Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? - (பாகம் - 9)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2010|
Share:
பொருளாதாரச் சூழ்நிலை சற்றே தலைதூக்கும் இந்தச் சமயத்தில், எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலுக்குப் பின்னால் ஓடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். சென்றமுறை, வலைமேகத் துறையின் உபதுறைகளில் ஒன்றான தகவல் செலுத்தல் மற்றும் ஒன்றாக்கம் (data transfer and sync) பற்றி விவரித்தோம். இப்போது, வலைமேகக் கணினிப் பாலத் துறையின் மற்ற உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

*****


மேகக் கணினித் துறைகளில் வலைமேகத் துறை மிக முக்கியமாக உள்ளது போலிருக்கிறதே அதன் தகவல் உபதுறை பற்றிக் கூறினீர்கள். அதிலுள்ள மற்ற உப துறைகளைப் பற்றி விவிரியுங்களேன்?

வலைமேகப் பாலத் துறையில், சென்ற முறை விவரிக்கப்பட்ட தகவல் செலுத்தல் மற்றும் ஒன்றாக்கல் (synchronization and transfer) மட்டுமல்லாமல், தகவல் பாதுகாப்பு (information security), மேல்நோக்கம் மற்றும் நிர்வாகம் (monitoring and management), மேகத்தில் ஓட்டப் பயன்பாட்டு மென்பொருட்களை ஆயத்தமாக்கல் (staging and provisioning) போன்ற இன்னும் பல உபதுறைகள் உள்ளன.

அடுத்து தகவல் பாதுகாப்புக்கான மேகக் கணினிப் பால உபதுறையைப் பற்றிக் காணலாம். தகவலும் பயன்பாட்டு மென்பொருட்களும் நிறுவனத் தகவல் மையங்களில் மட்டும் இருந்தபோது, தகவல் பாதுகாப்பு நுட்பங்கள் பல வருடக் கணக்காக, முதன் முதலிலிருந்த பெரும் கணினிகள் (mainframes) காலத்திலிருந்தே மெல்லமெல்ல முன்னேறி வந்து தற்போதைய மட்டத்துக்கு வந்துள்ளன. மின்வலை மற்றும் இணையத் தொடர்பு காரணமாக ஏற்பட்ட புதுப் புது அபாயங்களுக்கும் பல வருட ஆராய்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னும் முன்னேற்றத் தேவை உண்டுதான். பாதுகாப்பு முன்னேற்றங்களை விட அபாயங்கள் இன்னும் அதிக வேகத்தில் திரண்டு கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதுவும், இப்போது தனியார் கணினிகளை ஆக்கிரமித்து அவர்களுடைய வங்கியிலிருந்து அல்லது கடனட்டை (credit card) கணக்கில் திருடுவது மட்டுமல்லாமல், அவற்றைத் தளமாக வைத்து நிறுவனங்களையும், ஏன், நாட்டு மின்வலைகளையுமே தாக்கக் கூடிய நிலை வந்துள்ளது.

என்றாலும், வலைமேகத் துறை வந்துள்ளதால், தொலைதூரத் தகவல் செலுத்தல் துறை போன்று, தகவல் பாதுகாப்புத் துறையும் இன்னும் புதிய மற்றும் கடினமான பிரச்சனைகள நிவர்த்திப்பதற்காக இன்னும் பல முன்னேறங்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், தகவல் பாதுகாப்புத் துறை, ஏற்கனவே மெய்நிகராக்க நுட்பத்துக்கான (virtualization) மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஆழ்ந்துள்ளது. இத்தருணத்தில், தனி நிறுவன மேகக் கணினிகளுக்கும், மாற்று நிறுவன மேகங்களில் மென்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான முன்னேற்றங்களையும் கூடவே சேர்க்கும் நிர்பந்தமும் சேர்ந்துள்ளது. இதனால் புது நுட்ப நிறுவன மூலதன வாய்ப்புக்கள் தகவல் பாதுகாப்புத் துறையில் இன்னும் அதிகரித்துள்ளன.

மேகத் தகவல் பாதுகாப்பு பொதுவாக மூன்று அம்சங்களில் உள்ளது. தகவல் இழப்புத் தடை (data loss prevention), அடையாள மேலாண்மை (identity management), மற்றும் தீய மென்பொருள் தடுத்தல் (malware protection).
மிகவும் முக்கியமான, நிறுவனத்துக்கு மிக அடிப்படையான தகவல்களையும் அவற்றைப் பயன்படுத்தும் மென்பொருட்களையும் மேகக் கணினிகளில் பயன்படுத்த மிகவும் தயக்கம் உள்ளது.
முதலாவதாக தகவல் இழப்புத் தடை நுட்பங்களைப் பற்றிப் பார்ப்போம். நிறுவனங்களுக்குள் மட்டுமே மென்பொருட்கள் பயன்படுத்தப் பட்டாலும், உள்ளேயே உள்ள சேவைக் கணினிகளில் தகவல் சேமித்து வைக்கப் பட்டாலும், தகவல் இழப்பு அபாயம் குறைவு என்று பாதுகாப்பாளர்களுக்கு ஒரு நிம்மதி உள்ளது. மின்னஞ்சல் போன்ற தொடர்பு வசதிக்ள் மூலமாக இழப்பு ஏற்படாமல் இருக்கும் நுட்பங்களின் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், தகவல் மேகக் கணினிகளில் வைத்துப் பயன் படுத்தப் பட்டால், அசம்பாவிதமாகவோ, தீய எண்ணங்களுடன் வேண்டுமென்றோ அப்படிப் பட்டத் தகவலை யாராவது திருடிக் கொள்ள இன்னும் அதிக வாய்ப்புள்ளது என்ற பயத்தால், மிகவும் முக்கியமான, நிறுவனத்துக்கு மிக அடிப்படையான தகவல்களையும் அவற்றைப் பயன் படுத்தும் மென்பொருட்களையும் மேகக் கணினிகளில் பயன் படுத்த மிகவும் தயக்கம் உள்ளது. அதனால், மேகக் கணினிகளிலிருந்து தகவல் இழப்பைத் தடுக்க முடியும் என்ற நிம்மதியை அளிக்கக் கூடிய பாலப் பாதுகாப்பு நுட்பங்களின் மேல் ஆர்வமும் அதனால் மூலதன வாய்ப்பு உள்ளது.

அடையாள மேலாண்மைத் துறையில் ஏற்கனவே மெய்நிகராக்க அலைக்கான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கும் பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய மாற்றங்கள் என்னவெனில், ஒரு கணினியில் ஒரு மென்பொருள் மட்டுமே வைத்து நடத்துவதற்கான அடையாள மேலாண்மை அமைப்புக்களை, மெய்நிகராக்கத்தால், பல மென்பொருட்களை ஒரே கணினியில் அமைத்து நடத்துவதற்குத் தேவையானவை.

அத்தகைய மாற்றங்கள், மேகக் கணினியில் வைத்து நடத்துவதற்கும், நிறுவனத்தின் அடையாள மேலாண்மைக்கும் சேவை மென்பொருள் மற்றும் மேகக் கணினிகளின் அடையாள மேலாண்மைக்கும் பாலம் அமைக்க வேண்டியிருப்பதால், இன்னும் கடினமாகின்றன. ஒரு பயனர் மென்பொருளைப் பயன்படுத்தும் போது மேகக் கணினி நிறுவனத்தின் அடையாள மேலாண்மை வசதி, நிறுவனத்தின் மேலாண்மை வசதியை அவர் யார், அவர் பயன்படுத்தலாமா என மிகக் குறுகிய காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும். அல்லது அத்தகவலை நகல் எடுத்துக்கொண்டு மாற்றங்கள் ஏற்படும்போது சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பல புதிய நுட்பங்கள் தேவை. எனவே அவற்றை உருவாக்க நல்ல வாய்ப்பு!

அடுத்து தீய மென்பொருள் தடுப்பு. மெய்நிகராக்கத்துக்குச் சொன்னது போல் இதற்கும் ஏற்கனவே நிறுவனத் தகவல் பாதுகப்பாளர்கள் ததிங்கணத்தோம் போட்டு பகீரதப் பிரயத்தனம் செய்து, புதுப்புது நுட்பங்களைப் பயன்படுத்தி முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறுவனத்துள் உள்ள பயனர் கணினிகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இதற்கான தடுப்பு நுட்பங்களுக்கே ஏற்கனவே நல்ல வாய்ப்பு உள்ளது. வலைமேகக் கணினி அதை இன்னும் கடினமாக்குவதால், தீய மென்பொருள் தடுப்பு மேகப் பாலத் துறை அதிக வாய்ப்புக்கள் அளிக்கக் கூடிய ஒரு நட்சத்திரமாகத் திகழும் என்பதில் சந்தேகமேயில்லை!

ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால், நிறுவனத் தகவல் பாதுகாப்பு வசதிகளை வலைமேகக் கணினி அடிப்படையுடனும் அங்கு நிறுவிப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுடனும் இணைக்கும் தகவல் பாதுகாப்புப் பாலத் துறை, தொழில்நுட்பங்களை உருவாக்கும் வாய்ப்புக்களையும், அதற்கான மூலதன வாய்ப்புக்களையும் பெருமளவில் அளிக்கும் என்பது என் கருத்து. அதனால். உங்களுக்குத் தகவல் பாதுகாப்புத் துறையில் திறனும் ஆர்வமும் இருந்தால், இந்த மேகக் கணினி உபதுறையை ஆழ்ந்து நோக்குவது நல்லது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline