Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
வேலையைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் முன்னேறுவது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்|டிசம்பர் 2001|
Share:
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கதிரவன், மின் வலைக்குள் புகுந்து, வேதாளத் தைத் தோளின் மேல் போட்டுக் கொண்டு வெளியில் வந்தார். வேதாளம், விழித்துக் கொண்டு கேள்விக் கதையை விவரிக்கலாயிற்று.

Boston-இல் வசிக்கும் குணசீலன், ஜெயசீலன் என்னும் இருவர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அலுவலகத்தில், ஒரே குழுவில் பணியாற்றி வந்தனர். வேலை விஷயத்தில் இரட்டையர் என்றே கூட கூறலாம். இருவரும் பிரமாதமாக வேலை செய்யக் கூடியவர்கள். ஆனால், போன மாதம், குணசீலன் வேலை நீக்கம் செய்யப் பட்டான். ஆனால் ஜெயசீலனோ வேலை உயர்வு பெற்றான். ஏன் அப்படி?! குணசீலன் வேறு எப்படியாவது நடந்து, நிலைமையை மாற்றியிருக்க முடியுமா?

வேதாளம், இந்தக் கேள்வியைக் கூறிவிட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் சொல்லாவிட்டால், உன் web-site nimda.E virus-ஆல் பாதிக்கப் பட்டு சுக்கு நூறாகச் சிதறி விடும் என்றது.

இது வழக்கமாக வரும் டயலாக் என்பதால், கதிரவன் சிறிதும் பதட்டமின்றி பதிலைத் துவங்கினார்.

வேலை போய் விட்டால், மீண்டும் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இது ஒரு மிகக் கடினமான சூழ்நிலை. எங்கு நோக்கினும் வேலை நீக்கம், நிறுவன மூடல் இது போன்ற செய்திகளாகவே தென்படுகின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் வேலை இழப்பது எந்த ஆச்சரியமும் அளிப்பதற்கில்லை. ஆனால், அதே நிறுவனத்தில் இன்னொருவர் வேலையைத் தக்கவும் வைத்துக் கொண்டு இன்னும் முன்னே றியது பாராட்டுக்கு உகந்த விஷயம் தான்.

வேலையில் முன்னேறுவது பெரும்பாலும் அவரவர் கையில் இருந்தாலும், வேலையைத் தக்க வைத்துக் கொள்வது என்பது, சூழ் நிலையையும் பொறுத்து உள்ளது. எந்த விதமான உத்தரவாதமும் கொடுக்க முடியாது. பல நிறுவனங்களில் எனக்குத் தெரிந்தே மிகப் பிரமாதமான, super-star என்றே அழைக்கக் கூடியவர்களும் கூட வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப் படுவது பெரும் பாலும் நிறுவனத்தின் நிலைமையைப் பொறுத்த முடிவு என்று கூறலாம். நிறுவனத்துக்கு சரிப் பட்டு வராத project-களையும் அவற்றில் பணி புரிந்த அனைவரையும் ஒட்டு மொத்தமாக நீக்கி விடுகிறார்கள். ஏனெனில், அரசாங்க விதி முறைகளின் படி, lay-off என்கிற வேலை நீக்கம், பணி புரிபவரின் திறமையை வைத்து இருக்கக் கூடாது. Business நிலைமையைப் பொறுத்து அவர்களின் position தேவையில்லாமல் ஆகி யிருக்க வேண்டும். திறனை வைத்து நீக்க, பலப் பல நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். நிறுவனங்கள் லேசில் அந்த மாதிரி நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனாலும், மிகத் திறமை சாலிகளை, நீக்காமல் வேறு வேலைக்கு மாற்றித் தக்க வைத்துக் கொள்வது எப்போதும் நடக்கத்தான் செய்கிறது.

எனவே, இப்படிச் செய்தால் வேலையைத் தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று உறுதி யளிக்க முடியாவிட்டாலும், தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்ப்பை அதிகப் படுத்திக் கொள்ளவும் ஒரு சில பொதுவான அணுகு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏன், அவற்றை சிறிது முன்னோக்கும் வகையில், super-star ஆக வளர்ந்து, வேலையில் முன்னேற்றம் அடைய உதவும் வழி முறைகள் என்றும் வைத்துக் கொள்ளலாமே?!

இந்த வழிமுறைகளை, ஒரு அடிப்படை விதியாகச் சுருக்கிக் கூறி விடலாம்:

உங்கள் நிறுவனம், உங்களை ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக, இழக்க முடியாத ரத்தினமாகக் கருத வேண்டும்.

நிறுவனத்துக்கு உங்கள் மதிப்பு (worth) எவ்வளவு என்பதை நான்கு மதிப்பீடுகளை (metrics) வைத்து எடை போடுவார்கள்:

1.தவிர்ப்பின்மை (criticality):
அத்தியாவசியமான, அவசரமான ஒரு project-க்கு நீங்கள் எத்தனைத் தேவைப் படுகிறீர்கள்?

2. திறமை (competence):
கடந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு திறமை காட்டி, ஒரு நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்?

3. பல்கலை வல்லமை (versatility):
நீங்கள் அமோகத் திறமைசாலி ஆனாலும், ஒரு துறையில் மட்டும்தானா, அல்லது இந்த நிதித் தட்டுப்பாட்டுக் காலத்தில், பல விதங்களில் நிறுவனத்துக்கு உதவ முடியுமா?

4. வருங்கால பயன் (future potential):
கடந்த கால திறமை, பல்கலை வல்லமை இரண்டும் எதிர் காலத்தில் நிறுவனத்துக்கு எவ்வாறு, எவ்வளவு உதவக் கூடும்?

தவிர்ப்பின்மை (criticality):
தவிர்ப்பின்மை என்பது, பொதுவாக வேலை உயர்வைக் குறிப்பதல்ல. வேலையைத் தக்க வைத்துக் கொள்ளத்தான். எனவே குறைத்துச் சொல்லத்தான் தோன்றும். ஆனால், வேலை நீக்கங்கள் மிஞ்சி விட்ட காலத்தில், அதன் முக்கியத்துவம் வானளாவ எட்டி விடுகிறது.

முன்பு கூறியபடி, வேலை நீக்கம் பொதுவாக (அரசுக்காக வெளிக் காட்டும் மட்டிலாவது) திறனை வைத்தது அல்ல. யார் இருந்தே ஆக வேண்டும், யாரை நீக்கி விட்டாலும், வேண்டிய காரியம் நடந்து கொண்டிருக்கும் என்பதை வைத்து இருக்கும். அதனால், தவிர்ப்பின்மை ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்படும் வாய்ப் பைக் குறைக்கிறது.

  • நீங்கள் செய்யும் காரியம், நிறுவனத்தின் பிழைப்புக்கே அடிப்படையானதாக இருந்தால் அத்தகைய project-களை core என்று கூறு வார்கள். அப்படிப்பட்ட மையமான project-கள் என்ன என்று கவனித்து, அவற்றில் பணியாற்ற முயல வேண்டும். ஏனெனில், சூழ்நிலை கடின மாகும் போது, core வேலைக்கு வெளியில் உள்ள project-கள் தான் முதலில் நிறுத்தப் படும் அபாயத்துக்கு உள்ளாகின்றன. உதாரணமாக, ஒரு chip நிறுவனம் internet services ஆரம்பித்தால், chip project தான் core. Internet service குழு அபாயம். இது சமீப காலத்தில் நடை பெற்ற உண்மையான நிகழ்ச்சி!
  • நிறுவனத்தார் புதியதாக வளர்ச்சி தரும் என்று கருதி அதிக கவனம் செலுத்தி, அரை மனதின்றி அதிவேகமாக ஓட்டும் project-களும், பாது காப்பை மட்டுமின்றி, வேலையில் முன்னேற்றத் தையும் அளிக்கக் கூடும். அதுவும் அந்த புதுத் துறை நன்கு வளரக் கூடிய நிமித்தங்கள் தென்பட்டால், இன்னும் நல்லது. உதாரணமாக, ஒரு database நிறுவனம் CRM softeware குழு ஆரம்பித்து, படு வேகமாக அதன் வணிகப் பங்கை (market share) அதிகப் படுத்திக் கொண்டிருந்தால், அந்தக் குழு நல்ல இடம் என்பேன். இதுவும் சமீபத்தில் காணப் பட்டதுதான்.
  • ஆனால், core-உம், புதிய வளர்ச்சியும் ஏறுக்கு மாறுதான். எது நல்லது என்பது சூழ்நிலையையும், நிறுவனத்தையும் பொறுத்தது. பொதுவாக, தட்டுப்பாட்டுக் காலத்தில் core-தான் பாதுகாப்பு, புதுக் காரியங்கள் விலக்கப் படலாம். வளரும் பரப்பு பொதுவாக நிறுவனம் வளர்கையில், வேலை உயர்ச்சிக்கு நல்லது.
  • எது எப்படியானாலும், சில சமயம் எந்தக் குழுவிலும் விகிதாசார அடிப்படையில் (percentage basis) சில பேரை நீக்கியே விடுகிறார்கள். அதனால் எதுவும் 100% பாதுகாப்பு என்று கூற முடியாது.
  • மொத்தத்தில், ஒரு தவிர்க்க முடியாத காரியத் துக்கு ஒரு தவிர்க்க முடியாத பணியாளராக இருந்தால் மிகவும் விசேஷம். அது மொத்தமாக உங்கள் கையில் இல்லாவிட்டாலும், உங்கள் முக்கியத்துவத்தை அதிகப் படுத்திக் கொள்ளும் படியான காரியங்களை எடுத்து செயலாற்ற வேண்டும் என்பதை குறிக்கிறது.
திறமை (competence):
திறமை என்பது பெரும்பாலும் உள்ளிட்டது (intrinsic). ஆனாலும், எல்லோருக்கும் வெவ் வேறு விதமான திறமை உண்டு என்பது என் எண்ணம். அதை முதலாவதாக வெளிக்காட்ட வேண்டும், அடுத்து, வெளிச்சம் காட்ட வேண் டும். மூன்றாவதாக செடி தழைத்து மரமாவது போல வளர்க்க வேண்டும்.

முதலில், வெளிக்காட்டல்:
  • உங்கள் திறமையை வெளிக்காட்ட, கொடுக்கப் பட்ட காரியங்களை உங்களூக்கே 150% திருப்தி வரும் படியும், தேவைப் பட்ட தேதிக்கு முன்னேயும் செய்து காட்ட வேண்டும். மேலும் மேலாளருக்கும் குழுவினருக்கும் எம்மாதிரிச் செய்தால் உற்சாகம் பிறக்கும் என்று அறிந்து செயல் பட்டால் இன்னும் நல்லது.
  • அதற்காக ஆமாம் சாமியாக இருக்க வேண்டும் என்பதில்லை. தங்கள் எண்ணங் களையும் யோசனைகளையும் பயமின்றி எடுத்துச் சொல்லி, மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு பட படப்பின்றி விவாதித்து, நல்ல கருத்துக்களைக் கோர்த்து செயல்படுபவர் களுக்கு அமோக மதிப்புத்தான்.
  • இன்னும் திறமையை மேலெடுத்துக் காட்ட, மிகவும் கடினம் என்று கருதப்படும் காரியங் களை முன் நின்று நடத்திக் காட்ட வேண்டும் (இதுதான் இது வரை பார்த்ததில் மிக முக்கியம் என்று தோன்றுகிறது). அவற்றில் தோல்வி அடையும் அபாயம் உண்டுதான். ஆனால், யாரும் அவற்றை நீங்கள் ஒருவர் மட்டுமே தனியாக நடத்திக் காட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. வேண்டிய அளவுக்கு, தேவைப்பட்ட நிபுணர்களை (experts) கலந்தாலோசித்து செய்யலாம். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். கொஞ்சமும் நாணமின்றி, உதவி பெற்று சாதனை புரியுங்கள்!
  • நீங்கள் விண்வெளியில் ஜொலிக்கக் கூடிய ஒரு நட்சத்திரம்தான். அது உங்களூக்குத் தெரியும். அதைப் பிறரும் உணருமாறு ஒரு காரியத்தில் செய்து காட்டுங்கள்!
அடுத்ததாக, வெளிச்சம் காட்டுவது:
  • வெளிக்காட்டுவதும், வெளிச்சம் காட்டுவதும் வெவ்வேறு. வெளிப்படுத்துவது என்பது, உள்ளிட்ட திறமையை எதற்காவது பயன் படுத்திக் காட்டுவது. வெளிச்சம் காட்டுவது என்பது அதை மற்றவரும் அறியும் படி செய்வது. உதாரணமாக ஒருவரால் ஜாவாவில் program எழுத முடிந்தால், ஒரு program எழுதுவது, வெளிப் படுத்துவது. அதையே மற்றவர் உணருமாறு பொதுவில் அர்ப்பணிப்பது (public domain), வெளிச்சம் காட்டுவது. அதுவும் இன்னார் எழுதினார் என்று தெரிய வேண்டும் அல்லவா?
  • நீங்கள் திறமை சாலியாக இருப்பினும், அதைப் பற்றி, முக்கியஸ்தர்களுக்குத் தெரிந்தால் தானே, நீக்கத்துக்கோ, உயர்வுக்கோ பட்டியல் போடும் போது, உங்கள் பெயர் எழுந்தால் நல்ல முடிவெடுக்க முடியும்? இதை visibility என்று கூறுவார்கள். அப்படித் தெரிய ஒரு நல்ல பயன் தரும் வழி உங்கள் காரியத்தைப் பற்றி ஒரு review, presentation அல்லது demon stration செய்வது. அது வெளிச்சமும் தரும், நல்ல யோசனைகளூம் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
  • அதற்காக, குறை குடமாகத் தளூம்பி, எதற்கெடுத்தாலும் நான்தான் செய்தேன் என்று மார் தட்டக்கூடாது. அது வெறுப்பைத்தான் வளர்க்கும். வாழைப் பழத்தில் ஊசி என்பது போல நாசூக்காகக் காட்ட வேண்டும். இந்த அரிய வித்தையில் வல்லவர்கள் மிக வேகமாக முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திறமை இருந்தாலும் நீங்கி விடுகிறார்கள் அல்லது ஒரே நிலையில் தேங்கி விடுகிறார்கள்.
  • உங்கள் மேலாளரும், அவரது மேலாளரும் வெளிச்சம் பெற்று முன்னேறுமாறு செய்யுங்கள். உங்களூக்கு பலம் பெருக அதை விட சிறந்த வழி இருக்க முடியாது. அவர்கள் முன்னேறும் போது, முன்னேற உதவியவர்களை ஒரு காலும் மறக்க மாட்டார்கள்.


திறமை வளர்த்தல்:
இதை பற்றிக் கூறுவது மிகச் சுலபம்: உங்கள் காரியங்களை இன்னும் நன்கு செய்ய உதவ புதுத் திறன்களையும், புதுக் கருவிகளைப் பற்றியும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மற்றும், தற்போதைய திறமை அளவுக்கு மட்டுமே காரியம் செய்து நிறுத்தி விடக் கூடாது. அது தேக்க நிலைதான் தரும். வளர்ச்சி தரக் கூடிய, அதற்கு மேலும் சற்று கடினமாகிய காரியங் களைச் செய்ய முன் வர வேண்டும்.

பல்கலை வல்லமை (versatility)
பல்கலை என்பது, நிறுவனத்துக்கு பல விதங்களில் பலன் தரும் வாழை மரம் போல பயன்தருவது.

பல்கலைக்குத் தாவும் முன், முதலில் ஒரு கலையில் வல்லவராகத் திகழ வேண்டும். அந்தத் திறமை இல்லாவிட்டால் பல வேலை செய்யக் கூடிய திறன் பயன்தராது. "jack of all trades, master of none" என்னும் இழுக்குத்தான் வரும். எனவே, அளிக்கப் பட்ட காரியங்களை நன்கு நடத்தி திறமையைக் காட்டிய பின்னரே வேறு காரியங்களை கவனிக்கலாம்.

சில நிறுவனங்கள், திறமை என்பதையே ஒரு பெறும் நதியாகவும், அதில் பிரவகிக்கும் வெள்ளம், பல காலகட்டங்களில், பல உப நதிகளில் இருந்து வந்து சேரும் நீராகவும் கருதுகிறார்கள். அதாவது, உதவும் ஒவ்வொரு விதமும் உங்களின் மதிப்பை சில புள்ளி உயரச் செய்யும். அதையே, அபாயத்தைக் குறைக்கும் ஒரு diversified portfolio எனவும் கருதலாம்.
பல்கலை வல்லமையை வளர்த்துக் கொள்ள பல வழிகள் உண்டு:
  • ஒரு தனி நபர் காரியத்தில் மட்டு மல்லாமல், குழுவில் உள்ள பல காரியங்களில் பங்கேற்று உதவி செய்யலாம்.
  • project-leader பொறுப்பு இல்லா விட்டாலும், co-ordinator போன்ற காரியங் களூக்கு கழுத்தை நீட்டி அத்தகைய பொறுப் பேற்க முடியும் என்று காட்டலாம்.
  • உங்கள் குழுவைச் சார்ந்த வேறு குழுக்க ளுக்கு உதவி செய்யலாம். உதாரணமாக, ஒரு software developer, சோதனை செய்யும் குழுவுக்கு உதவி செய்யலாம் அல்லது hardware குழுவிற்கு விளக்கம் கொடுக்கும் உதவி செய்யலாம்.
  • வேறு துறைக்கே உதவி செய்யலாம். உதரணம்: ஒரு engineer, விற்பனைக்கு பல விதங்களில் உதவ முடியும்.
- விற்க முயலும் போது customer-க்கு விளக்கிச் சொல்லலாம்.
customer சோதனையின் போது அது வெற்றியாக முடிய உதவலாம்.
- விற்ற பின், அந்த கருவியையோ, software-ஐயோ install செய்ய உதவலாம்; அதற்குப் பின் பழுதடைந்தால் அது எதனால் என்று கண்டு பிடிக்கவும், நிவர்த்திக்கவும் support குழுவுக்கு உதவலாம்.
- சிறு customization அல்லது பெரிய consulting-க்கு உதவலாம். எனக்குத் தெரிந்து பல பேர் engineer-ஆக இருந்து, பிறகு consultant ஆக பரிணமித்துள்ளனர்.
  • இவ்வாறு பல குழுக்களுக்கு உதவினால், உங்கள் திறமை வெளிப்பட்டு, வெளிச்சமும் பெறுகிறது! அத்தகைய காரியங்கள் வருங்கால வளரும் project-களாக இருந்தால், வேலை உயர்வுக்கும் உதவக் கூடும்.
அவ்வாறு வேறு குழுக்களுக்கு காரியங்கள் என்ன செய்தாலும், உங்கள் நேரத்தில் செய்யும் ஒரு bonus ஆகக் கருத வேண்டும். அவை செய்ததால் என் காரியம் தாமதம் ஆயிற்று என்று அங்கலாய்த்துக் கொண்டால் மேலாளர் அனுதாபம் காட்ட மாட்டார், ஆத்திரம் தான் அடைவார்! பார்த்து நடந்து கொள்ளுங்கள். பல குழுக்களுக்குள் இருக்கும் அரசியலையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள்!

வருங்கால பயன் (future potential)
வருங்கால பயன் என்பதில் எந்த விதமான மாயமும் இல்லவே இல்லை. வேலையைப் பொறுத்த வரை, மேலாளர்கள் கடந்த கால நடப்பு, வருங்காலத்துக்கு மிகச் சிறந்த நிமித்தமாகவே கருதுகிறார்கள். (In career, unlike financial markets, past performance is a good indicator of future potential). எனவே, நீங்கள் இதுவரை உங்கள் தொழிலில் தனி நபர் பொறுப்பிலோ, தலைமை காட்டக் கூடிய பொறுப்பிலோ எவ்வளவு திறமை காட்டியிருக்கிறீர்கள், எவ்வளவு விதங்களில் பயன் தந்திருக்கிறீர்கள் என்பதை வைத்து வருங்கால பயனை எடை போடுவார்கள்.

மேலும், நீங்கள் எவ்வளவு வேகமாக இன்னொரு காரியத்தைப் புரிந்து கொண்டு செயலாற்றுகிறீர்கள், எவ்வளவு சுலபமாக இன்னொறு திறனைக் கற்றுக் கொள்கிறீர்கள் என்பதும் உங்கள் வருங்கால பயனும் உயர்வும் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும்.

வருங்காலப் பயனுக்கு இன்னொரு மதிப்பீடு புது சூழ்நிலைகளூக்கு ஏற்ற படி வளையக் கூடிய தன்மை (flexibility, adaptability). நிறுவனங் களும் குழுக்களும் எப்போதும் பரிணமித்துக் கொண்டே (constantly evolving) உள்ளன. அவ்வாறு மாறும் போது யார் அதை எதிர்க்கும் தடங்கலாக இல்லாமல், விரைவில் தாங்களூம் மாறி ஆக்க சக்தி காட்டுகிறார்களோ அவர்கள் வருங்காலத்தில் எதிர் வரக் கூடிய சூழ்நிலை களையும் மாற்றங்களையும் சந்தித்து வெற்றி பெறுவார்கள் அல்லவா? முன்பு ஒரு முறை குறிப்பிட்டபடி, டார்வினின் தத்துவம் நமக்குப் புகட்டும் பாடம், 'பிழைத்துத் தழைப்பது பலம் மிக்க வர்க்கங்களல்ல, புது சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளக் கூடிய வர்க்கங்கள் தான்.'

******


இப்படி பொதுவான கருத்தை கூறி முடித்த கதிரவன் வேதாளம் எழுப்பிய கேள்விக்குத் திரும்பினார்: "குணசீலனும், ஜெயசீலனும் ஒரே அளவு உள்ளிட்ட திறமை பெற்றவர்களாக இருந்தாலும், தவிர்ப்பின்மை, திறமை, பல்கலை வல்லமை, வருங்கால பயன் என்னும் நான்கு மதிப்பீடுகளை வைத்துக் கணிக்கையில், ஜெயசீலனின் மொத்த மதிப்பு அவனை ஒரு பொக்கிஷமாகக் காட்டினதால்தான், அவன் வேலையைத் தக்க வைத்துக் கொண்டு உயர்வும் பெற்றான்" என்று கூறி பதிலை முடித்தார்.

இந்த பதிலால் கதிரவனின் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் அவர் தோள் மேலிருந்துத் தாவி, மின் வலைக்குள் குதித்து மறைந்து விட்டது!

******


எல்லா வாசகர்களும் தற்கால, அல்லது வருங்கால வேலைகளில் அவரவரது வேலை யைத் தக்க வைத்துக் கொள்வது மட்டு மில்லாமல் மேன்மேலும் உயர்வு பெற்று ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க என் உளமார்ந்த ஆசிகள்!

(இத்துடன் வேலை தேடி, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, வேலையில் உயர்வு பெறுவது பற்றிய கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது.)

******


நிறுவனத்துக்கு உங்கள் மதிப்பு (worth) எவ்வளவு என்பதை நான்கு மதிப்பீடுகளை (metrics) வைத்து எடை போடுவார்கள்:

1. தவிர்ப்பின்மை (criticality): அத்தியாவசியமான, அவசரமான ஒரு project-க்கு நீங்கள் எத்தனை தேவைப்படுகிறீர்கள்?

2. திறமை (competence): கடந்த காலத்தில் நீங்கள் எவ்வளவு திறமை காட்டி, ஒரு நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்?

3. பல்கலை வல்லமை (versatility): நீங்கள் அமோகத் திறமைசாலி ஆனாலும், ஒரு துறையில் மட்டும்தானா, அல்லது இந்த நிதித் தட்டுப்பாட்டுக் காலத்தில், பல விதங்களில் நிறுவனத்துக்கு உதவ முடியுமா?

4. வருங்கால பயன் (future potential): கடந்த கால திறமை, பல்கலை வல்லமை இரண்டும் எதிர் காலத்தில் நிறுவனத்துக்கு எவ்வாறு, எவ்வளவு உதவக் கூடும்?

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline