|
|
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் முருகனைப் போற்றி இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் பாடி ஞானமலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் 16வது கிலோமீட்டர் தூரத்தில் 'மங்கலம்' என்ற இடத்தின் மேற்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் உள்ளது ஞானமலை. இதுநாள்வரை ஞானமலை இருக்கும் இடம் அறியப்படாத ஒரு தலமாக இருந்து வந்திருக்கிறது. சமீபத்தில் பாதிக்கு மேல் அழிந்துபோன காளிங்கராயன் கல்வெட்டு ஒன்றினை வேலூர் அரசு அருங்காட்சியகக் காப்பாளர் காந்தி மற்றும் காவேரிப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வேங்கடேசன் அவர்களும் கண்டு பிடித்தனர். இக்கல்வெட்டு கூறும் செய்தி வருமாறு:
"சகல லோகச் சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயனின் (1322-1340) 18வது ஆட்சியாண்டில் சம்புவராயர் பழவரையர் மகன் காளிங்கராயன் இவ்வூர் ஞானமலையிலுள்ள கோயிலுக்குச் செல்ல படிகள் அமைத்தான்."
இந்த காளிங்கராயன் என்பவர் தொண்டை மண்டலத்தின் அதிகாரியாயிருந்தவர்.
மலைமீது அமைந்த மிகச்சிறிய கோயில். மிகப் பழங்காலத்துப் பாறைகள் நிறைந்த இப்பகுதியில் இக்கோயிலுக்குச் செல்ல சரியான படிகள் கிடையா. இம்மலைக் கருகே அழகிய சிறு சுனை ஒன்றும் காணப்படுகிறது. கோயிலில் கருவறை, அர்த்தமண்டபமும் வெளிமண்டபமும் காணப்படுகின்றன. தொண்டை மண்டலப் பல்லவர் கோயில்களில் பொதுவாக முருகப் பெருமான் உருவம் பிரம்ம சாஸ்தா வடிவில்தான் சிலை வடிக்கப்படும். அதுபோலவே இங்கு ஞானமலையிலும் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் 4 அடி உயரத்தில் முருகன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் காட்சி தருகிறான். முன்கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்று இடுப்பில் வைத்த கோலத்திலுமாகக் காட்சி தருகிறான்.
பொதுவாக ஞானம் அருளும் ஆண்டவன் சாஸ்தா வடிவில் காட்சி அளிப்பது இயல்பு. ஞான பண்டிதன் ஞான குருபரன் என்றெல்லாம் போற்றப்படுபவன் முருகன். வீற்றிருக்கும் இடமும் ஞானமலை என்று அழைக்கப்படுவது பொருத்தமே. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகன் பாலசுப்பிரமணியன் என்றே அழைக்கப்படுகின்றான். வெளி மண்டபத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் அழகான மயில் சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. மலை மேலுள்ள கோயில் மிகச் சிறியது என்பதால் இக்கோயிலின் உற்சவமூர்த்தி கோவிந்தச் சேரியிலுள்ள பஜனைக் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. மலைமீது முருகன் சந்நிதிக்கு மேற்கே காசிவிஸ்வநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரை 'ஞானகிரீஸ்வரர்' என்றும் அழைப்பர்.
முருகன் இளைப்பாறிய ஞானமலை:
முருகன் வள்ளிமலையிலிருந்து வள்ளியுடன் புறப்பட்டு ஞானமலைக்கு வந்து இளைப்பாறி அதன்பின் திருத்தணி சென்றதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு இங்கு வந்து தங்கியதற்குச் சான்றாக முருகப் பெருமானின் திருவடிகள் பதிந்த இடம் என்று பாதச் சுவடுகள் இரண்டினைக் காட்டுகின்றனர் இவ்வூர் மக்கள். ஞானமலையி லிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சம தூரத்தில் உள்ளன. சரியாகச் சொல்வதானால் மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளன. |
|
அருணகிரிநாதரின் ஞானமலைத் திருப்புகழ்ப் பாடல்களின் சிறப்பு:
அருணகிரிநாதர் தம் வாழ்க்கையை வெறுத்து திருவண்ணா மலையின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிர் விடத்துணிந்த போது அவரை ஆட்கொண்ட முருகன் தன் திருவடி காட்டி அருளிய செயலை இங்கு ஞானமலையில் நினைந்து, மீண்டும் தனக்கு முருகன் தன் திருவடி காட்டி அருள வேண்டுமெனத் துதிக்க அவ்வாறே அவருக்குத் திருவடிக்காட்சி கிடைக்கின்றது. இதனை
மனையவள் நகைக்க ஊரின் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் மனமது சலிப்ப நாயன் உளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின் அகமதை எடுத்த சேமம் இதுவோவென்று அடியனு நினைந்து நாளும் உடலுயிர் விடுத்த போது அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே.
என்ற இத்திருப்புகழ் "இமையவர் துதிப்ப ஞான மலைஉறை குறத்திபாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே" என்று முடிகின்றது.
இன்னொரு பாடலில்
நாதரிட மேவு மாதுசிவ காமி நாரிஅபி ராமி அருள்பாலா நாரண சுவாமி ஈனுமக ளோடு ஞானமலை மேவு பெருமாளே
என்று ஞானமலை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானமலை முருகன்கோயிலுக்குச் செல்ல 200 படிகள் கட்டி, படிகளின் இருபுறமும் கைப்பிடிச் சுவர்கள் கட்டி, பம்பு செட் மூலம் மலைமீது நீரேற்றும் வசதியும் செய்திருப்பதுடன் 'சிறுவாபுரி அபிஷேகக் குழு' உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்கள் என்று அனைவரின் தொண்டுள்ளங்களின் துணையோடும் இக்கோயிலை மேன்மையுறப் பாடுபட்டு வருகின்றனர்.
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான விழாக்கள் கொண்டாட முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. மாதந்தோறும் மூன்றாவது ஞாயிறன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
'மதுரகவி', 'காவியக் கலைமணி' சிரவையா தீனப் புலவர் கோவை க.கி. இராமசாமி ஐயர் அவர்கள் ஞானமலை முருகன் மீது பாடியளித்துள்ள பதிகம் அருமையானது. "ஞானபண்டித ஸ்வாமியே" என்று முடியும் ஒவ்வொரு பதிகத்திலும், திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம் முதலான வற்றிலிருந்து சொற்களும் தொடர்களும் செய்தியும் எடுத்துக் கொண்டு பாடியிருக்கும் அழகை வியக்காமலிருக்க முடியாது.
அருணகிரிக்குக் கிடைத்த பாத தரிசனத்தை நாமும் பெற ஞானமலை முருகனைச் சென்று வழிபடலாம்.
முனைவர் அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|