Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | பொது | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
சதுரங்க வீரர்கள் R.B. ரமேஷ், ஆர்த்தி ராமசாமி
- அறிவொளி திருவேங்கடம், சாதனா அறிவொளி, ஆராதனா அறிவொளி|ஆகஸ்டு 2023|
Share:
சதுரங்கம் பாரதத்தில் தோன்றி இன்று உலகெங்கிலும் பரவியுள்ள விளையாட்டு ஆகும். இது கலையாகவும் அறிவியலாகவும் கூடப் பார்க்கப்படுகிறது. சதுரங்க ஆட்டத்தில் பதக்கங்கள் பல வென்று, 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்றிருப்பதோடு, இந்த அறிவுக்குச் சவாலான ஆட்டத்தைப் பலருக்கும் கற்றுக்கொடுத்து, பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் தம்பதிகளான ஆர்.பி. ரமேஷ், ஆர்த்தி ராமசாமி ஆகியோரை கௌரவித்தது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). இதற்காக அவர்களை அண்மையில் பேரவை தனது மாநாட்டிற்கு அழைத்திருந்தது. இது சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிவாழ் சதுரங்க ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தச் சதுரங்க தம்பதிகளை தென்றல் இதழுக்காக சதுரங்க ஆர்வலர்களான திரு அறிவொளி, செல்வி சாதனா மற்றும் செல்வி. ஆராதனா பேட்டி கண்டனர்.

★★★★★


அறிவொளி: வணக்கம். இந்தக் கேள்வி இருவருக்குமானது உங்களின் ஆரம்ப கட்ட சதுரங்க வாழ்க்கை, சந்தித்த சவால்கள், கடந்து வந்த பாதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ரமேஷ்: நான் 1988-ஆம் ஆண்டு எனது 12 வது வயதில், விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் 'கிராண்ட் மாஸ்டர்' ஆன கால கட்டத்தில், அவரைப்போல நானும் கிராண்ட் மாஸ்டர் ஆக முடியும் என்ற உந்துதலோடு சதுரங்கம் ஆடத் தொடங்கினேன். அதிகச் சதுரங்க போட்டிகளோ, சதுரங்கம் பற்றிய புத்தகங்களோ, இணைய வசதியோ, சதுரங்கப் பயிற்றுநர்களோ இல்லாத காலம் அது. போட்டிகளில் ஆடும் விளையாட்டுகளை வைத்துக் கொண்டும், நண்பர்களுடன் ஆடியும் நாமேதான் படிப்படியாக முன்னேற வேண்டும். இதற்கு ஆகும் நேரம் மிக அதிகம். பெரும்பாலான நேரங்களில் நாம் இழைக்கும் பிழைகளுக்கு விடை தெரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் சதுரங்க வீரர்களை ஊக்குவிக்க ஆரம்பித்தனர். இந்திய அரசும் சதுரங்க வீரர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்தது. அப்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே என் விளையாட்டைத் தொடர்ந்தேன்.

ஆர்த்தி: 1989-ஆம் ஆண்டு நான் சதுரங்கம் ஆடத் தொடங்கினேன். பொதுவாக பள்ளியில் நடக்கும் எல்லா போட்டிகளுக்கும் பெயர் கொடுக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதேபோல் பள்ளி சதுரங்கப் போட்டியில் தற்செயலாகப் பங்கேற்றேன். ஆரம்பத்தில் என் அண்ணன் சொல்லிக் கொடுத்ததை வைத்து ஆடி, அந்தப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அதைத் தொடர்ந்து இன்னும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்படிச் சதுரங்கம் சத்தமில்லால் என் வாழ்வில் நுழைந்தது.



அறிவொளி: உங்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த, உங்களால் இன்றும் மறக்க முடியாத உங்கள் சதுரங்க ஆட்டம் ஒன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ரமேஷ்: நான் சதுரங்கம் ஆட ஆரம்பித்ததிலிருந்தே மிகவும் தன்னம்பிக்கையோடு ஆடுவேன். இது என் உடல் மொழியிலேயே தெரியும். திறமை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையே வெற்றியைத் தேடித்தரும் என்ற உளவியலை மிகச் சிறு வயதிலேயே நான் தெரிந்து வைத்திருந்தேன். அது எனக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

என் முதல் வெற்றி மாநில அளவில் 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் சாம்பியன் பட்டத்தை மூன்று முறையும், மாநில யூனியன் சாம்பியன் பட்டத்தை மூன்று முறையும் வென்றேன். தேசிய அளவில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன் பட்டத்தையும் 2 முறை 1991 மற்றும், 1992-ல் வென்றேன். அதன் மூலம் உலக அளவிலான 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் விளையாடத் தேர்வானேன். 1996-ஆம் ஆண்டு 'இண்டர் நேஷனல் மாஸ்டர்' ஆனேன். 2002-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சாம்பியன் பட்டத்தை வென்றேன். 2003-ஆம் ஆண்டு 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்றேன். 2007-ஆம் ஆண்டு காமன் வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பின் முழுநேர பயிற்றுநர் ஆனேன். பிரிட்டிஷ் சாம்பியன் போட்டியில் 'கிராண்ட் மாஸ்டர்' அபிஜித் குண்டேவை ஏழாவது சுற்றிலும், 'கிராண்ட் மாஸ்டர்' திப்யேந்து பருவாவை எட்டாம் சுற்றிலும் வென்று அதே போட்டியில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்ற இந்த விளையாட்டுகள் இரண்டுமே என் வாழ்வில் மறக்க முடியாத விளையாட்டுகள்.

ஆர்த்தி: ஆசிய அளவில் சப்-ஜூனியர் (Sub Junior) சாம்பியன் பட்டத்தை வென்றேன். போட்டியிட்ட அனைத்துச் சுற்றுகளிலும் வெற்றி பெற்றேன். அது இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ரெகார்டு. உலக அளவிலான 18-வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் நான். 'கிராண்ட் மாஸ்டர்' விக்டர் கார்ச்னாயுடன் (Viktor Korchnoi) விளையாடி டிரா செய்த ஆட்டம் என்றும் என் வாழிவில் மறக்க முடியாத ஆட்டமாகும்.

அறிவொளி: விக்டர், கார்போவுடனும் (GM Anatoly Karpov) உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லப் போட்டியிட்டவர். அவருடன் டிரா என்பது, அதுவும் அத்தனை சிறிய வயதில், மிகப்பெரிய விஷயம்! பாராட்டுகள் ஆர்த்தி.

அறிவொளி: எந்த உந்துதலால் நீங்கள் சதுரங்கப் பயிற்றுநர் ஆனீர்கள்?
ரமேஷ்: நான் விளையாட ஆரம்பித்த காலத்தில் சிறு சிறு தவறுகளால் நிறையத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். பிறகு மூத்த விளையாட்டு வீரர்களை அணுகித் தெளிவு பெற்றிருக்கிறேன். இதனால் நிறைய நேரவிரையம் ஆவதை நான் உணர்ந்தேன். இந்தியாவின் இளைய தலைமுறை வீரர்களும் சரியான வழிகாட்டுதல் இன்றி இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவில் சதுரங்க விளையாட்டுக்கென எந்தப் பதிப்பகமும் இன்றளவும் இல்லை. மற்ற நாடுகளில் இருந்து புத்தகங்களை வரவழைத்துதான் கற்க வேண்டிய நிலை இருந்தது. 1998-ஆம் ஆண்டு இந்தியன் ஜூனியர் அணிக்குக்குத் தலைமை ஏற்று இரான் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கு கொண்டோம். ஆடவர் மற்றும் பெண்டிர் அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். என்னுடைய 22-ஆம் வயதில் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு என் மனைவி ஆர்த்தியின் பெற்றோர் என்னை அணுகி அவருக்குச் சதுரங்கம் பயிற்றுவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆர்த்தியே என்னுடைய முதல் மாணவி.

அதே ஆண்டு 18-வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் உலக அளவில் ஆர்த்தி வெற்றி பெற்றார். பொதுவாக இதுபோன்ற வெற்றிகளை இந்தியா பெற்றதில்லை. அவரது வெற்றி என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. அதனால் நான் முழுநேரப் பயிற்றுநர் ஆனேன். தொடர்ந்து நிறைய மாணவர்கள் என்னை அணுகினர். என்னிடம் கற்ற மாணவர்களில் பலர் 'கிராண்ட் மாஸ்டர்', 'இண்டர் நேஷனல் மாஸ்டர்' ஆயினர். எனவே 2008-ஆம் ஆண்டு, சதுரங்கம் ஆடுவதை விட்டுவிட்டு சதுரங்கம் பயிற்றுவிக்க முடிவெடுத்தேன். இந்தின் ஆயில் நிறுவனத்திலிருந்து விலகி 'செஸ் குருகுல்' நிறுவனத்தைத் தொடங்கினேன்.

ஆர்த்தி: நான் ஏர் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சதுரங்கம் பயிற்றுவிப்பதை பகுதிநேர வேலையாகக் கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக முழுநேரப் பயிற்றுநராக சிறுமியர் மற்றும் பெண்களுக்குச் சதுரங்கம் சொல்லித் தருகிறேன். பல உலக, ஆசிய, தேசிய அளவிலான பெண் சாம்பியன்களை உருவாக்கி இருக்கிறேன். என் மாணவிகளின் வெற்றி என்னை உற்சாகம் தருகிறது. இன்னும் பல சாம்பியன்களை உருவாக்க விரும்புகிறேன்.



அறிவொளி: நீங்கள் போட்டிகளுக்கோ அல்லது வெளிநாட்டு சுற்றுப் பயணமோ செல்லாத நாட்களில் உங்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்?
ரமேஷ்: நான் 2008-ஆம் ஆண்டிலிருந்து முழுநேர பயிற்றுநராக இருக்கிறேன். எல்லா வயதினருக்கும், பல்வேறு நாட்டினருக்கும் பாடம் சொல்லித்தர வேண்டி இருக்கும். அதற்கு ஏற்ப என்னை நான் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவேன். தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து நான்கு மணிக்கு வகுப்பைத் தொடங்குவேன். எட்டு மணிவரை பாடம் நடத்துவேன். காலை உணவை முடித்தபின் ஒன்பது அல்லது ஒன்பதரை மணிக்கு மீண்டும் தொடங்குவேன். நான்கு மணி நேரம் வகுப்பு நடத்துவேன். இந்திய மாணவர்களுக்கு இந்த நேரத்தில் குழுவாக வகுப்பெடுப்பேன். பிறகு மதிய உணவு, இரண்டு மணி முதல் ஐந்து மணிவரை வகுப்புகள் இருக்கும். மாலையில் 'செஸ் குருகுல்' வகுப்புகள் அல்லது ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவேன்.

ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வகுப்புகள் நடத்துவேன். வேலைப் பளு மிகுதியானாலும், பல்வேறு வயதினருக்கும், நாட்டினருக்கும் தினமும் பாடம் சொல்லித் தருவது ஓர் இனிய அனுபவம். சதுரங்கம் தொடர்பான புத்தகங்களை படிப்பதை நான் தவிர்க்கிறேன். அந்த புத்தகங்களால் நான் உந்தப்பட்டு மாணவர்களைப் பயிற்றுவித்தால், அவர்களின் நிஜமான சவால்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். மாணவர்கள் சந்திக்கும் சவால்களை அவர்கள் நிலையிலிருந்து புரிந்துகொண்டு, அதற்கான தீர்வைக் கண்டறிந்து நெறிப்படுத்துவேன். கடந்த பத்து வருடங்களில் நிறையக் கற்றுக்கொண்டேன். இப்போதெல்லாம் எட்டு அல்லது பத்து மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்துகிறேன்.



அறிவொளி: இந்தப் பத்து வருடத்தில் சதுரங்கம் உலக அளவில், இந்திய அளவில், அமெரிக்கா போன்ற நாடுகளில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
ரமேஷ்: சதுரங்கம் பல காரணிகளால் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளது. பனிப்போர் சமயத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளில் பல மாற்றங்களை அடைந்தது. சோவியத் யூனியன் சதுரங்க ஆட்டத்தைப் பள்ளிகளில் புகுத்தியது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கச் சதுரங்கம் ஒருவழி என்று சோவியத் நம்பியது. அதனால் பல உலக சாம்பியன்களை அந்நாடு உருவாக்கியது. 1970-இல் பாபி ஃபிஷர் (Bobby Fischer) ரஷ்யா சென்று அவர்களின் புத்தகங்களைப் படித்து நிறையக் கற்று 1972-இல் உலக சாம்பியன் ஆனார். இதனால் செஸ் மற்ற நாடுகளிலும் பிரபலம் அடையத் தொடங்கியது. 90-களில் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது, 'கிராண்ட் மாஸ்டர்கள்' அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததால் சதுரங்கம் சோவியத் யூனியனுக்கு வெளியேயும் பரவ ஆரம்பித்தது.

பிறகு கணினித் தொழில் நுட்பத்தால் மொழித்தடை தகர்ந்தது. மற்ற ஆட்டக்காரர்களின் ஆட்டங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடிந்தது. இணையம் சதுரங்கத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. நேரலையில் ஆட்டங்களை கண்டுகளிக்கவும், இணையத்தில் கிடைக்கும் ஆட்டங்களைத் தரவிறக்கம் (download) செய்து, பார்த்துக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 20 வருடங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இளைய தலைமுறையினர் 'இண்டர் நேஷனல் மாஸ்டர்', 'கிராண்ட் மாஸ்டர்' தகுதிக்கு முன்னேறியுள்ளனர். அவர்கள் இந்திய அணியை அடுத்த கட்டத்து நகர்த்தி, இந்தியாவைச் சதுரங்கத்தில் ஒரு வல்லரசாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா அதிக அளவில் சதுரங்கம் விளையாடும் நாடாக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பத்து விளையாட்டு வீரர்களின் சராசரி புள்ளிகளைக் கணக்கில் எடுத்தால், இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜூனியர் பிரிவில் ஆண்களில் முதல் ஏழு இடத்தைப் பிடித்தவர்களில் நான்கு பேர் இந்தியர்கள், பெண்களில் ஆறில் இரண்டு பேர் இந்தியர்கள். இந்திய சதுரங்க சாம்பியன்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாவும், அவர்களின் ஆட்டங்கள் மிகவும் பிரபலமானவை ஆகவும் பேசப்படுகின்றன. இந்தியாவில் நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்றுநர்களாக உள்ளனர்.

இந்தியா சதுரங்கத்தில் உச்சகட்ட வளர்ச்சியில் உள்ளது என்றே சொல்லலாம். கொரோனா தொற்றின் போது சதுரங்கம் ஒரு சிறந்த இணையவழி விளையாட்டாகப் பிரபலமடைந்தது. அது பல புதிய ஆட்டக்காரர்களை உருவாக்கியது. உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (GM Magnus Carlsen) இணையவழி விளையாட்டில் பங்கேற்றது, மற்ற கிராண்ட் மாஸ்டர்களையும் ஊக்குவித்தது. இதனால் பரிசுத்தொகையும் உயர்ந்தது.

அமெரிக்காவில் செஸ் போர்டுகளின் விற்பனை அதிகரித்தது. யூட்யூப் சேனல்கள் உருவாயின, அந்தச் சேனல்களுக்குப் பல்லாயிரக் கணக்கானோர் சப்ஸ்க்ரைப் (subscribe) செய்தனர். இதன் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பைச் சதுரங்க வீரர்கள் பெற்றனர். வெஸ்லி சோ (GM Wesley So), அரோனியன் (GM Aronian), ஃபாபியோனா கருவானா (GM Fabiano Caruana) போன்றவர்களின் வரவால் அமெரிக்காவும், சதுரங்கத்தில் வளர்ச்சி கண்டது. உலகில் மிகச்சிறந்த சதுரங்க அணியை அமெரிக்காவும் பெற்றுள்ளது. மொத்தத்தில் சதுரங்க ஆட்டக்களம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.


அறிவொளி: சதுரங்கம் ஆடக் கற்பவர்கள், விளையாட்டு வீரர்களாகத் தம்மைத் தயார் செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
ரமேஷ்: இன்றைய கால கட்டத்தில் சதுரங்கம் மிகவும் போட்டி நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது. பிரக்ஞானந்தா பத்து வயதில் 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' ஆனார். பன்னிரண்டு வயதில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்று உலகின் இரண்டாவது இளைய 'கிராண்ட் மாஸ்டர்' ஆனார். ஆனால் நானோ பன்னிரண்டு வயதில்தான் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தேன். இளைய தலைமுறையில் பலர் உலக சாதனைகளைத் தகர்த்துக்கொண்டிருக்கிறார்கள். குறுகிய காலத்தில் பிரக்ஞானந்தாவின் சாதனையை குகேஷ் (GM Gukesh) முறியடித்தார்.

சதுரங்கத்தில் FIDE rating 2300 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற விரும்புபவர்கள் ஆரோக்கியமான சூழலைத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். சதுரங்கம் கற்றலில் அதீத ஆர்வமும் தினமும் சில மணி நேரம் அதற்காக ஒதுக்கியே தீருவேன் என்ற உறுதியும் தேவை. திறமையாக விளையாட நிறையப் படிப்பும் பயிற்சியும் அவசியம். இப்போதெல்லாம் இணையம் மூலம் சிறந்த பயிற்றுநர்களை அணுகி அவர்களிடமிருந்து கற்க முடியும். பயிற்றுநரின் திறம் மற்றும் அவர்களிடம் பயின்ற மாணவர்களின் திறன் போன்ற காரணிகளை அளவு கோலாகக் கொண்டு உங்களுக்கேற்ற ஆசானை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். அப்படி ஒரு ஆசான் அமைந்த பின் அவரே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று அமர்ந்துவிடக் கூடாது. மாணவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆசிரியர் ஒரு தூண்டுகோலாகவும், நெறிப்படுத்துபவராகவும் மட்டுமே இருக்க முடியும். உங்கள் ஈடுபாடும், உழைப்பும், அர்ப்பணிப்பும் சரியான விகிதத்தில் இருக்கும் பட்சத்தில் சதுரங்கம் சுயமாகக் கற்றுக்கொள்ளக் கூடிய ஆட்டம்தான். சதுரங்க ஆட்டத்தில் பல வகைகள் உண்டு சிலர் 'aggressive style' ஆக ஆடக்கூடியவர்கள். சிலர் 'positional style' ஆக ஆடக்கூடியவர்கள். சிலர் இரண்டையும் கலந்து ஆடுவார்கள். இவை அனைத்தையும் புரிந்துகொண்டு ஆட வேண்டும். நல்ல பகுத்தாயும் திறனும், கூரிய கவனமும் அவசியம் தேவை. ஆரம்ப நிலையில் தொடக்க ஆட்டத்தில் (opening) அதிக கவனம் தேவை இல்லை, நடு ஆட்டம் (middle game) மற்றும் இறுதி ஆட்டத்தில் (end game) அதிக கவனம் செலுத்த வேண்டும்.



சாதனா: ஒரு விளையாட்டு வீரராக எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. தொடக்க ஆட்டம் (Opening) பலவற்றைக் கற்க வேண்டுமா? அல்லது ஒரு சில தொடக்க நகர்த்தல்களைக் கற்றுக்கொண்டால் போதுமா?
ரமேஷ்: நிறைய openings படிக்காமல் நடு ஆட்டம் (middle game) மற்றும் இறுதி ஆட்டம் (end game) இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். FIDE rating 2200 புள்ளிகள் பெறும்வரை உங்கள் பகுத்தாயும் திறனை வளர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிறையத் தொடக்கங்களை மனப்பாடம் செய்யாமல், குறிப்பிட்ட சில தொடக்க ஆட்ட நுணுக்கங்களைத் கற்றுத் தேர வேண்டும். இதனால் உங்களுடன் விளையாடுபவர்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆட்டத்தைத் தொடங்குவீர்கள் என்பது நன்றாகத் தெரிந்தாலும் பரவாயில்லை. சிறந்த நடு ஆட்டமும், இறுதி ஆட்டமும் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தரும்.

அறிவொளி: ஒரு இளம் சதுரங்க ஆட்டக்காரர் சதுரங்கத்துக்கென எத்தனை மணி நேரம் தினமும் செலவிட வேண்டும்?
ஆர்த்தி: ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். நிறைய மெனக்கெட வேண்டும்.

ரமேஷ்: பள்ளிப்பாடம், வீட்டுப்பாடம், சதுரங்கம் என அனைத்துக்கும் நேரம் ஒதுக்குவது கடினம். இளவயதில் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது. போகப்போக வீட்டுப்பாடச் சுமை ஏறும்போது அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.

கிராண்ட் மாஸ்டர் R.P. ரமேஷ்
பிரிட்டிஷ் சாம்பியன் (2002)
காமன்வெல்த் சாம்பியன் (2007)
ஆசியாவின் சிறந்த சதுரங்க கோச் (Coach of the year in Asia - 2022)
15 வருடங்களாக இந்திய சதுரங்க அணியின் பயிற்றுநர்
ஸ்ஃபோர்ட்ஸ் ஸ்டாரின் 2020-ஆம் ஆண்டின் சிறந்த பயிற்றுநர்.

மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆர்த்தி ராமசாமி
உலக சாம்பியன், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவு (1999)
இந்திய தேசிய மகளிர் பிரிவு சேம்பியன் (2003)

'செஸ் குருகுல்'
R.P. ரமேஷும் ஆர்த்தி ராமசாமியும் 'செஸ் குருகுல்' (Chess Gurukul Academy) என்ற பயிற்சிப் பள்ளியை நிறுவி எண்ணற்ற கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளனர். பிரக்ஞானந்தா (GM Praggnanandhaa), ப்ரானேஷ் (GM Pranesh) போன்ற உலகின் மிகச்சிறந்த சதுரங்க வீரர்களை உருவாக்கியதில் இவர்களின் 'செஸ் குருகுல்' நிறுவனத்தின் பங்கு மிகப் பெரியது.


அறிவொளி: கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்குவதில் பெற்றோரின் பங்களிப்பு என்ன? அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
ரமேஷ்: இதில் பெற்றோர் பங்கு மிக முக்கியம். சதுரங்கத்தை ஒரு போட்டியாக மட்டும் பார்க்காமல், மாணவர்களில் கூர்ந்து கவனிக்கும் திறன், அறிவாற்றல், மாதிரிகளை வகைப்படுத்தல் (Pattern recognition) மற்றும் புரிந்து கொள்ளும் திறனை அதிகரித்தல் போன்ற பல பயன்கள் உள்ளன. தினமும் சதுரங்கம் படிக்க வேண்டும் என்பதே பல குழந்தைகளுக்குத் தெரியாது. தினமும் பயில்வதற்கான ஊக்கத்தைப் பெற்றோர் தரவேண்டும். படிப்பு மற்றும் சதுரங்கம் இரண்டுக்கும் எவ்வாறு நேரம் ஒதுக்குவது என்பதைச் சொல்லித்தர வேண்டும். சிறந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். ஆரம்ப காலத்தில் அவர்கள் பெற்ற புள்ளிகள் (rating) எவ்வளவு என்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. அப்போது சிறு சிறு பிழைகளால் நிறையத் தோல்விகள் நிகழும். புள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தால் குழந்தைகள் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் நம்பிக்கை இழந்து ஆட ஆரம்பிப்பார்கள். பெற்றோரும், பயிற்றுநர்களும் எதிர்மறையாக விமர்சித்தால் மாணவர்களின் தன்னம்பிக்கை குறையும். அவர்கள் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தோடு ஆடுவார்கள். ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

ஆர்த்தி: குழந்தைகள் ஆடி, பிழை செய்து, பிழையிலிருந்து பாடம் கற்று, தோற்று, தோற்ற விளையாட்டுகளில் இருந்து வெற்றி பெறுவதற்கான களத்தை அவர்களுக்கு அமைத்துக்கொடுங்கள். பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் தப்பே செய்யக்கூடாது என்று நினைக்கிறார்கள். சதுரங்கம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் பிழைகளிலிருந்து கற்றல் மிகவும் முக்கியம். எனவே அவர்களுக்கான ஸ்பேஸைக் கொடுங்கள்.

அறிவொளி: இம்மானுவல் லாஸ்கரின் (GM Emanuel Lasker) மேற்கோள் ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன்: "ஆட்டத்தில் ஒரு சிறந்த நகர்வைக் கண்டுபிடித்தாலும், அதைவிடச் சிறந்த நகர்வைத் தேடு" (if you find a good move, find a better one). சிறந்த நகர்வைக் கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?
ரமேஷ்: இளவயதில் இந்த மேற்கோளைக் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தம் பிடிபட்டது. சற்றே உற்று நோக்கிப்பார்த்தால், ஒவ்வொரு முறையும் நாம் நினைக்கும் ஒவ்வொரு நகர்வும் சிறந்த நகர்வு ஆகிவிட முடியாது. சதுரங்கப் பலகையில் இருக்கும் அப்போதைய நிலைக்கு ஏற்ற நகர்வை ஊகிக்க, முதலில் சிறந்த நகர்வை முடிவு செய்யவேண்டும். அடுத்து இன்னும் சிந்தித்து மேலுமொரு சிறந்த நகர்வை மனதில் நிறுத்தி இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவு செய்யவேண்டும். சில நேரம் நீங்கள் பார்க்கும் பலகை உங்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பாத position ஆக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ள, நம் மனமும் மூளையையும் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான பயிற்சிகள் சிறந்த நகர்வை ஊகிக்க வழி செய்யும்.

ஆராதனா: டிங் லிரன் (GM Ding Liren) மற்றும் இயான் நிப்பாம்நிஷிக்கு (GM Ian Nepomniachtchi) இடையே சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
ரமேஷ்: டிங் லிரன் மற்றும் இயான் நிப்பாம்நிஷிக்கு இடையே வெற்றி தோல்விகள் மாறி மாறி இருந்தன. பொதுவாக உலக அளவில் போட்டிகள் நடக்கும்போது இரு தரப்பிலும் எந்தப் பிழையும் இல்லாமல் ஆடுவார்கள். அதனால் பெரும்பாலான ஆட்டங்கள் டிராவில் முடியும். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் ஃபேபியோனா கருவானா (Magnus Carlsen vs Fabiano Caruana), மேக்னஸ் கார்ல்சன் மற்றும் சர்கே கரியாக்கின் (Magnus Carlsen vs Sergey Karjakin) போன்றோரின் உலக சாம்பியன் ஆட்டங்கள் டிராவில் முடிந்து, இறுதியில் 'ராப்பிட் செஸ்' (Rapid Chess) மூலம் வெற்றிமுடிவு செய்யப்படும். இந்த முறை நிப்பாம்நிஷி மற்றும் டிங் லிரன் இருவருமே, நிறையத் தவறுகள் செய்தனர். அதனால் வெற்றி தோல்வி அதிகம் நிறைந்ததாக இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி அமைந்தது. உலகில் பல யூட்யூப் சானல்கள் இந்தப் போட்டியை ஒளிபரப்பின. மேக்னஸ் கார்ல்சன் ஒரு சிறந்த ஆட்டக்காரர். இந்த வருடம் அவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் போனதில் எனக்கு வருத்தம் உள்ளது. இது சதுரங்க உலக்குக்குப் பேரிழப்பு. டிங் லிரன் சிறந்த ஆட்டக்காரர். இந்த வெற்றிக்கு மிகவும் தகுதி உடையவர். ஒவ்வொரு முறை தோற்கும்போதும் அவர் மீண்டெழுந்தார். அவரின் மன உறுதி மிகவும் போற்றுதலுக்கு உரியது.



அறிவொளி: பெண்கள் பார்வையில் சதுரங்கம் எவ்வளவு வித்தியாசமானது. சதுரங்க விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
ஆர்த்தி: பெண்களுக்கெனச் சதுரங்க விளையாட்டில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வெளி நாடுகள், வெளி ஊர்களுக்குப் பயணம் செய்வது கடினம். பயிற்சி நேரம், உழைப்பு, நிறையப் படிக்க வேண்டும், இளவயதில் இவை எல்லாம் சாத்தியம். வயது அதிகமாகும் போது மற்ற துறை ஆர்வங்கள் தலையெடுக்கும். மேலும் வெற்றி தோல்விகளைக் கையாள்வதில் கொஞ்சம் பெண்களுக்கு உளவியல் சிக்கல்கள் இருக்கும்.

அறிவொளி: சதுரங்கத்தில் ஆர்வமுள்ள குடும்பங்கள் அதற்கென நிதி ஒதுக்க வேண்டுமா? குழந்தைகளுக்குப் பயிற்சி தர ஆகும் செலவால் இவர்களின் குடும்ப நிதிநிலையில் ஏற்படும் அழுத்தங்களைப் பற்றி கூற முடியுமா?
ரமேஷ்: 20 ஆண்டுகளுக்கு முன் சதுரங்கம் கற்க அதிகச் செலவு ஆகாது. ஆனால் போட்டி அதிகரிக்க அதிகரிக்க, பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி (GM Arjun Erigaisi), குகேஷ், நிஹால் சரின் (GM Nihal Sarin) போன்ற இளம் வீரர்கள் பலர் உருவாக உருவாக, இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளும் சதுரங்கம் ஆட வேண்டுமென விரும்புகிறார்கள். சரியான பயிற்றுவிநரைக் கண்டறிந்து, கற்பிக்க ஆகும் செலவு அதிகம். ஓரளவு நன்றாக விளையாட ஆரம்பித்த பின் ஊர் ஊராகப் போய் போட்டிகளில் பங்குகொள்ள வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று விளையாடுகிறார்கள். அவ்வாறு செல்லும் போது குறைந்தது மூன்று போட்டிகளாவது ஆடிவிட்டு வருவார்கள். ஒவ்வொரு போட்டியும் ஒன்பது நாள் நடக்கும். போக்குவரத்து, தங்குமிடம், உணவு, உள்ளூர்ப் போக்குவரத்து, விசா போல நிறையச் செலவுகள் இருக்கும். இளவயதிலேயே திறமை உள்ள ஆட்டக்கார்களாக இருக்கும் மாணவர்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் (sponsorship) கிடைக்க வாய்ப்பு இருக்கும். இல்லையென்றால் மொத்தச் செலவையும் பெற்றோர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

அறிவொளி: சதுரங்க வல்லரசாக இருக்கும் ரஷ்யா, அதற்கு அடுத்ததான இந்தியா தவிர்த்து மற்ற நாடுகள் பற்றிப் பேசமுடியுமா? இளம் இந்திய வீரர்களில் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது.
ரமேஷ்: குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி, நிஹால் சரின் இந்த நால்வருக்குமே உலக சாம்பியன் ஆக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் 82 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள், இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவை அடுத்து சீனா சதுரங்க உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு முந்தைய ஒலிம்பியாட் போட்டிகளில் அவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு சீன மங்கையர் விளையாடினர். அடுத்த இடத்தில் உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இரான், ருமேனியா போன்ற நாடுகள் வரிசையில் இருக்கின்றன.



ஆராதனா: விளையாடு பவர்களின் உடல்மொழியில் (body language) தன்னம்பிக்கை காட்டுவதால் சதுரங்க ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமா?
ரமேஷ்: ஒரு சதுரங்க ஆட்டக்காரர் எப்போதும் தன்னம்பிக்கையோடு விளையாட வேண்டும். பல சிறந்த ஆட்டக்கார்கள் ஏதோ காரணத்தால் தங்களைக் குறைவாக நினைத்துக்கொண்டு நம்பிக்கை இல்லாமல் ஆடித் தோற்றதைப் பார்த்திருக்கிறேன். அதே போல் சாதாரண ஆட்டக்காரர்கள், தன்னம்பிக்கையோடு ஆடி வெற்றி பெற்றதைப் பார்த்திருக்கிறேன். நம்மைப்பற்றி குறைவான மதிப்போ, நம்மேல் நமக்கே சந்தேகமோ இருந்தால் வெற்றி பெறுவது கடினம். பலர் பொதுவாக என் கணிப்பு சரியில்லை, நம்மிடம் இருக்கும் குறைகளாக நாம் நினைப்பவை எல்லாமே எளிதில் சரி செய்து கொள்ளக்கூடியவையே. நான் சரியாகக் கணிப்பதில்லை, பகுத்தாய்வதில்லை, இறுதி ஆட்டம் சரியாக வரவில்லை போன்ற குறைகள் எல்லாமே நமக்கு பலவீனம் இல்லை. அவற்றுக்காக நேரம் ஒதுக்கிப் படித்தால் சரி செய்து கொள்ள முடியும்.

தன்னம்பிக்கையோடு ஆடுங்கள். உடல்மொழியைப் பொருத்தவரை உங்கள் எதிரில் ஆடுபவரின் உடல்மொழியை நிராகரியுங்கள். சில நேரம் உங்கள் எதிரில் ஆடுபவர் விளையாடும் போது கடிகாரத்தை கடினமாக அழுத்துவது, சதுரங்கக் காய்களை தரையில் போடுவது போன்ற செயல்களைக் கண்டு கொள்ளாமல் உங்கள் ஆட்டத்தில் முழு கவனத்தைச் செலுத்துங்கள். நீங்கள் வெள்ளை நிறக் காய்களில் விளையாடினால், கருப்பைப் போட்டியாளராக கொள்ளுங்கள். கருப்புக் காய்களை ஆடினால், வெள்ளை காய்களைப் போட்டியாளராகக் கொள்ளுங்கள்.

சாதனா: என் அடுத்த கேள்வி, பெண் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிகையை அதிகரிக்க உங்களிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?
ஆர்த்தி: 'செஸ் குருகுல்' அமைப்பில் நிறையச் சிறுமிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். அவர்களில் பலர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சாதனா: போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆட்டத்துக்கும் அடுத்த ஆட்டத்துக்கும் இருக்கும் இடைவெளியில், நாம் ஆட்டங்களை பகுப்பாய்வு (analysis) செய்வது எவ்வளவு முக்கியம்?
ஆர்த்தி: தொடக்க ஆட்டத்தில் ஏதாவது பிழைகள் செய்திருந்தால் அதை எடுத்துப் பார்த்து திருத்திக்கொள்வது நல்லது. மற்றபடி முழு ஆட்டத்தையும் பகுப்பாய்வு செய்வது அவசியமற்றது. அது அடுத்த ஆட்டத்தை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் தோற்ற ஆட்டத்தில், தவறவிட்ட தருணங்களை ஆய்ந்து பார்ப்பது அடுத்த ஆரோக்கியமான ஆட்டத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது.

ரமேஷ்: பெரும்பாலான பயிற்றுநர்களும், பெற்றோர்களும் ஒவ்வொரு ஆட்டமும் ஆழமாக அலசப்பட வேண்டும் என்றே நினைப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை செய்த பிழைகளை அடுத்த சுற்றில் செய்யக்கூடாது என்ற நல்லெண்ணமே அதற்குக் காரணம். ஆனால் சதுரங்கத்தில் பிழைகள் நிகழ்வதுண்டு. குறிப்பாக நீங்கள் ஒரு ஆட்டத்தில் தோற்றிருந்தால் அந்த இழப்பில் இருந்து சீக்கிரம் வெளியில் வரவேண்டும். மீண்டும் இழப்பை அசை போடாமல் அடுத்த வெற்றியை நோக்கி உங்கள் பயணம் நகர வேண்டும்.



அறிவொளி: உங்கள் நீண்ட நெடிய சதுரங்கப் பயணத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான, உற்சாகம் தரும் கதை இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமா?
ரமேஷ்: காரைக்குடியில் ஒரு மாணவனைப் பயிற்றுவித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெயர் ப்ரானேஷ் (Pranesh). மிகவும் ஏழைக் குடும்பம். 16 வயது இளைஞன். அவனின் தாயார் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு உணவு சமைப்பவர். தந்தை விவசாயி. ஆறு வருடங்களுக்கு முன் அவருக்குச் சதுரங்கம் சொல்லித்தர ஆரம்பித்தேன். ப்ரானேஷ் ரயில் ஏறி காரைக்குடியில் இருந்து சென்னைக்கு வருவார். அவர் கணினிகூட இல்லாமல் சதுரங்கம் கற்றார். இந்தச் சூழலில் 13 வயதில் அவர் 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' ஆனார். வெளிநாடு சென்று விளையாடும் அளவுக்கு அவரிடம் காசு, பணம் இல்லை. எங்கள் 'அறக்கட்டளை' மூலம் அவருக்குக் கொஞ்சம் நிதி உதவினோம். கோவிட் அலை முடிந்தபின் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். கணிப்பொறி, பயிற்றுநர் எதுவும் இல்லாமல் சாதித்த அவரது அர்ப்பணிப்பும், பெற்றோரின் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் வியக்க வைத்தது. அவரின் கதை சாம்பியன் ஆக விரும்பும் அனைவருக்கும் ஒரு பாடம்.

ஆர்த்தி: நான் என் அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பெண்களுக்கான 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன். முதல் நிலையில் முன்னேறிக்கொண்டிருந்த போது ஒரு சுற்றில் தோற்றுவிட்டேன். என் இடத்தை வேறு ஒரு சீனப்பெண் பிடித்து விட்டார். அப்போது என்னுடன் என் பெற்றோர் இல்லை. நான் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்த ஆட்டத்தில் வெல்வேன் என்று உறுதியோடு சொன்னேன். அது கடும் போட்டியான நீண்ட ஆட்டம், நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்று அந்தச் சாம்பியன் பட்டம் வென்றேன். மன உறுதியோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற படிப்பினையைக் கற்றேன். அதுவே பிற்காலத்தில் என்னை மகளிர் பிரிவில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வெல்லச் செய்தது. இதுபோல மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் யார் உழைத்தாலும் வெற்றி பெறுவார்கள். எனவே நம்பிக்கையைக் கைக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைக் கைக்கொள்ளும்!

அறிவொளி: அற்புதம்! எங்களுக்காக நேரம் ஒதுக்கிப் பேட்டியளித்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் சதுரங்க நெடும்பயணத்தில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

நேர்காணல்: அறிவொளி திருவேங்கடம், சாதனா அறிவொளி, ஆராதனா அறிவொளி
தமிழாக்கம்: ஜெயராதா நடராஜன்
ஒலி, ஒளி அமைப்பு: சஷ்டிநாதன் சம்பந்தம்
காணொளி தொகுப்பு: சாதனா அறிவொளி
Share: 




© Copyright 2020 Tamilonline