|
|
காவி சம்மேளனத்திற்கு வந்து சேரும் ஒரு முதிய தம்பதியினர். அவசரம் பரபரப்பு அவர்களிடையே... அந்தப் பரபரப்பின் பின்னாலும் ஒரு கவியுள்ளம் இருக்கிறது.
"கவிஞர்களில் பழசு புதுசு என்றெல்லாம் ஏது? இவர்கள் ஒரு நேரம் குழந்தைகள், ஒரு நேரம் வாலிபர்கள், ஒரு நேரம் கிழவர்கள்...."
அந்த மலைப் பகுதியில் வெயில் முளைக்க இன்னும் வெகுநேரமிருந்தது. ரயிலிலிருந்து இறங்கி பஸ் பிடித்து உட்கார்ந்ததும் ஊர், மொழி தாண்டிய பரபரப்பு வந்தது. கண்டக்டர் அருகில் வரவும், பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து மறுபடி ஒருமுறை படித்துப் பார்த்து விட்டு ஊர்ப் பெயரைச் சொல்லி ரூபாயைக் கொடுத்தேன். சொல்லி வாய் மூடுமுன் பின்சீட்டிலிருந்து "ஸார் நீங்கள் கலை விழாவுக்கா போகிறீர்கள்" என்று ஆங்கிலத்தில் கேட்ட குரலுக்குத் திரும்பி "ஆமாம்" என்றேன்.
அவர் பருமனாய் வயது முதிர்ந்திருந்தார். இரண்டு காதுகளிலும் கொத்தாய் நரைமுடி. பக்கத்தில் சிவப்பாய் ஒல்லியாய் ஒரு வயதான மாது. அவர் மனைவியாயிருக்க வேண்டும். தூரப் பயணமும் வயதின் தளர்ச்சியும் இருவரிடமும் நிறையத் தெரிந்தன. பெட்டி, பைகள் போகக் கையில் இன்னும் கால்வாசித் தண்ணீர் ரோடு வெள்ளை பிளாஸ்டிக் பாட்டில். அவர் எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாகவும் பதட்டமாகவுமிருந்தார்.
"எனக்கு வந்த கடிதத்தில் கலைவிழா நடக்கும் இடங்கள் என்று மூன்று ஊர்ப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குழப்பமாயிருக்கிறது. நாம் எங்கே இறங்க வேண்டும்? உங்களுக்கு பழக்கமான பிரதேசமா இது? இவள் என் மனைவி. நாங்களும் கலை விழாவுக்குத்தான் போகிறோம்" என்றார்.
நான் அவருக்கு பதில் சொல்லு முன் கண்டக்டர் அந்தப் பக்கம் வர நான் தமிழிலேயே அந்த ஊரைப் பற்றி விசாரித்தேன். அவர் சொன்னார். "நீங்கள் எங்கு இறங்க வேண்டுமென்று எனக்குத் தெரியும். கடந்த இரண்டு நாட்களாய் ஆட்கள் எங்கெங்கிருந்தோ வருகிறார்கள். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு நேராக இறக்கி விடுகிறேன் போதுமா?" என்று மலையாளத்தில் சொல்லி பாந்தமாய் சிரித்தார். நான் தமிழில் பேச, கண்டக்டருக்குப் புரிவதும், அவர் மலையாளத்தில் பேச எனக்குப் புரிவதும் பின்னாலிருந்த பெரியவருக்கு நம்பிக்கையூட்டியிருக்க வேண்டும்.
திரும்பி அவரைப் பார்த்தபோது அது தெரிந்தது. என் பக்கமாய் வர முயன்றவாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். "நான் மைசூரிலிருந்து வருகிறேன். ஒரு கவிஞன், கன்னடம். என் பெயர் ராஜாராவ்" என் பங்கிற்கு நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் ராவ் சொன்னார், "நாம் நாளை மறுநாள் கவி சம்மேளனத்தில் சேர்ந்து பங்கு பெறுகிறோம் இல்லையா? நீங்கள் புதிய தலைமுறை ஆள்"
"அப்படி சொல்ல முடியாது. பழசும் புதுசும் சேர்ந்த மாதிரியான ஆள். தவிரவும் கவிஞர்களில் பழசு புதுசு என்றெல்லாம் ஏது?" இவர்கள் ஒரு நேரம் குழந்தைகள், ஒரு நேரம வாலிபர்கள், ஒரு நேரம் கிழவர்கள்".
ராவ் என் முகத்தின் மீது ஒரு தந்தையின் உற்ற பா¡வையோடு சொன்னார். "நீங்கள் எனக்குச் சிறந்த நண்பராய் விளங்கப் போகிறீர்கள்."
அவர் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது பஸ் ஒரு பாலத்தின் மீது சென்றது. கீழே பச்சை பார்டர் போட்ட வெள்ளைச் சேலையாய் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ராவ் "இந்தப் பாலத்தைக் கடந்ததும் நாம் இறங்க வேண்டிய இடம் வந்து விடுமா?" என்றார்.
"பொறுப்பு கண்டக்டர் கையில், நாம் மரங்களையும் செடிகளையும் புதுப்புது மனிதர்களையும் ஜன்னல் வழியாய் பார்ப்போம்..."
என் பக்கத்திலிருந்த திரும்பி மனைவியுடன் கன்னடத்தில் பேச ஆரம்பித்தார். ஒரு இடத்தில் பஸ் நின்ற போது அந்த அம்மாள் கன்னடத்தில் அவரிடம் அவசரமாய் எதுவோ சொல்ல அவர் பதறிப் போய் என் தோளைத்தட்டி "இதுவா நாம் இறங்க வேண்டிய இடம்?" என்றார்.
"பொறுப்பு கண்டக்டருடையது. நீங்கள் கவலையில்லாமல் இருங்கள்" என்றேன். என்னுடைய நிதானம் அவருக்கு ஆச்சர்யமாயிருந்தது. அடுத்தடுத்த நிறுத்தங்களில் இருவரும் கவலையோடு "இதுவா? இதுவா?" என்று கேட்டு எழுந்திருப்பதும் உட்கார்வதுமாயிருந்தனர்.
எங்களை இவ்வளவு நேரமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த கண்டக்டர் என் முன்னே வந்து, "நீங்களிறங்க வேண்டியது நெக்ஸ்ட் ஸ்டாப்பிங்" என்று சொன்னது ராவ் தம்பதிக்கு மொழி பெயர்க்காமலேயே புரிந்து விட்டது. லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு சீட்டுகளின் நுனியில் உட்கார்ந்திருந்தனர்.
பஸ் நின்றதும் கண்டக்டர் வந்து "இதே" என்றதும் பரபரப்பாய் இறங்கினர் இருவரும்.
விழாக்குழு அலுவலகத்தில் அந்த அதிகாலை நேரத்திலும் குளித்து சந்தனப் பொட்டுடன் ஒரு இளைஞர் எங்களை வரவேற்று உட்காரச் சொன்னார். "நீங்கள் இரண்டு நாட்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். டெல்லியிலிருந்தும் கான்பூரிலிருந்தும் முதல் நாளே கலைஞர்கள் பட்டாளம் வந்து எல்லா டிராவலர்ஸ் பங்களாக்களையும் அடைத்துக் கொண்டு விட்டார்கள். எங்களுக்கு வெகு அருகிலுள்ள இரண்டு மாநிலங்களிலிருந்து நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். உள்ளூரில் அறைகள் கூட காலியில்லை. அருகிலுள்ள ஊர்களிலும் அறைகள் இருக்காது. தூரத்து ஊர்களில் டிராவலர்ஸ் பங்களாக்களைத் தொடர்பு கொள்கிறேன். டீ சாப்பிடுங்கள்" என்று சொல்லி ப்ளாஸ்கிலிருந்து டீ ஊற்றிக் கொடுத்தார். தொலைபேசியில் வரிசையாக எண்களைச் சுழற்றி மலையாளத்தில் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார்.
ராவ் முகத்தில் கலக்கம் தெரிந்தது. மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். டீ கோப்பை கிடு கிடுவென்று ஆடியது. கை நடுக்கம் அதிகமாகியது. என்னிடம் கேட்டார். "நமக்கு ஒரு அறை ஏற்பாடு செய்து விடுவார்களா?"
"கவலைப்படாதீர்கள். நல்ல கவிஞனுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு" என்றேன். அவர் அதை ரசித்து சில விநாடிகள் புன்னகை செய்தார். உடனே சீரியஸாகி அந்த இளைஞரைக் காண்பித்துச் சொன்னார். "பாருங்கள், அவர் நம்பிக்கை இழந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இனிமேல்தான் குளிக்க வேண்டும்இ என் மனைவியை இந்த வயதில் நான் வெகுதூரம் அழைத்து வந்துவிட்டேன்". நாற்காலியில் விரக்தியோடு சாய்ந்து கிடந்து தனக்குள் சொல்லிக் கொண்டார். "ஆனால் இவை இப்படித்தான் நடக்கும்."
அந்த இளைஞர் தொலைபேசியை வைத்துவிட்டு எங்களைப் பார்த்து உற்சாகமாய் சிரித்தார். நான் ராவைப் பார்த்தேன். இளைஞரிடமிருந்து ஒரு நல்ல சொல் கேட்க மிகுந்த ஆர்வமாய் நாற்காலி முனைக்கு வந்து விட்டார்.
"ஒரு டிராவலர்ஸ் பங்களா கிடைத்து விட்டது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை..." என்று இழுத்து நிறுத்தினார் இளைஞர். ராவின் முகத்தில் சட்டென்று கவலை தோன்றியது. நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"டி.பி. வெகு தொலைவிலோ?"
இளைஞர் சொன்னார். "அதுதான் பிரச்னை. ஆனால் நீங்கள் அதிகம் சிரமப்படாமல் நாங்கள் சில உதவிகள் செய்வோம். இப்போது ஒரு கார் உங்கள் மூவரையும் ஏற்றி அந்த டிராவலர்ஸ் பங்களாவில் கொண்டு போய்விடும். தினமும் காலையில் உங்களை அழைத்துவர கார் அனுப்புவோம். இரவு எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்ததும் கிடைக்கிற ஒரு காரில் நீங்கள் அங்கு போய்த் தங்கிக் கொள்ளலாம். டிபன், சாப்பாடு எல்லாவற்றையும் நீங்கள் இங்கே வந்து தான் முடித்துக் கொள்ள வேண்டும்."
"மிகவும் சரி. இப்போது நாங்கள் புறப்படக் கார் தயாரா?" என்றேன்.
"கார்கள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும் நேரம்தான். ஆட்களும் வர வேண்டும். நேற்றிரவு அநேகமாய் விடிந்துதான் எல்லோரும் வீடுகளுக்குச் சென்றார்கள். சற்று இருங்கள். வந்ததும் உங்களை அனுப்பி வைக்கிறேன்."
ராவ் மனைவியிடம் வெகு தாழ்வாய்க் குனிந்து பேசிக் கொண்டிருந்தார். பிறகு என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தார். "ராவ்ஜி கவலைப்படாதீர்கள். அவர்கள் சீக்கிரம் ஏற்பாடு செய்து விடுவார்கள்" என்றேன். ராவ் சொன்னார். "இவ்வளவு குழப்பங்களிலும் ஒரு பெரும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எங்களையும், உங்களையும் பிரித்து தனித்தனியாய்ப் போடாமல் ஒரே இடத்தில் தங்க ஏற்பாடாகியிருப்பது தான் அது. நாங்கள் வயதானவர்கள் நீங்கள் அன்பானவர்" யாசகக் களை ராவ் முகத்தில் அப்பியிருந்தது.
"கவலைப்படாதீர்கள். நான் உங்களுடன் மூன்று நாளும் நிழலாயிருப்பேன்" என்றதும் ராவ் துயரங்கள் மறைந்த ஒரு பெருமூச்சை விட்டார். கழிவிரக்கம் நிறைந்தவாறு என் கைகளைத் தன் கைகளில் எடுத்து வைத்துக் கொண்டு "கவிதையை விடவும் அன்பு பெரிதுதானே?" என்றார். எல்லாவற்றையும் விட என்று நான் சொன்னதும் அவர் இறுக்கமாய் என் கைகளைப் பற்றிக் கொண்டார். முதியவர்களின் வெதுவெதுப்பு இரக்கத்தையும் அன்பையும் அந்நேரம் அதிகப்படுத்தியது. மனைவியிடம் குனிந்து ராவ் கன்னடத்தில் சொன்னது இதுவாகத் தான் இருக்கும். "கவலைப்படாதே, இதோ இவரிருக்கிறார் நமக்கு தடுமாற விட மாட்டார்."
நான் அந்த இளைஞரின் பக்கத்தில் போய் "நாம் வெளியே போய் கார் எதுவும் வந்திருக்கிறதா; ஆள் யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்ப்போமா. அந்த முதிய தம்பதியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது" என்று ராவைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன்.
"இன்னும் கால் மணிக்குள் ஏதாவது ஒரு கார் வந்துவிடும். ஆளும் வரும். அதுவரை இந்தப் பாட்டைக் கேளுங்கள்" என்று ஒர கேஸட்டைச் செருகினார். அதிகாலை வேளைக்கும் மூடிக்கிடந்த பனிக்கும் கண்ணை மூடி சில நிமிடங்கள் சுகமாய் அனுபவித்துத் திறக்கையில் ராவ் துயர் மிகுந்து மனைவியோடு ஆழ்ந்த விவாதத்திலிருந்தார்.
ஒருவர் உள்ளே வரவும் இளைஞர் எழுந்து ஆவலாய் அவரிடம் மலையாளத்தில் பேசிக் கொண்டே எங்களைப் பார்த்து "பேக்கப்" என்பது சைகை காட்டினார்.
நாங்கள் காரில் ஏறியதும் அந்த இளைஞர் சொன்னார். "இந்தக் கார் உங்களைக் கொண்டு போய் டி.பி.யில் விட்டுத் திரும்பி விடும். மறுபடி பத்து மணிக்குள் கார் அனுப்புகிறோம். என் பெயர் தாமோதரன். இது அலுவலகத் தொலைபேசி எண். கார் குறித்த நேரத்தில் வரவில்லையென்றால் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்" என்று ஒரு கார்டைக் கொடுத்தார்.
கார் போய்க் கொண்டிருந்த போது ராவ் சொன்னார். "மூன்று நாள்களுக்கு நம்மை அழைத்துப் போகவும் கொண்டு விடவும் கறாரான ஏற்பாடுகள் இல்லையென்று நினைக்கிறேன்."
"கவலைப்படாதீர்கள். நான் உங்களோடு இருக்கிறேன்." என்றார். கார் ஒவ்வொரு கி.மீ. கல்லைத் தாண்டும்போதும் ஓ எவ்வளவு தூரம் என்று முனகிக் கொண்டேயிருந்தார். அடிக்கடி மனைவியோடு பேசினார். திருப்தியில்லாத அவர் முகத்தை சரிசெய்ய என்ன செய்வது என்ற சங்கடம் டி.பி. முன் இறங்கும்வரை என்னிடமிருந்தது.
அவர்களை ஒரு அறைக்குள் விட்டு அடுத்த அறைக்குள் நான் தங்கிக் கொண்டேன். அரைமணி கழித்து பிரஷோடு வாசலில் நின்றபோது ஒரு வாளி நிறைய வெந்நீரைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ராவ் "திஸ் இஸ் பார் மை லேடி" என்று சொல்லிக் கொண்டே சென்றார்.
ஒன்பது மணிக்கெல்லாம் அவர் என் அறைக்கு வந்தார். அழுக்கெல்லாம் போய் பளிச்சென்றிருந்தார். மனைவியை விட்டுத் தனியாக வந்ததது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்குள்ளும் மனைவியோடு பேசிக் கொண்டிருந்தார். "கார் வந்து விடுமல்லவா?" என்றார்.
"நாம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்போம். கார்வந்து விடும்" என்றேன்.
"நம்மை இவ்வளவு தூரத்தில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டியதில்லை. எத்தனை மணிக்குக் கார் வரும்; எத்தனை மணிக்கு நாம் டிபன் சாப்பிடப் போகிறோம் என்பதெல்லாமே நிச்சயமற்றுக் கிடக்கிறது" என்றார். அவர் வெறுப்பாய்ப் பேசினார்.
"வரும்போது வரட்டும். நாம் இப்போது கவிதை பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..."
"ஆனால் நண்பரே உங்கள் வயதில்லை எங்களுக்கு. சரியான நேரத்திற்கு நாங்கள் சாப்பிட வேண்டும். மைசூரிலிருந்து ரயிலில் வந்த சிரமங்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது."
"நான் வேண்டுமானால் தாமோதரனிடம் தொலைபேசியில் பேசிப் பார்க்கிறேன்."
"நானும் வருகிறேன்" என்று ராவும் எழுந்தார்.
பத்தரை மணிக்குக் கார் வருவதற்குள் ராவ் துடித்துப் போனார். கவிதை சம்பந்தமாய் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு சிறு சிறு வாக்கியங்களில் பதில் சொல்லி விட்டு மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
காரில் போய் அரங்கின் முன் இறங்கி உணவுக்கூடத்தை கண்டுபிடிக்க சிறிது நேரம் பிடித்தது. ஒரு மணி நேரம் முன்பே டிபன் காலியாகி விட்டதாய்ச் சொன்னதும் ராவ் சோர்ந்து விட்டார். "வெளியில் நிறையக் கடைகள் தெரிகிறது. வாருங்கள் ராவ்ஜி. நான் இன்று உங்களுக்கு சிறிய விருந்தளிக்கிறேன்" என்றதும் ராவ் பதறிச் சொன்னார்.
"அவையெல்லாம் வயிற்றுக்கு சரிப்படுமோ என்னவோ? இரண்டுங்கெட்டான் நேரம் வேறு."
"நீங்கள் சாப்பிடாமலிருப்பது அதைவிட மோசமல்லவா?" என்று கூறி இருவரையும் அழைத்துப் போய் மெதுவான உணவு வகைகளாய்ப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தேன். ராவ் தம்பதி சங்கோஜத்துடன் சாப்பிட்டது. பாக்கு வாங்கக்கூட மனைவியிடம்தான் சில்லரை வாங்கினார் ராவ்.
அன்று அலகாபாத்திலிருந்து வந்த ஒரு ஆண் கலைஞரும் பெண் கலைஞரும் மணிப்பூர் நடனம் பற்றிச் செயல் விளக்கம் நடத்திக் கொண்டிருந்தனர். நிபுணர்களும் கலைஞர்களும் ரோமாஞ்சனமாகிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வினாக்களுக்கு அந்த இரு கலைஞர்களும் அடவுகளோடு உயர்ந்த ஆங்கிலத்தில் பதிலளித்துக் கொண்டிருந்த நேரம்: யாரோ என்னை அழைத்தது போலிருக்கத் திரும்பினேன். ராவ் மனைவியோடு உட்கார்ந்து என்னை அழைத்துக் கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்ததில் அவருக்கு திருப்தி. வெகுநேரமாய் என்னை அழைத்துக் கொண்டிருப்பார் போல.
எழுந்து அவரிடம் வந்த போது அவர் தன் கடிகாரத்தைக் காட்டினார். மணி இரண்டாகி இருந்தது. "நாம் எப்போது சாப்பிடுவது?" என்றார். அவர் வயதிற்கு இந்த விவாதங்கள் அலுப்பாய்த் தெரிந்திருக்கும் விலகி நடந்தேன். உணவுக் கூடத்தின் முன்னால் வரிசையில் நின்றபோது கேட்டார். "சாதம் இங்கெல்லாம் சிவப்பாய் தடியாயிருக்குமாமே. இவளால் சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை.?"
சாப்பிட்டு வந்ததும் அடுத்த நிகழ்ச்சி நான்கு மணிக்குத்தான் என்றார்கள். ராவ் சொன்னார். "பக்கத்தில் அறை கிடைத்திருந்தால் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். இந்த வயதில் அதுக்கெல்லாம் எங்களுக்கு அவசியம்" மரங்களடர்ந்த பசுந்திடலொன்று அருகில் தெரிந்தது. "அங்கே போய் ஓய்வு எடுப்போம்" என்று அழைத்துப் போனேன்.
மரத்தடியில் உட்கார்ந்ததும் ராவ் அந்தப் பெயர் தெரியாத பெரிய மரத்தை அடி முதல் நுனி வரை ஆழ்ந்து பார்த்தார். அப்பவும் சொன்னார். "அந்த டி.பி. வாசலிலும் ஒரு பெரிய மரம் ஆயிரம் கவிதைகள் சொல்லிக் கொண்டு நிற்பதை"ராவ் மேலும் கவிதை பற்றிப் பேசுவாரென்று எதிர்பார்த்த போது "நாங்கள் நாளை மறுநாள் மைசூர் போக டிக்கெட் ரிஸர்வ் செய்ய வேண்டுமே" என்று பரபரப்பாகி விட்டார்.
விழா அலுவலகம் சென்று அவரவர் ஊர்களுக்கு டிக்கெட் ரிஸர்வ் செய்யக் கேட்டுக் கொண்டபின் அரங்கத்தினுள் செல்கையில் ஒரு புகழ் பெற்ற உள்ளூர்க் கவிஞர் கதகளிக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தார். ராவ் தம்பதி என்னைத் தனியாக விடுவதாக இல்லை. என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டனர். ராவ் ஐந்து நிமிடம் பற்றில்லாமல் நிகழ்ச்சியை பார்த்துவிட்டுப் பத்துநிமிடம் குனிந்து மனைவியோடு பேசிக்கொண்டிருந்தார். பேசிவிட்டு நிமிர்கிற போதெல்லாம் கவலைப்பட்டும் பதட்டப்பட்டும் தெரிவார்.
இரவு பத்தரை மணிக்கு சாப்பாட்டுக்குக் கூடத்திற்குப் போகும் போது ராவ் சொன்னார். "எல்லாமே காலதாமதமாய் நடக்கிறது. சாப்பிட்டவுடனாவது ¡ர் கிடைக்குமா?"
"முதலில் சாப்பிடுவோம்!"
சாப்பிட்டு வெளியில் வந்த போது பொது அரங்க நிகழ்ச்சிகள் துவங்கிவிட்டதாகச் சொன்னார்கள். நிர்வாகிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. திருவிழாக் கூட்டம் போலிருந்தது ஜனத்திரள். ராவ் தம்பதி வேறுவழியில்லாமல் என்னோடு திறந்தவெளி அரங்கில் வந்தமர்ந்தனர். சதங்ககையும் ஜதியும் வண்ணமுமாய் பரதநாட்டியம் நடந்த கொண்டிருந்தது. ராவ் நடனத்தை ஒரு நிமிடம்கூட ஊன்றிப் பார்க்கவில்லை. குனிந்து மனைவியோடு பேசிக் கொண்டேயிருந்தார்.
திடீரென்று என் தோளைத் தொட்டார். "அதோ பாரஙூகள். முன் வரிசையில் மிஸ்டர் தாமோதரன் உட்கார்ந்திருக்கிறார். நாம் போய்க் கேட்கலாமே கார் கிடைக்குமோவென்று" ராவ் தம்பதிக்காக ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சியாய் இழந்து கொண்டிருப்பது பளிச்சென்று மனதில் பட்டது. ஆனால் ராவ் மறுபடி தோளைத் தொட்டுக் கொண்டேயிருந்தார்.
நாங்கள் காரில் ஏறிக் கிளம்பிச் சென்ற போது மெல்லிய வெளிச்சத்தில் ஒரு பழக்கடையும் அதில் மலைப் பக்கத்துப் பழங்கள் நிறையவும் தெரிந்தது. காரை நிறுத்திப் பழம் வாங்க நான் இறங்குவது தெரிந்து ராவ் ஓடிப்போய் தாமே வாங்கினார். மனைவியிடம் பணம் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தார். "உங்களுக்காக நான் சிறிய செலவாவது செய்ய வேண்டும்" என்றார்.
மறுநாள் காலையில் பனியோடும் குளிரோடும் ராவ் என் அறைக்கு வந்தார். "இன்று சீக்கிரம் கார் வந்துவிடுமா?" என்றார். இரவு அவர் மனைவிக்கு தலை வலித்ததாகச் சொன்னார்.
"இன்று நாம் கவிதை பாட வேண்டும்" என்றேன்.
"ஆம்" என்றவர் "ஆனால் நான் புதிதாக எதுவும் எழுதிக் கொண்டு வரவில்லை" யென்றார்.
"ஏன்?"
"இப்போதெல்லாம் எதை எழுதுவதென்று தெரியவில்லை"
"எது பாதித்ததோ அதை"
"நீங்கள் எழுத வேண்டும்"
"விடுங்கள் காபி சாப்பிட வேண்டும் வருகிறீர்களா"
அன்று பல மொழிக் கலைஞர்களும் கவிதை பாடினார்கள். மற்ற எல்லோர் கவிதைகளிலும் மொழிதான் பிரதானமாயிருந்தது. ராவ் கவிதையில் உணர்ச்சி பிரவாகமெடுத்துப் படர்ந்தது. ஆழ்கடல், மலையுச்சி, பருவ காலங்கள், உயர் மணம், கண்ணீர், கடிய வேர்வை, மிகவும் வேண்டிய ஒருவரின் ஸ்பரிசமெல்லாம் தெரிந்தது. கட்டியணைத்துக் கொண்டேன் அவரை. கூட்டம் கலையும் போது அவரிடம் கேட்டேன். "எப்படி முடிந்தது இப்படி ஒரு கவிதை எழுத?" அவர் சொன்னார். "என் மனம் ஆரோக்கியமாயிருந்த போது இதோ இவள் கழுத்தில் அந்த ஐந்து பவுன் சங்கிலியும் இல்லாதிருந்தபோது".
நான் புரியாமல் விழித்தபோது என்னை ஒரு கையிலும் மனைவியை ஒரு கையிலும் பற்றிக் கொண்டு தளர்வாய் நடந்து கொண்டே ராவ் சொன்னார். |
|
"நான் ஒரே கம்பெனியில் முப்பத்தாறு வருஷம் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். அதைவிட முக்கியம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரே பேண்ட், ஒரே சட்டை மட்டுமே வைத்திருந்தேனென்பது".
"அவ்வளவு சிரமப்பட்டீர்களா?"
"அந்த நாட்களில் பேண்டையும் சட்டையையும் துவைத்துக் காயப் போட்டுவிட்டு அநேக நாளில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு நெடுநேரம் நின்று கொண்டிருப்பேன்."
"சொல்லுங்கள் ராவ்ஜி"
"என்ன சொல்ல?"
"நீங்கள் இப்போது ஏன் எழுதுவதில்லையென்று."
"நான் இப்போது என் சொந்த வாழ்க்கையைப் பற்றியல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன்."
"எனக்கு வருத்தமாயிருக்கிறது ராவ்ஜி. நீங்க எழுதாமலிருப்பதற்கும், உங்கள் இப்போதைய வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்தமிருப்பதாய் உணர்கிறேன்."
ராவ் தலையசைத்துக் கொண்டே கேட்டார். "உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" நான் பதிலளித்ததும் ராவ் சொன்னார். "எனக்கு மூன்று பிள்ளைகள்" வாடிய முகத்தோடு தொடர்ந்தார். "மூத்தவள் ஒரு புரொபஸர், மைசூரில், அடுத்தவளுக்கு பெங்களூரில் வங்கியில் வேலை, மகன் ஜெய்பூரில் இஞ்சினியர். இவளுக்கு ஐந்து பவுனில் சங்கிலி ஒன்று இருந்தது. அது அடகுக் கடைக்குப் போய் அவர்கள் படித்து முடித்தார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு இவள் எத்தனை நாள் பட்டினி கிடந்தாள் என்று கணக்கிட்டு விடமுடியாது."
"எல்லோருக்கும் திருமணமாகி விட்டதா?"
"திருமணமாகி எல்லோரும் கணவரோடும், மனைவியோடும் பிரமாதமாய் செட்டிலாகி விட்டார்கள்."
"உங்களுக்கு திருப்தி தானே?"
"ஆனால் நானும் இவளும் இன்னும் செட்டிலாகவில்லை. இந்த ஊருக்கு வரும்படி வந்த அழைப்பு நாங்கள் சேர்ந்திருக்கவும் சுதந்திரமாயிருக்கவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்துவிட்டது. இதற்காக நாங்கள் அலைந்து கொண்டேயிருக்கத் தயாராயிருக்கிறோம்."
"மூன்று பேர்களில் ஒருவர் வீட்டைப் பரிசீலித்து அங்கு செட்டிலாகிக் கொள்ளலாமே."
"சரி விடுங்கள். நாங்கள் வெகு சீக்கிரம் ராமேஸ்வரம் வருவோம். வழியில்தானே உங்க ஊர்?"
"ஆமாம். நீங்களிருவரும் எங்கள் வந்து சில நாட்களாவது தங்கிச் செல்ல வேண்டும்."
"உங்கள் முகவரி வேண்டும்."
நான் பேனாவை எடுக்குமுன் ராவ் ஞாபகத்திற்கு வந்து சொன்னார். "கிளம்புங்கள். நாம் ஊர் திரும்ப டிக்கட்டுகளை வாங்கிவிட்டார்களா என்று விசாரிப்போம்."
விழா அலுவலகத்தில் அவர்கள் சொன்னதைக் கேட்டு ராவ் மிகவும் சோர்ந்து போனார். நான் மறுநாள் கிளம்பவும் அதற்கு மறுநாள் ராவ் தம்பதி புறப்படவும் டிக்கெட்டுகள் வாங்கியிருந்தனர். மைசூருக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமமாயிருந்ததாம்.
"நீங்கள் எங்களோடிருக்கும் போதே எங்களுக்கு இவ்வளவு கஷ்டம். நீங்களில்லாமல் ஒரு முழு நாள் நாங்கள் டி.பி.க்கும் கலையரங்கத்திற்கும் அலைந்து சாப்பிட்டு எப்படி ரயிலேறப் போகிறோமோ" என்றார். அந்த அம்மா பீதியில் வெளிறிப் போனார்.
அன்றிரவும் நாங்கள் நடுநிசியில்தான் அறைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. தளர்ச்சியும் மனச்சோர்வுமாய் ராவும் அந்த அம்மாவும் குளிருக்குக் கைகளை மார்பில் கட்டிக் கொண்டு அறைக்குள் நுழைந்ததை வராந்தாவில் நின்று பார்த்தேன். காலை மூன்று மணிக்கு என் அறைக் கதவைத் தட்டி இரண்டு வயிற்று வலி மாத்திரைகளை வாங்கிப் போனார்.
காலையில் வெகுநேரம் சென்றே ராவ் என் அறைக்கு வந்தார். "நாளைக்கு ஒரு முழு நாளைக்கும் நாங்கள் உங்கள் உதவியின்றி அலைய வேண்டும். ஆனால் என்ன செய்வது? அலைந்து கொண்டே திரிய வேண்டியதுதான். ராமேஸ்வரம் வரும் போது சந்திப்போம்" என்றார். விடுபடாமல் ஒவ்வொரு பொருளையும் எடுத்துப் பெட்டிக்குள்ளும் பைக்குள்ளும் நான் வைத்துக் கொண்டிருந்த நேரமது.
வெளியே சளசளவென்று சத்தம் அதகமாய்க் கேட்டதால் டி.பி. வாசலுக்கு நடந்தோம். எதிர்க்கட்சிகள் திடீர் பந்த் நடத்திக் கொண்டிருந்தன. சாலையில் வாகனமென்று ஒரு சைக்கிள் ரிக்ஷா கூட இல்லை. மழை வேறு கொட்ட ஆரம்பித்திருந்தது.
ராவ் தம்பதி நடுங்கிப் போனார்கள். அவர் குனிந்து மனைவியோடு அடிக்கடி பேசிக் கொண்டுதானிருந்தார். ஆனாலும அந்த அம்மா முகத்தில் வேர்வைத் துளிர்த்துக் கொண்டேயிருந்தது, மழையிலும் குளிரிலும்.
மதியம் போல் ஒரு கார் வர வான் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ராவ் தம்பதியைக் கொண்டு போய்க் கலையரங்கில் இறக்கிவிட்டதும், என்னை ரயில் நிலையத்தில் விடும்படி டிரைவரிடம் சொன்னேன். மழை சடசடவென்று சத்தமாய்ப் பெய்து கொண்டிருந்தது.
கலையரங்க வாசலிலிருந்து கார் கிளம்பிய போது ராவ் தவிப்பும் அவசரமுமாய் என்னிடம் எதுவோ கேட்க விரும்பிக் கையை உயர்த்தியது போலிருந்தது. ஆனால் டிரைவருக்கு பந்த் பதட்டம் - மழை குளிர் நடுக்கம் - வேகமாய் ஓட்டிக் கொண்டு போய்விட்டார்.
இரவு வரவிருக்கும் ரயிலுக்காக மதியமே போய் ரயில் நிலைய பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்தேன். தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்த போது சட்டென்று ஞாபகம் வந்தது. ராவ் என் வீட்டு முகவரியைக் கேட்டுத்தான் கையை உயர்த்தியிருக்கிறார்.
கந்தர்வன் |
|
|
|
|
|
|
|