|
|
|
|
ஒரு ஆற்றின் கரையில் ஆமை ஒன்று வசித்தது. அங்கே தினமும் இரண்டு கொக்குகள் வந்து மீன் பிடித்துத் தின்னும். அவை வரும்போதெல்லாம் தாங்கள் வழியில் கண்ட அழகான நீர்நிலைகள், வினோதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் பற்றிச் சுவையாகப் பேசிக் கொண்டிருக்கும். ஆமை அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்.
ஒருநாள் ஆமை கொக்குகளிடம் தன்னையும் அவர்களது நட்பு வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டது. அவ்வாறு சேர்த்துக் கொண்டால், அந்த ஆற்றில் எங்கு நிறைய மீன்கள் கிடைக்கும் என்பதைக் காட்டித் தருவதாகவும் சொன்னது. அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்குகள் ஆமையை நண்பனாக ஏற்றுக் கொண்டன. அதற்கு நன்றிக் கடனாக மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியை தினந்தோறும் அடையாளம் காட்டியது ஆமை.
ஒருநாள் தானும் கொக்குகளோடு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற ஆசை ஆமைக்கு ஏற்பட்டது. அதைக் கேட்ட கொக்குகள், "நீ, நீரிலும், நிலத்திலும் மட்டுமே வாழ்ந்து பழக்கப்பட்டவன. உன்னால் வானத்தில் பறக்க முடியாது. அந்த ஆசையை மறந்துவிடு" என்றன. ஆனால் ஆமையோ அவசியம் தன்னைக் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்றும், ஒரே ஒருமுறை அந்த இயற்கையைப் பறந்த வண்ணம் ரசித்தால் போதும் என்றும் கெஞ்சியது. வேறு வழியில்லாமல் கொக்குகள் சம்மதித்தன. |
|
ஒரு பெரிய கம்பின் நுனிகளை இரண்டு கொக்குகளும் கவ்விக் கொள்ள, கம்பின் நடுப்பகுதியை ஆமை தனது பற்களால் கவ்விக் கொண்டது. "ஜாக்கிரதை, என்ன ஆனாலும் நீ வாயை மட்டும் திறக்காதே! அவ்வளவுதான் கீழே விழுந்து விடுவாய்" என்று எச்சரித்துவிட்டுக் கொக்குகள் மேலே பறக்கத் துவங்கின. அதுவரை நிலத்தையும், நீரையும் மட்டுமே பார்த்து வந்த ஆமைக்குப் பறப்பதனால் விளைந்த ஆனந்தம் தாங்கவில்லை. அதிசயத்தோடு மேகக் கூட்டங்களையும், சிறுசிறு மலைகளையும் பார்த்தவாறே வியப்புடன் போய்க்கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அங்கே பறந்து வந்த கழுகு ஒன்று கொக்குகளைத் தாக்கியது. ஆனாலும் கொக்குகள் சமாளித்துக் கொண்டு மேலே பறந்தன. ஆனால் மீண்டும் மீண்டும் கழுகு கொக்குகளைத் தாக்க வந்தது. அதைப் பார்த்த ஆமைக்குக் கோபம் வந்துவிட்டது. "முட்டாளே, நாங்கள் சந்தோஷமாய்ப் பறந்து செல்வது உனக்குப் பொறுக்கவில்லையா?" என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தது. அவ்வளவுதான், கம்பைப் பிடித்திருந்த பிடி நழுவ, "அய்யோ செத்தேன்!" என்று கூறிக்கொண்டே வெகு கீழே இருந்த ஒரு பாறையில் விழுந்து நொறுங்கி மடிந்தது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|