|
|
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் தொல்காப்பியம் மற்றும் சங்கநூல் பதிப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாகத் தமிழாராய்சிக்கான கருப்பொருள்கள் நிறையவே கிடைத்தன. அவற்றிலிருந்து தமிழர்களின் தொல்பழங்காலம் வேதமரபல்லா மரபு சார்ந்த வாழ்க்கையை உடையது| என்பதாக அறிஞர் சிலர் நிறுவ முற்பட்டனர். இத்தகையவர்களுள் ஒருவரே வி. கனகசபைப்பிள்ளை (1855-1906).
'தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களிற் காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை ஈண்டு குறிக்கின்றேன். அவர்கள் ஸ்ரீமான்களான ஆறுமுகநாவலர், பாண்டித்துரைத்தேவர், தாமோதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை என்பவராவார்... தாமோதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்தவராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார் யாவர்? இவர்கள் மேகத்தைப் போல் ஒருவகைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களாவர். இவ்வாறு 1922களில் 'தமிழ் வரலாறு' எனும் நூலை வெளியிட்ட கே.எஸ். ஸ்ரீநிவாசபிள்ளை குறிப்பிட்டார்.
கே.எஸ். ஸ்ரீநிவாசபிள்ளையால் போற்றப்பட்டவர்களில் ஒருவரான வி. கனகசபைப்பிள்ளை சென்னையிலுள்ள கோமளேசுவரன் பேட்டையில் பிறந்தவர். இவர் சென்னை அரசாங்கக் கல்லூரியில் பயின்று பி.ஏ. தேர்விலும் பின்னர் பி.எல். தேர்விலும் தேறியவர். மதுரையில் வழக்கறிஞராக ஒருவருடகாலம் வரை பணிபுரிந்த போதும் சென்னை அரசாங்கத்தின் அஞ்சல் துறையிலே கடமை செய்து மேலதிகாரியாக உயர்ந்தவர். கனகசபைப் பிள்ளையின் பெற்றோர் இருவரும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் மல்லாகம் வீரகத்தியவர்களின் புதல்வர் விசுவநாதபிள்ளை. இவர் வட்டுக்கோட்டைச் செமினரியிலே பயின்றவர். பின்னர் விசுவநாதபிள்ளை சென்னைக்குச் சென்று, சென்னை அரசாங்கத்தில் தமிழ்மொழி பெயர்ப்பாளராகக் கல்வித்துறையில் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழத்தின் பரிட்சை மதிப்பாளராகவும் திகழ்ந்தார். இவர் 1870ஆம் ஆண்டு சென்னை அரசாங்கத்தின் கல்வித்துறை அதிகாரி வெளியிட்ட தமிழ், ஆங்கில அகராதியைப் புதுக்கியும் பெருக்கியும் கிறிஸ்தவ சங்கத்தினரிடம் வெளியிடக் கொடுத்தார். 1884ஆம் ஆண்டு வீ. விசுவநாதபிள்ளை காலமானார். கரோல் விசுவநாதபிள்ளை (1820-1880) என்பவரும் இவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். இருவரும் வேறு வேறானவர்கள். கரோல் விசுவநாதபிள்ளையின் மகன் வி. கனகசபைப்பிள்ளை என்று சிலர் கூறியுள்ளது தவறு. வி. கனகசபைப் பிள்ளை என்பவர் மல்லாகம் வீரகத்தி விசுவநாதபிள்ளையின் மகன் ஆவார்.
சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகிய அஞ்சல்துறை அதிகாரி கனகசபைப்பிள்ளை தமிழார்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது தமிழார்வத்தை அரசியல் விடுதலைத் தாகத்தோடு பொருத்துவது பொருந்தாது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு கொண்டது எனக் கூறமுடியாது. இங்கிலாந்தில் எட்வர்ட் இளவரசர் ஆட்சிக்கட்டிலேறிய பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கனகசபைப்பிள்ளை ஆங்கிலத்திலே வரவேற்புக் கவிதைகள் பாடினார். இந்தக் கவிதைகள் 'மதராஸ் மெயில்' எனும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தன. இக்காலத்தில் கனகசபைப்பிள்ளை மட்டுமல்ல பல்வேறு அறிஞர்களும் இதே மனோநிலையில் இருந்தார்கள். ஆனால் இன்னொருபுறம் தமிழ்ப் பிரக்ஞையுடன் இயங்கும் மனோநிலையுடனும் இருந்தார்கள்.
கனகசபைப்பிள்ளை தமிழ்ப்பற்று மிக்கவராக, தமிழ் இலக்கியக் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் அச்சுவாகனமேறாத நூல்களை தேடிப்பெறுவதில் தீவிர அக்கறை காட்டினார். உத்தியோக நிமித்தம் பல இடங்களுக்குப் பயணம் செய்யும் போது தமிழ்ச் சுவடிகளை சேகரிப்பதையும் தமது பணியாகக் கொண்டிருந்தார். இவற்றைச் சேகரித்து வைத்திருந்தாகவும் அறியமுடிகின்றது. குறிப்பாக ஏட்டுப் பிரதிகளைக் கடிதத்திலே பெயர்த்தெழுதுவதற்கு அப்பாப்பிள்ளை என்பரைத் தம்முடன் 20 ஆண்டுகளாக வைத்திருந்தார். பிள்ளையவர்கள் தாம் தேடிப்பெற்ற அரிய பிரதிகளை பதிப்பாசிரியர்களுக்குக் கொடுத்துதவினார். சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகை, சூளாமணி என்பவற்றின் பரிசோதனைகளுக்கு உதவிய பிரதிகளிலேயே கனகசபைப்பிள்ளையின் பிரதிகளும் இடம்பெற்றன. சூளாமணி பதிப்பை இடையில் நிறுத்திவிட்டு தாமோதரம்பிள்ளை மேலும் பிரதிகள் தேடுவதற்குக் காரணமாக இருந்த பிரதி கனகசபைப்பிள்ளைக்கு உரியதாகும். தாமோதரம்பிள்ளை சூளாமணி பதிப்புரையிலேயே 'எனது நண்பரும் பண்டைத் தமிழ் ஆராய்ச்சியே தமக்குப் பொழுது போகும் வினோதமாக உடையவரும் சென்னைத் தபாலாபீசுகளின் மேல் விசாரணைத் தலைவருமாகிய ஸ்ரீ மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள்' என்று பிள்ளை அவர்களைப் போற்றுகின்றார். உ.வே.சா. அவர்கள் பத்துப் பாட்டைப் பரிசோதனை செய்த காலத்துப் பிள்ளை அவர்கள் தமது உரைப் பிரதியைக் கொடுத்துதவினார். ஐயரவர்கள் சிலப்பதிகாரத்தை ஆய்ந்தபோது பிரதிகளைக் கொடுத்துதவிய ஈழத்தைச் சேர்ந்த மூவரில் கனகசபைப்பிள்ளையும் ஒருவராவார் (உ.வே.சா. - என் சரித்திரம்). கனகசபைப்பிள்ளை அடியார்க்கு நல்லார் உரையுடன் கூடிய பிரதியையும் மூலம் மட்டுமேயுள்ள பிரதியையும் கொடுத்து உதவினார். புறநானுற்றுப் பரிசோதனையின் போது பிள்ளையவர்கள் ஐயருக்கு மூலப்பிரதியை வழங்கினார். சாமிநாதையர் தமது பத்துப்பாட்டு முகவுரையில் 'பழைய தமிழ் நூலாராய்ச்சியிலேயே இடைவிடாது செய்தொழுகுகின்றவராகிய தாபல் ஸ¤ப்பிரின்டெண்டன்ட் ஸ்ரீ வி. கனகசபைப்பிள்ளை' என்று பிள்ளைவர்களைக் குறிப்பிடுகிறார்.
கனகசபைப்பிள்ளை திறந்த மனதுடன் பதிப்பு முயற்சியில் ஈடுபடுவர்களுக்கு தம்மிடம் உள்ள பிரதிகளை ஆய்வுக்காக வழங்கி அந்த முயற்சிகள் முழுமைபெற உதவியுள்ளார். இதனால் பதிப்பாசிரியரும் பேராசிரியருமான எஸ். வையாபுரிப்பிள்ளை 'கனகசபை போன்ற விரிந்த மனப்பான்மை தமிழ் அறிஞர்களுக்கு அமைந்திருக்குமாயின் எத்தனையோ அரிய பழந்தமிழ் நூல்களை நாம் இன்று இழந்திருக்க மாட்டோம்' என்று கனகசபைப்பிள்ளையின் பெருந்தன்மையைப் போற்றுகின்றார்.
எஸ். கனகசபைப்பிள்ளை தமிழில் வரலாற்றுச் சிந்தனையை ஊக்குவித்தவர்களுள் ஒருவராகக் கருதமுடியும். இவர் எழுதிய படைப்புக்களே இதற்குச் சான்று. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இவர்தம் படைப்புக்கள் அமைந்துள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்று அவற்றை ஆராய்ந்து பழந்தமிழர் பண்பாட்டை விளக்கிய பெருமை இவரையே சாரும். அதாவது தமிழரின் பண்டைய பண்பாட்டை விளக்குவதன் மூலம் தமிழ் பேசும் சமூகத்திலேயே புத்துணர்ச்சியைத் தூண்டலாம் என்று கனவு கண்டார். இதற்குச் செயல்வடிவம் கொடுக்க முற்பட்டார். |
|
மேனாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமன்றி இந்தியர் எழுதிய வரலாற்று நூல்களும் தமிழகத்தின் பண்டைய வரலாற்றுக்குப் போதிய இடம் அளிக்கவில்லை. இந்தக் காலத்தில்தான் கனகசபைப்பிள்ளை 'மதராஸ் றிவியூ' என்று தமிழில் 1895ஆம் ஆண்டுமுதல் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இதுவே பின்னர் தொகுக்கப்பட்டு 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' எனும் நூலாக வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1956-ல் வெளிவந்தது.
பண்டைத் தமிழ்ப் பண்பாட்டின் இலக்கியச் சான்றுகள் மூலம் விளக்கப் பிள்ளையவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு சற்று அதிகமாகக் காணப்படுகின்றது. தம் காலத்திலேயே வெளிவந்திருந்த கலித்தொகை, புறநானுறு, பத்துப்பாட்டு ஆகிய பண்டைய இலக்கியங்களில் இருந்தும் தமது கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத்தில் பிரசுரமாகியிராத ஐங்குறுநூறிலிருந்தும் செய்திகளை எடுத்துத் தமது கருத்துக்களை விளக்க முயன்றுள்ளார்.
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் எனும் நூலின் உயிர்நாடி போல விளங்குவது சமூக வாழ்க்கை என்னும் ஒன்பதாம் அதிகாரம் ஆகும். இவ்வதிகாரத்தில் ஆட்சி முறை, வரிகள், தமிழர் சாதி வகுப்புக்கள், ஆடையின் பாணி, மணப் பொருட்கள், அணிகள், பெண்ணுரிமை, காதல் வாழ்க்கை, பொதுமகளிர், கலைமகளிர், திருமணங்கள், உணவு வகைகள், கேளிக்கைகள், இசை, நாடகம், கூத்து, நடிகையர்கள், ஓவியம், சிற்பம், மனைகள், கோட்டைகள், போர்முறை, படைவீரர் வகுப்பு, மதுரை நகர வாழ்க்கை முதலிய செய்திகள் இடம்பெறுகின்றன.
நற்றிணை (1915), குறுந்தொகை (1915), பரிபாடல் (1918), அகநானூறு (1920) ஆகியன பிள்ளையவர்கள் காலத்தில் பதிக்கப்பட்டிருக்கவில்லை. ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) ஆகியவை அவருடைய கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத்துக்குப் பின்னரே வெளிவந்தன. இந்தப் பின்புலத்தில் நோக்குமிடத்து பிள்ளையவர்கள் சமூக வாழ்க்கை என்னும் அதிகாரத்துக்குத் தேவையான செய்திகளைத் தொகுத்து ஆராய முடியாத சூழல் அப்போது நிலவியதைக் காணலாம்.
இவ்வதிகாரத்திலேயே ஐங்குறுநூறிலிருந்து சில செய்திகளை எடுத்தாளும் பிள்ளையவர்கள் தமது கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத்திலே பிரசுரமாகாத ஏனைய 'மேற்கணக்கு' நூல்களைப் பயன்படுத்தாமை கவனித்தற்குரியது என்பார் பேரா. பொ. பூலோகசிங்கம். எவ்வாறாயினும், பண்டைத் தமிழர் சமூக வாழ்க்கை பிள்ளையவர்களால் பூரணமாக விளக்கப்பட்டுள்ளதாகக் கருத முடியாது. ஆனால் பண்டைய தமிழர் வரலாறு எழுத்தியல் பற்றிய சிந்தனைக்கும் தேடலுக்கும் கனகசபைப்பிள்ளை உறுதியான அடித்தளம் அமைந்துள்ளார். முறையியல் சார்ந்த நுண்ணாய்வுத் தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் ஒரு முன்னோடி என்றே கூறமுடியும். இந்திய உபகண்டத்தின் வரலாற்றிலேயே தமிழகத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டிய விதத்தில் பிள்ளையவர்களுடைய இந்த நூலுக்கு தனித்துவமான இடமுண்டு. அத்துடன் தமிழாராய்ச்சியின் போக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமென்று தமிழறிஞர்களுக்கு வழிகாட்டிய நூல் என்றும் இதனைக் கூறலாம். பின்னர் பிள்ளையவர்களுடைய நெறியைப் பின்பற்றியே பலர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சிலர் அவர் கூறிய முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்தனர்.
தமிழாராய்ச்சி உலகில் கால்ட்வெல் எழுதிய ஒப்பிலக்கண நூல் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றதோ அவ்வாறே வி. கனகசபைப்பிள்ளையின் 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' எனும் நூலும் முக்கியத்துவம் பெற்றது. தமிழ் வரலாற்றுணர்வினதும் தமிழ்ப் பிரக்ஞையினதும் அடிப்படைகளைத் தெளிவாக எடுத்துப் பேசக்கூடிய தொடர்ச்சியைக் காட்டியதில் வி. கனகசபைப் பிள்ளைக்கு முக்கியமான இடமுண்டு. அத்தகைய பெருந்தகை காஞ்சிபுரத்தில் 22.02.1906 அன்று மறைந்தார்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|