Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
பரிசு
ஓலம்
மேதையின் மனைவி
- ஏ.எஸ். ராஜன்|ஜனவரி 2004|
Share:
"ஜானா! அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எனக்கு யுனிவர்சிட்டியில் அவசர வேலையிருக்கிறது. அந்த கான்·பரன்ஸ் பேப்பரை இன்றைக்குள் அனுப்பியாக வேண்டும். அம்மா நான் வராவிட்டாலும் புரிந்து கொள்வாள்'' என்றார் டாக்டர் ராமன்.

''சரி, முடிந்தால் 6 மணிக்காவது திரும்பி வாருங்கள். வழக்கம் போல் 9 மணி ஆக்காதீர்கள். எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிடுவோம்'' என்றாள் ஜானகி.

ராமன் அவள் சொன்னதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அவருடைய உலகமே தனி. நல்லவேளையாக யுனிவர் சிட்டிக்கு பஸ்ஸில் செல்கிறார். அவர் கார் ஓட்டினால் அவருக்கும் ஆபத்து, தெருவில் உள்ளவர்களுக்கும் ஆபத்து. கார் ஓட்டுவதில்கூட அவரால் முழு கவனம் செலுத்த முடியாது.

''நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கோ. 6 மணிக்கே வந்துடுங்கோ. புரிகிறதா? மத்தியான லஞ்ச்சுக்கு தோசையில் மிளகாய்ப் பொடி தடவி வைத்திருக்கிறேன். அதை 'மைக்ரோவேவ்' செய்து சூடாகச் சாப்பிடுங்கோ''.

''சரி, ரொம்ப வேகமாய்க் காரை ஓட்டாதே...'' என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றார் டாக்டர் ராமன்.

மாமியார் வரும் விமானம் பதினொன்றரை மணிக்குத்தான் ஏர்போர்ட்டிற்கு வரும். 10 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பினால் 11 மணிக்குச் சென்றுவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குள் மாமியாருக்குப் பிடித்த சமையலைச் செய்து விடலாம். அந்த விஷயத்தை அத்தையிடம் - மாமியார் ஆகுமுன் அவள் ஜானகியின் அத்தைதான் - எப்படிச் சொல்வது என்று யோசித்தாள் ஜானகி. தான் சொல்லப்போவது ராமனின் அம்மாவிற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தரும். இருந்தாலும் மத்தியானச் சாப்பாட்டிற்குப் பின் சொல்லத்தான் வேண்டும் என்று மனதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ராமனுக்கும், ஜானகிக்கும் திருமணமாகிச் சுமார் பத்து வருடங்கள் ஆகின்றன. திருமணமாகும் போது ஜானகிக்கு 20 வயது. இரசாயனத்தில் பிஎஸ்ஸி முடித்திருந்தாள். தன் கல்யாணத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. அப்பாவின் வற்புறுத்தலினால், தனக்கு 12 வயது மூத்தவரான தன் அத்தை மகன் ராமனுக்கு மனைவியானாள். ராமன் கணிதத்தில் மேதை என்றே சொல்லலாம். கணிதத்தில் பிஎச்டியை வெகுசுலபமாக, சியாட்டிலில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் வாஷிங்டனில் முடித்துவிட்டு, அங்கேயே வேலையில் சேர்ந்து, தனது 28வது வயதிலேயே முழுப் பேராசிரியராகிவிட்டார். கணித ஆராய்ச்சியில் தலைசிறந்தவர்களில் ஒருவர் என்ற மதிப்பும் பெற்றார். ஆனால் அவர் மனது கணிதத்தைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொள்ள மறுத்தது. தனது 32 வது வயதில், அமெரிக்காவிலிருந்து சென்னை வந்தபோது, தன் அம்மாவின் தொந்தரவு பொறுக்காமல் மாமா பெண் ஜானகியை மணம் புரிந்தார்.

ஜானா சுவரில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பதே முக்கால். ஒழுங்காகப் புடவை கட்டிக்கொள்ள நேரம் போதாது என நினைத்தாள். கடந்த ஆறு வருஷங்களாக எப்போதாவது, எதாவது தமிழர்கள் கூட்டத்திற்குப் போக வேண்டுமென்றால்தான் புடவை கட்டிக்கொள்வாள். இந்தப் பேண்ட்டிற்கு இருக்கும் செளகரியம் புடவையில் இல்லைதான். அத்தை என்ன சொன்னாலும் பரவாயில்லை என நினைத்து, பேண்ட்டையும் அதற்குத் தகுந்த ஷர்ட்டையும் எடுத்தாள். அவற்றை அணிந்து கொண்டு, முழு உருவம் தெரியும் கண்ணாடி முன் நின்று, தன் பிரதி பிம்பத்தை உற்று நோக்கினாள். ''நாட் பேட்'' என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். உண்மையிலேயே அவள் ''வெரிகுட்'' என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். வயது முப்பது ஆனாலும் கட்டுக் குலையாத உடல். இளமை ததும்பும் முகம். அவளைப் பார்த்தவர்கள் அவளுக்கு முப்பது வயது என்று நம்பமாட்டார்கள்.

ஏர்போர்ட்டிற்குச் செல்லும்போது ஜானா, தனது பத்து வருட மணவாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். சுவாரஸ்யம் இல்லாமலிருந்தது. ராமன் உண்மையிலேயே கல்யாணம் செய்து கொண்டிருக்கக்கூடாது. அவருக்குக் கணிதத்தில் உள்ள ஆர்வம் மணவாழ்க்கையில் இல்லை. ஒரு குழந்தையாவது பிறந்திருந்தால், கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருப்போமோ என்று நினைத்தாள் ஜானா. தன் அப்பாவின் மேல் திடீரென்று கோபம் வந்தது. அனுபவம் மிகுந்த அவர்கூட, தன் சகோதரியின் மகன் திருமண வாழ்க்கைக்கு உகந்தவர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவில்லையே.

ஏர்போர்ட் வந்துவிட்டதை உணர்ந்தாள். காரை ஒரு நல்ல இடத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே வந்து உட்கார்ந்தாள். எல்லோருக்கும் கடைசியாக அத்தை வந்தாள். நெடுந்தூரம் பிரயாணக் களைப்போ என்னவோ, அவள் முகத்தில் மலர்ச்சியைக் காணோம்.

''ரொம்பக் களைத்திருக்கிறீர்கள். வீட்டிற்குப் போய் சாப்பிட்ட பின், கொஞ்சம் தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''

''ம்... ஏண்டி, நீ எப்போதும் பாண்ட்தான் போட்டுக் கொள்வாயா?''

''புடவையும் சில சமயம் கட்டிக் கொள்வேன். ஆனால் பாண்ட்தான் இந்த ஊருக்குச் செளகர்யம்."

''ஜானா, நான் இங்கு இருக்கும்வரை நீ புடவை கட்டிக்கொண்டால் எனக்குச் சந்தோஷமாக இருக்கும்..''

ஜானா பதில் சொல்லவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டே காரை வேகமாக ஓட்டினாள்.

''ஆண் பிள்ளைகளைவிட தைரியமா இருக்கயே! இவ்வளவு வேகமாகக் காரை நீ ஓட்டுவது என் வயிற்றை என்னவோ செய்கிறது.''

''சரி, நான் மெதுவாகவே ஓட்டுகிறேன்'' என்று சொல்லியபடி காரின் வேகத்தைச் சிறிது குறைத்தாள் ஜானா.

தான் செய்த சமையல் மாமியாருக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதை அவர் சாப்பிட்ட விதத்திலேயே தெரிந்து கொண்டாள் ஜானா. ஆனால் அதைப் பற்றிப் புகழ்ச்சியாக ஒன்றும் சொல்லாதது அவளுக்குச் சிறிது வருத்தத்தைத் தந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் ''அம்மா, கொஞ்சநாழி தூங்குங்கோ. நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உங்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும்.''

மாமியார் தூங்கி எழுந்தவுடன், சுடச்சுட காப்பிக் கோப்பையுடன் அவளிடம் சென்றாள். மெதுவாக ''அத்தை, உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். கோபப்படாமல் நிதானமாக நீங்கள் கேட்க வேண்டும்.''

''என்னடீயிது? திடீரென்று ஏதோ புதிர் போடுகிறாய்?''

''அம்மா, நானும் அவரும் நிரந்தரமாகப் பிரிவது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.''

''என்ன ஜானா? ஏதோ விளையாட்டாகச் சொல்கிறாயா? நம்மவர்களுக்கு இந்த மாதிரி விஷயம் சரிப்பட்டு வராது. விளையாட்டாகக்கூட இதை நீ சொல்லக்கூடாது.''

''விளையாட்டு இல்லைம்மா. நிஜமாகத் தான் சொல்கிறேன். அடுத்த மாதக் கடைசிக்குள் எல்லா ·பார்மாலிடீசும் முடிந்துவிடும்.''
''ஏண்டீ இப்படி என் தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறாய்? உனக்கு என்னடி குறைச்சல்?

உண்மையைச் சொன்னால், குழந்தை இல்லாததற்கு எத்தனையோ இடத்தில் உன்னைத் தள்ளி வைத்துவிட்டு வேறு கல்யாணம் பண்ணியிருப்பார்கள். ஏதோ சகோதரனின் பெண்ணாயிற்றே என்று நான் பொறுமையாக இருக்கிறேன். உனக்கு நன்றி உணர்வே இல்லையா?''

''அம்மா எனக்குக் குறை ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்பட்டமாக எனக்குச் சொல்ல இஷ்டமில்லை. புரிகிறதா?"

''இருந்தால் என்னடி? ஏதாவது ஒரு நல்ல பிள்ளைக் குழந்தையை நமது சொந்தக்காரர்களிட மிருந்து தத்து எடுத்துக் கொண்டால் போச்சு..''

ஜானா தனக்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டாள். 'ஏதோ ஒரு நல்ல பெண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டால் போச்சு' என்ற எண்ணம் தன் மாமியாருக்கும், அவள் போன்றவர்களுக்கும் இந்த ஜன்மத்தில் உதிக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை.

''குழந்தை ஒரு பிரச்சனையே இல்லை. உங்கள் பிள்ளை கல்யாணத்திற்கு உகந்தவர் இல்லை. என் வாழ்க்கையை நான் நிர்ணயிக்க விரும்புகிறேன். இந்த முடிவு எங்கள் இருவருக்கும் நல்லது அம்மா!''

''ஏண்டி! இவ்வளவு பெரிய மேதைக்கு மனைவியாக இருப்பது ஒரு பெரிய கெளரவமில்லையா? இதை உதறித் தள்ளுவது மிகவும் முட்டாள்தனம். கணித மேதை ராமானுஜத்தின் மனைவிக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?''

''அம்மா, மேதையின் தாயார் என்று வேண்டுமானால் உங்களுக்கு மதிப்பு இருக்கலாம். ஆனால் மேதையின் மனைவி என்று தனியான மதிப்பு ஒருவருக்கும் கிடைக்காது. என்னுடைய சொந்த முயற்சியால் நான் முன்னேற விரும்புகிறேன். அப்போதுதான் எனக்கு உண்மையான மதிப்புக் கிடைக்கும். மேதை ராமானுஜத்தின் மனைவிக்கு வாழ்க்கையில் எந்தச் சுகமும் இல்லை. சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டாள். அவள் வளரவே இல்லை; அவளுக்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை.''

''போடி! எல்லாம் தெரிஞ்சவளாட்டம் பேசுகிறாய்! இனிமேல் என்னை அம்மா என்று கூப்பிடாதே. எக்கேடோ கெட்டுத் தொலை!''

''அத்தை, வீணாக என்னிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள். நான்கு மாதங்களுக்கு முன் ரசாயனத்தில் பிஎச்டி பண்ண எனக்கு அசிஸ்டன்ட்ஷிப் கிடைத்தது. யுனிவர்சிட்டிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்திருக்கிறேன். நாளைக்கு அங்கு செல்வதாக உத்தேசம். உங்கள் சகோதரன் மகள் என்று எண்ணி என்னை ஆசீர்வதியுங்கள்'' என்றாள் ஜானா.

''ஆசீர்வாதமும் இல்லை, புடலங்காயும் இல்லை. நாளைக்கு என்ன? இன்றைக்கே, இப்போதே நீ உன் இடத்திற்குப் போவதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது.''

அபார்ட்மெண்டுக்குப் போனவுடன் நடந்த விஷயங்களை ராமனுக்கு ·போன் செய்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தன் காரை நோக்கிச் சென்றாள் ஜானா. 'படார்' என்று சாத்தப்பட்ட கதவின் சத்தம் அவள் மாமியாரின் தணியாத கோபத்தைத் தெளிவுறுத்தியது.


ஏ.எஸ். ராஜன்
More

பரிசு
ஓலம்
Share: 
© Copyright 2020 Tamilonline