Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
முன்னோடி
கொத்தமங்கலம் சுப்பு
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2010|
Share:
“நோபல் பரிசைப்போல தமிழ்நாட்டில் பாரதியாரின் பெயரில் ஒரு பரிசு இருக்குமாயின், அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்கு கொடுப்பேன்”. சொன்னவர் வ.ரா. பாரட்டப்பட்டவர் நடிகர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட இயக்குனர், வில்லுப் பாட்டுக் கலைஞர் என்று பலவற்றிலும் பரிமளித்த கொத்தமங்கலம் சுப்பு. பட்டுக்கோட்டை அருகே உள்ள கன்னாரியேந்தல் கிராமத்தில் மகாலிங்க ஐயர், கங்கம்மாள் தம்பதியினருக்கு நவம்பர் 10, 1910 அன்று மகவாகப் பிறந்தார் சுப்பு. இயற்பெயர் சுப்ரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்த சுப்பு, சிற்றன்னையிடம் வளர்ந்தார். குடும்பச் சூழ்நிலையால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. படிப்பை முடித்த கையோடு வீட்டுப் பொறுப்பை ஏற்றார். தந்தைக்குத் துணையாக உழைத்தார். அத்தை மகளை மணந்த அவர், செட்டிநாட்டை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் குடியேறினார். அங்கு ஒரு மரக்கிடங்கில் கணக்காளராகப் பணியில் சேர்ந்தார்.

சுப்புவின் இன்முகமும், பழக்க வழக்கங்களும் கடையில் வியாபாரத்தைப் பெருக்கின. சுப்பு மேலாளராக உயர்ந்தார். இயல்பிலேயே நாடக ஆர்வமும், கவிபாடும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. ஓய்வு நேரத்தில் தவறாது நாடகம் பார்க்கச் சென்றுவிடுவார். பல மைல் தூரமானாலும் சென்று நாடகம் பார்ப்பார். மறுநாள் நண்பர்களிடம், பாடல்களைப் பாடியும், நடித்தும் காண்பிப்பார். நாடக ஆர்வம் அதிகரிக்கவே, நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறு நாடகக் குழுவைத் தொடங்கி, அவ்வப்போது நாடகங்கள் நடத்தினார்.

இந்நிலையில் வற்றாயிருப்பைச் சேர்ந்த சீனிவாசன் என்ற நடிகருடன் சுப்புவுக்கு நட்பு ஏற்பட்டது. சீனிவாசன் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் நடித்தவர். வற்றாயிருப்பு சாமா ஐயங்காரிடம் இசை பயின்றவர். அத்துடன் நாடகங்கள் எழுதுவதிலும், பாடல் புனைவதிலும் திறமை பெற்றிருந்தார். வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி போன்ற பல நாடகங்களை அவர் நடத்தி வந்தார். அவரைக் கொண்டு செட்டிநாட்டுப் பகுதிகளில் சில நாடகங்களைச் சுப்பு நடத்தினார். சுப்புவின் வேண்டுகோளை ஏற்றுச் சீனிவாசன், கொத்தமங்கலத்துக்கே குடிபெயர்ந்தார். கொத்தமங்கலம் சீனு ஆனார். சுப்ரமணியன் கொத்தமங்கலம் சுப்பு ஆனார். சுப்புவும் சீனுவும் இணைந்து பல நாடகங்களை நடத்தினர். ராஜபார்ட்டாகவும், தோழர், நாரதர், மகாராஜா, சாமியார், சாஸ்திரிகள், முனிவர் என விதவிதமான வேடங்களை ஏற்றுத் தனது திறமையை வெளிப்படுத்தினார் சுப்பு.

சுப்பு, தனது திறமையாலும் உழைப்பாலும் அதிபர் எஸ்.எஸ். வாசனின் மனதைக் கவர்ந்து, படிப்படியாக ஜெமினி ஸ்டூடியோ மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். அதன் தூண்களுள் ஒருவரானார்.
இந்நிலையில் கொத்தமங்கலம் சீனு பாடிய இசைத்தட்டு ஒன்று வெளியானது. அதன் மூலம் அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவர் மூலம் சுப்புவுக்கும் திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர், 1939ல் வெளியான ‘சாந்த சக்குபாய்’ படம்மூலம் திரையுலகில் அழுத்தமாகக் காலூன்றினார். படத்திற்குக் கதை-வசனம் எழுதியதுடன் முக்கிய பாத்திரத்திலும் நடித்துத் தனிமுத்திரை பதித்தார். சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கிய அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுப்புவுக்குப் பல வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து படங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.

இந்நிலையில் ஜெமினி ஸ்டூடியோ அவரை அழைத்தது. முதலில் உதவியாளராகப் பொறுப்பேற்ற சுப்பு, தனது திறமையாலும் உழைப்பாலும் அதிபர் எஸ்.எஸ். வாசனின் மனதைக் கவர்ந்து, படிப்படியாக ஸ்டூடியோ மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். அதன் தூண்களுள் ஒருவரானார். சுப்புவின் எல்லாத் திறமைகளையும் வாசன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். சுப்பு கவிதை, எழுத்து, நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என திரைத்துறையின் பல தளங்களிலும் முத்திரை பதித்தார். ஜெமினியின் சாதனைப் படமான சந்திரலேகாவின் கதை-வசனத்தில் பங்கேற்றதுடன், சர்க்கஸ் கம்பெனி மேனேஜராகவும் நடித்தார். யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட அவரது வசனம் அக்காலத்தில் மிகவும் பிரபலம். தொடர்ந்து ஔவையார் படத்திற்கு கதை, வசனம் எழுதி, அதன் இயக்கத்தில் பங்கேற்றதுடன், முக்கிய வேடத்திலும் நடித்தார்.

“கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினியின் ஒரு முக்கிய அங்கம், அவர்தான் அங்கே நம்பர் 2. ஒவ்வொரு மாதமும் தன் இல்லத்தில் கச்சேரிகள் நடத்துவார். அவர் வீடு ஒரு தர்மசத்திரம் மாதிரியே இருக்கும். எப்போதும் யாராவது ஒரு பத்துப்பேர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் சம்பாதித்தார், அதை மற்றவர்களுக்காகச் செலவழித்தார்” என்கிறார், ஜெமினியில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளர் அசோகமித்திரன், தனது My Years with Boss at Gemini Studios என்ற நூலில்.

‘கண்ணம்மா என் காதலி’, ‘வள்ளியின் செல்வன்’ ஆகிய படங்களை இயக்கிய சுப்பு, ‘மிஸ் மாலினி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் அப்படத்தை இயக்கவும் செய்தார். அதுதான் ஜெமினி கணேசன், ஜாவர் சீதாராமன், வி. கோபால கிருஷ்ணன் ஆகியோருக்கு முதல் படம். இதுதவிர ‘அனாதைப் பெண்’, ‘கச்சதேவயானி’, ‘திருநீலகண்டர்’, ‘நந்தனார்’, ‘பாவ மன்னிப்பு’ போன்ற படங்களில் நடித்திருப்பதுடன், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். புகழ்பெற்ற ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்திற்குக் கதை-வசனம், பாடல்கள் சுப்புதான். அந்தக் காலக்கட்டத்தில் நகைச்சுவை வசனங்களை எழுதுவதில் சுப்புவுக்கு இணை எவருமில்லை என்று புகழப்பட்டார். அதற்கேற்றவாறு தாசி அபரஞ்சியிலும், கண்ணம்மா என் காதலியிலும் மிகச் சிறப்பான நகைச்சுவை வசனங்களைத் தந்திருந்தார்.
“சுப்புவின் வீடே ஒரு கலைக்கூடமாக இருந்தது. அங்கு எப்போதும் இசை ஒலித்துக் கொண்டிருக்கும். அடிக்கடி கச்சேரிகள் நடைபெறும். என்னுடைய அரங்கேற்றம் எனது 12வது வயதில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் இல்லத்தில்தான் நிகழ்ந்தது. பாபநாசம் சிவன் அவர்கள் பாடினார்” என்கிறார் பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு ரகு.

”என் உள்ளத்தில் இலக்கிய விதையை விதைத்தவர் பாரதியார். அதைக் கிளறிவிட்டு முளைவிடச் செய்து, செடியாக்கி, பழம் விளைவித்து, விநியோகம் செய்பவர்கள் அந்தப் பரம்பரையில் வந்த எழுத்தாளர்கள்” என்று கூறும் சுப்புவின் புதினங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ‘பந்தநல்லூர் பாமா’, ‘பொன்னிவனத்துப் பூங்குயில்’, ‘ராவ்பஹதூர் சிங்காரம்’, ‘மிஸ் ராதா’ போன்ற நாவல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சுப்புவின் ‘ராவ்பகதூர் சிங்காரம்’ நாவல் சிவாஜி, பத்மினி நடித்து ’விளையாட்டுப் பிள்ளை’ என்ற பெயரில் வெளியானது. சுப்புவின் உச்சக்கட்ட கலை வெளிப்பாடாக அமைந்தது ’தில்லானா மோகனாம்பாள்’ நாவல். சுப்புவின் கலைத்திறனை மெச்சி ’கலைமணி’ என்ற பட்டத்தை வரகவி அ. சுப்ரமண்ய பாரதியார் வழங்கியிருந்தார். அந்தப் புனை பெயரில் சுப்பு எழுதிய அத் தொடர் நாவல், ரசிக மனங்களைக் கொள்ளை கொண்டதுடன் திரைப்படமாகவும் வெளியாகி, கலைமணி சுப்புவுக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது. "வாராவாரம் ஆனந்தவிகடன் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்து, ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடரை வாசகர்கள் படிப்பார்கள். தில்லானா மோகனாம்பாள் கதையினால் கொத்தமங்கலம் சுப்புவுக்கும், படங்களால் எனக்கும் மிகவும் நல்ல பெயர் கிடைத்தது” என்கிறார் அத்தொடருக்குப் படம் வரைந்த கோபுலு. அதற்காகத் தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது சுப்புவிற்குக் கிடைத்தது. இந்திய கலாசாரத்தின் பொக்கிஷங்களான பரதநாட்டியத்தையும், நாதஸ்வரக் கலையையும் அறிந்து கொள்வதற்காக அமெரிக்கப் பல்கலைகழகத்தில் தில்லானா மோகனாம்பாளின் படச்சுருள் பாதுகாக்கப்பட்டு வருவதே அதன் பெருமைக்குச் சான்று.

‘மஞ்சி விரட்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பு உட்படப் பல சிறுகதைகளையும், பஞ்சாமிர்தம், நாடகமே உலகம் போன்ற நாடகங்களையும் எழுதியிருக்கிறார் சுப்பு. நாட்டுப்புறப் பாடல்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சுப்புவின் கவிதைகள் இலக்கியச் சிறப்பு, கவிதை நயம் வாய்ந்ததுடன் மண்ணின் மணத்தையும் காட்டுபவை. இவற்றுடன் மனதை மயக்கும் பாடல்களையும் சுப்பு இயற்றியிருக்கிறார். மயிலேறும் வடிவேலனே, மனமே முருகனின் மயில் வாகனம், வெண்ணிலவே, தண்மதியே என்னுடனே வா, வா போன்ற பல புகழ்பெற்ற பாடல்கள் சுப்புவால் எழுதப்பட்டவையே. டி.கேசி., ம.பொ.சி என பல அறிஞர்கள், சான்றோர்கள் சுப்புவின் ரசிகர்கள். சாதனை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு சுப்புவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர்.

மிகவும் இரக்க சுபாவம் வாய்ந்த சுப்பு, உயர்ந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மகாத்மா காந்தியிடம் ஈடுபாடு கொண்டவர். பணிவு, அடக்கம், நேர்மை, வாய்மை இவற்றைக் கொள்கையாக வைத்திருந்தார். கதராடையே அணிந்து, மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சுப்பு பாடிய ‘காந்தி மகான் சரிதம்’ வில்லுப் பாட்டு கேட்போருக்குக் கண்ணீரை வரவழைத்துவிடும். பாஞ்சாலி சபதத்தையும் வில்லுப்பாட்டில் அளித்திருக்கிறார். பாரதியார் கதையை ‘பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றியிருக்கிறார். சுப்புவை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ வழங்கப்பட்டது.

சுப்பு, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மகாத்மா காந்தியிடம் ஈடுபாடு கொண்டவர். பணிவு, அடக்கம், நேர்மை, வாய்மை இவற்றைக் கொள்கையாக வைத்திருந்தார்.
”பதினாறு வயதில் இராமாயண சொற்பொழிவுக்குப் போய் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் சில குறுக்குக் கேள்விகள் கேட்க, அதற்கு அவர், ‘உனக்கு வாழ்க்கை பதில் சொல்லும். நான் சொல்லமுடியாது. ஆனால் சபையில் தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு என் அன்புப் பரிசு’ என்று பெரிய மாலையை என் கழுத்தில் போட்டார். நான் அந்த மாலையோடு அம்மாவிடம் போய் நின்றேன். என் கழுத்தில் விழுந்த முதல் மாலை அது. ‘இன்று நல்ல நாள், உனக்கு மாலை போட்டவர் மிகமிக நல்ல மனிதர், நீ வாழ்வாங்கு வாழ்வாய்’ என்று அம்மா ஆசிர்வதித்தார். அது பலித்தது” என்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். ”குன்னக்குடி வைத்யநாதன் தயாரிப்பில் நான் கதை-வசனம், பாடல்கள் எழுதிய ’ஓவியன் மகள்’ என்ற நாடகம் கொத்தமங்கலம் சுப்பு தலைமையில் நடந்தது. என் பாடல்களைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்த சுப்பு, என்னை மனதார வாழ்த்தினார். எல்லோருக்கும் முன்னால் எளியவனான என்னை அவர் அன்று வாழ்த்தியதை என்னால் மறக்கவே முடியாது” என்கிறார் கவிஞர் பூவை. செங்குட்டுவன்.

”தமிழ் மண்ணிலே பிறந்தேன். தமிழ் மக்கள் இடையே வளர்ந்தேன். தமிழை மட்டுமேதான் பயின்றேன். படிப்பின் பலத்தைக் கொண்டு எழுதினேன். அவை இன்று புத்தகமாக வெளிவருகிறது. இந்தப் பெருமை எனக்குக் கிடைக்கக் காரணமாகிய தமிழ்நாட்டுக்கும் தமிழகத்தின் உயரிய மக்களாகிய விவசாயிகளுக்கும் எனது நமஸ்காரம்” என்கிறார் தனது நூல் ஒன்றின் முன்னுரையில் சுப்பு.

மனைவி, மக்களுடன் வாழ்வாங்கு வாழ்ந்த சுப்பு பிப்ரவரி 15, 1974ல் காலமானார். அவர் காலமானாலும் அவரது வாரிசுகள் அவர் வழியில் நின்று தமிழ், சமூகத் தொண்டாற்றி வருகின்றனர். சுப்புவின் மகன் கொத்தமங்கலம் விஸ்வநாதன் தந்தையைப் போலவே வில்லுப் பாட்டில் தேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆசுகவியாகப் பாடல்கள் இயற்றும் திறன் கொண்ட அவர், தந்தை வழியில் காந்தி மகானின் கதையை வில்லுப்பாட்டில் நிகழ்த்தி வருவதுடன் சாராதா தேவி, ராமகிருஷ்ணர் என பலரது வாழ்க்கைச் சம்பவங்களையும் வில்லுப்பாட்டு வடிவில் வழங்கி வருகிறார். வட அமெரிக்க மண்ணில் வசிக்கும் சுப்புவின் வாரிசுகள் அலமேலு மணி, காந்தி சுந்தர் ஆகியோரும் சுப்புவின் தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு அவரது வாரிசுகளால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline