Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சமயம்
ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம், சென்னை
- சீதா துரைராஜ்|மே 2012|
Share:
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகச்சபேஸ்வரர் கோவிலைப் போலவே இக்கோயிலும் அமைந்துள்ளது. மொழி வழக்கில் கச்சாலீஸ்வரர் ஆலயம் என வழங்கப்பெறுகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக மந்த்ர மலை இருக்க, அது கடலில் அழுந்தவே, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆமை உருவெடுத்து இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் நாமம் கச்சபேஸ்வரர் ஆயிற்று. இந்த வரலாறு கோவிலுள் பல வர்ணங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

1700ம் ஆண்டில் சென்னையில் வாழ்ந்து வந்த தளவாய் செட்டியார் சிறந்த சிவ பக்தர். கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர், தினமும் காஞ்சி சென்று கச்சபேசுவரரை தரிசித்து வருவதை தனது வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் காஞ்சிக்குச் சென்றபோது வெள்ளப் பெருக்கால் இறைவனையும் வழிபட முடியாது, சரியான நேரத்திற்குப் பணிக்கும் செல்லமுடியாது போனது. மிகவும் மனம் வருந்திய அவர் கனவில் இறைவன் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபடப் பணித்தார். ஆங்கிலேயே அதிகாரிகள் உதவியுடன் கணபதி சிலையும், சிறு குட்டையும் இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1720ல் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார். தளவாய் செட்டியார் மற்றும் அவரது மனைவியின் திருவுருவங்களை இன்றும் ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் காணலாம்.

இறைவனின் திருநாமம் கச்சாரீஸ்வரர். இறைவி, சௌந்தர நாயகி. கோயிலுள் நுழைந்ததும் வலப்பக்கத்தில் அரசும் வேலும் பின்னிப் பிணைந்து நிற்கும் காட்சியையும், அதன்கீழ் மகாகணபதி, நாக விக்ரகங்களையும் காணலாம். பிரம்மாண்ட கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து நந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ கச்சபேஸ்வரர், இரு பக்கமும் சித்தி, புத்தியுடன் பஞ்சமுக கணபதியையும், ஆறுமுகப் பெருமானையும் தரிசிக்கலாம். எந்தத் திருக்கோயிலிலும் காணக் கிடைக்காத காட்சியாக மூலவர் சிவபெருமான் (கச்சபேசன்) ஐந்து ஆசனங்களில் கூர்மாசனம், அஷ்ட நாகாசனம், சிம்மாசனம், யுகாசனம், கமல விலாசனம் (தாமரை ஆசனம்) ஆகிய ஆசனங்களில் ஆனந்தக் காட்சி தருகிறார். இந்தச் சிவபெருமானின் மேற்கூரையாகப் பனிரெண்டு சூரியத் தூண்கள் மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சிகரங்களாக அமைந்துள்ளது சிறப்பு. சிவபெருமான் பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் லிங்க ரூபமாகவே இருப்பார். இவ்வாலயத்தில் மூல லிங்கத்தின் பின்புறம் ஐந்து முகங்களுடன் காட்சி தருகிறார்.
கோயிலின் உட்பிராகாரச் சுவர்களில் சிவபெருமானின் மகிமையைக் கூறும் வண்ண ஓவியங்கள், தேவாரப் பாடல்கள் தீட்டப்பட்டு உள்ளன. மிகப் பிரம்மாண்டமான உற்சவ மூர்த்தியாக, சோமாஸ்கந்தராக கச்சபேசர், சௌந்தரநாயகியைத் தரிசிக்கிறோம். இந்த மூர்த்தி மிகமிக கனமானவர் என்பதால் வருடத்திற்கு இருமுறை மட்டுமே இப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. விநாயகர், முருகன், துர்கை, நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார் சன்னதிகள் காண அழகானவை. ஸ்ரீ நடராஜர் சன்னதியில் அம்பிகை சிவகாமியுடன் பன்னிரு திருமுறைகளும், சிதம்பர ரகசியமும் இடம் பெற்றுள்ளது. வலப்பக்கம் நின்ற கோலத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், இடப்பக்கம் தத்தாத்ரேயரும் உள்ளனர். கஜலட்சுமி, சரஸ்வதியை அடுத்து தனிச்சன்னதியில் அழகுற அன்னை சௌந்தரநாயகி காட்சி தருகிறாள். அன்னையின் இருமருங்கிலும் வீரபத்ரர், காலபைரவர் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் முருகன் 'செங்கல்வராயன்' ஆகக் காட்சி தருகிறார். பாம்பன் சுவாமிகள் இத்தல முருகனைச் "செங்கல்வராயா" எனப் புகழ்ந்து பாடியுள்ளார். இங்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக இடம்பெற்றுள்ளது மற்றொரு சிறப்பு.

ஆதிசங்கரர், ஆஞ்சநேயர், ஐயப்பன், முந்திகேஸ்வரர், பூரணா, புஷ்கலா சமேத சாஸ்தா சன்னதிகள் தனிச் சன்னதிகளாக அமைந்துள்ளன. சென்னை மாநகரிலேயே முதன் முதலில் ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டது இவ்வாலயத்தில்தான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. திருவிழாக்களும், வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. வரலாறுகளை விளக்கும் பழங்கால ஓவியங்கள் நம் கண்ணைக் கவர்கின்றன. சென்னையின் தொன்மையான, சிறப்பான ஆலயங்களுள் ஸ்ரீ கச்சாரீஸ்வரர் ஆலயமும் ஒன்று..

சீதா துரைராஜ்
Share: 
© Copyright 2020 Tamilonline