|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| எனக்கோர் தங்கை பிறந்தபின் என் பெற்றோர்
 அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
 என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
 இனியும் நான் குழந்தையில்லை
 என்பதை ஏற்றுக் கொண்டேன்...
 
 திருவள்ளுவர் பேருந்தில் நடத்துனர்
 கைப்பிடித்த தடியோடு
 என் உயரத்தை அளந்து பார்த்து
 சார் பையனுக்கு முழு டிக்கெட்
 தான் வாங்கணும் என்றார்...
 இனியும் நான் சிறுவனில்லை
 என்பதை ஏற்றுக் கொண்டேன்
 
 என்றுமே பேருந்துப் பயணங்களில்
 உறங்கப் பழக்கப்பட்ட நான்
 சமீப காலத்தில் கண் கொட்டாமல்
 விழித்துப் பயணித்தேன்
 என் மனைவி என் தோளில்
 சாய்ந்து உறங்கிப்
 பயணித்து வந்ததனால்
 இனியும் நான் தனி மனிதனில்லை
 என்று அப்போது ஏற்றுக் கொண்டேன்...
 
 ஆனால் ஏனோ ஏற்றுக்கொள்ள
 முடியவில்லை
 அம்மாவின் தலையில்
 அடர்த்தியாகிக் கொண்டிருக்கும்
 நரையையும்
 அப்பாவின் உடலில்
 அதிகமாகிக் கொண்டிருக்கும்
 தளர்ச்சியையும்...
 | 
											
												|  | 
											
											
												| குருபிரசாத் வெங்கடேசன், எல்லிகாட் சிடி, மேரிலாண்ட்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |