|
|
பெருமாளை வழிபடுகின்ற பக்தர்கள் முக்தி அடையும்போது வைகுந்தம் சென்று சேர்வதாக வைணவ சம்பிரதாயம் சொல்கிறது. பரலோகத்து வைகுந்தத்திற்கு இணையாக தமிழகத்திலுள்ள திருநெல்வேலியில் ஸ்ரீ வைகுந்தம் என்று ஒரு வைணவத்தலம் இருக்கிறது. நவ திருப்பதிகளில் ஒன்றாக இத்தலம் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. பொதுவாக வைணவத்தலங்களில், ஆதிசேஷனின் மீது சயனித்திருக்கும் தோற்றத்தில் தான் பெருமாள் காட்சி தருவார். ஆனால், ஸ்ரீவைகுந்தத்தில் ஆதிசேஷன் குடையாய் நிற்க மூலவர் வைகுந்தப்பெருமாள் கையில் கதையுடன் நெடிதுயர்ந்து நின்றுகொண்டிருப்பார். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கும் இந்தக் காட்சி பார்ப்பவரைப் பிரம்மிக்க வைக்கும்.
கள்ளப்பிரான் என்று அழைக்கப்படுவதேன்?
கள்ளத்தனம் செய்பவன் கூட கடவுளைப் பிரார்த்தனை செய்து, தான் ஈட்டிய பொருளை இறைவனுக்குப் பயன் படுத்துவானானால், அவனுக்கு இறைவனுடைய கருணை கிடைக்கிறது என்கிறது திருமங்கைஆழ்வார் வரலாறு. காலதூஷகன் என்னும் கள்வன் தான் திருடிய பொருளில் பாதியை வைகுந்தப் பெருமாளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒருமுறை அரண்மனை ஒன்றில் செய்த திருட்டுத்துத்தனத்தில் பிடிபட்டுவிட்டான். அப்போது வைகுந்தப்பெருமாள் காலதூஷகன் உருவில் அரசனிடம் சென்று இறைத்தத்துவங்களையெல்லாம் உபதேசம் செய்யதார். இதைக் கேட்டதும் காலதூஷகன் ஒரு யோகி என்ற முடிவுக்கு அரசன் வந்து விட்டான். அதன் பிறகு அரசனும் காலதூஷகனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். அன்றிலிருந்து ஸ்ரீவைகுந்தப்பெருமாள் ''கள்ளப்பிரான்'' என்றே அழைக்கப்படலானார்.
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் 51/4 ஏக்கர் நிலப்பரப்பில் 110 அடி உயரத்தோடு 9 நிலைகளைக் கொண்ட இராசகோபுரத்தை உடையது இக் கோயில். சித்திரை மாதம் ஆறாம் நாளும் ஐப்பசி மாதம் ஆறாம் நாளும் சூரியனுடைய ஒளிக்கதிர் நேராக மூலவர் மீது படும் அதிசயத்தை இங்கு காணலாம். 108 வைணவத்தலங்களில் சூரிய வழிபாடு இங்கு மட்டுமே காணப்படுகிறது. இக்கோயிலில் வைகுந்தவல்லித் தாயாருக்கும் கள்ளப்பிரானின் தேவியாகிய சோரனாத நாயகிக்கும் இரண்டு தனித்தனி சன்னிதிகள் கிழக்கு நோக்கி அமைந் துள்ளன. ஆழ்வார்திருநகரி போன்றே ஸ்ரீவைகுந்தமும் மிகப்பெரிய நகரம். இதற்கருகிலேயே கைலாச நாதர் ஆலயம் காணப்படுகிறது. வைகுந்தமும் கைலாசமும் அருகருகே அமைந்திருப்பது விசேஷ மல்லவா! பிருகுதீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் மற்றும் கலச தீர்த்தம் ஆகியவை இங்குள்ள புண்ணிய தீர்த்தங்கள். சோமுகாசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடமிருந்து நான்மறைகளைத் திருடிச் செல்ல, பிரம்மன் இத்தலத்தில் வந்து பெருமாளைக் குறித்து தவமியற்ற, வைகுந்தநாதர் பிரம்மனுக்குப் பிரத்தியட்சமாகி நான்மறைகளை மீட்டுத் தந்தார் என்று வரலாறு கூறுகிறது. (கி.பி.11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. கி.பி.1831ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் நடந்த போரில் இக்கோயிலும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கட்டபொம்மனுக்குக் கோட்டையாய்ப் பயன்பட்டிருக்கின்றன.)
ஸ்ரீவைகுந்தத்தை அடுத்து நவ திருப்பதி வரிசையில் மிக அருகில் உள்ள தலம் நத்தம். வரகுணமங்கை என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. ஆதிசேஷன் குடை பிடிக்க, வீற்றிருக்கும் கோலத்தில் காணப்படும் பெருமாள் விசயாசனர் என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பெயருக்கான காரணம் தெரியுமா? வேதவித் என்ற பக்தர், இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைக் கண்டு களிக்கும் ஆர்வத்துடன், ஊன் உறக்கம் இன்றிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவரது தவத்தை மெச்சிய பெருமாளும் அவருக்குக் காட்சிதந்தார். அந்த பக்தர் "ஆசணத்" என்ற மந்திரத்தை நாள் தவறாமல் கூறி இறைவனை வழிபட்டார் என்பதால் இறைவன் விசயாசனர் என்றே பெயர் பெற்றார். நம்மாழ்வாரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த பெருமை இத்தலத்துக்கு உண்டு. இக்கோயிலின் உற்சவ மூர்த்திக்கு "எம் இடர் களைவான்" என்று பெயர். தாயார் பெயர் வரகுணவல்லித் தாயர். இதனால் இத்தலத்திற்கு வரகுணமங்கை என்ற பெயரும் உண்டு. அக்னி தீர்த்தம், தேவபுகரிணி தீர்த்தம் என்ற இரு புண்ணிய தீர்த்தங்கள் இங்குள்ளன. அக்னி பகவானுக்கும் சத்தியவானுக்கும் (சாவித்திரியின் கணவன் சத்தியவான்) இது பிரத்தியேகமான தலமாகும்.
திருப்புளிங்குடி என்பது நவதிருப்பதி வரிசையில் அடுத்து வருகிறது. ஸ்ரீவைகுந்தத்தில் "நின்ற கோலத்திலும்" நத்தத்தில் "இருந்தகோலத்திலும்" காட்சிதரும் இறைவன் இங்கு, ''கிடந்தகோலத்தில்'' காட்சி தருகின்றார். அழகிலும் உருவ அளவிலும் 'திருக்கோளுர்" தலத்துப் பெருமாளுடன் போட்டி யிடும் விதத்தில் புஜங்கசய கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்துப் பெருமாள் "காய்சின வேந்தர்" என்றும் "பூமி பாலர்" என்றும் அழைக்கப் படுகின்றார். திருமகளும் நாராயணனும் தனித்துக் களித்துக் கொண்டிருப்பது கண்டு சினந்த பூதேவி பாதாளலோகம் சென்றுவிட, நாராயணன் அவளைப் பின்தொடர்ந்து சென்று சமாதானப் படுத்தி அழைத்து வந்து இத்தலத்தில் எழுந்தருளியதால் காய்சின வேந்தர் என்றழைக்கப்படும் இறைவன் பாதாளம் வரை சென்ற களைப்பு நீங்க இத்தலத்தில் சயனித்த கோலத்தில் காட்சி தருகின்றார். சாபவிமோசனம் பெறுவதற்கும் தோஷ நிவர்த்திக்குமுரிய தலமாக இது விளங்குகிறது. முனிவர் ஒருவரது சாபத்தால் அரக்கனாகத் திரிந்த யக்ஞசர்மா இத்தலத்தில் சாப விமோசனம் பெற்றதாகவும், மான் உருவில் களித்துக் கொண்டிருந்த முனிவர் ஒருவரைத் தன் வஜ்ராயுதத் தால் கொன்று பின் அத்தோஷம் நீங்க இந்திரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. மூலவர் சன்னிதியில் பெருமாளின் பாதத்திலிருந்து தனியாகப் புறப்பட்டு ஒரு தாமரைக்கொடி சுவற்றில் இருக்கும் பிரம்மா வீற்றிருக்கும் தாமரை மலருடன் சென்று சேருவது போன்று அமைந்திருக்கும் காட்சி அதிஅற்புதமானது. மற்றும் அனந்த சயனமாய்க் காட்சி தரும் காய்சினவேந்தர் பாதங்களை வெளிப் பிரகாரத்தில் அமைந்த ஒரு சன்னல் வழியாகக் கண்டு களிக்கும் விதத்தில் மூலவரின் கருவறை அமைந் திருப்பது கட்டிடக் கலை நிபுணரின் திறமைக்கு எடுத்துக் காட்டு. கதிரவனின் ஒளிக்கதிர் சன்னலின் வழியாகப் பாய்ந்துவந்து பெருமாளின் முகத்தில் படிவதும் பார்க்கப் பரவசமூட்டும் கண்கொள்ளாக் காட்சியாகும். இங்குள்ள தாயார் மலர் மகள் நாச்சியார். புளிங்குடிவல்லி என்றும் அழைக்கப்படுகின்றார்.
வருண தீர்த்தமும், நிருதி தீர்த்தமும் இக்கோயிலின் புண்ணிய தீர்த்தங்கள். வருணனுக்கும் தருமராசனுக் கும் இறைவன் காட்சி கொடுத்த தலம் இதுதான். ஸ்ரீவைகுந்தத்தில் சித்திரை மற்றும் மார்கழியிலும், நத்தத்தில் மார்கழியிலும் மாசியிலும், திருப்புளிங்குடியில் ஐப்பசியிலும் பங்குனியிலும் உத்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
பெருமாளின் களைப்பைப் போக்க ஸ்ரீதேவியும் பூதேவியும் அடிவருடும் காட்சியினைக் காணும் நம்மாழ்வார் தாமும் அவ்வாறு அடிவருடும் பேறு பெற வேண்டிப்பாடுகின்றார்.
கலிவயல் திருப்புளியங்குடியாய்!! வடிவிணையில்லாமலர்மகள் மற்றைநிலமகள்பிடிக்கும்மெல்லடியை கொடுவினையேனும்பிடிக்கநீஒருநாள் கூவுதல்வருதல்செய்யாயே" |
|
என்பதில் அவர் ஏக்கம் வெளிப்படுகிறது. திருப் புளியங்குடியில் சயனித்திருக்கும் பெருமாளைக் குறித்துப் பன்னிரண்டு பாசுரங்கள் பாடியுள்ள நம்மாழ்வார் ஒரே பாசுரத்தில் ஸ்ரீவைகுந்தம், நத்தம், புளியங்குடி ஆகிய மூன்று தலங்களையும் குறித்துப் பாடிய பாசுரம் மிகவும் அருமை. அப்பாசுரம் இதோ:
புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்தஎன்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப பளிங்குனீர் முகிலின் பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவாராயே
இப்பாசுரத்தில் கிடந்தகோலம், இருந்த கோலம், நின்றகோலம் ஆக மூன்று கோலங்களும் பேசப்பட்டுள்ளன.
நவதிருப்பதியின் மற்ற மூன்று தலங்களையும் அடுத்த இதழில் தரிசிக்கலாம்.
டாக்டர். அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|