விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய மலரமைக்கும் போட்டி பல்லவி சித்தார்த் கச்சேரி முதிய, புதிய தலைமுறை. தமிழ்ப் புத்தாண்டில் பாலம் அமைப்போம் அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தமிழர் விழா
|
|
|
குளிரும் காற்றும் மிகுந்த பிப்ரவரியின் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுது, மிக இனிமையாகவும், ஆழ்ந்த தியானத்தின் பயனை அளிப்பதாகவும் கழிந்தது. சான்ஹோஸேயில் உள்ள ஆன்மீக மையத்தில் கூடி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் இசையை சுவாசிக்கும் அந்தக் கலைஞர்கள்.
முதல் இரு பகுதிகளில் மேற்கத்திய இசையையும், தென்னிந்திய கர்நாடக இசையையும் எந்தவிதக் கலப்படமும் இன்றி தனித்தனியே தூய வடிவத்தில் வழங்கினர். அதன் பிறகு மேற்கத்திய இசையும் கர்நாடக இசையும் ஒன்றோடொன்று இணைத்து வழங்கினர். இதை ரிசக்க மேற்கத்தியரும் இந்தியரும் ஆவலோடு கூடியிருந்தனர்.
மேற்கு
முதல் பகுதியை வழங்கியவர், போர்த்துகீசிய நாட்டைச்சார்ந்த லூயிஸ் மகல்ஹேஸ் என்பவர். கல்லூரியில் முறைப்படி இசை பயின்று, பல இசை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்றிருக்கும் இவர், மேற்கத்திய இசையை பியானோவில் வழங்கினார். 'கண்ணாடிகள்' என்னும் தலைப்பில் மாரீஸ் ராவேல் என்னும் ப்ரெஞ்ச் நாட்டு இசையமைப்பாளர் வாழ்க்கையையும் இயற்கையையும் பற்றி இயற்றிய பாடல்களிலிருந்து மூன்றைப் புனைந்தார். முதலாவதாக இருட்டில் சிறகுகளை அடித்துப் பறக்கும் இரவுப் பூச்சிகளின் நிலையை வர்ணிக்கையில், இவர் கரங்கள் பியானோவின் இசைத்தண்டுகளின் மேல் மென்மையான ஒரு நர்த்தனத்தை நடத்திக்காட்டின. இரவின் நுணுக்கமான சப்தங்களுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிட்டு, உடனே வன்மையானதோர் அடர்ந்த கானகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெப்பத்தின் மிகுதியால் பற்பல பறவைகள் சிறகுகளை அடித்து ஆர்ப்பரித்தன. பறவைகள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் எழுப்பிய ஒலி, உணர்ச்சிகளைத் தூண்டுவதாய் அமைந்தது. மொத்தத்தில் இயற்கையின் நுணுக்கங்கள் அணு அணுவாக வர்ணிக்கப் பட்டதை அங்கு கூடியிருந்த எல்லாருமே உணர்ந்தனர்.
கிழக்கு
உணர்ச்சியும் பரவசமும் மேற்கத்திய இசைக்கு மட்டுமல்ல, ஆதியும் அந்தமும் இல்லாத தென்னிந்திய இசைக்கும் உரியதே என வலியுறுத்தினர், இராகவன் மணியனின் இசைக்குழுவினர். இராகவனின் வாய்ப்பாட்டிற்கு உறுதுணையாக ராஜா சிவமணி வீணையும், வாதிராஜா பட் மிருதங்கமும் வாசித்தார்கள். இசையென்பது மொழிகளுக்கும் தேசங்களுக்கும் மட்டுமல்ல மதங்களுக்கும் அப்பாற் பட்டது என்பதை வலியுறுத்துவதற்காக, ஏசு நாதரைப் போற்றும் வகையில் (ராகவன் மணியன் எழுதியது) முதல் தமிழ் வர்ணம் அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து, முத்துசாமி தீக்ஷிதரின் 'சித்தி வினாயகம்' என்ற ஷண்முகப்ரியா ராகக் க்ருதியை ராக ஆலாபனையுடன் ஆரம்பித்தார் இராகவன். 'ஈ ஜகதி கதியை' என்று அம்மனை இராகவன் பக்திப் பரவசத்தோடு அழைத்ததில் அந்த ஜகதம்பாளுக்கும் மனம் இரங்கியிருக்கத்தான் வேண்டும். தொழு கையிலும் என்ன இனிமை, என்ன பரவசம். |
|
கிழக்கும் மேற்கும்
நிகழ்ச்சியின் உச்சகட்டமாய் வந்தது கிழக்கும் மேற்கும். இதமாக இணைந்து வழங்கிய மென்மையான இசை. விரிகுடாப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான 'தில்லானா'வின் முகுந்தன் நரசிம்மனும் இப்பகுதியில் கலந்து கொண்டார். 'முக்ஸ்' என்று அழைக்கப்படும் முகுந்தன், முறையாக மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் பயின்றிருப்பதால் இந்தப் பகுதியை மிக லாவகமாக பியானோவில் தொடங்கிவைத்தார். இப்பகுதியை ஆரம்பிக்க அவர் எடுத்துக்கொண்டது தனது சொந்த படைப்பான 'ப்ரணவம்' என்னும் இசை.(2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற கலிபோர்னியாவின் இசையாசிரியர்கள் நடத்திய இசையமைப்புப் போட்டியில் 'சிறந்த இசையமைப்பாளர்' பரிசைத் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.) வாழ்க்கையின் ஆதார நாதமாய்த் திகழும் ப்ரணவத்தைத் துல்லியமாக இவர் பியானோவில் விளக்க, அதைப் பிரதிபலிக்கும் வகையில் இன்பகரமாய் வந்தது ராஜாவின் வீணை நாதம். மெதுவாகவும், துரிதமாகவும், மாறி மாறி பற்பல மெட்டுகளில் வந்த இந்த பியானோ - வீணை உரையாடல்கள், கேட்பவர்களுக்குள் பரவசத்தை உண்டுசெய்ய, கர்நாடக இசையில் மூழ்கியிருந்த நெஞ்சங்கள் பல இவர்கள் வாசித்த ஸ்வரங்களின் ஆதார ராகங்களை அலசிக்கொண்டிருக்க, மேற்கும் கிழக்கும் சந்திக்கத் தொடங்கிவிட்டதை அனைவரும் உணர்ந்தனர்.
12ஆம் நூற்றாண்டுப் புலவர் ஜயதேவர் கண்ணனின் லீலைகளை எழுதிய ''ராஸ லீலா'', லூஜி போச்செரினி என்னும் இத்தாலிய இசையமைப் பாளரின் இசையில் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல கீர்த்தனைகளும், கமகங்களும் பியானோவின் பின்னியில் இசைக்கப்பட்டன. பல்லவியில் இராகவன் வாய்ப்பாட்டிற்கும், ராஜாவின் வீணைக்கும் லூயிஸ் 'ஒத்திகை'யென தந்த பியானோவின் பதில் ஸ்வரங்கள், மெல்ல மெல்ல சரணம் வருகையில் முழுப்பரிச்சயம் பெற்று ஒருங்கிணைந்தது வியப்பைத் தந்தது. இதையடுத்து நவீன மேற்கத்திய இசையமைப்பாளர் 'ஆஸ்டர் பியாஸோலோவின்' படைப்புகளை ஆதரமாகக் கொண்டு பல தமிழ்ப் பாடல்கள் வெவ்வேறு ராகங்களில் வழங்கப்பட்டன.
இவ்வாறு இரு வித இசைகளும் மெல்ல ஒன்றோடொன்று இணைவதைப் புனைந்த இவர்கள் இறுதியாக எடுத்துக் கொண்டது இந்திய நாட்டுப்பாடல்களையும் மேற்கத்திய இசையையும் ஒருங்கிணைத்த இசைமாமேதை இளையராஜாவின் 'மோஸார்ட் ஐ லவ் யூ' என்னும் படைப்பு. இந்தப் படைப்பை கீபோர்டில் முகுந்தன் வாசிக்க இதில் வரும் புல்லாங்குழலொலிகளை வழங்கியவர் இராகவன் (புல்லாங்குழல் வாசிப்பதில் இவர் சுயம்பு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்).
மொத்தத்தில் இவர்கள், இரண்டே மணிநேரத்தில் இசைப் படைப்புகளைக் கோர்வையாக அமைத்து, இசையின் தொன்மையையும், பெருமையையும், ஆதி வேறாகினும் இசை என்பது ஒன்று தான் என்பதை உணர்த்தினர். இருதரப்பு இசை வடிவங்களையும் அனைவரும் உணரும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கும்முன் எளிய முன்னுரை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முடிவில் இனந்தெரியாத ஒரு இனிமை என்னையாட் கொண்டதை உணர்ந்தேன்.
வி. நா. |
|
|
More
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய மலரமைக்கும் போட்டி பல்லவி சித்தார்த் கச்சேரி முதிய, புதிய தலைமுறை. தமிழ்ப் புத்தாண்டில் பாலம் அமைப்போம் அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தமிழர் விழா
|
|
|
|
|
|
|