Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சமயம்
திருக்கண்ணபுரம்
- அலர்மேல் ரிஷி|நவம்பர் 2004|
Share:
பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் என்னும் ஊரிலிருந்து கிழக்கே 8மைல் தூரத்தில் உள்ளது திருக்கண்ணபுரம் என்னும் திருத்தலம். வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இத்தலம். 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது இக்கோயிலின் ராஜ கோபுரம்.கருவரை மூலவர் "நீலமேகப் பெருமாள் "ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் "கண்ணபுர நாயகி" தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.

சௌரிராஜப் பெருமாள்:

திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு "சௌரிராஜ பெருமாள்" என்று பெயர். இவ்வாறு இவர் அழைக்கப்படுவதற்கான வரலாறு மிகவும் சுவையானதும், இறைவன் தீன தயாபரன் என்பதை நிரூபிப்பதாகவும் உள்ளது. பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகஞ்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர்.

கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக 'தலைமுடி இறைவனுடைய முடிதான்' என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமி யாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். தீனர்க்கருளும் தீன தயாபரன் அல்லவா அவன்! அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று.

இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது.

அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து'வீகடாக்ஷன்' என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம்.

முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று.

ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் :

தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் "மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே" என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். "சிலைவலவா சேவகனே" என்றும், "ஏ மருவும் சிலை வலவா" என்றும் "ஏ வரி வெஞ்சிலை வலவா" என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார்.

கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து,

"கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே" என்று பாடுகிறார்.

தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும்
'நாச்சியார் திருமொழி'யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய

"காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன்
ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீகூடிடுகூடலே"

என்று பாடுகின்றாள்.
திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. இவருக்கு இறைவனால் திருமந்திர உபதேசம் செய்யப்பெற்ற தலம் இது என்பதும் இந்த பாடல்களின் மிகுதிக்குக் காரணமாயிருக்கலாம். நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் "அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்" என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது.

திருவிழாக்கள்:

15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மாதப் பிறப்பு, ஏகாதசி [மாதத்தில் இரண்டு] நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

" பாதம்நாளும் பணியத்தணியும்பிணி
ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை?
வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே"

(நம்மாழ்வார் பாசுரம்)

டாக்டர். அலர்மேலு ரிஷி
Share: 




© Copyright 2020 Tamilonline