Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
எம்.கே. தியாகராஜ பாகவதர்
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2010|
Share:
கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். அதேபோல் தமிழ்த் திரை இசையின் வளர்ச்சிக்கு உரமிட்டவர்களில் முதன்மையானவர் முத்துவேல் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்னும் எம்.கே. தியாகராஜ பாகவதர். மார்ச் 1, 1910 அன்று தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி ஆசாரி, மாணிக்கத்தம்மாள் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் தியாகராஜன். திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி சிறிய நகைப்பட்டறை ஒன்றை வைத்திருந்தார். அவருக்குக் குரல்வளமும் நடிப்பு ஆர்வமும் இருந்தன. சிறுவயதில் நாடகங்களில் நடித்திருந்தார் என்றாலும் போதிய வருமானமின்மையால் அத்துறையில் தொடரவில்லை. தந்தைக்கு இருந்த ஆர்வம் தனயனுக்கும் வந்து சேர்ந்தது. அப்பாத்துரை வாத்தியார் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி போதித்து வந்தார். அங்கே பாகவதர் சேர்க்கப்பட்டார். என்றாலும் அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. ஆறு, குளங்களில் குதித்து நீந்துவதும், பாடிக் கொண்டே நீச்சலடிப்பதும் அவரது பொழுதுபோக்குகள். இனிய குரல் கொண்ட அவர், எப்போதும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடியபடி இருப்பார்.

வறுமையில் வளர்ந்த பாகவதருக்கு எஸ்.ஜி. கிட்டப்பாவின் பாடல்கள் என்றால் உயிர். உச்சரிப்பு சுத்தமாக, எழுத்துப் பிசகாமல் நண்பர்களிடம் பாடிக் காட்டுவார். காசு கிடைத்தால், நாடகங்களைப் பார்க்கச் சென்று விடுவார். இசைக் கச்சேரிகளுக்குச் சென்று முதல் வரிசையில் உட்கார்ந்து கொள்வார். தாளம் போட்டு ரசிப்பார். குடும்பப் பொறுப்பில்லாமல் மகன் ஊர் சுற்றுவதைக் கண்ட தந்தை பலமுறை கண்டித்தார். ஒருமுறை தந்தை மிகக் கடுமையாகக் கோபித்துக் கொண்டதால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்று விட்டான் தியாகராஜன். அவரைத் தேடிக் கண்டுபிடித்த தந்தை, சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார். மகனின் இசையார்வத்தை உணர்ந்து, அதற்குத் துணையாக இருக்கலானார்.

பொன்னு அய்யங்கார் என்ற வித்வானிடம் கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தார் பாகவதர். முதல் கச்சேரி தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் தலைமையில். இவரது பாடலைக் கேட்டு உருகிய பிள்ளை அவர்கள், "இவன் தன் பெட்டியைக் கூடத் தங்கச் சாவி கொண்டு திறப்பான்" என்று வாழ்த்தினார். (அந்த வாழ்த்து பின்னாளில் பலித்தது. சென்னை மயிலாப்பூர் கபாலி திரையரங்கத்தை தங்கச் சாவி கொண்டு திறந்து வைத்தார் பாகவதர்). நாடக ஆர்வத்தினால் திருவையாறிலிருந்த ராமசாமிப் பத்தரிடம் ஓர் ஆண்டுக் காலம் குருகுல வாசம் செய்து நாடகப் பாடல்களைக் கற்றுக் கொண்டார். நடிப்பதிலும் பாகவதருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட திருச்சி ரசிகரஞ்சனி சபாவின் தலைவர் நடேசய்யர், அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பைத் தந்தார். ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் வேடமேற்று, 'அம்மா பசிக்குதே' பாடலைப் பாடிப் பார்வையாளர்களைக் கவர்ந்தான் தியாகு. தொடர்ந்து நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கலானார். இவரது ஆற்றலைக் கண்ட நடராஜ வாத்தியார், இவருக்கென்றே தனியாக ஒரு நாடகத்தை எழுதித் தந்ததுடன், தியாகராஜன் என்ற பெயரின் பின்னால் 'பாகவதர்' என்ற பட்டத்தைச் சேர்த்தார்.

பாகவதருக்குப் பதினெட்டு வயதான போது அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த எஸ்.டி. சுப்புலட்சுமியுடன் இணைந்து ராஜபார்ட் வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அழகிய தோற்றம், சுருட்டை முடி, இனிய குரல். நாடக வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சுப்புலட்சுமியுடன் வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா உட்படப் பல நாடகங்களில் நடித்தார். அவர்கள் நடித்த 'பவளக்கொடி' நாடகத்தைப் பார்த்த இயக்குநர் கே. சுப்ரமண்யம், அதைத் திரைப்படமாக்கினார். 1934-ஆம் ஆண்டு 'பவளக்கொடி' வெளியானது. கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்ற அப்படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் பாபநாசம் சிவன். அற்புதமான வர்ண மெட்டுக்களையும் அவரே அமைத்திருந்தார். இசையமைப்பாளர் ஜி. ராமநாதனும் சிவன், பாகவதர் கூட்டணியில் இணைந்து கொண்டார். கர்நாடக இசையாலும் ஜனரஞ்சகமான பாடல்களைத் தர முடியும் என்பதை இக்கூட்டணி நிருபித்தது.

1935ல் பாகவதரின் இரண்டாவது படமான 'நவீன சாரங்கதரா' வெளிவந்து வெற்றி பெற்றது. தொடர்ந்து தானே சொந்தமாகப் படக் கம்பெனி தொடங்கிய பாகவதர், 'சத்தியசீலன்' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அடுத்து 'சிந்தாமணி' மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அந்தப் படம் ஓடிய மதுரை ராயல் டாக்கீஸ் நிறுவனம் சிந்தாமணி என்றே பெயர் மாற்றம் பெற்றது. 'அம்பிகாபதி' (1937), 'திருநீலகண்டர்' (1939), 'அசோக்குமார்' (1941), 'சிவகவி' (1943) முதலிய படங்களின் வெற்றி பாகவதரைத் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. தமிழர்கள் வாழ்ந்த பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் அவரது புகழ் பரவியது. 1944ல் வெளியான 'ஹரிதாஸ்' பாகவதரின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஆனது. கிருபானந்த வாரியார் அதற்கு திரைக்கதை எழுதியிருந்தார். அற்புதமான பாடல்களைக் கொண்ட அது மகத்தான வெற்றி பெற்றது. சென்னை, பிராட்வே திரையரங்கில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸின் வெற்றியை இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்தியத் திரைப்படமும் முறியடிக்கவில்லை.

தமிழிசை மரபு, கர்நாடக இசையோடு இணைந்த திரையிசையாகத் தொடர பாகவதர் ஆற்றிய பங்கு அளப்பரியது. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, ஒருநாள் ஒரு பொழுதாகிலும், வதனமே சந்திர பிம்பமோ, மன்மத லீலையை வென்றார் உண்டோ, ராதே உனக்குக் கோபம் ஆகாதடி, அம்மையப்பா, அம்பா மனம் கனிந்து, கிருஷ்ணா முகுந்தா முராரே, தீன கருணாகரனே நடராஜா போன்ற மறக்கவொண்ணாத பல பாடல்களைப் பாடி பாகவதர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். ஜி. ராமநாதன், தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் என்ற மூவர் கூட்டணியின் இசைக்காலம் தமிழ்த் திரையிசையின் பொற்காலம். இவர்கள் திரையிசை மும்மூர்த்திகளாகப் போற்றப்பட்டனர்.
பளபளக்கும் பட்டுச் சட்டை, சரிகை வேட்டி, தங்க நிற மேனி, ஜவ்வாது வாசம், விட்டல் கிராப் தோற்றத்துடன் பாகவதர் வெளிக்கிளம்பும் போது அவரைக் காண மக்கள் முண்டியடித்தனர். அவரது நடை, உடை, தோற்றத்தினால் பாதிப்புக் கொண்ட பலர் அவரைப் போன்றே சிகை வளர்த்தனர். அது 'பாகவதர் கிராப்' என்று பிரபலமானது. அக்காலத்துப் பெண்கள் பலரது கனவுநாயகன் ஆனார் பாகவதர். சிதம்பரத்தில் பாகவதரின் படப்பிடிப்பைக் காண வந்த பெண்களைக் காவல்துறையினர் வலிந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று. பெருமழை பெய்து அரங்கத்தில் வெள்ளம் புகுந்தபோதும் கூட, எழுந்து செல்லாமல் பாகவதரைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசித்தனர் மக்கள். அழகப்பச் செட்டியாரின் மகள் திருமணத்தின் போது பாகவதர் கச்சேரியைக் கேட்க ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் திரண்டனர் என்பதிலிருந்தே அவரது இசையின் கவர்ச்சியை அறிந்து கொள்ளலாம். பாகவதர் ரயிலில் வருகிறார் என்று அறிந்து, அவரைக் காண்பதற்காக பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு பலமணி நேரம் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து, பார்த்த பின்பே கலைந்து சென்றனர் என்பதெல்லாம் சரித்திரம்.

அதிர்ந்து பேசாத பாகவதர் மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர். பெரியவர்களிடம் பணிவோடு பழகுபவர். மனிதநேயம் மிக்கவர். குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். சுசீலா, சரோஜா என்ற மகள்களும், ரவீந்திரன் என்ற மகனும் பாகவதருக்கு உண்டு. இளைய சகோதரி பங்கஜத்தையும் மகள் போலவே கருதி வளர்த்து வந்தார்.

1934 முதல் 1945 வரையிலான பாகவதரின் காலம் தமிழ்த் திரையிசையின் பொற்காலமாக அமைந்தது. "பாகவதர் பாடல்களில் ராகங்களின் உருவம் நிறைவாக இருந்தது. இதனால் அவரை அடியொற்றி வந்த என் போன்றவர்களுக்கு ராகங்களை இனங்காண முடிந்தது" என்கிறார், பாகவதர் பாடல்களின் தாக்கத்தினால் திரையுலகில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய டி.எம். சௌந்திரராஜன். "அவர் ஓரிடத்தில் இருந்தால் அந்த இடமே ஒளி வீசும்" என்கிறார் அதே அளவு செல்வாக்கும் பெருமையும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.

பாகவதர் 1945ல் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதானார். பாகவதருக்கும் உடன் கைதான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு லண்டன் பிரைவி கவுன்சிலுக்குச் சென்றது. பாகவதர் சார்பாக வாதாட வழக்கறிஞர் எதிராஜ முதலியார் முன்வந்தார். சாதுர்யமாக வாதாடி அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். தமக்குச் சன்மானமாக அளிக்கப்பட்ட தங்க நாணயங்களை பாகவதரிடமே திருப்பிக் கொடுத்த எதிராஜ முதலியார், பாகவதர் மீது கொண்ட அன்பு காரணமாகவே தாம் வாதாடியதாகக் குறிப்பிட்டார். சென்னை எத்திராஜ் கல்லூரியை நிறுவியவர் அவர்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1947ல் விடுதலையான பாகவதர், 'நரேந்திரா பிக்சர்ஸ்' என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து 'ராஜமுக்தி' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். படத்திற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். பாகவதருடன் கதாநாயகியாக பானுமதி நடித்திருந்தார். சி.ஆர். சுப்பராமன் இசை. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியும் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து வெளியான அமரகவி, டி.ஆர். ராஜகுமாரி, மதுரம், என்.எஸ்.கிருஷ்ணன், லலிதா, பத்மினி ஆகிய முன்னணிக் கலைஞர்கள் நடித்திருந்தும் தோல்விப் படமானது. தொடர்ந்து வெளியான சியாமளாவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் புதுவாழ்வு படத்தைத் தயாரித்து தானே நடித்து இயக்கவும் செய்தார். பாகவதர் வாழ்க்கையின் மீளாத சரிவிற்கு அப்படமே வழி வகுத்தது. அப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

தொடர்ந்து தமிழிசைக் கச்சேரிகள் செய்ய விழைந்தார் பாகவதர். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தால் திடீரென பார்வை இழப்பும் ஏற்பட்டது. தங்கத் தட்டில் சாப்பிட்டவர் தாங்குவதற்கு யாருமில்லாமல் தவித்தார். கந்தர்வ கான இசைமாமணி இறுதிக் காலத்தில் உடல்நலிந்து, ஆதரிப்பார் இன்றி வறுமையில் வாடினார். மனம் வெறுத்துப்போய்த் தன் குலதெய்வமான தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலைச் சரணடைந்தார். அங்கேயே அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். பாகவதரின் நிலை பற்றிக் கேள்வியுற்ற நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரைச் சந்தித்து, "வாருங்கள், உங்களுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்" என்று வேண்டிக்கொண்டார். ஆனால் பாகவதர் ஒப்புக் கொள்ளவில்லை. "நீங்கள் சொன்னதே போதும். செய்து வைத்தது மாதிரிதான். உங்கள் அன்பிற்கு நன்றி!" என்று கூறி மறுத்துவிட்டார்.

மன ஆறுதலுக்காக நண்பர் நாகரத்தினத்துடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் பாகவதர். 1959 ஏப்ரல் மாதம் புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சத்திய சாயி பாபாவைத் தரிசித்தார். தனது துயரங்களை பாபாவிடம் சொன்னார். ஸ்ரீ பாபா பாகவதரிடம், "இன்னும் ஆறுமாதங்களில் எல்லாம் முடிந்துவிடும்" என்றார். அது கேட்டு மனம் நெகிழ்ந்த பாகவதர் ஒரு சில நிமிடங்களாவது அவரைத் தரிசிக்க தனக்குப் பார்வை அளிக்குமாறு வேண்டினார். பாபா தமது கைகளால் பாகவதரின் கண்களைத் தடவ, பாகவதருக்குத் தற்காலிகமாகப் பார்வை கிடைத்தது. பாபாவை தரிசனம் செய்தார். பாகவதரிடம் போதுமா என்று பாபா கேட்க அவரும் போதும் என்று சொல்ல, பாகவதரின் பார்வை முன்போல் ஆனது. ஊர் திரும்பினார் பாகவதர்.

ஆனால் பாபாவின் வாக்கு பலித்தது. சரியாக ஆறு மாதங்கள் கழித்து, நவம்பர் 1, 1959 அன்று பாகவதர் காலமானார். தமிழ்த் திரையுலகின் சிம்மாசனத்தில் 30 ஆண்டுகாலம் இசையரசராக வீற்றிருந்து, பட்டி, தொட்டிகளிலெல்லாம் கர்நாடக இசை வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்த பெருமைக்குரிய பாகவதர் மறைந்தார். அவர் கடைசியாக நடித்திருந்த சிவகாமி திரைப்படம் அவரது மறைவுக்குப் பின் வெளியானது. "படம் எடுக்கப்பட்ட போது அவருக்குச் சுத்தமாகக் கண் தெரியாது. தனது பாட்டுக்கே அவரால் வாயசைக்க முடியவில்லை. நின்றால் தலை சுற்றியது. வீழ்ச்சியின் அதலபாதாளம் இது" என்கிறார் பாகவதரின் அப்போதைய நிலை பற்றித் தனது தமிழ்த் திரைப்பட வரலாறு என்ற நூலில் முக்தா சீனிவாசன்.

தியாகராஜ பாகவதரின் உடன்பிறந்த சகோதரி அம்ருதவல்லியின் மகனான சிவகுருநாதன், ஸ்ரீமஹா மேரு தியான நிலையத்தின் மூலம் தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார். தமிழக அரசும் பாகவதரது நூற்றாண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளது. காலத்தால் அழியாத தனது பாடல்கள் மூலம் ரசிகர் நெஞ்சங்களில் என்றும் முன்னோடியாக நிலைத்து நிற்கிறார் பாகவதர்.

(நன்றி: விந்தன் எழுதிய 'எம்.கே.டி. பாகவதர் கதை', வாமனன் எழுதிய 'திரை இசை அலைகள்')

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline