Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அமெரிக்காவின் போர்க்கோலம்
- மணி மு.மணிவண்ணன்|ஏப்ரல் 2003|
Share:
"போர்க்காலம் வருகுது, போர்க்காலம் வருகுது" என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த கதை முடிந்து அமெரிக்கா போர்க்கோலம் பூண்டு விட்டது. ஐ.நா. சபையின் தீர்மானத்துக்குக் கீழ்ப்படிந்து ஈராக் தன் பேரழிவு ஆயுதங்களை அழிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. "ஈராக்கின் சத்தாம் உசைன் ஐ.நா.வையும் மதிப்பதில்லை, உலக மக்களின் கருத்துகளைப் பற்றியும் அக்கறைப்படுவதில்லை" என்று ஜனவரியில் குறைகூறிய அதிபர் புஷ், மார்ச்சில் தன் வழிக்கு வராத ஐ.நா.வை அலட்சியம் செய்தது மட்டுமல்லாமல், உலகமெங்கும் நடந்த போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை. உலகமே எதிர்த்து நின்றாலும் பரவாயில்லை, வருவது வரட்டும், ஒரு கை பார்த்து விடலாம் என்று போருக்குக் கிளம்பிவிட்டார்.

உலகத்தின் முதல் நாகரிகம் தோன்றிய பாபிலோனுக்கும், கடைசியாகத் தோன்றிய அமெரிக்காவுக்கும் இன்று போர். தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு. காடு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் வேகமாய்க் கடந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் எதிரியின் தலைநகர் மீது சரமாரியாகக் குண்டு பொழியும் வல்லமை கொண்ட கப்பல்கள் தன்னிடம் இருக்கிறது என்று காட்டுகிறது அமெரிக்கா. தூங்கிக் கொண்டிருந்த சத்தாம் உசைன் பங்களாவின் மேல், புராணங்களில் வரும் அஸ்திரங்களைப் போன்ற பேரழிவு ஆயுதங்களைப் போட்டு "தலை வெட்டும்" முயற்சியில் போரைத் தொடங்கினார் புஷ்.

போரைக்கூடக் கேளிக்கையாகக் காட்டும் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது ஹாலிவுட் திரைப்படங்களின் திருடன் - போலீஸ் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ‘காட்·பாதர்’ படத்தின் இறுதியில் குண்டர் தலைவன் சன்னி கொர்லியோன், தன் தந்தையைக் கொல்ல முயற்சித்த எதிரிகளை ஒரே சமயத்தில் தீர்த்துக் கட்டுவான். அதிபர் புஷ், தன் தந்தையைக் கொல்ல முயற்சித்த சத்தாம் உசைன் மீதும், அமெரிக்காவைத் தாக்கிய அல் கைடா மீதும் ஒரே நாளில் தாக்குதல் நடத்தினார். "மைனாரிட்டி ரிபோர்ட்" படத்தில் குற்றம் செய்வதற்கு முன்னரே யார் குற்றம் செய்யப் போகிறார்கள் என்று ஆரூடம் பார்த்து "முன்குற்றவாளிக்கு" (pre-criminal!) தண்டனை கொடுப்பார்கள். அது போல, ஈராக் இன்னும் சில ஆண்டுகளில் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவைத் தாக்கினாலும் தாக்கும் என்று ஆரூடம் பார்த்து ஈராக்கைத் தண்டிக்க வருகிறார் அதிபர் புஷ்.

துடிப்பு மிக்க ஹாலிவுட் படங்களில் வெறிபிடித்த குண்டன் ஒருவன் எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்வான். அவனைச் சுற்றி ஏகப்பட்ட போலீஸ்காரர்கள் எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து கொண்டு குறி பார்ப்பார்கள். ஹெலிகாப்டர்களும், துப்பாக்கி வண்டிகளும் சூழ்ந்து இருக்க, காவல்துறை அதிகாரி குண்டனுக்குக் கடைசி எச்சரிக்கை கொடுப்பார். தலைமேல் கையை வைத்துக் கொண்டு சரணடைந்து விடு, இல்லையேல் அப்பளம் சுடுவது போல் சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்பார். நிஜ வாழ்க்கையில், உலகப் போலீஸ் அதிகாரி புஷ், மூன்று லட்சம் போர்வீரர்களையும், ஹெலிகாப்டர்களையும், விமானங்களையும், டாங்குகளையும், கப்பல்களையும், அஸ்திரங்களையும் வைத்து ஈராக்கின் உசைனைச் சூழ்ந்து கொண்டு, அவருக்கு நாற்பத்து எட்டு மணிநேரம் கெடு கொடுத்தார். ஹாலிவுட் படங்களில் சில்வஸ்டர் ஸ்டலோனோ, ஆர்னால்டு ஸ்வார்ட்சனெக்கரோ, புரூஸ் வில்லிசோ நடித்தால், சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்களை எல்லாம் ஏய்த்து விட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். போரின் தொடக்கத்தில், இதுவரை உசைன் தப்பிக் கொண்டு வந்திருக்கிறார். இது தொடருமோ, இல்லை, ‘புட்ச் காசிடியும், சன் டான்ஸ் கிட்டும்’ என்ற படத்தில் வருவது போல் வீர மரணம் அடைவாரோ!

1991இல் நடந்த போரின் போது சி.என்.என்.னில் போரைப் பார்ப்பதற்கென்றே உலகம் எங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினார்கள். இந்தியாவில் அப்போதுதான் அரசு உதவி இல்லாமலேயே தனியார் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் கிளம்பின. பத்தே ஆண்டுகளில் பட்டி தொட்டி யெல்லாம் கேபிள் தொ. கா. வந்தாகி விட்டது. போர், கிரிக்கெட், தொடர் சித்திரங்கள் பார்க்க தாத்தா பாட்டி முதல் பேரன் பேத்தி வரை எல்லோரும் தொலைக்காட்சியைத் தொழுது நிற்கிறார்கள்.

அறத்துக்கும் மறத்துக்கும் நடக்கும் போர் என்று இரண்டு கட்சிகளுமே சொல்லிக் கொண்டிருந்தாலும், உண்மையில் இது வல்லரசுக்கும் புல்லரசுக்கும் நடக்கும் போர்தான். கென்யாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கிரிக்கெட் ஆட்டம் நடக்கும் போது, கென்யா தோற்குமா என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. வீரமாகத் தோற்கிறார்களா என்பதுதான் கேள்வி. அமெரிக்கா ஈராக்கைக் கைப்பற்றுமா என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. சத்தாமும் அவரது படையும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்பதில்தான் பந்தயம். இதற்கு நடுவே, அமெரிக்கா ஒவ்வொரு நாளும் வாணவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் சொன்னது போல், இது நமது வரிப்பணம் வாங்கிக் கொடுத்த வாணவேடிக்கை. பார்த்து மகிழுங்கள். (அல்லது உங்கள் ஊரில் நூலகங்கள் மூடப்பட்டிருந்தால், பள்ளி ஆசிரியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளாகியிருந்தால், வயிறெரிந்து கொள்ளுங்கள்!).

இந்தப் போரில் அநிச்சையாக யாரும் உயிரிழப்பதைத் தவிர்க்க முயல்வோம் என்கிறது அமெரிக்கா. குண்டுகளுக்கு எல்லாம் அம்மாவான "அம்மாக் குண்டு" (MOAB - Mother Of All Bombs!) போட்டு அரண்மனைகளைத் தரை மட்டமாக்கும் போது அங்கே இங்கே ‘சிலர்’ உயிரிழக்கலாம் என்று பீடிகை போடுகிறார்கள் அரசு அதிகாரிகள். 1991 ஈராக் போர் முடிந்த பின்பு தனக்கு எதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டிக் குர்துகளையும், ஷீயா முஸ்லிம்களையும் கொன்று குவித்த சதாம் உசைன் இப்படிப் பீடிகையெல்லாம் போட்டதில்லை. சொல்லப் போனால், சதாம் இப்படி இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டதற்குக் காரணமே, அவரது முப்பதாண்டுக் கொடுங்கோல் ஆட்சிதான். மனித நாகரீகத்தின் தொட்டில் என்றும், அரபியப் பண்பாட்டின் இதயம் என்றும் போற்றப்படும் ஈராக்கின் மேல் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து அமெரிக்கா போர் தொடுக்க உதவி செய்பவர்கள் யார்? ஈராக்கைச் சுற்றி இருக்கும் ஏனைய அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளும், ஏன் ஈராக்குக்கு உள்ளேயே சதாமின் கொடுங்கோல் ஆட்சியில் வாடிய குர்துகளும், ஷீயா முஸ்லிம்களும் தாம். இதைத்தான் வள்ளுவரும்.
அன்பு இலன்; ஆன்ற துணை இலன்; தான் துவ்வான்; என் புரியும், ஏதிலான் துப்பு.

என்றார். தன் மக்களை அரவணைத்து அன்பு காட்டாதவன், வலிமை நிறைந்த துணையும் இல்லாதவன், தன் வலிமையையும் வளர்த்துக் கொள்ளாதவன், பகைவரது தாக்குதலை எதிர்க்க முடியுமா என்ன? உள் பகை உள்ள குடிகளை உடைய தலைவன் குறைந்தது, தன்னை விட வலியவர் பகை கொள்வதையாவது தவிர்த்திருக்கலாம். தம் நாட்டு மக்களைத் துன்புறுத்தாமல் இருந்திருந்தால், பகைவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடமே இருந்திருக்காது. இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்.

உலக மக்கள் மன்றத்திலும், ஐ.நா. சபையிலும் தோற்றுப் போன அமெரிக்கா, குறைந்தது போர்க்களத்திலாவது தன் பேராற்றலைக் காட்டி, ஈராக் மக்களுக்கு அதிக துன்பமில்லாமல் போரில் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. இந்தப் போரை மற்ற நாட்டு மக்கள் எதிர்த்தாலும், அமெரிக்கர்கள் பெருவாரியான ஆதரவு அளிக்கிறார்கள் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இதற்கு என்ன காரணம்? செப்டம்பர் 11 தாக்குதலால் அதிர்ந்த அமெரிக்காவுக்கு எழுந்த சினம், இரண்டாம் உலகப்போரின் போது பெர்ல் துறைமுகத் தாக்கு தலுக்குப் பின்னர் கொதித்தெழுந்த அமெரிக்காவின் சீற்றத்தையும் மிஞ்சி விட்டது. இந்தச் சினத்தைக் காரணம் காட்டி ஈராக்கைத் தாக்கலாமா, எண்ணைக் கிணறுகளைக் கைப்பற்றலாமா என்ற கேள்விகள் ஒருபக்கம் இருக்கட்டும். தன் வசம் இருக்கும் பேரழிவு ஆயுதங்கள், தன் எதிரிகளிடம் வந்துவிடக் கூடாது என்று உறுதி கொண்ட அமெரிக்கா இனிமேல் தன் கையைக் கட்டிக் கொண்டு இருக்கப் போவதில்லை. தனது எதிரிகளையும், எதிரிகளுக்குத் துணை புரிவோரையும், தரைமட்டமாக்கித்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்றால், அதைச் செய்யவும் தயங்க மாட்டோம் என்று உலகுக்கு அமெரிக்கா பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சல்லிக்காசுச் சர்வாதிகாரியும், உடனடியாகப் புல்லையும் புழுதியையும் தின்றாவது அணுகுண்டும் ஏவுகணையும் வாங்கி வைக்க வேண்டும் என்று முயல்வான். அல்லது, நின் கமல பாதங்கள் சரணம் என்று அமெரிக்கா காலில் விழுவான். அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய வெறி கண்டு ஈரானும், வட கொரியாவும் நடுங்குகிறார்களோ இல்லையோ, ·பிரான்சும், ஜெர்மனியும், ரஷ்யாவும், சீனாவும் கவலைப்படுகிறார்கள். எல்லையற்ற வல்லமை கொண்ட பேரரசுகளும் தம் வரம்பை மீறத் தொடங்குவதால் அழிந்திருக்கின்றன என்பது வரலாறு. படைக்களத்தில் வெற்றி கொண்ட தலைவர்கள், குடியரசுத் தலைவர்களாய் மட்டும் இல்லாமல், சர்வாதிகாரிகளாய், பேரரசர்களாய் மாறிக் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அபாயம் பற்றி அக்கறையுள்ள அமெரிக்கர்களும் இந்த நிகழ்ச்சிகளைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

போர் முடிந்த பிறகு ஈராக் அமெரிக்காவின் ஆட்சியின் கீழ் இருக்கப் போகிறது. அதன் எண்ணைக் கிணறுகள் ஆங்கில-அமெரிக்க நிறுவனங்களின் கைவசம் வரப்போகின்றன. எண்ணைக் கிணறுகள் தரும் செல்வங்களைப் பயன்படுத்தி அரபு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த முயலும் தலைவர்களை உருவாக்குவதில் அமெரிக்கா வெற்றி கண்டால் நிம்மதி. எண்ணைச் செல்வங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவையோ, அதன் பொருளாதாரத்தையோ தாக்கும் எந்த முயற்சி இருந்தாலும் அதைப் பூண்டோடு அழிக்க அமெரிக்கா தயங்காது. ஆனால், இந்தப் போரால் அமெரிக்கா எத்தனை புதிய பின் லாடன்களை உருவாக்கப் போகிறதோ! தீவிரவாதி களின் திடீர்த் தாக்குதல்கள் நிறைந்த மூன்றாம் உலகப் போருக்கு அமெரிக்கா வித்திட்டு விட்டதோ என்ற கவலையும் நியாயமானதே.

ஈராக்கின் மேல் இவ்வளவு குண்டுகள் போட்டாலும், போருக்குப் பின் ஈராக்கின் சிதைவுகளை அகற்றி மீண்டும் அதைக் கட்டி வளர்க்கும் அமெரிக்காவையும் காணத்தான் போகிறோம். வரலாற்றில், தாங்கள் தாக்கி அழித்த நாடுகளை மீண்டும் கட்டி வளர்க்கும் தன்மையை வேறு எந்த வல்லரசு காட்டியிருக்கிறது? ஜப்பானையும், ஜெர்மனியையும் வளர்த்ததுபோல், ஈராக்கையும் அமெரிக்கா வளர்க்க வேண்டும். அதைச் செய்தால், கொடுங்கோலன் உசைனை வதம் செய்த தீரனாக அதிபர் புஷ்ஷை வரலாறு கொண்டாடும்.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline