Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர்கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
ஸ்ரீமதி கமலாபாயின் வேலூர் சிறை அனுபவங்கள்
- சிசுபாலன்|நவம்பர் 2023|
Share:
அக்காலத்தில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பலர் சிறை சென்றுள்ளனர். சாதாரண சிறைவாசம் முதல் கொடிய சிறைவாசம் வரை பலர் அனுபவித்துள்ளனர். அவற்றை நூல்களாகவும், குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி வைத்துள்ளனர். சாவர்க்கரின் அந்தமான் சிறைவாச அனுபவங்கள், நீலகண்ட பிரம்மச்சாரியின் சிறை அனுபவங்களை நூல்களிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் அறியமுடிகிறது. யோகி அரவிந்தர் தனது சிறை அனுபவத்தை 'எனது சிறைவாசம்' என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார். வ.உ. சிதம்பரம் பிள்ளை தனது சிறை அனுபவங்களை சுயசரிதையில் எழுதியுள்ளார். டி.எஸ். சொக்கலிங்கம், ராஜாஜி, வ.வே.சு. ஐயர் போன்றோரின் சிறைவாச அனுபவங்களை அவர்களது கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. சட்டநாதக் கரையாளர் எழுதிய, '1941 திருச்சி சிறை' நூல், அக்காலச் சிறைச்சாலைகள் குறித்தும், சிறைக் கைதிகள் குறித்தும் அறிவதற்கு ஒரு முக்கியமான ஆவணம்.

ஆண்களைப் போலவே அக்காலத்தில் பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறை சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் பலரும் அது குறித்து விரிவாக எழுதவில்லை. வை.மு. கோதைநாயகி சிறையிலிருந்தாலும் அது குறித்து அதிகம் பதிவுசெய்யவில்லை. ஆனால், ஒரே ஒருவர் தனது சிறை அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். அவர், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீமதி கமலா பாய்.

அவரது அனுபவங்களை அவர் வாயால் கேட்போம்..
ஸ்திரீகள் போர்களில் செல்வதுண்டா? அஃது அவர்கள் இயற்கைக் குணங்களுக்கு பொருந்திய வேலையா? அதனால் இல்லற வாழ்க்கையில் குறைவு ஏற்படுமா என்பதற்கு சுருக்கமான பதில் கிடைத்துவிட்டது. பழைய காலங்களிலும் தேச விபத்துக் காலங்களில் ஸ்திரீகள் இத்தகைய காரியங்களில் முன்னுக்கு வந்திருக்கிறார்களென்றும், கேகய தேசத்து ராஜகுமாரத்தியும், தசரத ராஜாவின் மனைவியுமாகிய கைகேயி தசரத மஹாராஜாவுடன் யுத்தகளத்தில் போயிருக்கையில், யுத்தம் நடக்கும் சமயம் ரதத்தின் ஆணி கழன்றுவிட்ட போது தன் விரலைக்கொடுத்து சக்கரத்தைத் தாங்கிப் பிடித்தது, அந்த வேலைகளில் பழக்கமில்லாதவர்கள் செய்யக் கூடியதல்ல.

ஜான்சி தேசத்து ராணியின் சரித்திரமும், அஹல்யா பாயும் மற்றும் அநேக ராஜபுத்திர ஸ்திரீகளும் சமயம் வாய்த்தபோது முன்வந்து தத்தம் யுத்தப்படிக்குள்ள வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள் என்றும், தற்காலப் போரில் ஸ்திரீ குணங்கள் பிரதானமாயிருப்பதனால், அதாவது தியாகம், அஹிம்சை, விடாமுயற்சி வகையான அற்புதக் குணங்கள் மேலிட்டிருப்பதனால், மேற்படி குணங்களுக்குரிய ஸ்திரீகள் ஏராளமாய் முன்னுக்கு வந்து தேசத்திற்கு நேர்ந்த ஆபத்தினின்றும் விடுவிக்க வேண்டியது அத்தியாவசியமே.

மேல்கண்ட நினைவுகள்தான் நாம் ஜெயிலுக்குப் போவதற்கு முன் ஏற்பட்டது. நாம் ஜெயில் விஷயத்தைப் பற்றிச் சற்று கவனிப்போம். அதாவது அன்னிய நாட்டுத் துணிகளை மறியல் செய்ததற்காக, மாஜிஸ்ட்ரேட்டார் தண்டனை பெற்று 6 மாதகாலம் சிறைவாசத்திற்காக நம்மைக் கைதிகள் லாரியில் ஏற்றி ஒரு சார்ஜண்டு இரண்டு போலீஸ் கான்ஸ்டேபில்கள், ஒரு ஸ்திரீ (escort) இவர்களுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம்.

ஸ்டேஷனில் இஷ்டமித்ர நண்பர்கள் கூட்டம் வெகுவாயிருந்தது. இதைப் பார்த்து சார்ஜண்டு சுதவுகளையெல்லாம் சாத்திவிட்டதால் ஒருவரையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் வெளியே நின்று தேசீயகீதம் பாடிக்கொண்டிருந்த போதிலும் நாம் நமது கம்பார்ட்மெண்டில் அசைவற்றிருந்தோம். ரயிலும் வந்தே மாதரம் முதலிய ஜய கோஷத்தின்பேரில் புறப்பட்டுவிட்டது. சரியாய் 12 1/2 மணிக்கு காட்டுப்பாடி ஜங்க்ஷன் போய்ச் சேர்ந்தோம். அவ்விடம் நமக்காக, கான்ஸ்டேபிள்கள் இருவரும் ஒரு சார்ஜண்டும் ஆக மூவருடன் 'கைதி வான்' தயாராகவிருந்தது. அதில் இரண்டு ஆங்கில இந்திய சார்ஜண்டுகள், 5 கான்ஸ்டேபில்கள், நாம் மூன்று ஸ்திரீகளுடன், இனந்தெரியாத இரண்டு ஆங்கில ஸ்திரீகள் ஆக 12 பெயருடன் 'வான்' போகலாயிற்று.

சுமார் 2 மணி நேரத்தில் 'வான்' ஜெயில் கேட்டில் வந்து நின்றது. கேட்டுக்கதவைத் திறக்கும்படி சார்ஜண்டு கேட்டதில், வயதான காரணத்தாலோ அல்லது வேலையினால் அதிகக் களைப்புற்று இருந்தமையினாலோ, கேட்டிலேயே கைதிகளை இறக்கி விட்டுவிடும்படி சொன்னதாகவும், தான் வற்புறுத்தியதனால்தான் கேட்டுக்கதவுகள் திறக்கப் போவதாயும் சார்ஜண்டு வந்து வண்டியிலிருக்கும் மற்றவருக்குத் தெரிவித்தார். மனதில் எல்லாம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஏதோ, ஒருவித அக்கிரமச் செயலும், கண்டும் கேட்டுமிராத இரு பிராமண அபலைகள், அதிலும் அஹிம்சா தத்வத்தை ஆசிரயித்து வந்தவர்களின் பந்தோபஸ்து சிறையில் சட்டப்படி செய்ய வேண்டியதிருந்த போதிலும், இவ்வளவு சார்ஜண்டுகளும் கான்ஸ்டேபில்களும் அனுப்ப வலிமையுள்ள கவர்ன்மெண்டுக்கு அவசியமேற்பட்டதைப்பற்றி வருத்தமுற்றேன். இதைப் போலவே, இரண்டு ஆந்திர ஸ்திரீகளைக் கேட்டு அறையில் இராத்தங்க விட்டதாக 2, 3 நாள் கழித்துத் தெரியவந்தது. ஆனால் நம்மை அவ்விதம் செய்யாமல் கேட்டுக்குள் அழைத்துப் போய் மேட்ரனிடம் ஒப்புவித்து நம்முடன் வந்த துணை ஸ்திரீயும், போலீஸ்காரரும், சார்ஜண்டும் திரும்பிவிட்டார்கள்.

உள்ளே வந்து மேட்ரனிடம் பெயர் கொடுத்து கையிலிருந்த பணத்தை டிபாசிட் கொடுத்துவிட்டு, நகைகள் ஏதாவது இருக்கின்றனவா வென்று கேட்டதற்கு இல்லை என்று ஜவாப் சொல்லியபின் 2 வார்டர்கள் நம்மை அழைத்துக் கொண்டுபோய் ஆஸ்பத்திரி வார்டில் விட்டார்கள். இந்த வார்டு மிகவும் காற்றோட்டமுள்ளதாயும் விசாலமாகவும் இருந்தது. அவ்விடம் அன்று இரவு தங்கி, அதிகாலையிலெழுந்து நமக்காக ஏற்பட்டிருக்கும் 'செல்'களுக்குச் சென்றோம். ஜெயில் சுவர்கள் உன்னதமாகவிருந்த போதிலும் சுற்றுமுள்ள மலைகள் இயற்கை அழகு இவ்விடத்திலிருந்து தெரியக் கூடியதாயிருக்கிறது. சுகாதாரத்திற்குச் சற்றேனும் குறைவில்லை.

ஜெயிலுக்குப் போனாலும் வயிற்றுப்பாடு விட்டதாக இல்லை. ராஜாங்கக் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு அரை ரூபாய், அஃதாவது 8 அணா வீதமுள்ள சாப்பாடு கொடுக்கப்படுகிறது. அவைகளில் தேவையுள்ள படிக்கு நம் உணவுகளை மாற்றிக் கொள்ளக் கூடியதாயும் இருக்கிறது. நமக்கு முன் அதிக நாள் தங்கி ஜெயில் அநுபவம் பெற்றிருந்த ஸ்ரீமதி ருக்மிணி அம்மாளவர்கள் ஏற்பாட்டுப்படி எல்லாக் கைதிகளுக்கும் காபி, சாப்பாடு முதலியவை ஒன்றாகத்தான் செய்துவந்தார்கள். இவ்விதம் சுமார் 1 வாரம் தினந்தோறும் காலை ஜபங்களும், ஸ்நான போஜனாதிகளும், சாயந்திரம் பாட்மின்டன் விளையாட்டுகளும், ஆஸ்பத்திரி காம்பவுண்டைச் சுற்றி உலாவுதலும் வெகு உல்லாசத்துடன் ஜெயில் என்ற ஞாபகம் மறந்து நடந்து வந்தது.

ஆனால் அவ்விடம் கைதிகளில் பெரும்பான்மையோர் ஆந்திரர்களாய் இருந்தமையால் அவர்கள் சுவை முறைப்படி மிளகாய்த் துவையல்களும் புளிக் குழம்புகளும் பிடிபடாமல் தனிச் சமையல் செய்துகொள்ள அவசியமேற்பட்டது. தவிரவும் அவ்விடம் சாரதா ஆக்டை மீறியதற்காக ரிகரஸ் தண்டனை அடைந்த ஒரு பிராமண ஸ்திரீயை பொதுச் சமையலுக்கு ஏற்பாடு செய்திருந்தும் அவ்விடத்திலுள்ள சோஷியல் ரிபார்ம் கைக்கொண்ட சில ஆந்திர சகோதரிகள், கவனக் குறைவினாலும், சமயம் வாய்த்தபோதே தம் கொள்கைளை நிறைவேற்றிக் கொள்ளவும் யத்தனித்ததைப் பார்த்து வருந்துகிறேன். என் சம்பந்தப்பட்ட மட்டிலும் மேற்படி ரிபார்ம்கள் விஷயமாய் நான் என்ன நினைத்திருந்தபோதிலும் ஜெயிலைப்போல பாதந்திரமான (சுதந்திரமில்லாத) இடத்தில் கவர்ன்மெண்டு அதிகாரிகளாலும் கூட மத விஷயமான ஆதரவுகள் காட்டிவரும்போது, நம் ஜனங்களாலேயே மேற்படி நிர்பந்தங்கள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் ஒற்றுமைக்கு ஒரு சாதனமும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

ஆந்திரர்கள் என்னும் பெருமையில் மற்றவர்களைத் தாழ்மையாய் நினைக்கும் குணம் முற்றும் விட்டுப் போனதாகத் தெரியவில்லை. தாம் ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவரென்றும் ஒரே உத்தேசமாய் ஜெயிலுக்கு வந்திருக்கிறோமென்பதையும், சில ஆந்திர சகோதரிகள் மறந்துவிட்டதைப் பற்றி வருத்தமடைந்தேன். ஆந்திர சகோதரிகள் மற்றவரை விட முதலில் ஜெயிலுக்குப் போகத் துணிந்தது மெச்சத்தக்கதே என்றாலும் மேற்படி குணங்களினால் அவர்கள் செய்கைகளுக்குக் குறைவு ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. வித்தியாசங்களை மறந்து வேலை செய்துவந்த என் சகோதரி ஸ்ரீமதி ருக்மிணி அம்மாளும், என் நான்காவது பெண்ணாகப் பாவித்த ஸ்ரீமதி துர்க்காபாயம்மாளின் மனோதைர்யமும், சாமர்த்தியமும் மெச்சக்கூடியதாக விருந்தன.

கடைசியில் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். அஃதாவது இவ்விரண்டு மாத காலமாக சுற்றும் இவ்வளவு குழப்பங்கள் இருந்தபோதிலும், நம் தமிழ் மாதர்கள் தம் சுகவாழ்க்கையினின்றும் ஏறிட்டுப் பார்க்கச் சக்தியற்றவர்களாய் இருந்தார்களென்பது உண்மையே. அவர்கள் முன்னுக்கு வர ஏன் யோசித்துக்கொண்டிருந்தார்கள்? கணவனாருடைய கலெக்டர் முன்சிப் வேலை போய்விடும் என்ற பயமா? வக்கீல் வேலைகளில் கக்ஷிக்காரர் வருவதற்குத் தடை ஏற்படுமென்ற பயமா? ஏன் பின்னடைந்தார்கள்? ஏன் யோசித்துக் கொண்டிருந்தார்கள்? தேசத்தின் மானம் போகக்கூடியதான காலங்களிலும்கூட இவ்வித தீர்க்காலோசனை செய்துகொண்டும் வந்த சமயத்தைப் போக்கிவிடலாமா? இதைப்பற்றி ஒன்றும் ஊகிக்க முடியவில்லை. ஆனால் கொஞ்சம் தாமதமாகிய போதிலும் அவர்களில் சரியான ஊக்கமும் தைர்யமுமுள்ளவர்களால் புதுக்கிளர்ச்சி உண்டாயிருக்கிறதைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன்.

இதைத் தவிர ஜெயில் அநுபவத்தில் சிலாகிக்கக் கூடியதாவது, நித்தியம் நடக்கும், தேச ஆராதனைக் காலைப் பாட்டுக்கள், நமக்கு வேலைக்காக ஏற்பட்டுள்ள கைதிகளுக்கு நம் சஹவாசத்தால் ஏற்பட்ட மன அமைதிகள், சாயங்காலம் பாட்மின்டன், கும்மிப் பாட்டுகள் முதலிய சம்பவங்களால் ஒருவருக்கொருவருள் உண்டாகிய சகோதரபாவம் முதலியவைகள். முதல் நாள் சற்று நித்திரைக் கேட்டால் கோபமாய் பேசியிருந்த மேட்ரனும் மிகவும் அன்பாய் நம்முடன் நடந்து வந்ததோடு அவ்விடத்திய லேடி டாக்டர் ஜெயில் சூபரிடென்டன்டு மிகவும் நட்புடன் இருந்தார்கள். மேற்படியார்கள் பொறுப்பான வேலைக்கு, லேடி டாக்டருக்கும், மேட்ரனுக்கும் மிகவும் குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறதாகத் தெரிகிறது.

பம்பாய் டைம்ஸ் பத்திரிகையைத் தவிர வேறு பத்திரிகைகள் வாசிக்க தடை செய்யப்பட்டிருக்கிறது. சில மாதாந்தப் பத்திரிகைகளும் கொடுக்கப்பட்டன. ராஜ்ய கைதிகள் மற்ற கைதிகளுடன் சேரவாவது அவர்களுக்கு ஏதாவது நற்போதனை செய்யவாவது தடை செய்யப்பட்டிருப்பதனால் எத்தனையோ கொலை தண்டனைக்காரர்களைப் பார்த்து மனமுருகினாலும் கூட அவர்களுக்கு சமாதான வார்த்தை சொல்ல முடியாமலிருந்ததற்காக மனவருத்தமுண்டாயிற்று.

நேற்று ஜெயிலிலிருந்து விடுதலையானது வாஸ்தவமா? அல்லது ஜெயிலுக்குப் போனதுதான் வாஸ்தவமா? போலீஸார் அடிதடி நடந்தது வாஸ்தவமா? ஏனென்றால் இன்று நாம் போனவிடங்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான ஜனங்கள் திரண்டும் போலீசார் அடிதடியன்னியில் இருக்கிறதே! இது என்ன விந்தை! நமக்கு ஜெயில் வாசம் 1 மாதம்தான். இருந்தபோதிலும் அது வீண் என்றாவது அநாவசியமென்றாவது நான் நினைக்கவில்லை. அவ்வளவு மாத்திரமில்லாமல் பிறகு எங்கள் சகோதரிகள் வரவினாலும் சுற்றிலும் கொஞ்சம் கிளர்ச்சி உண்டானதாகத் தெரிகிறதனால் வீண் சிரமமாக நினைக்க இடமில்லை.

ஸ்ரீமதி கமலாபாய் எல். ரௌ
நன்றி: ஸ்த்ரீ தர்மம் இதழ் (1931)
தொகுப்பு: சிசுபாலன்
Share: 
© Copyright 2020 Tamilonline