Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
வி.ர. வசந்தன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2023|
Share:
எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், ஆய்வாளர் என பல களங்களில் செயல்பட்டு வருபவர் எழுத்தாளர் வி.ர. வசந்தன். தென்னக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற வசந்தன், சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தவர். 'கதம்பம்' என்ற இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியர். அழ. வள்ளியப்பாவையும், கல்கியையும் தனது ஆதர்சமாகக் கொண்டு இயங்கிவரும் அவர், தனது இலக்கியப் பயணம் பற்றி நம்மோடு பேசுகிறார். வாருங்கள் கேட்கலாம்...

★★★★★


கே: இளமைப்பருவம், கல்வி, பணி குறித்துச் சொல்ல இயலுமா ?
ப: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தவிளை என்ற சிறு விவசாய கிராமத்தில், 1955ம் ஆண்டு பிறந்தேன். என் தந்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி செய்தார். அப்போது செருப்பாலூர் என்ற ஊரில் வசித்தோம். ஆரம்பக் கல்வியை செருப்பாலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் கற்றேன். உயர்நிலைக் கல்வி திருவட்டாறில். மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லுரியில் வேதியியல் இளங்கலைப் பட்டம் பெற்றேன். பட்டம் பெற்ற அதே வருடத்தில் (மே 1977) தென்னிந்திய ரயில்வேயில் வேலை கிடைத்தது. திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பணிபுரிந்து 2015ல் ஓய்வு பெற்றேன்.

அழ. வள்ளியப்பா மற்றும் ம.பொ.சி. முன்னிலையில்



கே: எழுத்தார்வத்தின் பின்புலம் என்ன ?
ப: பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய என் தாத்தா, ஒரு நாடக ஆசிரியர். பல நாடகங்களை எழுதி அரங்கேற்றி வந்தார். அவர் ஒரு காரணம். என் அன்னை மற்றுமொரு காரணம். வீட்டில் வாங்கும் வார, மாத இதழ்களைச் சேகரித்து பைண்டு செய்து அவர் பாதுகாப்பார். 'கண்ணன்' இதழில் வரும் கதைகளை எனக்குப் படித்துக் காட்டுவார். எழுத்து ஆர்வத்தை என்னுள் விதைத்தவர் என் அன்னை தான். நடுநிலைப் பள்ளி நாட்களிலேயே நான் கதைகள் எழுதியதுண்டு. அவற்றை வெளியே காட்ட வெட்கப்பட்டு என் பள்ளிக் குறிப்பேடுகளுக்குள் மறைத்து வைத்திருப்பேன்.

உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது பள்ளி ஆண்டு மலருக்கு மாணவர்களிடம் கவிதை கேட்டார்கள். பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கம்பராமாயணப் பாடல் சந்தத்தை அடியொற்றி 'இயற்கை அழகு' என்றொரு கவிதை எழுதினேன். அதைத் தமிழாசிரியரிடம் கொடுக்கக் கூச்சப்பட்டுக் கொண்டு புத்தகத்துக்குள்ளேயே வைத்திருந்தேன். என் பக்கத்து இருக்கை நண்பன் அதைப் பிடுங்கிக் கொண்டுபோய்த் தமிழாசிரியரிடம் கொடுக்க, அதைப் படித்தவர், வியப்படைந்தவராக வகுப்புக்கு வந்து, "இதை நீதானா எழுதினாய்?" என்று கேட்டு என்னைப் பாராட்டினார். என் எழுத்தார்வத்துக்கு முதல் மதகாக அமைந்தது அந் நிகழ்வு. அதுபோல கல்லூரிக் காலத்தில், கல்லூரி ஆண்டு மலருக்கு, 'கன்னி மாறா கவின் குமரி' என்றொரு பாடலைச் சந்த நயத்துடன் எழுதித் தமிழ்ப் பேராசிரியரிடம் கொடுத்தேன். அதைப் படித்து வியந்தவர், வகுப்பறையிலேயே என்னைப் பாராட்டி, 'மற்றொரு கம்பனைக் கண்டேன்' என்று சொன்னது என் எழுத்துப் பயிருக்கு நீரூற்றியது. தொடர்ந்து சிறுசிறு கவிதைகளையும், கதைகளையும் எழுத ஆரம்பித்தேன்.

க. அன்பழகன் பரிசு வழங்குகிறார்



கே: முதல் படைப்பு, எப்போது, எந்த இதழில் வெளியானது ?
ப: 1975ம் ஆண்டு கல்கி வார இதழில் 'காதல் சிறப்பிதழ்' வெளியிட்டார்கள். அதற்காக 'காதல் என்றால் ...?' என்றொரு போட்டி வைத்தார்கள். அப்போது எனக்கு வயது 19. போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் நான் அகிலா என்றொரு வாய் பேச வராத கற்பனைப் பாத்திரத்தை வைத்து, உண்மை நிகழ்வு போல் சிறு சம்பவம் ஒன்றை அஞ்சலட்டையில் எழுதி அனுப்பினேன். அது பிரசுரமானது. ஒரு வெகுஜன இதழில் வெளிவந்த என் முதல் படைப்பு அதுதான். அந்த ஊக்கத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

ஏவி.எம். சரவணன் கையால் பரிசு



கே: அழ. வள்ளியப்பா அவர்களுடனான நட்பு பற்றி....
ப: கோகுலம் சிறுவர் இதழ், சில காலம் நின்றுபோய், பின் மீண்டும் அழ. வள்ளியப்பாவை ஆசிரியராகக் கொண்டு 1982 முதல் வெளிவரத் தொடங்கியது. அப்போது நான் கோகுலத்திற்குச் சில சிறுகதைகளை எழுதி அனுப்பினேன். 'காணாமல் போன பயணச் சீட்டு' என்ற எனது சிறுகதையைப் புகைப்படத்துடன் வள்ளியப்பா பிரசுரித்தார். தொடர்ந்து எனது 'நிஜமும் நிழலும்', 'மாயத்திரை', 'கிறிஸ்துமஸ் பரிசு' எனப் பல கதைகளை கோகுலத்தில் பிரசுரித்தார். பள்ளி நாட்களில் யாருடைய பாடல்களைப் பாடப்புத்தகத்தில் படித்து மகிழ்ந்தேனோ, அதே கவிஞர், என் சிறுகதைகளை ஏற்றுப் பிரசுரிக்கிறார் என்பது எனக்குப் பெரும் உற்சாகத்தையும், பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்தது. அவரை நேரில் சென்று பார்க்க ஆவல் தோன்றியது.

கல்கியின் வெற்றி ரகசியம்
கல்கியின் புதினங்களை கல்லூரி நாட்களிலேயே படித்துவிட்டேன். ஒருமுறை, இருமுறையல்ல, பலமுறை. எத்தனையோ எழுத்தாளர்களின் கதைகளை, அவற்றில் வரும் கதை மாந்தர்களை ரசித்திருந்தாலும், கல்கி படைத்த கதாபாத்திரங்கள், குறிப்பாக சிவகாமி, நந்தினி, குந்தவை, பூங்குழலி, வந்தியத்தேவன், நாகநந்தி, ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரங்கள், மனதை விட்டு அகலாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. அதற்கு எனக்குக் கிடைத்த விடை, கல்கி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஓர் உறுதியான உளவியல் அடித்தளத்தின் மேல் கட்டி எழுப்பியிருப்பதுதான்; அத்தனை கதாபாத்திரங்களிலும் மனிதனை இயக்கும் ஆதார சக்தியான காதல் இழையோடு எழுதியிருப்பதுதான் என்பது புலப்பட்டது. எனவே மீண்டும் கல்கியின் வரலாற்றுப் புதினங்களை இந்தக் கோணத்தில் கருத்தூன்றிப் படிக்கலானேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, கல்கி முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமல்ல; சிறு பங்காற்றும் கதாபாத்திரங்களையும் இந்த உளவியல் கட்டமைப்பின் பேரிலேயே கட்டியிருக்கிறார் என்பது.

எனவே அவரது 20 கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு, அவர் வெளிக் கொணரும் காதல் உணர்வுகளை, உளவியல் அடிப்படையில், கம்பராமாயணக் கதாபாத்திரங்களோடும், சங்க இலக்கியம் காட்டும் தலைவன் தலைவியரின் உணர்ச்சி வெளிப்பாடுகளோடும், 'குயில் பாட்டு' போன்ற பாரதியாரின் சில படைப்புகளோடும் ஒப்பிட்டு, 'அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள் - ஓர் உளவியல் ஆய்வு' என்ற நூலைப் பல ஆண்டுகள் ஆய்வு செய்து எழுதி முடித்தேன். அது என் எழுத்துலகப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று உணர்கிறேன்.
- வி.ர. வசந்தன்


ஒருநாள், "நீங்கள் எழுதும் கதைகள் நன்றாக இருக்கின்றன. சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளுங்கள்" என்று அவர் கடிதம் எழுதினார். அதன்படி உறுப்பினரானேன். அவ்வாண்டு சங்கம் நடத்திய குழந்தை இலக்கியப் போட்டியில் நான் எழுதிய, 'கடமை நெஞ்சம்' நாவல் இரண்டாம் பரிசு பெற்றது. அதை சென்னை வானதி பதிப்பகத்தினர் நூலாக வெளியிடக் குழந்தைக் கவிஞரே பேருதவி செய்தார். அந்நாவல் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, 'சனிக்கிழமை புத்தக அலமாரி' என்ற பகுதியில் அதனைப் பாராட்டி விமர்சனம் செய்தது. சென்னை தொலைக்காட்சி 'நூல் அறிமுகம்' பகுதியில் புகழ்ந்தது.

அடுத்த பொதுக்குழுவில் என்னை அறிமுகப்படுத்திய குழந்தைக் கவிஞர், தாமே என் பெயரை முன்மொழிந்து நிர்வாகக்குழு உறுப்பினராக என்னை ஆக்கினார். அவரது இல்லத்திற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அவர் என்னை உபசரித்து, விருந்தோம்பி அன்பு பாராட்டியது மறக்க முடியாத நினைவுகள். குழந்தைக் கவிஞரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை. அவர் பாராட்டிய நட்பும், அன்பும் என் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லப் பாதை அமைத்துக் கொடுத்தன.

குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு



கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார் ?
ப: சிறு வயதில் நான் படித்தது குரும்பூர் குப்புச்சாமி, பி.டி. சாமி போன்ற எழுத்தாளர்களின் கதைகள். தொடர்ந்து கல்கியில் மாயாவி எழுதிய 'கண்கள் உறங்காவோ?' என்ற புதினத்தைப் படித்தது, என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது. அதில் வரும் தானாவதிப் பிள்ளை என்ற கதாபாத்திரம், எதிர்மறை பாத்திரப்படைப்பாக இருந்த போதிலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் கல்கியின் கதைகளில் மூழ்கித் திளைத்தது என் சிந்தனைக்கும் கற்பனைக்கும் உரமூட்டியது. சுஜாதாவின் புதிய நடை எழுத்துகள், ஒரு கால கட்டத்தில் என் மனதை மிகவும் ஈர்த்தன. சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அரு. ராமநாதன், லட்சுமி, சிவசங்கரி முதலியோர் என் கல்லூரி நாட்களில் நான் வாசித்த எழுத்தாளர்கள். தீவிர வாசகனாக ஆனபின் எஸ். ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், கி.ரா., போன்றோர் என் வாசிப்புக்குத் தீனி போட்டனர். என்றபோதிலும், என் ஆதர்ச எழுத்தாளர் பேராசிரியர் கல்கிதான். என்றும் நான் கல்கியின் காதலன்.

கே: மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள் ?
ப: எத்தனையோ பேர் இன்று நான் எழுதுவதை ரசித்துப் பாராட்டினாலும், அன்று நான் ஒரு ஆரம்ப எழுத்தாளனாக, என்னையே நான் அறியாதிருந்த காலகட்டத்தில், பல எழுத்தாளர்கள் முன்னிலையில் என்னை அறிமுகப்படுத்தி, "இவர் வி.ர. வசந்தன், குழந்தைகளுக்காக அருமையான சிறுகதைகளை எழுதுகிறார். இவரது கதைகளில் பாத்திரப் படைப்பு பிரமாதமாக இருக்கிறது" என்று குழந்தைக் கவிஞர். அழ. வள்ளியப்பா பாராட்டி, என்னை எனக்கு உணர்த்தினாரே, அதுதான் அழிக்க முடியாத கல்வெட்டாக மனதில் இன்றும் இருக்கிறது.

எழுத்தாளர் பிரபஞ்சனுடன்



கே: இன்றைய சிறார் இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன ?
ப: காலத்துக்கு ஏற்ற பெரும் மாற்றம் சிறார் இலக்கியத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விழுந்து விழுந்து சிறுவர் கதைகளைப் பெற்றோரும், குழந்தைகளும் படித்த காலம் மலையேறி விட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தில் வாசிப்பு என்பது அருகிவிட்டது.

குழந்தைகள் அலைபேசியிலும், வலைத்தளங்களிலும் மூழ்கிப் பொழுதைக் கழிக்கின்றனர். இன்று குழந்தைகளுக்கென்று பத்திரிகைகளும் அதிகம் வருவதில்லை. குழந்தைகளுக்காக எழுதுபவர்களின் நூல்களைப் பதிப்பிக்க எந்தப் பதிப்பகமும் முன்வருவதில்லை. அப்படியே பதிப்பித்தாலும் எழுத்தாளர்களிடமே பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு பதிப்பிக்கிறார்கள்.

வசந்தன் பெற்ற விருதுகள்
* ஏவி.எம் நிறுவன அறக்கட்டளை சார்பில், சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் ஒருமுறை.
* கவிஞர் செல்லக் கணபதி வழங்கிய செல்லப்பன் நினைவு தங்கப் பதக்கம்.
* எல்லப்பா-ரங்கம்மாள் அறக்கட்டளையின் வெள்ளிப் பதக்கம்
* புதுக்கோட்டை முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு
* எழுத்தாணி இலக்கிய அமைப்பினர் வழங்கிய 'செவாலியே சிவாஜி கணேசன் விருது' (கதம்பம் இதழ் இலக்கியப் பணிக்காக)


குழந்தைகளுக்காக எழுத முன்வருபவர்களில் சிலர், சில தனியார் அமைப்புகள் மற்றும் சாகித்ய அகாடெமி போன்றவை வழங்கும் பரிசுகள், விருதுகளை மனதில் கொண்டு எழுதுவதாகத் தெரிகிறது. சிறார்களுக்காக எழுதும்போது சில நியதிகளைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பதில் அழ. வள்ளியப்பா போன்ற முன்னோடிகள் உறுதியாக இருந்தனர். இன்று அவை காற்றில் பறந்து விட்டன. இன்றைய தலைமுறைச் சிறார்களுக்கு ஏற்ற வகையில், டிஜிட்டல் வேகத்திற்குப் போட்டியிடும் ஆர்வமே இன்றைய எழுத்துகளில் மேலோங்கித் தெரிகிறது. அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தி எழுதப்படும் அவ்வெழுத்துகளில், எழுத்துகள் இருக்கின்றன. ஆனால், இலக்கியம் இல்லை. காலத்தின் கட்டாயம் என்று இதனை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.

கவிஞர் நந்தலாலா கதம்பம் இதழைப் பெறுதல்



கே: நாட்டுப்புறப் பாடல்களிலும் உங்கள் ஆர்வம் இருந்திருக்கிறது . அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
ப: இயற்கையின் மடியில், கிராமியச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்குச் சிறு வயதில் விளையாட்டுகளில் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. பள்ளி முடிந்த பின், மாலையில் வயலோரம் அல்லது குளக்கரையில் சென்று நண்பர்களுடன் அமர்ந்திருப்பேன். அது எளிய கிராம மக்களின் வாழ்க்கையை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பைத் தந்தது. அவர்கள் வேலை செய்யும்போது பாடும் பாட்டுகள், பேசும் பாணி, உடை, நடத்தை இவற்றை உற்றுக் கவனித்ததன் விளைவே கிராமியப் பாடல்கள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. நான் எழுதிய பாடல்களைத் தொகுத்து 'மண் தந்த பண்' என்று கிராமிய மண்வாசனை கமழும் ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். அதில் 60 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் ஒரு தொகுப்பிற்கான பாடல்களை எழுதி வைத்திருக்கிறேன். விரைவில் அதுவும் தொகுப்பாக வெளிவரும்.

வசந்தன் வரைந்த படம்



கே: நீங்கள் நடத்தி வரும் கதம்பம் இதழ் பற்றி,அதனை எப்போது ஆரம்பித்தீர்கள்? அதன் முக்கிய கருதுகோள் என்ன ?
ப: கதம்பம் இருமாத இதழை 2009ம் ஆண்டு ஆரம்பித்தேன். இன்றுவரை 75 இதழ்கள் வெளிவந்து விட்டன. 32 பக்கங்களில் ஆரம்பித்த கதம்பம் இன்று 96 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த 14 ஆண்டுகளில் கதம்பத்தில் எத்தனையோ சிறுகதைகள், நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், கல்வெட்டுச் செய்திகள், தொல்லியல் ஆய்வுகள், கவிதைகள், வாழ்வியல் கட்டுரைகள், சிற்பக்கலை என்று எண்ணிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பிரசுரமாகி உள்ளன. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் கதம்பத்தில் எழுதுகிறார்கள். பல தொடர்கள் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. கதம்பத்தின் கருதுகோளே வாசிப்புச் சுவை குறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஒரு தரமான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் நிறைவேறி உள்ளதாகவே கருதுகிறேன். கதம்பம் தரம் வாய்ந்த இலக்கிய இதழ் என்று தமிழறிஞர்களும், வாசகர்களும் பாராட்டுவது மிகுந்த மன நிறைவைத் தருகிறது.

முதல் படைப்பு



கே: உங்கள் குடும்பம் பற்றி ....
ப: என் குடும்பம் சிறியது. என் மனைவி அபிசிந்தி, தமிழாசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் எழுத்து வேலைகளுக்கு உறுதுணை புரிகிறார். நான் நடத்தும் கதம்பம் இலக்கிய இதழுக்கு உதவியாசிரியராக இருக்கிறார். அவரும் எழுத்தாளர்தான். கதம்பத்தில் கதைகள் எழுதுவதோடு அச்சுப்பிழை, சந்திப்பிழை ஆகியவற்றைச் சரிபார்த்து உதவுகிறார்.

என் மகன் ஜெரேம் வில்சாண்டர், பொறியியல் பட்டதாரி. டென்மார்க் நாட்டின் டானிஷ் பாங்கின் இந்திய ஐ.டி. கிளையில் மானேஜராக பெங்களூரில் வேலை செய்கிறார். அவர் மனைவி கணித முதுகலைப் பட்டதாரி. அவர்களுக்கு ஒரு மகன். மழலை வகுப்பில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார்.

குடும்பத்தினருடன் வசந்தன்



கே: தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ப: தற்போது 'வலங்கையன் வாள்' என்ற வரலாற்று நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். 16ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் விஜயநகர மண்டலேசுவரராக கோட்டை கட்டி வாழ்ந்த வெங்கலராசன் என்பவரைப் பற்றிய கதை இது. 'வெங்கலராசன் கதைப் பாடல்' என்ற இலக்கியம் இருக்கிறது. அவரைப் பற்றிய பல கல்வெட்டுகள் இளவேலங்கால், திருக்குறுங்குடி, அணிலீஸ்வரம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. அவர் வெளியிட்ட நாணயங்களும் கிடைத்திருக்கின்றன. சாமிக்காட்டு விளை என்ற இடத்தில் அவரது கோட்டை இடிபாடுகள் இருக்கிறது. இதுவரை வரலாற்றுப் புத்தகங்கள் எதிலும் இடம்பெறாத அந்த மாவீரனைப் பற்றிய கதையை, பல தரவுகளின் அடிப்படையில் எழுதி வருகிறேன். இதுவரை 75 அத்தியாயங்கள் நிறைவடைந்து மூன்றாம் பாகம் தொடர்கிறது. இவ்வரலாற்றுப் புதினம் கதம்பம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கிறது. கதைக்கான படங்களையும் நானே வரைகிறேன். இக்கதைக்கு மட்டுமல்ல, கதம்பத்தில் வெளிவரும் பிற கதைகளுக்கும் நானே படம் வரைகிறேன். இவ்விதழ் அச்சில் மட்டுமே வெளிவருகிறது. இணைய இதழாக வெளியிட எண்ணம் உண்டு.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

வி.ர. வசந்தன் நூல்கள்
சிறார் நூல்கள்: கடமை நெஞ்சம், விதை நெல், ஒளிச்சுடர், வெற்றியின் விலை, அம்மாவின் அன்பு, மஞ்சள் ரோஜா, மலைக்கோட்டை மர்மம், இயற்கையின் காவல் கவசங்கள், உயர்ந்த மனம், தளராத உள்ளம், துருவ நட்சத்திரம் , நூலகச் சிற்பி ரங்கநாதன், கதைச் சக்கரவர்த்தி கல்கி, வெள்ளை மனம், உதயன் எங்கே?, ஜமீன் கோட்டை, அன்பு வெள்ளம், கூண்டுப் பறவை, பிறந்த மண், மங்காத தங்கம் (நாடகம்).
சிறுகதைத் தொகுப்பு: கருவேல முட்கள், நேர்ச்சைக் கடா, தேச பக்தர்கள், சங்கப் பூக்களும் சிந்தனை மலர்களும் (இலக்கியச் சிறுகதைகள்)
குறுநாவல்: இராசசூய வேட்டம், காதலாகி நிற்கும் பாவை, நெஞ்சம் மறந்தறியோம்.
நாவல்: கொந்தகைக் குயில்.
கட்டுரை நூல்கள்: அறிந்த உயிரினங்களும் அறியாத உண்மைகளும், அறிவியல் நோக்கில் அரிய உயிரினங்கள், அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள் (ஓர் உளவியல் ஆய்வு நூல்)
பாடல் நூல்: மண் தந்த பண் (கிராமியப் பாடல்கள்)
நாடகம்: மண்ணின் தாகம்
Share: 




© Copyright 2020 Tamilonline