போன்றவை திருவாட்சி மண்டபத்தில்தான் நடைபெறும். இதை அடுத்துள்ள கம்பத்தடி மண்டபத்தில் தெய்வீகத் திருவுருங்கள் உள்ளன. கொடிமரம் உள்ளது. மேலேறிச் செல்லும் வாயிலின் கிழக்குப் பழக்கம் அதிகார நந்தீஸ்வரர், காலகண்டி அம்மையார், மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகர் உருவங்கள் உள்ளன. கம்பத்தடி மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது. அதன் மேற்புறம் கோவர்த்தனாம்பிகை தனிச் சன்னதியில் உள்ளார். மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்திகள், அறுபத்து மூவர், நால்வர், செந்திலாண்டவர், சனி பகவான் ஆகியோர் காட்சி தருகின்றனர். இவ்வாலயத்தில் நவக்கிரகத்திற்கு தனிச்சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாமண்டபத்தை அடுத்துத் தெற்கில் அர்த்தமண்டபம் மூன்று வாயில்களுடன் உள்ளது. இறைவன் பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை மற்றும் முருகப்பெருமான் வடக்கு நோக்கியும் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். ஐந்து கருவறைகளிலும் உள்ள மூர்த்திகள் சிற்ப சாஸ்திரங்களில் ஒருவகையான 'சுடுசர்க்கரைப் பிரயோகம்' என்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. முருகப் பெருமானுக்குப் புனுகும் மற்ற தெய்வங்களுக்கு தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. சுவாமிக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

முருகப்பெருமான் கருவறையில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் நாரதர் காட்சி தருகின்றனர். மேலே சூரியன், சந்திரன், காயத்ரி தேவி, சித்த வித்யாதரர்கள், கலைமகள், நான்முகன், இந்திரன் காட்சி தருகின்றனர். கீழே யானை, மயில், ஆடு அண்டராபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் காட்சி தருகின்றனர். சிவபெருமானுக்கு எதிராக நந்தி இருக்கவேண்டிய இடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பவளக்கனிவாய்ப் பெருமாள் இருப்பதால் இவருக்கு 'மால்விடை' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்திரன் தன் பகைவனாகிய சூரபத்மனை முருகன் வதம் செய்ததால் அவனுக்குத் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்விக்க விரும்புகிறார். நாரதர், நான்முகன், தேவர்கள் போன்றோரும் வலியுறுத்த முருகன் அதனை ஏற்று தெய்வானையை பரங்குன்றத்தில் மணம் செய்து கொள்கிறார். திருமணக் கோலத்திலேயே இறைவன் கருவறையில் காட்சி தருகிறார். கருவறையில் உள்ள யானை இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்றும், தெய்வானையைப் பிரிய மனமில்லாமல் அது முருகனுக்குத் தொண்டு புரிய வந்துவிட்டது என்றும் கூறுகின்றனர்.

பல வண்ண ஓவியங்கள், கலை நுணுக்கம் மிக்க சிற்பங்கள் உள்ள இவ்வாலயத்தில் பாண்டியர், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பண்டைச் சிறப்பு மிக்க இவ்வாலயத்தைப் பற்றிய குறிப்பு தொன்மையான பரிபாடலில் காணப்படுகின்றது.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline