Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | அஞ்சலி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar
Tamil Unicode / English Search
அலமாரி
எண்பதாண்டாகியும் இளைஞரே
- தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்|டிசம்பர் 2023|
Share:
1. திரு. முதலியார் அவர்களை நானறிந்த முறை
1922-ம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கே மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழியில் அளவிலா ஆர்வத்தை உண்டுபண்ணும் திறமை வாய்ந்தவர்கள். எங்களுக்குப் பாடமாயிருந்த நளவெண்பாவின் சில பகுதிகளை அவர்கள் பாடஞ் சொல்லப் புகுமுன், முன்னுரையாகச் சில சொல்லி வெண்பாவின் இயல்புகளையும் விவரித்து, "வெண்பாவிற் புகழேந்தி என்று எல்லோரும் சொல்லுவர். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. யாப்பிலக்கணத்திற்கு விரோதமில்லாமல் செய்யும் செய்யுட்களெல்லாம் கவிகளாகா. அவற்றுள் வஞ்சி, கலி முதலியன இயற்றுவதற்கு எளியனவாயிருந்தும் கற்பதற் கெளிதாயிருக்கும் வெண்பா மட்டும் புலவர்க்குப் புலி என்று சொல்லப்படுவானேன். கூர்ந்துநோக்கும்போது சுவையுள்ள வெண்பாவைச் சொல்லுவதற்குக் காரிகையறிவு மட்டும் காணாது. வேறு பல அறிவுகளும் வேண்டி யிருக்கின்றன" என்று சொல்லிப் பின்னும் அருமையான வெண்பாக்களுக்கு மேற்கோளாக அகலிகை வெண்பா என்னும் நூலிலிருந்து சில கவிகளைச் சொல்லிக் காட்டி அந்த வெண்பாக்களின் நயங்களை எடுத்துரைத்தார்கள். அந்த நூலிலே ஆசிரியர் பாத்திரங்களை நடத்தும் முறையினையும், அந்த நூலின் கவிகளில் சந்த ஒற்றுமையுடைய எதுகைகளும், கருத்துடை அடைகளும் விரவி வருதலையும், வெற்றடை, விளச்சீர், வகையுளி இவை விரவாமையினையும் அவர்கள் உணர்த்த உணர்ந்து மகிழ்ந்தோம்.

இவ்வளவு மேன்மையாகவும் அருமையாகவும் பாடியவர் புகழேந்திக்கு முன்னவரோ பின்னவரோ அன்றிச் சங்கப் புலவருள் ஒருவர்தாமோ என்று மாணவர்களாகிய நாங்கள் சந்தேகப்பட்டபொழுது, ஆசிரியர், "வெகு காலத்துக்கு முந்தியவர் அல்லர். அவர் நம்மிடையே இன்று இருக்கின்றார். அகலிகை வெண்பா ஆசிரியர், வெள்ளகால் ராவ் சாஹிப் சுப்பிரமணிய முதலியார் அவர்களே" என்று சொன்னார்கள். அதைக் கேட்டுத் தமிழ் மாணவர்களாகிய நாங்கள் "நம்மிடையே, ஒரு நல்ல தமிழ்க்கவி இன்று இருக்கின்றார். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தழைத்து வந்த தமிழ்க்கவிப் பூஞ்சோலை, ஆதரவின்மையாகிய அருங்கோடையால் மாய்ந்து போய்விடவில்லை. பொதியமலைச் சாரலிலே அது பூத்திருப்பதும், முத்தமிழ் மாமுனி அகத்தியன் அருளேயாகும்" என்று நினைந்து நினைந்து மகிழ்வெய்தினோம். இப்படித்தான் திரு. முதலியார் அவர்களைப்பற்றி நான் முதன்முதலில் அறிந்தது.

இவ்வாறு முதலியார் அவர்களை இற்றைக்குப் பதினாலு ஆண்டுகளுக்கு முன்னமே அறிவேன் என்றாலும், சென்ற ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் அவர்களுடன் நெருங்கிப் பழகும் சமயங்கள் எனக்கு வாய்த்தன.

திருநெல்வேலியிலும், வெள்ளகாலிலும் அவர்களோடு பலமுறை பலபடியாக உடனிருந்து நெடுநேரம் உரையாடியிருக்கின்றேன். ஆழ்ந்து அகன்ற அறிவாலும், அனுபவ முதிர்ச்சியாலும், நூற்பயிற்சியோடு கூடிய மதி நுட்பத்தாலும் மேம்பட்டு விளங்கும் இப்புலவர் பெருமானின் சல்லாபங்கள் எப்போதும் எனக்கு ஆனந்தத்தையே உண்டாக்கின. நம் முதலியார் அவர்களுடன் உரையாடியவர்கள் எல்லாம், "கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்றம்ம! யார்கொல் இச்சொல்லின் செல்வன்?" என்று கம்பன், அனுமனைப்பற்றிச் சொல்லுகிறபடி அதிசய பரவசராயிருப்பர்.

முதலியார் அவர்கள் என்னிடம் நேரில், தாம் தமிழ் பயின்ற விதம், ஆங்கிலக் கல்வியால் தமிழ்ப் படிப்புக் குறைந்த நிலை, தாம் நூலியற்றியது, உரை கண்டது, கால்நடை மருத்துவத்தில் தேர்ச்சியுற்றது முதலியவற்றைக் கூறியபோதெல்லாம் - அது நம்போல்வார்க்கு எவ்வளவோ உதவியாயிருக்குமே என்று எண்ணியதுண்டு. அரிய செய்தொழுகும் பெரியாரது அடிச்சுவடுகள், காலமென்னும் மணல்வெளியில் அழிந்து போவதன் முன்னம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படுமானால், பின்வருவோர் எவரேனும் நெறிதவறித் தத்தளிக்கும்போது, அந்தச் சுவடுகளைக் கண்டு அவற்றின்வழி நடந்து நன்மை பெறலாகும் என்ற உண்மை உலகறிந்ததேயன்றோ.

முதலியார் அவர்கள் வாழ்க்கை, திகைப்பும் நகைப்பும் விளைக்கும் சம்பவங்கள் நிறைந்ததன்று. ஆயினும், அது உத்தியோகத்தில் உயர்வடைய விரும்புவார்க்கும், ஆங்கிலத்தோடு தமிழையும் பயின்று தேர்ந்த பட்டதாரிகளுக்கும் நல்லதொரு முன்மாதிரியாய் அமைந்துள்ளது. செல்வம் அதிகாரம் முதலியவை சேர்ந்த உடனே பிறமொழிகளை உயர்த்திப் பேசித் தமிழை இகழ்ந்து கூறும் இயல்பினர்க்கு அது ஒரு படிப்பினையாகவும் விளங்குகின்றது. இத்தகைய பயன் கருதியும் ஆசைபற்றியும் எழுதப்படும் இந்நூலைத் தமிழ் உலகு ஏற்றுக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.

2. எண்பதாண்டான இளைஞர்
"வருஷங்களை ஒன்று இரண்டு என்றெண்ணி வயதைக் கணக்கிட்டு மனிதரைக் கிழவரென்றும் குமரரென்றும் மதிப்பது சரியான முறையன்று. எண்பது வயதான இளைஞருமுண்டு. இருபது வயதான கிழவருமுண்டு. வெள்ளகால் திருவாளர் ராவ்சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களை நெருங்கிப் பழகினவர் ஒருவரேனும் அவர்களை ஒரு குடுகுடு கிழவர் என்று கூறத் துணியார் என்பது உறுதி. அவர்களது சுறுசுறுப்பைக் கண்ட எந்த இளைஞனும் அவர்கள் முன் நாணித் தலைகுனிந்து விடுவான்" என்று கவிஞர் தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் எழுதுகிறார்கள். இது முழுவதும் உண்மை. நமது முதலியார் அவர்களுடைய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அறிந்தவர்கள் அநேகர் இருப்பார்கள். ஒரு நல்ல தமிழ்ப் பாடலையோ அல்லது கம்பன் கவியிலுள்ள ஒரு அருமையான கருத்தையோ பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்ட முனைந்து விட்டால், அவர்கள் உற்சாகத்தை அளவிட்டுரைக்க முடியாது. நான் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு உற்சாகத்தோடு பேசுவதைக்கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரேயொரு திருட்டாந்தம் மட்டும் தருவதற்கு விரும்புகிறேன்.

கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் - அனுமன் கொடுத்த ஆழியினைப் பெற்ற சீதை அடைந்த நிலையை விளக்க, கம்பர்

வாங்கினள் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்
தாங்கினள் மலர்க் கண்மிசை ஒற்றினள் தடந்தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு
ஏங்கினள் உயி்ர்த்தனள் இதென்ன தெனலாமே ?


என்று கூறுகின்றார். "இதென்ன தெனலாமே" என்ற தொடர்மொழியை எனக்கு விளக்க விரும்பிய முதலியார் அவர்கள் சொன்னதாவது "இமயமலையின் உயர்ந்த சிகரத்தைக் காண ஒரு கூட்டம் புறப்படுகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாய், அதற்கு முன் பலதடவை அச்சிகரத்தைக் கண்ட ஒருவன் அவர்களை அழைத்துச்செல்கிறான். எல்லோரும் செல்லக்கூடிய ஓர் எல்லைவரை அக்கூட்டத்தை அவ்வழிகாட்டி கூட்டிச் சென்று விடுகிறான். அந்த எல்லைக்கு அப்புறம் அக்கூட்டத்தார் அவனைத் தொடர்ந்து போவதற்கு இயலவில்லை. ஆனால் வழிகாட்டியாக வந்தவனோ, ஒரே தாவில் தாவிச் சிகரத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான். அவன் சென்ற முறையையும், அவன் நின்ற நிலையையும் பார்த்து, சிகரத்தின் உச்சியைக் காணச் சென்ற கூட்டத்தார் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

இது போலத்தான் கம்பர், வாசகர்களாகிய நம்மையெல்லாம் தம்முடன் இழுத்துச் செல்கிறார். சீதை அடைந்த இன்பத்தை நம்மால் எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியுமோ அவ்வளைவையும் அனுபவிக்கும்படி செய்துவிட்டு, நாம் அவரைப் பின்தொடர முடியாதிருக்கிற அந்நிலையில், சீதை அடைந்த அத்தியந்த இன்பத்தைத் தாம் உணர்ந்து, அது உணரக் கூடியதேயன்றி, உரைக்கக்கூடியதன் றென்பதைப் புலப்படுத்த 'இதென்ன தெனலாமே' என்று கூறித் தமது கவிதா சக்தியின் சிகரத்திற்குத் தாவிவிடுகிறார். நாமெல்லாம் அவரது கவித்திறனைக் கண்டு அப்படியே ஆச்சரியப்படுவதைத்தவிர வேறு செயலில்லாதவர்களாக இருக்கிறோம்." இவ்வாறு அவர்கள் என்னிடம் சில நாட்களுக்கு முன் வெள்ளகாலில் ஓடும் ஓர் வாய்க்காலின் கரையருகே கூறினார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறும்போது அவர்கள் தம்மை இமயமலையேறுகின்ற வழிகாட்டியாகவே நினைந்து கொண்டு உற்சாகப்படுத்துவதைக் கண்டேன். கம்பர் கவியை அறிந்து அனுபவித்து அவர்கள் ஆர்வத்தோடு பேசும்போது இருபது வயது நிறைந்த ஓர் இளைஞன் எவ்வாறு ஊக்கமும் உற்சாகமும் கொண்டு பேசுவானோ அவ்வாறு பேசுவார்கள்.

அவர்கள் இந்த வயதிலும் தினம் மூன்று மைலுக்குக் குறையாமல் நடப்பதுடன், வீட்டிலும் தேகப்பயிற்சி முறைகளைக் கையாளுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் எந்தக் காரியம் செய்வதிலும் சுறுசுறுப்பும் ஊக்கமும் காட்டுவதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அவர்கள் எண்பதாண்டாகியும் இளைஞரே என்று எண்ணாதிரார்.

'முதலியார் அவர்களும் அவர்களுடைய நூல்களும்' நூலில் இருந்து)
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
Share: 




© Copyright 2020 Tamilonline