Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | வாசகர்கடிதம் | அஞ்சலி | பொது
Tamil Unicode / English Search
அலமாரி
நாமக்கல் கவிஞருடன் ஒரு பேட்டி
- பூவை எஸ். ஆறுமுகம்|அக்டோபர் 2023|
Share:
பாண்டியா, நீ புலவனடா!
ஈ.ஹெச். எலியட் துரையென்றால், அப்பொழுது கோயமுத்தூர் பிராஞ்ச் ஸ்கூலில் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம் - ஆமாம், வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்த்துதான். காரணம், அவர் ஆங்கிலேயர் என்பதல்ல; அவர் அந்தப் பள்ளியின் பிரின்ஸிபால். வாரத்தில் ஒருநாள் மூன்றாவது பாரத்தில் நாற்பது நிமிஷங்கள் வரை அவருடைய தலை ஊசலாடிக் கொண்டிருக்கும். 'நாகரிகப் பழக்க வழக்கங்கள்' என்ற பொருளைப் பற்றி பையன்கள் அன்றைக்குக் கட்டுரை எழுத வேண்டும் ஆங்கிலத்தில். பாவம், மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டார்கள். வெள்ளைக் காகிதத்தை எவ்வளவு கறுப்பாக்க முடியுமோ, அவ்வளவு அழகாகக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு பையன் மாத்திரம் வியாசம் எழுதவில்லை; துரையை மனக் காமிராவில் படம்பிடித்துச் சிந்தையில் இருத்தி, பின்னர் பென்சில் வழியே சித்திர நோட்டுப் புத்தகத்தில் வரையலானான். கிறுக்குவதும், அழிப்பதும், பிறகு சிந்திப்பதுமாக இருந்த அவன், கடைசியாக துரையிடம் அகப்பட்டுக் கொண்டான். ஹெட்மாஸ்டருடைய உருவத்தை கேலிச்சித்திரமாக வரைந்ததற்குப் பரிசாக பிரம்படி வாங்கிய அந்தக் கைகள் இரண்டும் கண்ணீரைச் சிந்தின. ஆனால் இந்தத் துரையோ, சிறுவனின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, பதினெட்டு காரட் தங்கம் கொண்ட தன்னுடைய அழகான தங்கப் பென்சிலை சம்மானமாகத் தந்தார். 'டிராயிங்கை விடாமல் பழகு: பாடங்களையும் நன்றாகப் படி' என்ற புத்திமதி; வியாசம் எழுதுவதற்குத் துணை புரியும் நூல்; வேத நூல் இவையும் துரையின் பரிசில்கள்தாம்.

இந்தச் சுட்டிப் பயலின் அப்பா தம்முடைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடுப்புக்களை இவனிடம் கொடுத்துக் கண்ணாரக் கண்டு மனமார வாழ்த்த ஆசைப்பட்டார்; ஆனால், பையன் ஏனோ அப்படி ஆசைப்படவில்லை. நாமக்கல் தாலுகா கச்சேரியில் குமாஸ்தாவாகப் பணியாற்றவேணும் ஆசைப்படும்படி வேண்டினார் தந்தை. 'சரி' என்று சொன்ன சொல் மூன்று மாதங்கள் வரை 'காலாவதி' ஆகாமல் இருந்தது. பிறகு, வாத்தியாராக வேஷம் புனைந்தான். அதுவும் முன்போல மூன்றே மூன்று மாதங்களுக்குத்தான்!

சித்திரம் அந்தப் பையனைப் பைத்தியமாக அடித்தது. அவனுடைய சித்திரங்களினால் பைத்தியமானவர்கள் சிம்ஸன் என்ற எஞ்சினீயர் துரை; செட்டிமார் நாட்டுப் பிரமுகர்கள்; ஐந்தாம் ஜார்ஜ்மன்னர்.

1906-ல் வங்கப் பிரிவினை நடந்தது; 'வந்தேமாதரம்' கோஷம் புறப்பட்டது. பையன் தேசபக்தனாகிச் சிறை புகுந்தான். பாட ஆரம்பித்தான். "திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி விதைத்த விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது" என்ற ராஜாஜியின் புகழ்மாலை கிடைத்தது. இந்த மணத்தின் சூழலிலே நம் 'பையனை' காந்தீயக் கவிஞராகக் கண்டோம்; ஆஸ்தானக் கவிஞராகவும் கௌரவித்தது தமிழ்மண்.

கத்தியின்றி ரத்தமின்றி...!

கே: "திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது" என்று திரு ராஜாஜி முன்னம் கூறியிருக்கிறார்கள் அல்லவா? அப்படியென்றால் தாங்கள் ஒரு கவிஞராக ஆனது, காந்தியடிகள் அரசியலிலே ஒரு புதுப் பாதையைக் கடைப்பிடித்ததால் ஏற்பட்ட தற்செயலான ஒரு திருப்பம்தானா?
ப: இதற்குச் சரியான விடை சொல்லத் தகுந்தவர் ராஜாஜி அவர்களே. ஆனாலும் அவர் எந்தக் கருத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இந்திய நாடு அந்நியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்ற தேசபக்தி ஆவேசத்தை பாமர மக்களிடை திலகர் பெருமான் தான் முதன்முதல் உண்டாக்கினவர். திலகருக்கும் முன்னால் வெறும் மிதவாதப் பேச்சுகள்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த மிதவாதப் பேச்சுகள் பயனற்றவை என்ற புரட்சி எண்ணத்தை உண்டாக்கினவர் திலகர் பெருமான்தான். அதற்குத் தகுந்த மாதிரி, பாரதியார் தேசபக்தி ஆவேசமூட்டக் கூடிய பாடல்களைப் பாடினார். அதைக் குறிக்கத்தான் நான்,
"படித்தறியா மிக ஏழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டி
தொளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக்கட்டி
எடுத்தெறிய வேண்டும் இந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென்றார்த்து
அடித்துரைத்து ஆவேசம் கொள்வானென்றால்
அப்பாட்டின் மகிமை சொல்ல யாரே வல்லார்?"

என்று பாடினேன். இதை எண்ணித்தான், "திலகருடைய தேச பக்தி ஆவேசத்தைப் பாரதியார் பாட்டாகப் பாடினார்" என்று திரு ராஜாஜி அவர்கள் குறித்திருக்க வேண்டும்.

காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அதை வரவேற்று பாரதியார் 'காந்தி பஞ்சகம்' பாடினார். அதன் பிறகு பாரதி மறைந்து விட்டார். காந்தீய இயக்கம் தீவிரமாக நடக்கும் போது அதைப் பற்றிப் பாட்டுகள் பாடித்தர 'பாரதியார் இல்லையே' என்று ஏங்கிய நான், காந்தியடிகளுடைய சாத்வீக இயக்கத்துக்குத் தகுந்தபடியான பாடல்களைப் பாடினேன். அந்தப் பாடல்கள், அப்போதைக்கப்போது திரு.வி.க. அவர்கள் வெளியிட்டு வந்த தேசபக்தனில் வெளியிடப்பட்டன. பத்திரிகைகளில் அவற்றைப் பார்த்த ராஜாஜி அவர்கள் உடனுக்குடன் அந்தப் பாட்டுகள் காந்தீய இயக்கத்துக்கு மிகவும் பொருத்தமுள்ளனவாக இருப்பதாகப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதுவார்கள். திருச்சிராப்பள்ளி டாக்டர் ராஜன் அவர்கள் வீட்டிலிருந்து ராஜாஜி அவர்கள் உப்பு சத்தியாக்கிரகம் செய்ய வேதாரண்யத்திற்குப்போனபோது, என்னுடைய 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' பாட்டுதான் வழிநடைப் பாட்டாக இருந்தது. தஞ்சாவூரில் ராஜாஜி அவர்களும், அவருடன் சென்ற தொண்டர்களும், 'தாரன்' என்ற ஆங்கிலேய ஜில்லா கலெக்டரால் பல துன்பங்களுக்கு ஆளான பின், உணவு கிடைத்து ஒரு சத்திரத்தில் சற்று ஓய்ந்திருந்த நேரத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "ஆசீர்வாதம். உங்களுடைய கத்தியின்றி ரத்தமின்றி என்ற பாட்டு மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது. காந்தி சத்தியாக்ரகத்திற்கு வேண்டிய பாட்டுகளை எழுதித்தர பாரதியார் இல்லாமற் போனாரே என்று நான் எண்ணியதுண்டு. அந்தக் குறையை நீங்கள் நீக்கி விடுவீர்கள் என்றே நம்புகிறேன்" என்று எழுதினார்கள். அதை ஒட்டித்தான் "காந்தி தூவிய வித்து நாமக்கல் கவிஞராகத் தோன்றியது" என்று அவர் சொல்லியிருக்க வேண்டுமென்பது என் அனுமானம். நான் இளம்பிராயத்திலிருந்தே கவிகள் பாடிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய 'கத்தியின்றி ரத்தமின்றி' பாட்டிற்குப் பிறகு தான் தமிழ் மக்கள் என்னை ஒரு கவிஞனென்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

கே: பாரதி, கவிமணி, டி.கே.சி. ராஜாஜி, கல்கி இவர்களின் தொடர்பில் தங்களிடையே நிலவியிருக்கும் மறக்கமுடியாத பசுமை நினைவுகளை அறிய ஆவல்.
ப: பாரதி அவர்களை 1918-ம் வருடத்தில் ஒரே ஒரு முறை சந்தித்தேன். அப்போது நான்பாடியிருந்த பாடல்களில் ஒன்றைக் கேட்டு, "பாண்டியா. எங்கே இன்னொரு முறை அந்தப் பாட்டைப் பாடு" என்றார். நான் மறுபடியும் பாடினேன். அதைக் கேட்டு, கலகலவென்று சிரித்து "பாண்டியா! நீ புலவனடா புலவன்! இப்படிப் பாட்டுகள் பாடு!" என்று வாழ்த்தினார். கவிமணி அவர்கள் என்மீது பேரன்புடையவர். என் கவிதைகளைப் பலமுறை பாராட்டியிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் எனக்குப் பல இடங்களில் சிறப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் சில நிகழ்ச்சிகட்கு கவிமணி அவர்களே தலைமை வகித்தார்கள்.

அவருடைய திருமனையில் எனக்கு விருந்தளித்தார். அடிக்கடி எனக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரத்து உண்டு. அவரைப்பற்றி மறக்க முடியாத ஒரு விஷயம் பின்வருமாறு: நான் இயற்றிய 'திருக்குறள் புது உரை'யை அவருக்கு அனுப்பி அவருடைய அணிந்துரை கேட்டிருந்தேன். என் புது உரையில் பல இடங்களில் பரிமேலழகருடைய உரையை நான் மறுத்திருப்பதைப் பாராட்டினாலும், சில இடங்களில் என்னுடைய மறுப்பை ஒத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக 'தவம்' அதிகாரத்திற்கு பரிமேலழகர் செய்திருக்கிற உரை முற்றிலும் தவறானது என்று நான் அதை மாற்றியிருப்பதை ஆட்சேபித்தார். இது விஷயமாக எனக்கும் அவருக்கும் இடையில் பல கடிதங்கள் மூலமாகக் கருத்து வேற்றுமைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவருடைய ஆட்சேபணைகளையெல்லாம் தனித்தனியே ஆராய்ந்து, தக்க ஆதாரங்களுடன் நீண்ட ஒரு கடிதம் எழுதினேன். கடைசியாக அவர், "ஆம். தாங்கள் சொல்லுவதுதான் சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது" என்ற கருத்தடங்கிய நீண்டதொரு கடிதம் எழுதி, அத்துடன் அணிந்துரைக்காக மூன்று வெண்பாக்களை அனுப்பி, அவற்றுள் எதை வேண்டுமானாலும் கொள்ளுங்கள் என்றும் எழுதினார். ஆனால் நான் அந்த மூன்று வெண்பாக்களையும் அச்சிட்டு இருக்கிறேன்.

திரு டி.கே.சி. அவர்கட்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரைப் பற்றிய மறக்க முடியாத ஒரு நினைவு பின்வருமாறு:
எனது நண்பர் திரு சின்ன அண்ணாமலை அவர்கள், அவருடைய வீட்டில் டி.கே.சி.க்கு ஒரு விருந்து நடத்தினார். அப்போது நான் திரு சின்ன அண்ணாமலை அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். விருந்துண்டபின், விருந்தினர்கள் சல்லாபித்துக் கொண்டிருந்தபோது டி.கே.சி. கம்பராமாயணத்தில் சில பாடல்களை விளக்கினார். அதன் பிறகு திரு சின்ன அண்ணாமலை என்னுடைய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். அதற்குப் பின், ரசிகமணி என்னைப் பார்த்து உங்கள் பாட்டுக்கள் பிரசித்தி பெற்றுவிட்டன. ஆனால் உங்களுடைய வசன நடை எவ்வளவு சிறப்பானது என்பதை அனுபவித்தவர்கள் எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். உங்களுடைய 'என்கதை'யை நான் படித்தபோது மிக்க இன்பமடைந்தேன். நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் அநேக சுயசரிதங்களைப் படித்திருக்கிறேன். பெரும்பாலும் சுய சரித்திரங்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையிலும் தொடர்ந்து படிக்கத் தூண்டுவதில்லை. ஆனால் உங்களுடைய சுய சரிதம் படிக்க ஆரம்பித்தது முதல் கடைசி வரையில் கீழே வைக்க மனம் வரவில்லை. ஒரு நாவல்போல் இருக்கின்றது." என்று புகழ்ந்தார். இந்தப் பாராட்டுதலை நான் என்றும் மறக்க முடியாது.

1915-ல் நாமக்கல்லில் நான் சித்திர வித்வானாகத் தொழில் செய்து கொண்டிருந்தேன். நாமக்கல் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நான் கோகலே அவர்கள் படம் ஒன்றைப் பெரிய அளவில் வரைந்து கொடுத்திருந்தேன். அந்தப் படத் திறப்பு விழா நடத்தினவர் ராஜாஜி அவர்கள். அந்த விழாவில் பாடுவதற்காக கோகலே அவர்களைப் பற்றி நானே கவிகள் இயற்றித் தந்தேன். அவற்றைப் பாடக் கேட்ட ராஜாஜி அவர்கள் அந்தப் பாட்டு 'யார் பாடியது' என்று கேட்டு என்னை மிகவும் பாராட்டினார். அன்று முதல் எனக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரைப் பற்றிய பசுமையான நினைவுகள் பலவற்றுள் அடியில் வருவது ஒன்று.

1920-ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய விசேஷ காங்கிரசிற்குச் சென்னையிலிருந்து புறப்பட்ட கிலாபத் ஸ்பெஷல் என்ற ரயில் வண்டியில் ராஜாஜி, விஜயராகவாச்சாரியார், சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோஸப் முதலான பல தலைவர்களும் நானும் சென்றோம். அந்த ரயில் வண்டி நடுவில் ஒரு பெரிய ஜங்ஷனில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டது. வண்டியில் இருந்த இளைஞர்கள் பலரும் சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று "ஏன் இந்த வண்டி இவ்வளவு நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது?" எனக் கேட்டார்கள். பின்னால்'மெயில்' வண்டி வந்துகொண்டிருப்பதாகவும் அதை முன்னால் விட்ட பின்பு தான் 'ஸ்பெஷல்' வண்டி புறப்படும் என்று ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னால் வரும் வண்டியை முன்னால் விடுவது மிகவும் அநியாயம் என்று வாதாடினர். ஸ்டேஷன் மாஸ்டர் தமக்கு வந்துள்ள உத்தரவு அப்படியென்றும், அதன்படி நடந்து கொள்வதுதான் தம்முடைய கடமையென்றும் சொல்லிவிட்டார். உடனே சிதம்பரம் பிள்ளையவர்களும், அவருடன் இருந்த இளைஞர்களும் கோபங்கொண்டு, மெயில் வண்டியை முன்னால் விடாமல் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு மறியல் செய்வதெனத் தீர்மானித்தார்கள். அதனால் மிகுந்த பரபரப்பு உண்டாயிற்று. பலபேர் சொல்லியும் சிதம்பரம் பிள்ளை அவர்கள் தம்முடைய தீர்மானத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சிதம்பரம் பிள்ளையும் அவருடைய சகாக்களும் காந்தியடிகளினுடைய சாத்வீக இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றே கல்கத்தா காங்கிரஸிற்கு வந்தவர்கள். சேலம் விஜயராகவாச்சாரியார் அவர்களும் அதே கருத்து உடையவர். திலகர் பெருமான் அப்போது இல்லை. அவர் இருந்தால் காந்தீயத் திட்டத்திற்கு இடங் கொடுக்கமாட்டார் என்ற எண்ணத்தில்தான் விஜயராகவாச்சாரி, சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் திலகருக்குப் பிரதிநிதிகள்போல் காந்தீயத் திட்டத்தை எதிர்த்தார்கள். சிதம்பரம்பிள்ளை மெயில் வண்டிக்கு முன்னால் தண்டவாளத்தில் உட்கார்ந்து மறியல் செய்ய வேண்டுமென்று சொன்னதை, விஜயராகவாச்சாரியாரும் ஆதரித்தார். விஜயராகவாச்சாரி சொன்னால்தான் சிதம்பரம் பிள்ளை கேட்பார். விஜயராகவாச்சாரியாரை நெருங்கி, சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லும்படி வற்புறுத்த மற்றவர்களால் முடியவில்லை. ஆனால் ராஜகோபாலாச்சாரியார், விஜயராகவாச்சாரியோடு பேசி அதைச் சாதித்தார். உடனே விஜயராகவாச்சாரியார், சிதம்பரம் பிள்ளையை அழைத்து, 'தண்டவாளத்தின் முன்னால் மறியல் செய்யவேண்டாம்' எனச் சொன்னார். அதன் பிறகுதான் சிதம்பரம் பிள்ளை தமது நோக்கத்தைக் கைவிட்டார்.

கல்கி அவர்கள் எனக்கு மிகப்பெரிய உபகாரி. அவரைப் பற்றிய எல்லா நினைவுகளும் மறக்க முடியாத பசுமை நினைவுகள்தாம். எட்டையபுரத்தில் பாரதி மண்டபம் கட்டிய பிறகு அங்கே நடந்த முதல் பாரதி விழாவிற்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கல்கி அவர்கள் விரும்பினார். நான் தயங்கினேன். அவர் மீண்டும் வற்புறுத்தி எழுதிய கடிதங்களுக்காக ஒப்புக்கொண்டேன். அவர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதில் மிகவும் நகைச்சுவை கலந்திருக்கும். பாரதி மண்டபத்தில், ஒரு பாரதி சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலை பாரதியாருடைய அடையாளங்களுக்கு ஒத்ததாக இல்லை. அந்தச் சிலையின் அடியில் 'சுப்ரமண்ய பாரதியார்' என்று பெயர் வெட்டப்பட்டிருந்தது. அந்தச் சிலையைத் திறந்து வைத்த கல்கி அவர்கள், "இது பாரதியாருடைய சிலை; 'பாரதியாருடையது அல்ல' என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்று மிகவும் முன்யோசனையுடன் கீழே பெயர் வெட்டியிருக்கிற சிற்பியை நாம் பாராட்ட வேண்டும்" என்று சொன்னபோது சபையில் மிகப் பெரிய சிரிப்பொலி உண்டானது.

கே: தமிழ் இலக்கியத்தின் நிகழ்காலம், வருங்காலம் பற்றித் தங்களுடைய எண்ணம், கனவு, முடிவு என்னென்ன?
ப: தமிழிலக்கியத்துக்கு மலர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. பழைய தமிழிலக்கியங்களின் பண்புகளை ஒட்டி மக்கள் பேசவும் முற்பட்டிருக்கிறார்கள். முடிவு எப்படியிருக்குமென யாராலும் சொல்ல முடியாது. ஆனால் தமிழ்நாடு, திருக்குறள் வகுத்துக் கொடுத்திருக்கும் வாழ்க்கையைப் பின்பற்றி, குடும்பத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் திருக்குறளறிவே சட்டமாகக் கருதப்பட வேண்டுமென்பது என்னுடைய கனவு. காந்தீய வாழ்க்கையை 2000 ஆண்டுகட்கு முன்னாலேயே திருக்குறள் வடித்துக் கொடுத்திருக்கிறது. அதையொட்டிய இலக்கியங்கள் பெருக வேண்டும்.

கே: சட்டசபையில் தாங்கள் ஓர் அங்கத்தினராக நியமனம் பெற்றிருக்கும் இப்புதிய அலுவலிலே, தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் தாங்கள் செய்யவிருக்கும் பணி எத்தகையது?
ப: சட்டசபையில் ஓர் அங்கத்தினன் ஆவேன் என்று நான் கனவிலும் கருதியதில்லை. அரசியல் நிபுணனாக எப்போதுமே நான் எண்ணிக் கொண்டதில்லை. அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டதும் காந்தீயத் தத்துவத்தைக் கருதியேயன்றி வேறல்ல. திடீரென்று ஒரு நாள் திரு காமராஜ் அவர்கள் என்னைச் சந்திந்து, "உங்களை மேல்சபைக்கு ஓர் அங்கத்தினராக நியமனம் செய்யச் சிபாரிசு செய்திருக்கிறேன். அதை ஒப்புக் கொள்ளுங்கள்" என்றார். அவருடைய அன்பை மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டேன். காந்தீயத்தைத் தமிழில் பாடிய புலவன் என்று இந்தப் பெருமை செய்யப்பட்டது என்று கருதுகிறேன். இந்தத் துறை எனக்கு மிகவும் புதியதாகையால், இதில் தமிழ் மொழிக்கும். தமிழ்நாட்டிற்கும் எத்தகைய பணிகளை எப்படி செய்வது என்பது பற்றி இப்பொழுது ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் சமயம் வாய்த்தபோதெல்லாம் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மை வரக் கூடியவற்றைச் செய்ய முயல்வேன்.

கே: தாங்கள் ஆஸ்தான கவிஞராக இருக்கையில், தாங்கள் மறக்க முடியாத அளவில் உணர்ந்த-உணரும் நிகழ்ச்சி ஒன்றை அறிய ஆசை.
ப: நான் ஆஸ்தான கவிஞனாக இருக்கையில் குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சி ஒன்றுமில்லை. 'ஆஸ்தான கவிஞன்' என்ற பெயரும் வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் என்பதும், ஐந்து வருடங்கள் மட்டும் இருந்தது. தவிர, வேறு நிகழ்ச்சிக்கு இடமே இருக்கவில்லை. ஒரு விஷயம் மட்டும் நினைவிலிருக்கிறது. அப்போது பாகிஸ்தான் பிரதம மந்திரியாக இருந்த லியாகத் அலிகான் அவர்களுக்கும் நேருஜி அவர்களுக்கும் அரசியல் உடன்படிக்கை ஏற்பட்டது. அது அங்கே நடந்த கலவரங்களுக்குச் சம்பந்தப்பட்டது. அந்த உடன்படிக்கையின் அம்சங்களைப் பற்றித் தமிழ்நாட்டுக் கிராமங்களில் பாடக்கூடியதாக எளிய நடையில் பாட்டுகள் இயற்றித் தரவேண்டும் என்று, சென்னை அரசாங்க விளம்பர இலாகாவிலிருந்து என்னைக் கேட்டார்கள். "பாகிஸ்தானில் நடந்த கலவரங்களைப் பற்றி ஏற்பட்ட உடன்படிக்கையைப் பற்றி தமிழ்நாட்டுக் கிராமங்களில் பாட வேண்டிய அவசியம் இல்லை" யென்று நான் மறுத்துவிட்டேன்
.
'உமா' மூலமாகத் தமிழர்களுக்கு நான் சொல்லக்கூடிய செய்தியெல்லாம் இதுதான்:

"தமிழன் என்றொரு இனமுண்டு;
தனியே அவர்க்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடை மொழியாகும்;
அன்பே அவனது வழியாகும்!"
பேட்டி: பூவை. எஸ். ஆறுமுகம்

(நன்றி: உமா இதழ்)
Share: 




© Copyright 2020 Tamilonline