Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
முன்னோடி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- பா. ஜீவசுந்தரி|ஜனவரி 2007|
Share:
Click Here Enlarge1883 ஆம் ஆண்டில் பிறந்து 1962 ஆம் ஆண்டு மறைந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவர் வாழ்ந்த காலம், இந்திய வரலாற்றில் நெருக்கடிகள் மிகுந்த காலம். குறிப்பாக ஐயாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் தொப்புள் கொடியாலேயே கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத் திணறிய பெண்கள், இத்தகைய சமுதாயத் தளைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள தீவிர போராட்டங்கள் நடத்திய காலம்.

உலகம் முழுவதும் பரவிய மறுமலர்ச்சி இயக்கக் கருத்துகள் இந்திய மண்ணிலும் பிரதிபலித்தன. அப்போது, இந்தியப் பெண் களின் வாழ்க்கைமுறை என்பது நரகத்தை விட கேவலமானதாக இருந்தது. சதி, பால்ய விவாகம், பலதார மணம், கல்வி மறுப்பு, விவாகரத்து செய்ய அனுமதி மறுப்பு, தேவதாசி முறை என்று பல கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் பெண்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்கத் தொடங்கினாலும், பின்னர் படிப்படியாகத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் நேரடியாகப் பெண்களே போராட்டக் களத்தில் குதித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, 20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை நூற்றுக்கணக்கான பெண்கள் எழுப்பிய குரல் கள்தான் ஆணாதிக்கத்தின் ஓங்கி ஒலித்த குரலை - முழுமையாக இல்லாவிட்டாலும் - ஓரளவுக்காவது ஒடுங்கச் செய்தது. தமிழ்நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவதாசிகள் என்ற சமூக இழிவு பரவியிருந்தது. இந்தியப் பண்பாட்டிற்கே அவமானச் சின்னமான பெண்களுக்குப் பொட்டுக் கட்டி ‘தேவரடியார்’களாக்கும் இந்த முறையை ஒழிக்கப் போராடியவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவரது போராட்டம் 1920-களில் தீவிரம் கொண்டது. அவர் பெண் விடுதலை என்பது சமுதாயத் தளைகளில் இருந்து பெண் விடுவிக்கப் படுவதோடு இணைந்துள்ளது என்பதைப் பூரணமாக நம்பினார். ஆடம்பரத் திருமணங் களை எதிர்த்தும், வரதட்சணையை எதிர்த் தும் மேடைதோறும் முழங்கினார். சுய மரியாதைத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் (சாதி மறுப்புத் திருமணங்கள்), விதவை மறுமணம் மற்றும் எளிய முறைத் திருமணங்களை ஆதரித்தும் ஊர் ஊராக முழங்கினார். இந்து மத மூட நம்பிக்கைகளே பெண்களின் இழிநிலைக்குக் காரணம் என்று பகிரங்கமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சனாதனத்தை எதிர்த்து வீதியில் முழங்கிய பெண் போராளி இவர். அழுத்தப்பட்ட மக்களின் வரலாறு மறைக்கப் படுவதே வரலாறாக உள்ளது. அதேபோல, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வரலாறும் மறைக்கப்பட்டு விட்டது. தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில் கூட, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அளவுக்கு மூவலூர் இராமாமிர்தம் பெயர் இடம் பெறவில்லை.

இசை வேளாளர் குடும்பம் ஒன்றில், திருவாரூரில் பிறந்த விடிவெள்ளிதான் இராமாமிர்தம் அம்மையார். தேவதாசி முறையில் இருந்து விலகி, வறுமையில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில்தான் அவர் பிறந்தார். இருந்தபோதும், மீண்டும் தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்டு அதன் இழிவு களையும், அவமானங்களையும் சந்தித்தார். அப்போதுதான் விலகினாலும் விடாத இந்த இழிவுகளை நாட்டை விட்டே ஓட்டச் சபதம் பூண்டார்.

தேவதாசி முறை ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சி காரணமாக மூவலூர் அம்மையார் எழுதிய ‘தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவலின் பதிப்புரை யில் தேவதாசிகள் வாழ்க்கை முறை பற்றிய தமது குமுறல்களை அவர் வேதனையோடு பதிவு செய்துள்ளார். தேவதாசி முறையி லிருந்து தன்னை அறுத்துக்கொண்டு விடுதலையான மூவலூர் அம்மையார், மயிலாடுதுறை பகுதியில் துணிச்சலுடன், தன்னந்தனி ஆளாகப் போராடினார். 1917, 1918 ஆம் ஆண்டுகளில் அவர் இப் போராட்டத்தைத் தொடங்கியதாக அவர் எழுதிய சில குறிப்புகள் கூறுகின்றன. இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சங்கதிகள் - ஊரின் நடுவில் நின்று ஒரு சிங்கம் கர்ச்சிப்பதைப் போல - இதனால், அவரது இளமைப்பருவத்தில் அனுபவித்ததை விடவும் அதிகமாக மிரட்டல்களையும், சமூக ஒதுக்குதல்களையும் சந்திக்க நேர்ந்தது.

அவர் அஞ்சாமல் நேரடியாக தேவதாசிப் பெண் சகோதரிகளிடம் பேசினார். இக் கொடுமையை நாம் முயன்றால் மட்டுமே அகற்ற முடியும் என்பதை அப்பெண்களுக்கு உணர்த்துவதில் பெரும் வெற்றி கண்டார். இதற்காக, தேவதாசிப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நாகபாசத்தார் சங்கம்’ என்ற அமைப்பையும் உருவாக் கினார். மூவலூர் அம்மையார் தேவதாசிகள் குடும்பச் சூழலில் வளர நேரிட்டதால் தேவதாசி முறைக்கு எதிரான உணர்வுகள் அவரிடம் உருவானது இயல்பானதே. தொடக்கத்தில் அம்மையாரின் போராட்டங் கள் அமைப்பு சார்ந்ததாக இல்லை. நடைமுறைச் செயல்பாடாகவே இருந்தது. அவர் தேவதாசிகள் வீட்டுக்குச் சென்று அங்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட இளம் பெண்கள் இருந்தால், அவர்களிடம் ரகசியமாகப் பேசுவார். அந்த இளம் பெண்களை இந்த வழக்கத்திலிருந்து விலகும்படி தமது அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறுவார். அவ்வாறு விலக முன்வரும் பெண்களை அவர்கள் வீட்டை விட்டு வெளி யேறச் செய்து, அவர்கள் புனர்வாழ்வுக்கும் உதவுவார். இதனால் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் எதுவாக இருந்தாலும் தாங்கிக் கொள்வார். இவ்வாறு அம்மையாரால் தேவ தாசி முறையிலிருந்து விலகிய பல பெண் களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் அம்மையாரின் சமயோசிதமே பிரதானமானதாகும். இவ்வாறு விலகிய பெண்களைக் கொண்டே ‘நாகபாசத்தார் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் இரண்டு மாநாடுகளை அவர் சிறப்பாக நடத்தியுள்ளார். இதன் பிறகே அம்மையார் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ள நேர்ந்தது.

காங்கிரஸ் ஈடுபாடு

மூவலூர் அம்மையார் காங்கிரஸ் இயக்கத் தில் தம்மை இணைத்துக் கொள்ள ஒரு முக்கியக் காரணம், தேவதாசி முறை எதிர்ப்புக்கு சில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஆதரவு இருந்ததே. காந்தியடிகள் பாரிஸால் என்ற நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்நகரில் தேவதாசிகள் முறை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் நில்லாமல் தேவதாசிப் பெண்கள் சிலரை நேரில் சந்தித்து, அவர்கள் வாழ்ந்த இழிவு வாழ்க்கை பற்றியும் அறிந்தார். இப்பெண்களை வாழ்க்கையில் ‘வழுக்கி வீழ்ந்த பெண்கள்’ என்றே காந்தி அழைத்தார். தேவதாசி முறை இந்தியாவில் எங்கு நீடித்தாலும் அதை அடியோடு ஒழிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரச்சாரம் செய்யும்படி காங்கிரஸ் தலைவர் களுக்கு காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் இப்பிரச்சனை நாடு முழுவதும் வெளிச்சத் துக்கு வந்தது.

தமது இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட மூவலூர் அம்மையார் காங்கிரஸ் பேரியக் கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார், குறிப்பாக, தேவதாசி முறையை ஒழிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது தீவிரத்தை அறிந்து, காந்தியடிகள் மூவலூர் அம்மையாருக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார்.
அந்தக் காலத்தில் பெண்கள் இதுபோன்ற சமூக மறுமலர்ச்சிப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுவது மிகவும் அபூர்வமாகும். அதுவும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணே தமது சமூகத்தின் இழிநிலையை எதிர்த்துப் போராட முன்வந்தது காந்தியை மிகவும் கவர்ந்தது எனலாம். இது குறித்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு மூவலூர் அம்மை யாருக்கு தி.மு.க. சார்பில் கேடயம் (விருது) வழங்கி அண்ணாதுரை பேசும்போது, இதன் முக்கியத்துவத்தை வியந்து பாராட்டினார். ‘காலஞ்சென்றுவிட்ட காந்தியார், தென்னாட் டில் இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு சமூகப்பணிக்காகப் பெண்களைத் தேடி அலைந்தபோது, மூதாட்டியார்தான் அவர் கண்களுக்குப் பட்டார்’ என்று குறிப் பிட்டுள்ளார். பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பணியாற்றிய தால்தான் மூவலூராரின் குரல் ஆயிரம் மைல்களைக் கடந்தும் ஒலித்துள்ளது.

மூவலூர் அம்மையாரின் அரசியல் பணிகள் அன்றைய காங்கிரஸ் தலைவர் திரு.வி.க. வை வெகுவாகக் கவர்ந்தது. 1925ல் மயிலாடு துறையில் இசைவேளாளர்கள் சங்க மாநாட்டினை மூவலூரார் ஏற்பாடு செய்த போது திரு.வி.க. அதில் கலந்து கொண்டார். இந்த மாநாடு குறித்தும், மூவலூர் அம்மையார் குறித்தும் தமது ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

காந்தியடிகள் முன்மொழிந்த ஒத்துழை யாமை இயக்கத்தின் முக்கியப் போர்வாள் - கதர் ஆடை அணிதலாகும். வெள்ளையரின் கொள்ளை வெறிக்குக் கதராடை மூலம் அணை போடப்பட்டது. சமூகச் சீர்திருத்த - மறுமலர்ச்சிக் கருத்துகளில் மட்டுமல்லாது, கதராடை இயக்கத்திலும் காந்தி - பெரியார் வழியை மூவலூர் அம்மையார் தீவிரமாகப் பின்பற்றினார். கதராடையைச் சுமந்து சென்று தெருத்தெருவாக விற்றார். ஊர் ஊராகக் கதர்ப்பொதியைச் சுமந்து சென்றார். அவரும் கதராடைதான் அணிந்தார் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், மதி மயக்கத்தி லிருந்து விடுபட்ட தேவதாசிப் பெண்களையும் கதர் உடுத்தச் செய்தார். தேவதாசி சமூகத் தைச் சேர்ந்த பெண்கள் பலரும் கதர் நூல் நூற்றனர்.
காங்கிரஸ் பேரியக்கம் என்பது - பணவசதி படைத்த மிகச் சிலரும், பராரி ஏழைகள் பெரும்பாலாரும் என்ற விசித்திர வடிவத்தைக் கொண்டிருந்தது. எனவே, காங்கிரஸ் கொள்கையை நேசிப்பவர்கள் குடிசையில் வாழ வேண்டும் என்று காந்தி அழைப்பு விடுத்தார். அப்போது காங்கிரஸ் பெரும் புள்ளிகளில் எத்தனை பேர் குடிசைக்கு மாறினார்கள் என்று தெரியாது. ஆனால், மூவலூர் அம்மையார் ஒரு ஓட்டு வீட்டில்தான் இருந்தார். காந்தியின் அழைப்பு வெளியான வுடன், உடனடியாக அருகிலேயே ஒரு ஓலைக் குடிசையைப் போட்டுக் கொண்டு அதில் தங்க ஆரம்பித்தார்.

புதிய ஓலைக்குடிசையின் வாசலில் ஒரு அறிவிப்புப் பலகையையும் எழுதித் தொங்க விட்டார். அதில், ‘கதர் கட்டாதவர்கள் உள்ளே நுழையக்கூடாது’ என்று எழுதப் பட்டிருந்தது. இந்த சமயத்தில் அவர் வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கதராடைகள் ஏராளமாகக் களவு போய் விட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்த குத்தாலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அம்மையாரின் வீட்டுக்கு வந்தார். வாசலில் தொங்க விடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்து மலைத்து நின்று விட்டார். அவர் கதர் அணியாததால் தயங்கி நின்று, பின்னர் பின்வாசல் வழியாக வீட்டினுள் சென்றார்.

காகிநாடாவில் காங்கிரஸ் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் கொடி பிடித்துச் செல்லக்கூடாது என்று வெள்ளையர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்தனர். ‘கொடி பிடித்தால்தானே தடை செய்வாய்; நான் கொடியையே புடவையாக உடுத்திக் கொள்கிறேன் பார்’ என்பது போல் கொடிகளை இணைத்துப் புடவையாக அணிந்து கொண்டு நடமாடும் கொடியாக ஊர்வலத்தில் வந்தபோது, அம்மையாரை எதுவும் செய்ய முடியாமல் வெள்ளை அரசு திகைத்து நின்றது.

மற்றொரு முறை காங்கிரஸ் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. அப்போதும், அம்மையார் தன் பாணியில் மேடையில் ஒரு கரும்பலகையை வைத்து, அதில் தான் பேச வேண்டியவை களை எழுதிக் காட்டியே பிரச்சாரம் செய்து போலீசாருக்குத் தலைவலியை உண்டாக்கி யுள்ளார்.

தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டும், அவர்களது எழுத்துகளைப் படித்தும் விடுதலை இயக்கத்துக்கும், மறுமலர்ச்சி இயக்கத்துக்கும் வந்தவர்கள் அதிகம். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, சமூகம், தமது வாழ்க்கை இவற்றுக்கு மாற்றுக் காணும் முயற்சியில் இயக்கத்துக்குள் வந்தவர்கள். அவ்வாறு புதிய சமுதாயத்தை உருவாக்கும் கனவுடன் வந்தவர் மூவலூர் அம்மையார். இதனால் அவரது போராட்டங்கள் சமரசம் அற்றதாகவும், எளிதில் தைக்கும் கூர்மை யுடனும், பாசாங்கு இன்றியும் இருந்தன. பெண்கள் தாசிகளாகவும், வேசிகளாகவும் இருக்கும் இந்தச் சமுதாயத்தில் சீர்திருத்தமும், மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்ற சமுதாயச் சீர்திருத்த எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவர். அந்த அரசியல் இயக்கத்தைத் தமது சமுக இலட்சியத்துக்குப் பயன்படுத்துவதில் சிறிதும் சமரசம் காணவில்லை.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய காலகட்டமான 1920-களில், மூவலூர் அம்மையார் ஓரளவுக்கு முதல் கட்டத் தலைவராக இருந்துள்ளார். தீண்டாமை, தேவதாசி முறை, பால்ய விவாகம், விதவா விவாக மறுப்பு போன்ற சமூக இழிவுகளை எதிர்ப்பதில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் மிதவாதப் போக்கையே கடைப்பிடித்தனர். ஆனால், மூவலூரார் இந்தச் சமூக இழிவு களுக்கு இந்துமத மூட நம்பிக்கைகளே காரணம் என்று கண்டுகொண்டார். இதனால், இந்த சமூக இழிவுகள் மறைய வேண்டுமானால் இந்துமத சனாதனம் வேரோடு பிடுங்கப்பட வேண்டும் என்று தீவிரப் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமணிய சனாதன சக்திகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற நிலை 1925-ல் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில் உருவானது. இதைத் தொடர்ந்துதான் ஈ.வெ.ரா. பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அவருடன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றவர்களும் வெளியேறினர்.

தேவதாசி முறையை அடியோடு ஒழிக்க, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், தேவதாசி முறை ஒழிப்பு சட்டமாக நிறைவேற காங்கிரஸ் சனாதனிகளே எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் முக்கியப் பங்கு வகித்தவர் தீரர் சத்தியமுர்த்தி என்பது ஆச்சரியமான உண்மை. சட்டமன்றத்தில் முத்துலட்சுமி கொண்டு வந்த தீர்மானத்தை சத்தியமூர்த்தி தலைமையில் சனாதனவாதிகள் எதிர்த்தனர். சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஆதரித்தவர்கள், ‘இந்த முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும் இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியப் பண்பாடு சீரழிந்து விடும் என்று பேசினர். இவ்வாறு அடுத்த முறை அவர்கள் பேசினால் இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க இனிமேல், உங்கள் வீட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள் என்று பேசும்படி மூவலூர் அம்மையார் ஆலோசனை அளித்தார். முத்துலட்சுமி ரெட்டி அவ்வாறு சட்டமன்றத்தில் பேசிய பிறகே சனாதனவாதி களின் வாய் அடைக்கப்பட்டது.
இதற்கு மாறாக இந்தச் சட்டத்தை எப்படியும் நிறைவேற்றி விட முழு ஒத்துழைப்பு அளித்தவர்கள் சுயமரியாதை இயக்கத் தினரும், நீதிக்கட்சியினரும் ஆவர். அதில் ஈ.வெ.ரா., மூவலூர் அம்மையார் ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இது சம்பந்தமாக முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் அம்மை யாருக்கும் இடையே முக்கிய கடிதப் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. ஒரு கடிதத்தில் தேவதாசிகள் முறை குக்கிராமம் வரை ஒழிக்கப்பட வேண்டுமென்று மூவலூர் அம்மையார் வலியுறுத்தி எழுதியுள்ளார். அதேசமயம் குக்கிராமங்களில் தேவதாசி முறையை ஒழிப்பது எவ்வளவு கடினமான பணி என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். உதாரணமாக, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் பலனாக தேவதாசி முறையிலிருந்து விலகுவதற்கு தேவதாசிகள் விருப்பம் தெரிவிக்கும்போது கிராமங்களில் அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் இருப்பதாகவும் எனவே தேவதாசி ஒழிப்புச் சட்டத்தில் இதற்கும் சேர்த்துப் பரிகாரம் காண வேண்டும் என்றும் எழுதி யுள்ளார். இறுதியாக அந்தச் சட்டம் 1929-ல் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், 1947 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 31-ஆவது சட்டத்தின் மூலமே நிறைவடைந்தது. அதன் பிறகே தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேவதாசி முறை குறித்த நாவல் ஒன்றை எழுதி 1936-ல் வெளியிட்டுள்ளார். ‘தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற அந்த நாவல் மூவலூராரின் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. தேவதாசிகள் விழிப்புணர்விற்காக எழுதப்பட்ட இந்த நாவல், மிகவும் விறுவிறுப்பான நடையில் எழுதப் பட்டுள்ளது.

தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெற்றதில் மூவலூர் அம்மையாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் திருமண இல்லங்களில் ஆற்றிய உரைகள் மிகவும் ஆழமானவை. இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து சுயமரியாதைத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றன.

சுயமரியாதை இயக்கத்திலும் தொய்வு, சிறு தேக்கம் ஏற்பட்டது. அம்மையாருக்குப் பிறகு இயக்கத்துக்கு வந்த எத்தனையோ பேர் அங்கீகாரம் பெற்றனர். ஆனால், அம்மையார் ஓரம் கட்டப்பட்டார். வசதியான சமூகப் பின்னணி, கல்வி போன்ற தகுதிகள் இல்லாததால் அவரது பெயர் எங்கும் காணப் படவில்லை. இதனால் அம்மையாரின் உடலோடு உள்ளமும் சோர்ந்தது.

பின் 1944 இல் திராவிடர் கழகம் உதய மானது. இதனால் அம்மையார் மீண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகமாகச் செயல்படத் தொடங்கினார். திராவிடர் கழகத் தூண்களில் ஒருவரானார். 35 ஆண்டுகள் உயிர் மூச்சாகப் பாடுபட்ட இயக்கத்தில்கூட அவர் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பது நிதர்சனமானது.

1949 இல் திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகிறது. பெரியார் - மணியம்மை திருமணமே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. திருமணம் ஏன் என்பதற்குக் காரணம் கூறும்போது, “எனக்குப் பின் இந்த இயக்கத்தை நடத்த எவருக்குமே தகுதியில்லை” என்று பெரியார் கூறினார். அப்போது, “எனக்குக் கூடவா தகுதியில்லை. என்னை ஏன் வாரிசாக ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று மூவலூர் அம்மையார் கேட்டுள்ளார். அண்ணாவுடன் தி.க.விலிருந்து வெளியேறிய மூவலூரார் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக, அந்த 70 வயதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் அவரது மனதிற்குள் திருப்தி இருந்ததாகக் கூற முடியாது. தி.மு.க தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் அம்மையார் மணப்பாறையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அந்தத் தந்தியை அண்ணாதுரை அனுப்பியிருந்தார். அதில் தான், துத்துக்குடியில் நடிக்கும் ஒரு நாடகத்திற்குத் தலைமையேற்கும்படி அம்மையாரைக் கேட்டிருந்தார் அண்ணா. அதைப் படித்ததும் அந்த 70 வயதுப் பாட்டிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘நானும் இத்தனை வருடங்களாக இயக்கப் பணி செய்திருக்கிறேன். எந்த நிகழ்ச்சியிலும் என்னைத் தலைமையேற்கச் சொல்லி இதுவரை ஒருவரும் கேட்டதே யில்லை’ என்று கூறியுள்ளதைப் படிக்கும் போது, அம்மையாருக்கு தாம் எந்த இயக்கத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்ற மனப்புழுக்கம் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சுமார் 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம் அண்ணாதுரை தி.மு.க சார்பில் வழங்கிய விருதுதான். சுய மரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்குத் தி.மு.க சார்பில் விருது வழங்கி கௌரவிக்க அண்ணாதுரை முடிவு செய்தார். இதற்கு அவர் முதலில் தேர்வு செய்த பெயர் மூவலூர் அம்மையார் பெயர்தான். 1956 ஆம் ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டது. மூவலூரார் மீது அண்ணாதுரை மிகுந்த பாசத்துடனும், கனிவுடனும் இருந்துள்ளார். திமுக சார்பில் விருது வழங்கிப் பேசும்போது அம்மையாரை அன்னிபெசன்ட்டுக்கு ஒப்பிடுகிறார்.

அவரது கடைசி ஆண்டுகள் மயிலாடு துறையிலேயே கழிந்தன. புறக்கணிக்கப்பட்ட இறுக்கமும், ஆதங்கமும் மனதுக்குள் நீடித்து வந்தபோதும் அவரது சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. முதுமையில் அவருக்குக் கண்பார்வை மங்கிவிட்டது. இருந்தாலும் தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டதுடன் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

27.6.1962 ல் அம்மையார் மறைந்தார்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது (1996 - 2001) இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்திற்கு புத்துயிரூட்டி, ஏழைப் பெண்கள் திருமண உதவியை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தினார். பின்னர், மீண்டும் கருணாநிதி தலையிலான அரசு தற்போது பதவியேற்றுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து, திருமண உதவித் தொகையையும் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தினார். தொடர்ந்து அவர் திமுகவில் நீடித்ததால் அரசு கௌரவம் எதுவும் வழங்கவில்லை. விடுதலைக்குப் பிறகு அமைந்த மக்கள் அரசு அவரை முற்றிலும் மறந்துவிட்டது. ஈராயிரம் ஆண்டுகளாக இழிநிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாதியில் பிறந்து, அந்த இழிநிலையைப் போக்க போராடி வெற்றி கண்டார். சமுதாய மறுமலர்ச்சி காண அரும்பாடு பட்டார். நாட்டு விடுதலைக்கு உழைத்தார். அவர் வாழ்நாளி லேயே பல சமூக சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதைக் கண்ணாரக் கண்டார். அதுவே அவரது வாழ்வின் சாதனையும், அவருக்குக் கிடைத்த பாராட்டும், கௌரவமும் எனலாம்.

பா.ஜீவசுந்தரி
Share: 
© Copyright 2020 Tamilonline