('சமய விளக்கம்' ஆராய்ச்சி நூலில் இருந்து)
(வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான துப்பறியும் நாவலாசிரியர் என்பது பலருக்கும் தெரியும். மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக்கொலை, மரணபுரத்தின் மர்மம், திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் போன்ற மாறுபட்ட தலைப்புகளில் விதவிதமாக எழுதிக் குவித்தவர் என்பதும் பலரும் அறிந்தே! ஆனால், பலரும் அறியாதது அவர் சமயம் பற்றிய ஆராய்ச்சியில் சில ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார் என்பது. 'Long Missing Links, Or, The Marvellous Discoveries about the Aryans, Jesus Christ and Allah - Volume 1' என்ற தலைப்பில், 1931ல், தனது 'Oriental Home University' என்ற அமைப்பின் மூலம் அவர் ஒரு நூலை வெளியிட்டார். அதன் சில பகுதிகளை 'சமய விளக்கம்' என்ற தலைப்பில் தமிழிலும் எழுதி வெளியிட்டார். இப்போது அச்சில் இல்லாத அந்த நூலில் இருந்து சில பகுதிகள்…)
சில வருஷ காலத்திற்கு முன்னர், நான் தமிழ் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, தேச சரித்திரங்கள், சமய நூல்கள், பாஷைகள் முதலியவற்றை ஆராய்வதற்கென்றே 'ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி' என்ற ஸ்தாபனத்தை அமைத்து, சுமார் மூன்று வருஷம் உழைத்து, நான் தெரிந்துகொண்ட புதிய விஷயங்களில் சிலவற்றைத் திரட்டி, 'லாங் மிஸ்ஸிங் லிங்க்ஸ்' அல்லது, 'ஆரியர்கள், கிறிஸ்து, அல்லாஹ் என்பனவற்றைப் பற்றிய ஆச்சரியகரமான புதுமை வெளியீடுகள் (முதல் பாகம்)' என்னும் பெயரில் ஒரு பெரிய நூலை வெளியிட்டேன் இங்கிலீஷில் 'லாங் மிஸ்ஸிங் லிங்க்ஸ்' என்னும் சொற்களுக்கு, 'நீண்ட காலமாகக் காணப்படாமல் இருந்த சம்பந்தத் தொடர்ச்சி' என்பது கருத்து.
இப்புஸ்தகத்தைப் படித்து, நம் நாட்டினரான அறிஞர்கள் மகிழ்ச்சி கொண்டு, அளவளாவி இதன் சரியகரமான தன்மையைப் பெரிதும் புகழ்ந்து எனக்கு கடிதங்கள் எழுதினர். தூர தேசங்களான ஜெர்மனி, அமெரிக்கா முதலியவற்றிலுள்ள மேதாவிகள் பலர் இந்நூலை வாங்கிப் படித்து முற்றிலும் வியப்படைந்து நிரம்பவும் புகழ்ச்சியான பல கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கின்றனர்.
இந்நூலைப் படித்து என்னைப் புகழ்ந்து எழுதியுள்ள நம் நாட்டு கனவான்களுள் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அடங்கியிருக்கின்றனர். சில முஸ்லீம் கனவான்கள் இந்நூலின் பெரும்போக்கான நாட்டத்தையும், சமரஸத் தன்மையையும் மெய்ச்சி எனக்கு சொற்ப சன்மானத் தொகையையும் அனுப்பியதன்றி மேலும் அனுப்புவதாக வாக்களித்துக் கடிதம் எழுதி என்னை ஊக்கினர்.
ஆனால். இந்நூலைப் பெரும்பாலோர் வாங்கிப் படிக்காது அசட்டையாய் இருந்து விட்டதனால், இந்த ஆராய்ச்சியினாலும், இந்நூலை வெளியிட்டு, இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டதனாலும் எனக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் கடன் ஏற்பட, அதைத் தீர்க்கும் பொருட்டு சகலவிதமான நாவல் காப்பிரைட்டுகளையும், புஸ்தகங்களையும், சுமார் இருபதாயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாடி வீட்டையும் விற்று நான் மாத்திரம் மீள வேண்டியவனானேன். ஆயினும் நான் எடுத்துக்கொண்ட விஷயம் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தங்களைக் காட்டி சமரஸத் தன்மையை உண்டாக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகையால் எப்பாடுபட்டாயினும் என்னாலியன்ற வரையில் என் கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான தீர்மானம் என்னைவிட்டு அகலாமல் இன்னமும் இருப்பதனால், நான் நாவல் வெளியீட்டோடு இந்தத் தொண்டையும் சிறிதளவு கலந்து செய்ய வேண்டுமென்பதே என் கருத்து
ஹிந்துக்கள் என்று குறிக்கப்படுவோரான நம் நாட்டினர் பலவகைப்பட்ட தெய்வங்களை அநாதி காலமாய் ஏற்படுத்தி வைத்துக்கொண்டு அவைகளை வழிபட்டு வருகிறனர். பிற்காலத்தில் இங்கு வந்து குடியேறியுள்ளவர்களான கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் முதலிய இதர சமயத்தாரும் தம் தமக்கு தெய்வங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவைகளை வணங்கி வருகின்றனர். எல்லோரையும் படைத்துக் காத்தழிக்கும் தெய்வம் ஒன்றே என்று எல்லாச் சமயத்தினரும் வாய்ப்பேச்சளவில் ஒப்புக்கொள்ளுகின்றனரானாலும், வியவகாரத்திலும், பழக்கவழக்கங்களிலும் ஒவ்வொரு சமூகத்தாரும் வேறுபடுகின்றனர்; ஒவ்வொரு சமூகத்தாரும் தம் தம் தெய்வங்களை வெவ்வேறு பெயர்களால் குறிக்கின்றனர்; தம் தம் தெய்வங்களிடம் காட்டும் பயபக்தி விநயத்தை மற்ற சமூகத்தாருடைய தெய்வங்கள் விஷயத்தில் காட்டுகிறதில்லை. சில சமயங்களில் ஹிந்துக்கள் தம் தெய்வங்களை ஊர்வலமாய் எடுத்துச் செல்லுகையில் இதர சமயத்தார் சிலர் கற்களையும் தடிகளையும் உபயோகித்து ஊர்வலமாய்ச் செல்வோரை ஓட்டி விடுகின்றனர். நம்முடைய தெய்வங்கள் ஒவ்வொன்றும் இன்னின்ன கருத்தை அடக்கிக்கொண்டிருக்கின்றது என்பது நம்மவருக்கே அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை; அப்படி இருக்க, பிற மதத்தாருக்கு அது விளங்காதது ஓர் ஆச்சரியமான விஷயமல்ல. அதுபோல பிறருடைய தெய்வங்களின் உட்கருத்தும் நமக்கு விளங்கவில்லை. எவரும் பகுத்தறிவிற்கு ஒத்தபடி விளக்கவும் முன் வருகிறதில்லை.
முக்கியமாக மேல் நாட்டார் நாம் பல பைத்திய தெய்வங்களைக் கட்டியழுது அக்ஞான இருளில் கிடந்து உழல்கிறோம் என்ற அபிப்பிராயமுடையவர்களாகவே இருக்கின்றனர்; சிலர் வெளிப்படையாகவே நம்மை இளக்காரப்படுத்திப் புரளி செய்கின்றனர்.
கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நம் நாடு முழுதிலும் மாதாகோவில்களைக் கட்டி, பலரைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்த்திருக்கின்றனர்; இன்னும் மற்ற எல்லோரும் அதில் சேர்ந்து கொண்டாலன்றி இந்த நாட்டிற்கு விமோசனமே ஏற்படாதென்று வெளிப்படையாகவே கூறி அறைகூவி யழைக்கின்றனர். முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்த சிலர் தம் சமயம் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட மேலானதென்றும், எல்லோரும் அதில் சேர்ந்துகொள்ளுமாறும் அழைக்கின்றனர். வெள்ளைக்காரருக்கு முன் வடநாட்டில் சில இடங்களுக்கு அரசராயிருந்த முகலாயர், துருக்கர் முதலியோரில் பலர் தம் சமயத்தில் சேராத ஹிந்துக்களைக் கத்திகளால் வெட்டி வீழ்த்தியதாகவும் புஸ்தகங்கள் கூறுகின்றன. ஆனால், அக்பர் என்னும் சக்கரவர்த்தி சமரஸ மனப்பான்மையோடு ஹிந்துக்களிடம் சம்பந்தம் வைத்துக்கொண்டிருந்ததாக நாம் தெரிந்துகொள்ளுகிறோம். தேச சரித்திரங்களில் வெளியிடப்பட்டுள்ள அக்பரின் உருவப்படத்தில் அவருடைய நெற்றியில் நாமம் காணப்படுகிறதை எவரும் இன்றைக்கும் பார்க்கலாம். அவர் ஹிந்துக்களின் மத சின்னங்களை நெற்றியில் தரித்ததாக சரித்திரமும் சொல்லுகிறது.
எனவே, நான் இது சம்பந்தமாய் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ததில் சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டேனாதலால், அவைகளைத் தமிழ் நாட்டார் எல்லோரும் தெரிந்துகொள்வது இன்றியமையாததென்று கருதி, நான் இப்பகுதியை எழுதத் துணிந்தேன்.
ஹிந்துக்கள் என்று குறிக்கப்படும் நம்மவர்களின் முன்னோர் பல்லாயிர வருஷ காலத்திற்கு முன்னர் 'அப்பரகா' (Africa) கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்பது நம் நாட்டு நூல்களாலும், ஏராளமான பல சான்றுகளாலும் நிச்சயமாகத் தெரிகின்றது. பாலஸ்தானத்தில் (Palestine) உற்பத்தியான கிறிஸ்து மதத்தையும், அரபியாவில் உற்பத்தியான இஸ்லாம் மதத்தையும் அநுஷ்டித்த ஜனங்களின் முன்னோர் ஆதிகாலத்தில் அப்பரகாவில் நம் முன்னோருடன் நெருங்கிய சம்பந்தமுடையவர்களாயிருந்தனர் என்பது சரித்திரங்களினால் நிச்சயமாகிறது. இப்போதும் வட அப்பரகாவில் உள்ள ஜனங்கள், தோற்றம் நடையுடை பாவனை முதலிய எல்லா அம்சங்களிலும் நம் நாட்டு ஜனங்கள் போலவே இருக்கின்றனர். அவ்விடத்தில் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னர் இருந்து அழிந்து போன பட்டணங்கள், கோவில்கள் முதலியவற்றை வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்து, பழைய கல்வெட்டுகளிலிருந்து சேகரித்துப் படங்களோடு வெளியிட்டிருக்கும் தகவல்களை நாம் படித்தால், நமக்கும் அந்த நாட்டிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்ததாக நிச்சயப்படுத்தப் போதுமான சான்றுகள் இருப்பது தெரியும்.
வட அப்பரகாவில், ஈகைப்பட்டு (Egypt) என்ற தேசம் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னிருந்து உயர்வான நாகரிகம் அடைந்ததா யிருந்துவந்திருக்கிறது. அங்கு இப்போது பெரும்பாலும் முஸ்லீம்களே இருந்து வருகின்றனரானாலும் பழையகாலங்களில், அங்கு வேறு சமூகத்தார் இருந்து அபாரமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். வடக்கு ஈகைப்பட்டில் மெம்பிஸ் (நாபஹ் என்னும் நாபகம்) என்ற ஒரு பட்டணம் இருந்து அழிந்துபோயிருக்கிறது. தெற்கில் தேபாஸ் (Thebes தேவர் ஆசு) தென்திரஹ் (Denderah தென்திருஅஹம்) முதலிய பெரிய பட்டணங்கள் இருந்து அழிந்து கிடக்கின்றன. அங்கிருந்து கணேசர் முதலிய விக்கிரகங்களும், அவைகளைப் பற்றிய தத்துவங்களும் ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் குறிக்கப்பட்டுள்ள தெய்வங்களே கிறிஸ்தவருடைய வேதமாகிய பைபிலிலும், முஸ்லீம்களிடமும் இப்போதும் காணப்படுகின்றனவாதலால், எல்லோரும் அவைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வோமானால், நமக்கும் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தெய்வ விஷயங்களில் உள்ள நெருங்கிய சம்பந்தம் நன்கு விளங்கும், மத சம்பந்தமான பகைமையும் குறையும் என்பது என் முக்கிய நோக்கம். எனவே, நான் முதன்முதலில் நம் கணேசரைப் பற்றிய சம்பந்தத்தைக் காட்ட எடுத்துக்கொண்டிருக்கிறேன்.
ஜனங்கள் எந்தக் காரியத்தைச் செய்யத் துவக்கினாலும் முதலில் பிள்ளையார் பூஜை செய்வது வழக்கம்; எந்த நூலை இயற்றினாலும் பிள்ளையாரையே முதலில் துதிப்பது வழக்கம். அப்படிச் செய்தால், எடுத்த காரியம் எவ்வித இடையூறுமின்றி நிறைவேறுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாயிருந்து வருகிறது. இவர் யானையின் முகம், மனித தேகம், பெரிய வயிறு, ஐந்து கைகள், சங்கு சக்கரம் முதலியவை உடையவர் என்பதை நம் நாட்டிலுள்ள விக்கிரங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளுகிறோம். அதுவுமன்றி அவருக்கு 'ஆஹு' என்பது வாகனம் என்று கூறுகின்றனர். 'ஆஹு' என்பதை மூஞ்சுறுவின் வடிவமாகக் காட்டியிருக்கின்றனர். மூஞ்சுறு என்னும் ஜெந்துவின் மூச்சுக்காற்று எந்த வஸ்துவிலேனும் பட்டால், அதற்கு துர்நாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அத்தகைய ஜெந்துவையே இவருக்கு வாகனமாகக் காட்டியிருக்கின்றனர். இம்மாதிரியான விசித்திர வடிவமும் தோற்றமும் உடைய கடவுள் ஒருவர் ஆகாயத்தில் எங்கேயாகிலும் இருக்கிறாரா, அவர் மூஞ்சுறை வாகனமாய் உபயோகிக்கிறாரா, அவரையும் அந்த வாகனத்தையும் எவரேனும் நேரில் பார்த்திருக்கிறார்களா, மூஞ்சுறு ஆகாயத்தில் பறக்குமா, அல்லது, இவ்வளவு பெரிய பயங்கரமான மனிதரைத் தூக்குமா, ஆதிகாலத்தில் இருந்த மனிதருக்கு நேரில் வந்து காட்சி கொடுத்த கணேசர், நம் திருஷ்டிக்கு ஏன் புலப்படுகிறதில்லை, இம்மாதிரி ஒரு தெய்வத்தை அமைத்திருப்பது ஏதேனும் ஒரு கருத்தைக் காட்டுகிறதா, அல்லது, வான சாஸ்திரப்படி இது எதையேனும் குறிக்கிறதா என்பன போன்ற எண்ணிறந்த சம்சயங்கள் எவருக்கும் உண்டாவது சகஜமே.
இவரை எல்லோரும் பிள்ளையார் என்றும், செல்வப் பிள்ளையார் என்றும் குறிப்பதிலிருந்து, இவர் இன்னொரு பெரிய தெய்வத்தின் அருமைக் குமாரர் என்பது தெரிகிறது. விநாயகர் சிவனுக்கும், பார்வதிக்கும் உதித்த மூத்த புதல்வர் என்றும், இவருக்கு இளையவர் சுப்ரமண்யர் எனப்படும் கந்தர் என்றும் சைவ புராணங்களால் நாம் அறிகிறோம்.
ஆனால், நாம் கந்தபுராணத்தைப் படித்தால், முதலில் தக்ஷனுக்கு மகளாய்ப் பிறந்து தாக்ஷாயணியென்ற பெயருடனிருந்த ஈசுவரி சிவனை மணக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தவம் புரிந்து ஹிமவானுக்கும் மேனகைக்கும் புத்திரியாகப் பிறந்து பார்வதியென்ற பெயர் பெற்று சிவனை மணந்ததாகவும், பிறகு கந்தர் அவதரித்ததாகவும் நாம் அறிகிறோம். ஆனால், இம்மணம் நடந்த பின்னும் கந்தர் பிறப்பதற்கு முன்னும் கணேசர் பிறந்ததாக அந்தப் புராணம் சொல்வதாகத் தெரியவில்லை.
தேவீ பாகவதம் என்னும் நூலில் ஒன்பதாவது ஸ்கந்தம் முதலாவது அத்தியாயத்தின் முடிவில், "கணேசர் கிருஷ்ணமூர்த்தியின் கலாம்சமாகவும், ஸ்கந்தர் விஷ்ணுவின் கலாம்சமாகவும் தோன்றி, பிறகு பார்வதிக்குப் புத்திரராயினர்” என்னும் வாக்கியம் காணப்படுகிறது. |