"டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள் மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... குளியல் நேரம் எரி கற்கள் இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து நாதஸ்வரம் எழுத்தில் மணக்கும் இசை கீதாபென்னெட் பக்கம்
|
|
|
கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமஹர் என கருதப்படும் திரு. செம்மங்குடி சீனிவாச ஜயர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 93 வயது நிறைவு பெறுகிறார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் ஜில்லாவின் உள்ள செம்மங்குடி கிராமம். இவர் அங்கு பிறந்ததால் பெருமை பெற்றது என்றால் அது மிகையாகாது. சென்ற நூற்றாண்டின் சங்கீத வித்வான்கள் அநகேமாக தாங்கள் பிறந்த அல்லது வளர்ந்த ஊரின் பெயரை வைத்துக் கொள்வது வழக்கம்.
70 ஆண்டுகளுக்கு மேலாக சங்கீத உலகக்கு சேவை செய்துள்ள இவர் பெற்ற பட்டங்களும், பரிசுகளும் ஏராளம். ஆனால் இவர் பக்தி கலந்த பெருமையுடன் கூறிக்கொள்வது, காஞ்சி மாமுனிவர் பரமாச்சார்யா ஸ்வாமிகள் இவருக்கு சூட்டிய 'சங்கீத தாத்தா' என்ற பட்டத்தைத் தான்.
ஜூலை 25, 1908 ம் ஆண்டு திரு ராதாகிருஷ்ணன் அய்யர், திருமதி தர்மாம்பாள் தம்பதியருக்கு பிறந்த திரு செம்மங்கடி அவர்கள்து எட்டாவது வயதிலேயே தனது உறவினர் திரு. நாராயணஸ்வாமி அய்யரிடம் சங்கீதம் கற்கத் தொடங்கினார். பிறகு கோட்டுவாத்திய வித்வான் சகாராமராவ் அவர்களிடமும், உமையாள்புரம் ஸ்வாமி நாத அய்யர் அவர்களிடமும் (சங்கீத மூர்த்தி திரு தியாகைய்யரின் நேர் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்) இதை எடுத்துக்கொண்டார். கடைசி யாக அப்பொழுது பிரபலமாக இருந்த சங்கீத வித்வான் மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யரிடம் சிஷ்யனாக இருந்தார்.
தனது ஒத்துழையாத குரல் வளத்தை, அசுர சாதகத்தினாலும், உறுதிப்பாட்டினாலும், தெய்வ பக்தியாலும், மாற்றி வாழ்க்கையில் வெற்றி கண்டவர் திரு. செம்மங்குடி அவர்கள். இவரது முதல் மேடைக்கச்சேரி 18வது வயதில் கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி கோயில் சன்னதியில் நடைபெற்றது. இதை இவர் வேடிக்கையாக கூறுவார். ''சுமார் 15 அல்லது 20 பேர் எனது கச்சேரியை கேட்க கோயிலுக்கு வந்தார்கள். பலத்த மழையினால் அவர்கள் முன்கூட்டியே எழுந்து போக முடியவில்லை''
இதற்கு அடுத்த ஆண்டு (1927) சென்னையில் காங்கிரஸ் மஹா சபையில் இவர் பாடியது, இவரை கர்நாடக சங்கீதத்தின் ஒரு மேதையாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் பிறகு அடுத்தடுத்து பட்டங்களும் பதவிகளும் இவரைத் தேடி வந்தடைந்தது, உச்சநிலையில் அமர வைத்தது.
திருவாங்கூர் மஹாராஜாவின் ஆஸ்தான வித்வானாக 1939ம் ஆண்டு சேர்ந்த இவர், இரு ஆண்டுகளில் 'ஸ்வாதி திருநாள் சங்கீத கல்லூரியின்' முதல்வராக நியமிக்கப்பெற்றார். இந்த பதவியில் 20 ஆண்டு காலம் தொடர்ந்து பெரும் புகழோடு பணி புரிந்து சாதனை படைத்தார். சங்கீத கல்லூரியின் முதல்வராக இருந்த போதே, இந்திய வானொலியில் சங்கீத அமைப்பாளராகவும் பதவி வகித்தார். ஆனால் இந்த பதவியை 3 ஆண்டுகள் கழித்து துறந்த இவர் நகைச்சுவையாக கூறிய காரணம் ''நான் பாடுவது ஒருவேளை இவருக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னால் ஒவ்வொருவரும் பாடுவதை கேட்டுக் கொண் டிருக்க முடியவில்லையே!''
செம்மங்குடி அவர்கள் கர்நாடக சங்கீத வித்வான்களில் முதன்மையாக திகழ்ந்தார். தனது முதல் பாட்டிலேயே கேட்பவரை ஈர்க்கும் திறமை படைத்த இவர், அனாயசமாக 3 அல்லது 4 மணி நேரம் கூட சுருதி குறையாமல் பாடி சபையோரை மெய்மறக்கச் செய்வார். அந்தக் காலத்தில் சங்கீத கச்சேரிகளெல்லால் பல மணி நேரம் அமைவது வழக்கம்.எல்லாம் பாடுபவரின் மனோநி¨லையையும், சபை யோரின் உற்சாகத்தையும், பொறுமையையும் பொறுத்தது. சில கச்சேரிகள் இரவு முழுதும் கூட நடைபெறுவது சகஜம்.
செம்மங்குடியின் வாழ்க்கையே 20ம் நூற்றாண்டின் கர்நாடக சங்கீதத்தின் வரலாற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பாடும் விதத்திலேயே ஒரு நிரந்தர மாறுதலைக் கொண்டு வந்தவர் அவர். சங்கீதத்தின் தூய்மை யில் ஒரு உயர்ந்த தரத்தை கடைப்பிடிக்க மிகவும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
வெகு எளிதில் பணம் சம்பாதிப்பதில் அவரது நாட்டம் செல்லவில்லை. தீவிர காந்தி யவாதியான செம்மங்குடி அவர்கள் எந்தவித லாகிரி வஸ்துக்களையும் ஏறெடுத்தும் பாரா தவர். அவரினும் வயதில் மூத்த கலைஞர்கள் சிலர் அவருக்கு மரியாதை கொடுத்து, அவர் முன்னி¨யில் மதுபானம் அருந்த மாட்டார்கள்.
ஒலி பெருக்கி இல்லாத அந்த நாட்களில் நாதஸ்வர இசையின் அற்புதத்தில் மனதைப் பறிகொடுத்த செம்மங்குடி அவர்கள் தனது வாய்ப்பாட்டு கச்சேரிகளிலும் இந்த நாதஸ்வர பாணியில் ராகத்தின் அழகை வெகு விஸ்தாரமாக கொண்டு வரும் ஒரு புதிய உத்தியை கையாண்டு அதில் பெரும் வெற்றி கண்டார்.
சங்கீத பரம்பரையின் பெருமையை காப்பாற்ற அரும்பாடு பட்ட அவர், புகழ்பெற்ற சாகித்ய கர்த்தாக்களின் பாடல்களை தனக்கே உரிய பாணியில், மற்றவர்களும் எளிதில் பின்பற்றும்படி பாடி, பாடல்களின் உயர்ந்த தன்மையை நிலைநாட்டினார். தனக்கு மிகுந்த திறமை இருந்தும்கூட, அவர் புதிய பாடல்களை இயற்ற முன்வரவில்லை. அதற்கு மாறாக, ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்ட சங்கீத மும்மூர்த்திகள் (தியாகைய்யர், முத்துஸ்வாமி தீக்ஷ¢தர், ஸ்யாமா சாஸ்திரி) சுவாதி திருநாள் மற்றும் சென்ற நூற்றாண்டின் பல மேதைகளின் பாடல்களை, ஒரு நிலைமனத்தோடு தூய்மையும் பக்தியும் கலந்த கவனத்துடன் பரப்புவதில் மிகுந்த நாட்டம் செலுத்தினார். |
|
செம்மங்குடி அவர்களின் சிஷ்ய பரம்பரைகள் ஏராளம். இவர்களில் பலர் 'சங்கீத கலாநிதி' பட்டம் பெற்றவர்கள். ஒருவர் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றவர்கூட. இவரது பிரபலமான சிஷ்யர்கள் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, திருவாளர்கள் டி.எம். தியாகராஜன், டி.என். கிருஷ்ணன், பி.எஸ். நாராயணசுவாமி, கே.ஜே, எசுதாஸ் மற்றும் பலர் ஆவார்கள். இவரே சில சாகித்யங்களை அக்காலத்து முன்னணி பாடகர்களான திரு. அரியக்குடி இராமானுஜ ஜயங்கார், திரு. ஜி.என். பாலசுப்ரமண்யன், திருமதி டி. ப்ருந்தா இவர்களிடம் கற்றுக் கொண்டது உண்டு.
இவர் தனது 70 ஆண்டு இசைப்பணியில் பெற்ற முக்கியமான பட்டங்கள், திருவாங்கூர் மஹாராஜா 1945ல் அளித்த 'ராஜ்ய சேவா நிகாதா' இந்திய அரசின் 'பத்ம பூஷன்' தமிழ் இசை சங்கத்தின் 'இசை பேரறிஞர்' இந்திய நுண்கலை சபையின் 'சங்கீத கலா சிகாமணி' கேரள சர்வகலாசாலையின் D. Litt பட்டம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்துன் காளிதாஸ் சம்மன் ஆகியவை. இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது 1947ல் இவருக்கு அளிக்கப்பட்ட 'சங்கீத கலாநிதி' பட்டம். இது ஆண்டுதோறும் பிரபல சங்கீத வித்வான்களுக்கும், மேதை களுக்கும் சென்னை சங்கீத அகாதமி அளிக்கும் கெளரவமாகும். தனது 39 வது வயதிலேயே இந்த விருதை தன் குருநாதர் திரு. மஹாராஜ புரம் விஸ்வநாத ஐயர் முன்னிலையில் பெற்று, இதை பெற்றவர்களில் மிகவும் இளம் வயதினர் என்ற பெருமையையும் அடைந்தார்.
சென்னை சங்கீத அகாதமியின் 1988 டிசம்பர் மாத ஆண்டு விழாவில் செம்மங்குடி அவர்கள் தனது 80 வது வயதில் ஒரு மறக்கமுடியாத அருமையான கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு சீட்டுகள் பல மாதங்களுக்கு முன்பே விற்பனை ஆகி, பலர் வருத்தத்துடன் திரும்பும் படி ஆயிற்று.
பல நாடுகளிலிருந்து அழைப்புகள் வந்தும், செம்மங்குடி அவர்கள் கடல் கடந்து செல்ல விரும்பவில்லை. தனது பாட்டுகளை, கச்சேரி களை பதிவு செய்வதிலும் அதிக நாட்டம் கொள்ளவில்லை. இதனால் இவரது பாடல்கள் வெகு சிலவே பதிவு நாடாவில் உள்ளன.
இவர் சங்கீதம் பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். ஜெயதேவரின் 'அஷ்டபதி' நாராயண தீர்த்தரின் 'ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி' மற்றும் சதாசிவ ப்ரம்மேந்திரர், கவி சுப்ரமணிய பாரதி இவர்களது பாடல்களுக்கு இசை வடிவம் அமைத்துள்ளார். இரண்டு வெளியீட்டுகளில் 200க்கும் மேற்பட்ட சுவாதி திருநாளின் பாடல்களுக்கு இசை இலக்கணம் அமைத்துள்ளார். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போன்றது இவர் சுவாதி திருநாளின் 'பாவயாமி ரகுநாமம்' என்ற பிரபல பாடலுக்கு ராகமாளிகையில் இசையும் அதற்கு ஏற்ப சிட்டஸ்வரங்களும் அமைத்ததுதான். இந்த பாடலில் உள்ள ராமாயண படலம் - பால காண்டத்திலிருந்து ராம பாட்டாபிஷேகம் வரை - இன்னும் பல சங்கீத வித்வான்களும் பரதநாட்டிய மணிகளம் மேடையில் அளிப்பது குறிப்பிடத்தக்கது.
செம்மங்குடி அவர்கள் பழைய சம்பிரத ¡யங்களை மிகவும் கண்டிப்பாக கடைப் பிடிப்பவர். எல்லா சங்கீத வித்வான்களும் பஞ்ச கச்ச வேஷ்டியும், மேல் அங்கவஸ்திரமும் அணிந்து, நெற்றில் விபூதியோ, நாமமோ அணிந்து, கட்டுக்குடுமியுடன் விளங்க வேண்டும் என்று விரும்புபவர். இந்த காலத்திற்கு இவை எல்லாம் விநோத வேஷமாக இருக்கும். முக்கியமாக வேண்டியது இந்த உடை நியமம் அல்ல, சங்கீதத்தை முறைப்படி ரசிகர்களுக்கு அளிப்பதுதான் என்பதை இவர் ஒப்புக் கொள்ளவேமாட்டார் !
இந்த பிரபல சங்கீத ஜாம்பவான் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்து, தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென சங்கீத உலகமே ஒருமித்து இறைவனை வேண்டுகிறது.
திருநெல்வேலி விஸ்வநாதன் |
|
|
More
"டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள் மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி.... குளியல் நேரம் எரி கற்கள் இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து நாதஸ்வரம் எழுத்தில் மணக்கும் இசை கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|