வழி மறந்தபோது புதிய பாதை
|
|
|
நியூயோர்க் நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் டொக்ரர் ஒருவர் சமீபத்தில் சொன்ன உண்மைக் கதை இது. சொன்னவர் இலங்கைக்காரர். இந்த மருத்துவமனையில் அவர் சேர்ந்த புதிதில் அவருக்கு வயது முப்பது இருக்கும். இவரிலும் பார்க்க ஒரு சில ஆண்டுகளே வயதில் மூத்த அமெரிக்க வெள்ளை டொக்ரரும் அங்கே வேலை பார்த்தார். இந்த அமெரிக்கர் அதிநுட்பமான புத்திசாலி, மயக்கவியல் நிபுணர் (anesthesiologist). உலகத்தில் சிறந்த பத்து டொக்ரர்களை இந்தத் துறையில் எண்ணினால் அதில் இவரும் ஒருவராய் இருப்பார். அப்படிப் புகழும், திறனும் பெற்றவர்.
ஆனால் இவரிடம் மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. யாரையும் மதிக்கமாட்டார். இவருடன் வேலை செய்யும் பெரும் தகுதி பெற்ற டொக்ரர்களையும், சகாக்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார். இவர் வாயிலே இருந்து வெளிப்படும் வசைச்சொற்கள் ஒரு மருத்துவ மனையின் சுவர்களுக்குள் ஒலிக்கக் கூடாதவை. சிறு வயதில் இருந்து அவர் சேர்த்து வைத்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் தயக்கமில்லாமல் வெளியேவிட்டு அந்த இடத்தின் காற்றை அசுத்தப்படுத்துவார். அதிலும் அவருடைய எதிராளி ஒரு வேற்று நாட்டவனாகவோ அல்லது நிறம் குறைந்தவனாகவோ இருந்து விட்டால் அவருடைய சொற் பிரயோகங்கள் இன்னும் ஒரு மோசமான லெவலுக்கு கீழே இறங்கும்.
ஆனால் இதுவெல்லாம் தன்னுடன் வேலை செய்யும் சக டொக்ரர்களிடமும், அலுவலகக்காரர்களிடமும்தான். நோயாளிகளின் முன்னிலையில் அவர் குழைவதை கண்கொண்டு பார்க்க முடியாது. தன் உடம்பில் உள்ள எலும்புகளை எல்லாம் மறந்துபோய் வீட்டிலே விட்டுவிட்டு வந்தது போல உடம்பை நாலாக வளைப்பார்; ஐந்தாகச் சுருக்குவார். வசைபாடும் அதே வாய் கரிசனமான புகழ் உரைகளை அள்ளி வீசும். இலங்கைக்காரர் இவரிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். இவருடைய செயல்பாடுகள் அவருக்கு எரிச்சல் தரும். உலகத் தரமான ஒரு மருத்துவ மனையில், பிரமிக்க வைக்கும் தொழில் நேர்த்திகொண்ட இந்த டொக்ரர் செய்யும் நேர்மையற்ற காரியங்களை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஒரு முறை இந்த அமெரிக்கர் சாதாரணரண சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரிடம் அந்த வியாதியின் தீவிரத்தைப் பத்து மடங்கு அதிகமாக விவரித்து பயமூட்டினார். பிறகு பத்து நிமிடம் எடுக்கும் சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் இழுத்தெடுத்து நோயாளியைப் பிழிந்துவிட்டார். நோயாளியின் பையில் பணம் இருந்தால் அது இவர் பைக்கு மாறவேண்டும். அப்பொழுதுதான் திருப்தி. அவர் அறைக்குள் ஒரு நோயாளி நடந்து வந்தால் அவர் ஒரு பணப்பொதி நடந்து வருவதையே காண்பார்.
ஒருமுறை இலங்கைக்காரர் இந்த விஷயத்தைத் தயங்கியபடி எடுத்தபோது அமெரிக்கர் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார். "எட்டாயிரம் மைல் தூரத்தில் இருந்து நீ படித்து வந்ததை அங்கேயே போய் பிராக்டிஸ் பண்ணு. அதைச் செய்யமுடியாவிட்டால், உன்னு டைய தாயுடன் அலுவல் பார்த்து அதைச் சரிப்படுத்து" என்று யோசனை சொன்னார். அதற்குப் பிறகு இலங்கைக்காரர் தீயாரைக் கண்டால் தூர விலகு என்ற மாதிரி ஓடி ஒளிந்துகொள்வார்.
இந்த டொக்ரரிடம் இன்னொரு பலவீனம் இருந்தது. ஆடம்பரப் பிரியர். ஒவ்வொரு வருடமும் கார் மொடல் மாறியவுடன் புதிய கார் வாங்கிவிடுவார். அது விலை அதிகமான, மற்றவர் கண்கள் பார்த்துப் பொறாமைப்படும்படி உயர்ரக வாகனமாக இருக்கும். அவர் அணியும் ஆடைகளும் அப்படியே. மடிப்புகள் கலையாத, அளவெடுத்துத் தைத்த பளபளக்கும் உடைகள்.
அவர் அலுவலகத்தில் அவருக்கென்று பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட சுழல் நாற்காலி ஒன்று இருக்கும். ஸ்வீடன் நாட்டில் இருந்து வரவழைத்தது. மெல்லிய, பதப்படுத்தப்பட்ட மென்சிவப்பு ஆட்டுத் தோல் மூடிய இருக்கை. ஆசனத்தை மடிக்கவும், நிமிர்த்தவும், சரிக்கவும் இன்னும் பல கோணங்களில் அசைவதற்கும் ஏற்ற மாதிரி இவருடைய உயரத்துக்கும், பருமனுக்கும் இசைவாகச் செய்யப்பட்டது. அவர் அதில் சில பாகைக் கோணத்தில் சாய்ந்திருந்து, ஒரு சங்ககாலத்துச் சிற்றரசன் போல ஆட்சி புரிவார்.
சில வருடங்கள் கழித்து அவர்கள் டிப்பார்ட்மெண்டில் ஒரு கறுப்பு இன டொக்ரரும் சேர்ந்துகொண்டார். அந்தக் கணத்தில் இருந்து அமெரிக்கருக்கு அந்தக் கறுப்பு டொக்ரரைப் பிடிக்காமல் போனது. பலர் முன்னிலையில் அவரை இழிவு படுத்திப் பேசுவார். அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் 'braindead'. 'அவன் மூளைசெத்தவன், அவன் மூளைசெத்தவன்' என்று காதுபடத் திட்டுவார். |
|
ஒரு நாள் நடந்த சத்திர சிகிச்சையின் போது அமெரிக்க டொக்ரரின் செய்முறையில் உள்ள ஒரு தவறைக் கறுப்பு டொக்ரர் சுட்டிக் காட்டியபோது அது பெரும் வாக்குவாதத்தில் போய்முடிந்தது. கறுப்பு டொக்ரரும் விட்டுக்கொடுக்கவில்லை. அப்பொழுது அமெரிக்கர் சொன்னார் "மறந்துவிடாதே! நீ ஆப்பிரிக்காவில் மரத்தில் ஏறும்பொது நான் இங்கே மயக்கவியல் நிபுணனாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். ஒரு நாளைக்கு நீ இந்த ரோட்டைக் கடக்கும்போது உன்னை ஒரு வாகனம் அடித்துவிட்டுப் போகும். அப்பொழுது உன்னை எடுத்துக்கொண்டு இந்த ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். அன்று பார்த்து இங்கு டியூட்டியில் நான் மட்டுமே இருப்பேன். இறந்துபோன உன் மூளையை திருப்பி மண்டை ஓட்டில் திணிக்கும் காரியம் என் மேற்பார்வையிலேயே நடக்கும். என்னைப் பகைக்காதே. என்னைப் பகைக்காதே!" என்று சத்தமிட்டார். பிறகு ஒரு மாதிரி அந்தச் சண்டை அடங்கிவிட்டது.
இது நடந்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. ஒரு நாள். முழு இரவு படிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. பனியும் மழையும் சேர்ந்து விழுந்த தினம். இந்த அமெரிக்க டொக்ரர் எதிர்ச் சாலைக்கு ஒரு காரியமாகப் போவதற்காக ரோட்டைக் கடந்தார். அந்தச் சிறு அவகாசத்தில் எங்கிருந்தோ விரைந்து வந்த ஒரு கார் அவரை அடித்துத் தூக்கி எறிந்தது.
ஆஸ்பத்திரிக்கு அவரைக் கொண்டு வந்தபோது அங்கு கடமையில் இருந்தது கறுப்பு டொக்ரர்தான். அவர் மூளை நிபுணர். எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை. அடிபட்டவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது. அதாவது கிட்டத்தட்ட அவர் ஒரு தாவரம் மாதிரித்தான். உடம்பில் உயிர் இருந்தது, ஆனால் மூளையின் செயல்பாடு நின்றுவிட்டது. சிறிது காலம் சென்று அவர் ஒரு மூளை இறந்தோர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். சில வருடங்களில் அங்கேயே இறந்தும் போனார்.
இப்பொழுது அந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பு அந்தக் கறுப்பு டொக்ரரிடம்தான். ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பெற்ற, பல கோணங்களில் மடிக்கவும், சரிக்கவும், சாய்ந்து கொடுக்கவும் பழக்கப்பட்ட அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது அந்த இலங்கைக்காரர்.
அ.முத்துலிங்கம், கனடா |
|
|
More
வழி மறந்தபோது புதிய பாதை
|
|
|
|
|
|
|