Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கமலி - விமலி
- வ. ராமசாமி|ஜூலை 2004|
Share:
காளஹஸ்திக்கருகே கிளியூர் என்ற ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்திலே குபேந்திர குப்தா என்று ஒருவர் இருந்தார். அவர் பெயருக்குத் தக்கசெல்வம் அவருக்கு உண்டு. ''காளஹஸ்திச் சீமையிலே பாதி பூமியும் தூக்க முடியாத பணமும் அவருக்கு உண்டு'' என்று கிராமவாசிகள் சொல்லிக்கொள்ளுவார்கள். ரொக்கப் பணத்திலும் நிலத்திலும் கூடி, அந்த இலாகாவில் அவர்தான் தலைமையான தனவந்தர். ''தோட்டம் துரவு, ஆள் மாகாணம், வண்டிகாடி" இவைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவருடைய வார்த்தை சுக்கரீவ ஆக்கினையைப்போல, அவர் பெயரைக் கேட்டால், அழுத பிள்ளை வாய் மூடும். அவரை நேரே பார்த்தால், எல்லோருக்கும் சிம்ம சொற்பனந்தான். அதிகாரம் 'எட்டுக்கண் விட்டடிக்கிற' குபேந்திர குப்தாவுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும்.

வெங்கம்மாள் என்று அவருடைய மனைவிக்குப் பெயர். அவள் நிகரற்ற அழகு வாய்ந்தவள். தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவள். பிறந்த இடத்தில் செல்வம் லட்சக்கணக்கில் என்றால் புக்ககத்தில் செல்வம் பத்து லட்சக்கணக்கில். செலவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதுவிட்ட இடம் தொட்ட இடம் தெரியாது. குபேந்திர குப்தாவுக்கும் வெங்கம்மாளுக்கும் சிறுபிராயத்திலேயே கல்யாணமாகிவிட்டது. ஏராளமான சீர்வரிசைகளைச் செய்து கொடுத்து, வெங்கம்மாளைக் கிளியூருக்கு அனுப்பினார்கள் அவளின் பெற்றோர்கள். அவள் போகப் பல்லக்கு வரப் பல்லக்கு. வெங்கம்மாள் பிறந்த வீட்டில் அவள் தனிப் பெண், குபேந்திர குப்தா தனிப்பிள்ளை, தனவந்தர்கள் இவ்வாறுதான் சம்பந்தம் செய்யப் பிரியப்படுவார்கள். பணத்தோடு பணம் சேர்ந்தால்தான், அது மணம் பெற்று, வாசனை வீசும் என்று அவர்கள் விகடமாய்ச் சொல்லிக் கொள்ளுவதுண்டு. கல்யாணமாகி இருபது ஆண்டுகள் கழிந்தும், குபேந்திர குப்தாவுக்குக் குழந்தை கிடையாது.

பிள்ளையில்லாக் குறையை யாரிடம் சொல்லிக் கொள்ளுகிறது? கடவுளிடம் முறையிடவேண்டியதுதான். வெங்கம்மாள் பல தடவைகளில் தன் புருஷன் மறுவிவாகம் செய்துகொண்டு, பிள்ளையில்லாக் குறையை நிவர்த்தித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லுவதுண்டு.

''நான் மறு விவாகம் செய்து, பிள்ளைக் குறையைத் தீர்த்துக் கொள்ளுவதாக நினைத்துக் கொள்வோம். என் குறை தீர்ந்தது. அதனால் உன் குறை தீருமா?'' என்று வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டு கூறிவிட்டு, ''உன் குறை தீருவதற்கு நீயுமல்லவா மறுவிவாகம் செய்துகொள்ள வேண்டும்'' என்று சொல்லிலே இடைக்குத்து குத்துவார்.

வார்த்தை வினையாக முடிந்ததே என்று வெங்கம்மாள் மிகுதியில் வருத்தப்படுவாள். ''நான் சொன்னது தவறு, மன்னித்து விடுங்கள். மறு விவாகம் செய்து குடும்பத்தில் விளக்கேற்றி வைக்க, ஆண்பிள்ளைகளுக்கு இந்து தர்ம சாஸ்திரப்படி பாத்தியம் உண்டு. என் பிள்ளையானால் என்ன, என் சக்களத்தியின் பிள்ளையானால் என்ன? அது எங்களுடைய புருஷன் குழந்தை தானே? எங்கள் குடும்பத்தின் குழந்தை தானே? குடும்பம் பெருக வேண்டாமா? குடும்பத்திலே சூன்யமாயிருக்கலாகாது, இதுவரையிலும் பொறுத்திருந்தது போதும்'' என்றாள் வெங்கம்மாள்.

''மறு விவாகம் செய்துகொள்ள உனக்கு ஆசையிருக்கிறாப்போல் இருக்கிறது. அதை மறைத்துக்கொண்டு, எனக்குச் சிபாரிசு செய்கிறாய். நீ செய்துகொள். அதை நான் பிரபலப்படுத்திவிடுகிறேன். புதுதர்ம சாஸ்திரத்துக்கு அது அஸ்திவாரமாகிவிடும்'' என்றார்.

''உங்களுடைய பணக்கொழுப்பு அந்த மாதிரி உங்களைப் பேசத் தூண்டுகிறது. நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை ரம்பம்போட்டு அறுக்கின்றன. உங்களுக்கு இன்றைய தினம் பைத்தியம் பிடித்திருக்கிறதா?'' என்றாள் வெங்கம்மாள்.

''எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. எனக்கு இரண்டாந்தரம் கல்யாணம் செய்துவைக்க உனக்கு யார் உத்தரவு கொடுத்தது? உன் உத்தரவை நான் வேண்டினேனா? பிள்ளையில்லையே, அதற்கு என்ன செய்வது என்று உன்னிடம் நான் முறையிட்டுக் கொண்டேனோ? தெய்வமே என்று கிடக்கிற எனக்கு, மறுவிவாகம் செய்துவைக்க எண்ணின உனக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. எனக்குக் கல்யாணம் வேண்டுமென்கிற காலத்தில் உன்னை யோசனை கேட் கிறேன். அப்பொழுது நீ உன் யோசனை யைச் சொல்லலாம். குழந்தையில்லாவிடில், நல்ல பிள்ளையாகப் பார்த்துச் சுவீகாரம் செய்துகொண்டால், குடிமுழுகிப் போய் விடுமா?'' என்றார் குபேந்திரன்.

தன்னைத் தவிர வேறு எவரையும் மணந்து கொள்ளத் தன் கணவனுக்கு விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிந்துக் கொண்ட வெங்கம்மாள் தன் மனதுக்குள் பேரானந்தமடைந்தாள். தனது ஆனந்தத்தை அடக்கிக் கொண்டு, ''ஸ்தலயாத்திரை போய், சுவாமி தரிசனம் செய்வது நல்லது'' என்கிறார்களே என்று மெதுவாக வாயெடுத்தாள்.

''பழைய கதைகளை நம்ப எனக்கு இஷ்டமில்லாவிடினும், உனக்காக, உன்னைக் கூட்டிக் கொண்டு, கன்னியாகுமரி முதல் பத்ரிநாத் வரையில் ஸ்தலயாத்திரை செய்ய நான் தயாராயிருக்கிறேன். அந்தத் தேசங்களைப் பார்த்ததுமாதிரியும் இருக்கும். நீயும் பல புதிய பிரதேசங்களை பார்த்து, புதிய பழக்கங்களைக் கொள்ளுவாய். கர்நாடக முறையில், என் வாழ்க்கையைக் கட்டி அழ, இனிமேல் எனக்கு இஷ்டமில்லை. நல்லவேளையாக, ஒரு யுத்தி சொன்னாய். அதை முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாதா? இவ்வளவு பேச்சு வளர்ந்திருக்காதே'' என்றார் குப்தா.

கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டதுபோல் ஆயிற்று வெங்கம்மாளுக்கு. ஸ்தல யாத்திரைக்கு அவள் ஆசைப்பட, அவளுடைய கணவனுக்குப் புதுமாதிரி வாழ்க்கையில் பிரியம் உண்டாகிவிட்டதைப் பார்த்து அவளுக்குச் சிறிது பயமுண்டாயிற்று. புதுமாதிரி வாழ்வு எப்படியிருக்கும் என்று அவளுக்கு நிதானப்படவில்லை.

புதுமாதிரி என்றால் வீட்டில்லாமல், காட்டில் கூடாரம் போட்டுக்கொண்டு வசிப்பதா? அல்லது வீட்டுக்கு வராமலே வெளிநாடுகளில் சதா சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதா? பண்டைக்காலத்து ரிஷிகளைப் போல பர்ணசாலையில் வாழ்வதா? அல்லது பெரிய நகரம் ஒன்றில் பங்களாவில் வசிப்பதா? காலையில் ஆகாரமுண்டா? நடுப்பகலில் ஏதேனும் உண்பதா அல்லது இரவில் ஏதேனும் உறக்கமுண்டா? இன்னும் என்ன வெல்லமோ அவள் மனத்தில் தோன்றின. புருஷனைக் கேட்பதற்கு அச்சமும், வெட்கமும், தன் புருஷன் எதைக் குறிப்பிட்டான் என்பதைத் தெரிந்து கொள்ள, இயல்பாகவே அவளுக்குச் சக்தியில்லை. ஆனால், பண்டைக் காலத்துப் பத்தினிமார்களில் அவள் ஒருத்தியானதால், தன் புருஷன் இன்னது சொன்னான் என்பதைத் தெரிந்துகொள்ள, தன் மண்டையை உடைத்துக் கொண்டாள். ஒன்றும் விளங்கவில்லை.

இதற்குள், 'எப்பொழுது புறப்படலாம்?'' என்று புருஷன் கேட்டார்.

''அதற்கென்ன இப்பொழுது அவசரம்? நல்ல நாள் பார்த்து நல்லவேளையில் புறப்படுவோம்'' என்றாள்.

''நாள் நட்சத்திர லக்கினமெல்லாம் பார்த்து, சபைகூட்டி, அக்கினி வளர்த்து எல்லோரும் ஆசீர்வாதம் செய்ய, கல்யாணம் செய்து கொண்டோம். குழந்தைக்கு வழியைக் காணோம். நீயோ ஸ்தல யாத்திரை போக வேண்டுமென்கிறாய். இன்னுமா நாள் பார்க்க வேண்டும்? பார்த்தது போதும்.. நாளைக்கே புறப்படவேண்டுமென்பது என் உத்தேசம். நல்லது செய்ய வேண்டுமானால், அதை உடனே செய்ய வேண்டும் என்பது பழமொழி'' என்றார்.

''நீங்களும் என்னைப் போலவே பேசுகிறீர்களே? அது அழகாயிருக்குமா? கர்நாடக வாழ்வைத் தள்ள நினைக்கும் உங்களுக்குக் கர்நாடகப் பழமொழி எதற்கு? நீங்கள் புதுமாதிரி பேசுங்கள், பார்ப்போம்'' என்றாள் வெங்கம்மாள்.

''நீ அப்படிக் கேலி செய்வதானால், நாம் இப்பொழுதே புறப்படுவோம்'' என்றார் குபேந்திரன். வெங்கம்மாளுக்கு இடி விழுந்ததுபோல் ஆயிற்று. அப்பொழுது ஒன்றும் சொல்லச் சரிப்படவில்லை.

''சரி'' என்றாள்.

கோடீஸ்வரன் நினைத்தால் போதும், எல்லாம் உடனே நடக்கும். ஸ்தல யாத்திரையின் பொருட்டு, குபேந்திரன் யாரிடமாவது கடன் கேட்கப் போக வேண்டுமா? இரும்புப் பெட்டியைத் திறந்து வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டார்.
''காளஹஸ்திக்குச் சவாரி, ஜல்தி'' என்று கட்டளையிட்டார். வெங்கம்மாளுடன் தாதியொருத்தி வருமாறு உத்தரவு போட்டார். இவை யாவற்றையும் சொல்ல எவ்வளவு நேரம் பிடித்ததோ, அதற்குக் குறைவாகவே, எல்லாம் சித்தமாய்க் காத்துக்கொண்டிருந்தன.

''நாங்கள் திரும்பிவரச் சில மாதங்கள் பிடித்தாலும் பிடிக்கும். சில வருஷங்களானாலும் ஆகும். அது வரையிலும் மனோவிருத்தியை (தனது பண்ணை, குடும்பம் முதலியன) சரியாகப் பார்த்து வாரும் அப்போதைக்கப்போது செய்ய வேண்டியதற்கு என்னிடமிருந்து கடிதம் வரும். அதைப் பார்த்துச் சகல நடவடிக்கைகளையும் நடத்தி வாரும். குறிப்பிட்ட இடத்துக்கு, தவறாமல் நமக்குத் தபால் எழுதி வாரும். மற்ற யாவும் வழக்கபோல'' என்று குபேந்திரன் தம் மானேஜருக்குத் தாக்கீது செய்தார். மானேஜருக்கு ஒன்றும் விளங்கவில்லை, அவர் பரக்கப் பரக்க விழித்தார்.

''என்னங்காணும் விழிக்கிறீர்? நான் சொன்னது காதில் விழுந்ததல்லவா? அந்தப்படியே செய்யும். எனக்குப் பைத்தியம் ஒன்றும் பிடிக்கவில்லை. சித்த சுவாதீனத்துடன்தான் இருக்கிறேன். தெரிந்தததா'' என்றார் குபேந்திரன்.

''எஜமான் உத்தரவு'' என்று உளறினார் மானேஜர்.

உடனே குபேந்திரன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு, தமக்கு வேண்டிய பரிவாரங்களுடன் காளஹஸ்திக்குப் புறப்பட்டார். காளஹஸ்தி வந்ததும், ''ஸ்தல யாத்திரையில், சம்பிரதாய முறைப்படி எது செய்ய வேண்டுமானாலும் நீ செய்து கொள். ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நீ செய்கிறமாதிரி நானும் செய்ய வேண்டுமென்று ஆசைப்படாதே, யோசனை சொல்லாதே. இந்த ஒப்பந்தம் நமது ஸ்தல யாத்திரை முடியும்வரை, நம் இருவருக்குள்ளும் இருந்து வரவேண்டும். என்ன சொல்லுகிறாய்?'' என்றார் குபேந்திரன்.

''இஷ்டப்படி, உங்களைத் தடுத்து நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை'' என்றாள் வெங்கம்மாள். காளஹஸ்தியில், குபேந்திரன் தமக்குச் சொந்தமான வீட்டில் இருந்தார் என்று சொல்லத் தேவையில்லை.

அன்று சாயங்காலம் வெங்கம்மாள் காளஹஸ்தி நாதனைத் தரிசிக்க ஆசை கொண்டு, தன் தாதியுடனும் மற்றொரு வேலைக்காரனுடனும் கோயிலுக்குச் சென்றாள். கோயிலே சுவாமி தரிசனம் செய்யும் பொழுதெல்லாம், 'கடவுளே, கருணாநிதியே, ஏழைக்கு இரங்கும் தயாமூர்த்தியே! நான் ஒன்று நினைக்க, அது வேறுவிதமாய், விபரீதமாய் முடிந்துவிட்டது. குலம் விருத்தியாக வேண்டுமென்று நினைத்தேன். என் புருஷனுக்கு ஏதோ கோணல்புத்தி வந்துசேர்ந்துவிட்டது. பிள்ளை வரம் எனக்கு இப்பொழுது வேண்டாம். என் புருஷனுக்கு யாதொரு கஷ்டமும் வராமல் இருந்தால் போதும். கடவுளே! அவரைக் காப்பாற்றுவாயாக. அவர் மனம் கோணாமல் நடப்பதற்கு வேண்டிய சித்தத்தை எனக்கு எப்பொழுதும் கொடுத்தருள்வாயாக! எங்களை எந்நாளும் கைவிடலாகாது. மனிதர்களால் என்ன முடியும்? எல்லாம் நினது அருள்'' என்று பிரார்த்தனை செய்வாள்.

வெங்கம்மாள் கோயிலுக்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், குபேந்திரன் வெளியே புறப்பட்டார். ஆடம்பரமான உடை அவர் தரித்துக் கொள்ளவில்லை. யாரையும் அவர்கூட அழைத்துக் கொள்ளவுமில்லை. தனியே தம் வழி நடந்தார். அவர் இதுவரையிலும் அதிகமாக வெளியே தலைகாட்டாத பிரபு. எனவே, அவரை அநேகருக்குத் தெரியாது. ஊருக்கு வெளியே சென்று, தனி இடத்தில் அமர்ந்து யோசிக்கலானார். ''மனிதனுக்குச் சுகந்தான் பெரிது. வீட்டைப் பெரிதாக இதுவரையில் நினைத்து, எவ்வித சுகத்திலும் எனது மனம் செல்லாமல், என் காலத்தை வீணாக்கி விட்டேன். வெங்கம்மாளுக்கு என்னிடம் பக்தி இருக்கலாம்.அவளுக்குக் காதல் இருக்குமாகில் அவள் மனம் ஏன் குழந்தையை நாடிச் செல்ல வேண்டும்? குழந்தையை சாக்காகக் காட்டி, என்னை அடக்கியாண்டு, என் குடும்பத்தின் சொத்தை அநுபவிக்க வேண்டுமென்கிற நோக்கம் அவளுக்குப் பூராவாக இருக்கிறது. அதை மறைத்துக் கொண்டு, எனக்கு ஏதோ பரிந்து பேசுவதுபோல, மறுவிவாகப் பேச்சை அவள் எடுத்திருக்கிறாள். அவள் கொட்டத்தை அடக்க என்னிடம் மருந்தில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலும்! என் சுகத்தையெல்லாம் மறந்து, இழந்து, வீட்டுக்கோழியாக நான் இருந்ததனாலல்லவா, அவள் அவ்வாறு பேசத் துணிந்தாள்? தனது ஆசைப் பூர்த்திக்கு என்னைக் கருவியாக உப யோகித்துக் கொள்ள நினைத்த வெங்கம்மாளுக்கு, இந்த ஸ்தல யாத்திரை முடிவதற்குள்ளாகவே, நான் புத்தி கற்பிக்கிறேன். அதுவும் இன்றைக்கே புத்தி கற்பிக்கிறேன். பணமும், புத்தியும் செய்யக் கூடாத சங்கதியும் உலகத்தில் உண்டா? குபேந்திரன் செயலற்றுப் போனவன் என்று எண்ணியல்லவா, வெங்கம்மாள் அவ்வாறு பேசினாள்? இருக்கட்டும், பார்த்துக் கொள்ளுகிறேன்'' என்று சொல்லிக் கொண்டே, திடீரெனறு எழுந்திருந்து சற்று விசையாக நடந்தார். அதற்குள் இருளும் சூழ்ந்து கொண்டது. யோசனை இல்லாமல், எந்தத் தெரு வழியாகவோ அவர் நடந்து சென்றார். வழியில் ஒரு ஆள் தென்பட்டார்.

இந்த வீதிக்குப் பெயரென்ன என்று தெரியாதது போல குபேந்திரன் அவனைக் கேட்டார். அவன் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தான். அவனிடம் பேசமனமில்லாமல், குபேந்திரன் முன்னோக்கிச் சென்றார். ஆள் அவரைப் பின் தொடர்ந்தான். பின்னர் காலடி சப்தம் கேட்கவே, குபேந்திரன் திரும்பி, அந்த ஆளைப் பார்த்தார்.

''எஜமானை இந்த நாய்க் குட்டிக்குத் தெரியும். எஜமானுக்கு இந்த நாய்க் குட்டியை எப்படித் தெரியும்? எஜமான் இஷ்டத்தை ஒரு கோடி காண்பித்தால், நாய்க்குட்டி காத்துக்கொண்டிருக்கிறது'' என்றான் அந்த ஆள்.

தன்னைத் தெரியும் என்று கேள்விப்பட்ட உடனே, குபேந்திரனுக்கு அவரை அறியாமலே ஒரு திகில் உண்டாயிற்று. ''தெரிந்திருக்கலாம், அதற்கென்ன?'' என்று தமது மாமூல் தோரணையை விட்டுக் கொடுக்காமல் பேசினார் குபேந்திரன்.

''எஜமானுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். இந்த நாய்க்குட்டிக்கு ஐம்பதுக்கு மேலாகிறது. எஜமான் இதுவரையிலும் இந்த வீதி வழியாக, கால் நடையாக வந்ததை இந்த நாய்க்குட்டி பார்த்ததில்லை'' என்றான் அந்த ஆள்.

''ஒரு வீதி மற்றொன்றைப் போல; இந்த வீதியில் என்ன விசேஷம் அதிகமாயிருக்கிறது? நான் கால்நடையாக வரக்கூடாதோ?'' என்று குபேந்திரன் உறுமினார்.

''எஜமானுக்குக் கோபம் வந்தால், இந்த நாய்க்குட்டி எந்த மூலை? படீரென்று பிராணன் போக வேண்டியதுதான், இந்த நாய்க்குட்டி குரைத்ததை எஜமான் வித்தியாசமாக நினைத்துக்கொள்ளலாகாது, இந்த வீதியில் எஜமானை ஒத்த கோடீசுவரர்கள் கால்நடையாக நடந்தால், இந்த வீதியில் மங்கலம் பெருகுமா? இந்த வீதிக்கு, பாக்கியமில்லாக் குறையைத் தவிர, வேறு எல்லாம் இருக்கிறது'' என்றான் ஆள்.

''உன்னோடு நான் அதிக வார்த்தை பேசமுடியாது. நீ இன்றிரவு முழுவதும் இப்படியே பேசிக்கொண்டிருப்பாய் போல் தோன்றுகிறது. இந்த வீதியில் என்ன விசேஷம்?'' என்றார் குப்தா. உள்ளபடியே, இந்த வீதி வழி அவர் வந்ததேயில்லை. எனவே, அந்த ஆள் வளைத்துப் பேசினது அவருக்கு விளங்கவில்லை. குப்தாவுக்கு மந்த புத்தியில்லை. சில விஷயங்களில் அவருக்குப் பழக்கக் குறைவு. சில விஷயங்களில் சங்கேதம் அவருக்குத் தெரியாது.

''எஜமானிடத்தில் நான் என்ன விஸ்தாரமாகச் சொல்லிக்கொள்ளுகிறது? பிரபுக்களின் இச்சைப் பூர்த்திக்காக ஏற்பட்டிருக்கும் வீதி இது. எஜமான் பாததூளி பதினாயிரம் பொன் இந்த வீதிக்கு'' என்றான் ஆள்.

''அப்படியா? நல்லது, இதைத் தெளிவாகச் சொல்லித் தொலைக்கிறதுதானே? உன் பாஷை எனக்கு இதுவரையிலும் புரியவில்லையே'' என்றார் குபேந்திரன்.

''எஜமான் நோக்கம் தெரியாமல் நான் உளறலாமா? (இப்பொழுது நாய்க் குட்டி என்ற பதத்தை அந்த ஆள் உபயோகப்படுத்தவில்லை. அதைக் குபேந்திரன் கவனிக்கவில்லை) எஜமானையொத்த பிரபுக்களுக்கு ஒரு ஜாடை காண்பித்தால் போதாதா? அதிலிருந்து அவர்கள் எவ்வளவோ பிடித்துக் கொள்ளுவார்களே! அண்ணாமலை ரெட்டியார் வருணித்திருக்கும் சிருங்காரத்தைக் காட்டிலும் அதிகமான சுகம், எஜமான் வாய் அசைத்தால், இந்த வீதியில் கிடைக்கும். எஜமான் சித்தத்துக்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நடுவீதியிலே நின்று பேசுவது எஜமானுக்குக் கெளரவக் குறைவு'' என்றான் அந்த ஆள்.

தாம் எண்ணிய காரியம் தானாகவே கைகூடுவதை நினைத்துப் பரிபூரண ஆனந்தமடைந்து, ஆனால் அதை அடக்கிக் கொண்டு, எங்கே உட்காரலாம் என்றார் குப்தா.

''எஜமான் பேசுகிற ஆளின் பஞ்சம் தொலைந்து போகும். எஜமான் தங்கின இடம் தங்கம். கூட வாருங்கள்'' என்று குப்தாவை அவன் அழைத்துக் கொண்டு, ஒரு வீட்டினுள்ளே நுழைந்தான். வீடு மிகச் சுத்தமாக இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருத்தி கிழவி, அவளுக்கு சுமார் அறுபதிருக்கும் கன்னங்கள் குழிந்துபோய், வாயிலே இரண்டொரு பற்கள் மட்டுமே மிகுந்திருக்கும். இன்னொருத்திக்கு வயது பதினெட்டு இருக்கும். தங்க ரேக்கைப் போல அவள் உடம்பு. நல்ல வசீகரமான பார்வை. இனிய குரல். நடைஅழகை வருணித்து முடியாது. குபேந்திரனை ஒரு சோபாவில் அமர்த்திவிட்டு, அந்த ஆள் கிழவியை ஒதுக்குப்புறமாக அழைத்துக் சென்று, ''இவ்விடம் வந்திருப்பது கிளியூர் குப்தா. இன்னைக்கு தெய்வாதீனமாக என் வலையில் மாட்டிக்கொண்டான். மேற்காரியம் உங்களுடையது'' என்றான்.

கிழவி தனது பொக்கை வாயை நீட்டி முழக்கிக் கொண்டு, குப்தாவை அதிவினயத்துடன் வரவேற்றாள். குறிப்பை உணர்ந்த கோகிலாம்பாள் (சிறுமியின் பெயர்) குப்தாவை நமஸ்காரம் செய்து, தாம்பூலம் கொடுத்து, ரோஜா மலர் ஒன்றையும் அவருக்கு அளித்து, கைகட்டிக் கொண்டு நின்றாள். குபேந்திரனுக்கு என்ன சொல்லுவது, என்ன செய்வதென்று தெரியவில்லை.

''கோகிலம்! கண்ணே! கையைக் கட்டிக் கொண்டு நிற்பதைக் காட்டிலும், எஜமான் காலடியில் உட்கார்ந்திருந்தாலும், உன்னைப் பிடித்த கலி தீரும். பாவம் தொலையும், நம்ம வீட்டிலே எஜமான் காலடி வைப்பதற்கு, நீ எத்தனை ஜன்மம் தவம் இருந்திருக்க வேண்டும்? பிரபுக்களின் பார்வை கடவுளின் கடாட்சம் என்று உனக்குத் தெரியாதா? நீ என்ன செய்வாய்? நீயும் புதிது, எஜமானும் புதிது. எஜமானை வீட்டுக்குள்ளே கண்டதும், கிழவின் வாய் அடைத்துப் போய்விட்டது. தான் இருப்பது எந்த உலகம் என்று அவளுக்கு இப்பொழுது தெரியவில்லை. கோகிலம் சற்று நேரம் வீணை வாசி, எஜமான் மனம் குளிரட்டும்'' என்றான் மாமா.

இந்த ஆர்ப்பாட்டமெல்லாமல் குப்தாவுக்குப் புதிது. இவைகளை அவர் முழுதும் ஏற்றுக்கொள்ளவில்லயாயினும், புதிதான இந்தக் காதல் சின்னங்களை அவர் உள்ளம் வேண்டிற்று. வினயம், மரியாதை, அடக்கம், புகழ்ச்சி, தாசியின் வசீகரமான பார்வை, இவை யாவும் குப்தாவுக்குப் புதியவை. புதிய உலகத்தைக் கண்டதாக, அவரது கனவு, வெங்கம்மாள் கொட்டம் அடஙகிற்று என்பது அவரது நினைவு. வீணாகானத்தைக் கேட்டார். அவர் இதயம் சிருங்காரசுகத்தை வேண்டிற்று. இரண்டொரு நாழிகை அங்கே தங்கியிருந்து, நூறு ருபாய் நோட்டு ஒன்றைக் கையிலெடுத்து, கோகிலத்துக்கு முத்தம் கொடுத்து, விடையை வேண்டினார். கோகிலம் கீழ்நோக்குடன் தேம்பி அழுதாள். பணம் வேண்டுகிறாள் என்று நினைத்து இன்னொரு நோட்டை வீசினார் குப்தா.

''நாங்கள் பணப்பேய்களல்ல. ஈசன் எங்களை இந்த ஈனத் தொழிலுக்குப் படைத்துவிட்டாலும், கள்ளி வயிற்றில் அகில் பிறப்பது தங்களுக்குத் தெரியாதோ? பணம் இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும், ஆனால் எஜமான்...'' என்று முடிப்பதற்குள் அழுதாள். அழுத கண்ணீரைப் குப்தா துடைத்தார். வெங்கம்மாளுக்கு இத்தகைய பாக்கியம் நேர்ந்ததே இல்லை.

''நான் இருக்கிறவரையிலும் உனக்கென்ன கவலை?'' என்றார் குப்தா.

''உங்கள் தங்க வாயால் அப்படிச் சொல்லுங்கள்'' என்றாள் கிழவி. ''எனக்கு எதற்குப் பணம்? உங்களை நினைத்துப் பட்டினி கிடந்தாலே, எனக்குப் புண்ணியம் வரும். பணத்தைப் பற்றிப் பேசினால் நான் அழுவேன்'' என்று குழந்தையைப்போல அபிநயம் செய்தாள் கோகிலம்.

இதல்லவா உண்மைக் காதல் என்று உளம் குழைந்து, மீண்டும் வருவதாக உறுதி கொடுத்த பின்னர், குப்தா தமது இருப்பிடம் சென்றார்.

''அக்கா! இன்றைய தினம் கோகிலம் நடந்து கொண்டதுபோல என்றைக்கும் நடந்துகொண்டால், காளத்தீசுவரன் கோயில் கல்லைக்கொண்டு, பங்களா கட்டிவிடுவான் அந்த மூடன். நம்முடைய முடையும் தொலைந்து போகும். கோகிலம்! சபாஷ்'' என்றான் மாமா.

''சும்மா இருங்க, மாமா, அவரிடத்தில் எனக்கு உண்மையாகவே பிரியம் வந்தது'' என்றாள் கோகிலம்.

''கதையைக் கேளேன்! பிரியத்துக்கும் பணத்துக்கும் ரொம்ப தூரம். பிரியப் பேச்சு வைத்துக் கொள்ளாதே, ஆத்தா! என்றாள் கிழவி. மதுரை வீரனைக் கும்பிடுவதற்காக ஒரு ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு, மாமா பறந்தோடிப் போனான்.

அன்றிரவு வெங்கம்மாளிடம், கண்டதற்கெல்லாம் கோபித்துக்கொண்டார் குப்தா. அவரைச் சாந்தப்படுத்தத் துணிந்தால், வெங்கம்மாள் பேரில் அவர் சீறிவிழுவார். அவரைச் சமாதானப்படுத்த முடியாவிட்டால், 'வெங்கம்மாளின் மமதையைப் பார்!'' என்று மனம் பதறுவார்.

'கோகிலம் ஆகாயக்குயில்; வெங்கம்மாள் வெறும் வெங்க அம்மாள்'' என்று தமது சிலேடையை கருதிக் கருதிக் களிப்படைவார். தன் கணவனுக்குப் பித்தோ என்று வெங்கம்மாள் உள்ளம் குழைவாள். என்ன காரணத்தினாலோ, தனக்கும் தன் கணவனுக்கும் மனவேறுபாடு வந்து விட்டதாகமட்டும் அவள் தெரிந்து கொண்டாள். நோய் தெரிந்தாலும், மருந்து தெரிய வேண்டாமா? வெங்கம்மாள் தவித்துப்போனாள். காளஹஸ்தி ஈசனிடம் முறை சொல்லிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியாதவளாய்ப் புலம்பினாள்.

''பணத்தாசை, அதிகார ஆசை கொண்ட நீலி! ஏன் மாயப் புலம்பல் புலம்புகிறாய்?'' என்று கேட்டார் குப்தா.

''நீலி'' என்ற வார்த்தையை அவரிடமிருந்து அவள் இதுவரையிலும் கேட்டதேயில்லை. பிளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. சிறிது காலத்துக்குப் பின்னர் அவர்கள் துங்கபத்திரையில் ஸ்நானம் செய்து, பண்டரிபுரம் முதலிய ஷேத்திரங்களுக்குச் சென்று, பம்பாய்க்குப் போய் சேர்ந்தார்கள். குப்தாவின் இன்பப் பித்துத் தணியவில்லை. சிருங்கார சாகரத்தில் மூழ்கிக் கிடந்த குப்தாவுக்கு, அதற்குரிய சங்கேதங்கள் நன்றாய்த் தெரிய வந்தன. கதையை வளர்த்துவானேன்? பம்பாயிலும் (ஏனைய இடங்களைப் போலவே) குப்தா தமது இன்பக் கூத்தை ஆடித் தீர்த்தார். இதற்குள் வெங்கம்மாள் உடம்பு துரும்பாகிப் போனாள்.

இப்பொழுது அவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை கிடையாது. இந்த நிலையில் அவர்கள் நாசிகைக்குச் சென்றார்கள். சூர்ப்பணகைக்கு அங்க பங்கம் நேர்ந்து, அவமானப்படட இடம் நாசிகை அல்லவா? இந்த இடத்தில் குப்தாவின் அகங்காரத்திற்குப் பங்கம் நேர்ந்தது. காரணம் தெரியவில்லை. அவருக்குக் கடுங்காய்ச்சல் உண்டாயிற்று. கோகிலம் உள்ளிட்ட 'திருக்கூட்ட'த்தாரை அவர் நினைத்துக் கொண்டார். தாம் மதுரைவீரன் பூஜை நடத்திய தோரணையை நினைத்துக் கசிந்து உருகினார்.

''எனது இன்ப வேட்டையின் முடிவு இதுதானா? என்னுடையது மாயமான் வேட்டையாக முடிந்ததே! இந்தப் பாழான வெங்கம்மாளைக் கூப்பிடுவதைத் தவிர, எனக்கு வேறுவழியில்லையே! இவளது காலிலா போய் விழுவது?'' என்று என்ன வெல்லாமோ எண்ணிக்கொண்டி ருந்தார்.

''கஞ்சி கொண்டு வரட்டுமா? என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள்! நான் என்ன செய்வேன். நீங்கள் காய்ச்சலாய்ப் படுத்துக் கொண்டதிலிருந்து, நான் ஆகாரம் சாப்பிடவேயில்லை. என்னை வெறுக்காதீர்கள், எனக்கு உங்களைத் தவிரப் போக்கிடம் கிடையாது'' என்று பலவாறாகச் சொல்லிப் புலம்பினாள் வெங்கம்மாள்.

அவரது மனம் இளகிற்று. அன்று முதல் அவர்களுக்குள் ராஜி ஏற்பட்டது. குப்தாவும் குணமடைந்தார். எல்லோரும் பிரயாகைக்குச் சென்றார்கள். பிரயாகைக்குச் சிறிது தூரத்தில், தாராகஞ்சம் என்று ஓர் இடம் இருக்கிறது (சரஸ்வதி என்ற கற்பனை நதியொன்று கங்கையிலே சூட்சுமமாகக் கலந்து கொள்ளுவதாக ஐதீகம். எனவே, கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சேரும் இடத்திற்கு முக்கூடல் என்று பெயர்) தாரகஞ்சத்தில் தனி ஜாகை அமர்த்தி கொண்டு, குப்தாவும், வெங்கம்மாளும் தங்கள் ஸ்தலயாத்திரைத் துவக்க வாழ்வை மறந்து இன்பமாய்க் காலம் கழித்தார்கள், வெங்கம்மாள் கர்ப்பவதியானாள்.

நீண்ட காலம் எங்கும் தங்காமல், கிழக்கு நோக்கிப் புறப்பட்டு, காசி, கயை முதலிய ஸ்தலங்களில் தங்கி. கல்கத்தா வந்து சேர்ந்தார்கள். பின்னர் ஜகந்நாதத்தைத் தரிசனம் செய்து, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு முதலியவைகளில் ஸ்நானம் செய்து, இறுதியில் கிளியூருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது வெங்கம்மாள் ஏழு மாத கர்ப்பம். பத்து மாதம் சுமந்துதானே ஆகவேண்டும்?

வெங்கம்மாளுக்குப் பிரசவகாலம் நெருங்கிற்று. காலப்பிற்பாடாய் நேர்ந்த கர்ப்பமாதலால், அவள் மிகவும் வேதனைப்பட்டாள். கடைசியாகக் குழந்தைகள் பிறந்தன - இரட்டைகள். இரண்டும் பெண் குழந்தைகள். ஒன்று தகப்பனைப் போல இருந்தது. மற்றொன்று தாயைப்போல. ஒன்று கருப்பு. மற்றொன்று சிவப்பு. இரண்டு குழந்தைகளும் இரண்டு கண்களைப் போல ஜோடியாக வளர்ந்தன. முகத்திலும் நிறத்திலும் அவை இரண்டிற்கும் எத்தனை வேற்றுமைகள் இருந்தனவோ அத்தனை வேற்றுமைகள் அவைகளின் குணங்களிலும் காலம் கடக்கக் கடக்கத் தோன்றின. ஒரு குழந்தைக்குக் கமலி என்றும் மற்றொன்றுக்கு விமலி என்றும் பிரசானத்தையொட்டிப் பெற்றோர் பெயர் வைத்தார்கள். குழந்தைகள் சுதந்திரத்தில் வாழ வேண்டும, வளர வேண்டும் என்பது குப்தாவின் ஆசை. பெண் குழந்தைகளுக்கு அடக்கத்தைப் பழக்கி வைத்தல் வேண்டுமென்பது வெங்கம்மாளின் ஆவல். புருஷன் - மனைவிக்குள் இதைப் பற்றி அபிப்பிராய பேதம் உண்டாயிற்று.

''குழந்தைகள் இல்லாவிடில் துக்கம்; இருந்தால் சண்டையா?'' என்பார் குப்தா.

''சொல்லுகிறதைச் சொன்னேன். பின்னர் உங்கள் இஷ்டம் போல!'' என்பாள் வெங்கம்மாள்.

''இந்த முணுமுணுப்பு பழையபடி திரும்பி வந்துவிட்டதா?'' என்று ஆரம்பரிப்பார் குபேந்திரன். வெங்கம்மாள் அப்புறம் வாய் திறக்க மாட்டாள்.

கமலியும் விமலியும் பொதுப்பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. வீட்டிலே அவர்களுக்குப் படிப்பு. ரொம்பப் பணம் செலவழிக்கப்பட்டது. ஆங்கிலம் முதலிய பாஷைகளைப் பயின்றார்கள். இவைகளை நன்றாக எழுதப் பேச அவர்களுக்குப் பழக்கம் உண்டாயிற்று. வயது பதினான்கு ஆகியும் அவர்களுக்குக் கல்யாணம் ஆகவில்லை. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டுத்தான் கல்யாணப் பேச்சு என்று குப்தா கட்டளை போட்டு விட்டார்.

பதினெட்டு வயதானதும் குப்தா தம் குழந்தைகளையும் மனைவியையும் கூட வைத்துக்கொண்டு, கல்யாணப் பேச்சை எடுத்தார்.

''எனக்குக் கல்யாணம் வேண்டாம்; நான் ஆண்பிள்ளைக்கு அடிமையாக முடியாது. ரகசியமாக நான் ஒன்று செய்தேன். அதைச் சொல்லிவிடுகிறேன். 'அழகும் படிப்பும் உள்ள இளவயதுள்ள புருஷன் தேவை; விரும்புவோர் தம் படங்களை அனுப்ப வேண்டும்'' என்று என் விலாசத்தைக் குறிப்பிட்டு பத்திரிக்கையில் விளம்பரம் செய்தேன். பலர் எனக்குப் படங்களை அனுப்பி, காதல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்கள். அவை இதோ இருக்கின்றன. அவர்களில் ஒருவரையுமே எனக்குப் பிடிக்கவில்லை'' என்று கமலி கூறியதோடு தகப்பனிடம் மன்னிப்புக் கேட்டாள்.

''எனக்குத் தெரியாமல் செய்தது குற்றம். நீ நாகரிக விபசாரத்தை நாடினாய் போலும்! நான் உன்னை மன்னிக்க முடியாது'' என்று குப்தா வெறுப்பாகப் பேசினார்.

''கமலியக்காள் சொன்னதற்குப் பிறகு நான் சத்தியத்தை மறைக்கலாகாது. நான் கல்யாணம் செய்துகொள்வதாகத் தீர்மானித்துவிட்டேன். என் பேரில் கோபம் கொள்ளலாகாது. நம்மானேஜரின் மகன் ராமேசம் எனக்குப் பிடித்தவர். அவர் எம்.ஏ., பட்டம் பெற்றிருந்தாலும், ஏழைகளுக்கு இரங்கி, தம் தகப்பன் சொத்து தமக்குப் போதும் என்று திருப்தி கொண்டு, கடவுளிடம் பக்தி கொண்டவராய், இந்த ஊரில் ஏழை மக்களுக்காக இரவுப் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அவரையே நான் மணப்பதாகத் தீர்மானம் கொண்டிருக்கிறேன்'' என்றாள் விமலி.

தகப்பனுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. ''அந்த ராப்பிச்சைக்காரனா உன் புருஷன்? காந்தியைப் பற்றிப் படித்துப் படித்து, உனக்குக் கீழ்மக்கள் சகவாசம் உண்டாயிற்று போல் இருக்கிறது. நான் பெற்ற இரண்டும் இப்படியா போக வேண்டும்? என் மமதை அடங்கிற்று! என்னைக் கொல்வதற்காக, வெங்கம்மா நீ குழந்தைகளை வேண்டினாய் என்று அப்பொழுதே தெரியும். அதை இப்பொழுது நன்றாய்த் தெரிந்துகொண்டேன்'' என்று குப்தா கோபம் துடிதுடிக்கப் பேசினார். மற்ற யாவரும் வாய் திறக்கவில்லை. இதற்குப்பின், அவர் உடல் தேய்ந்து மாய்ந்து கொண்டே போனது. ஆறுமாத காலத்திற்குள் அவர் இறந்து போனார். அவரது பழைய வாழ்க்கை, புதிய வாழ்க்கை, மனைவியுடன் ராஜியானது, குழந்தை வளர்ப்பு எல்லாம் முற்றுப் பெற்றன.

கற்றது குற்றமா? சிறுகதைத் தொகுப்பிலிருந்து.

வ. ராமசாமி
Share: 




© Copyright 2020 Tamilonline