Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பாகீரதி சேஷப்பன்
- அரவிந்த்|ஜூன் 2023|
Share:
இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் வல்லவர் அமெரிக்காவில் வசிக்கும் பாகீரதி சேஷப்பன். சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நாடகங்களை எழுதி, இயக்கி, அரங்கேற்றியிருக்கிறார். கவியரங்குகள், பட்டி மன்றங்களில் பங்கேற்றிருக்கிறார். மோஸ்ட்லி தமிழ், இட்ஸ் டிஃப் ரேடியோ போன்றவற்றில் இவர் வழங்கிய நிகழ்ச்சிகள் சுவைஞர்களின் வரவேற்பைப் பெற்றவை. தென்றல் இதழ், 8K ரேடியோ போன்றவற்றில் பங்களித்திருக்கிறார். வீணை வாசிப்பதோடு கற்பிக்கவும் செய்கிறார். அமெரிக்காவின் சக்தி TVயில் நிகழ்ச்சிகள் அளித்திருக்கிறார். அப்படியென்றால் அனுபவங்களுக்குக் குறைவிருக்குமா என்ன? பாகீரதி சேஷப்பன் சொல்வதைக் கேட்போம் வாருங்கள்.

★★★★★


மகள் ஆரபி, பாகீரதி, கணவர் சிவகுமார் சேஷப்பன்கே: உங்கள் இளமைப் பருவ நாட்களை நினைவுகூர முடியுமா?
ப: மிகவும் சிறு வயதில் பெரும்பாலும் விழுப்புரத்தில் பாட்டி மற்றும் மாமா வீடுகளில் வளர்ந்தேன். நெல்லை மாவட்டத்தில் எங்கள் வீட்டில் நான் வளர ஆரம்பித்த போதும் பாட்டிதான் என்னுடன் இருந்தார்கள். மேலச்செவல், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம், திருச்சி என்று பல ஊர்களுக்கும் பெற்றோர்களின் வேலை மாற்றல் காரணமாகச் சென்று கொண்டிருந்தோம். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தபோது வாரந்தோறும் வீட்டில் பஜனை நடைபெறும். அப்பா மிகவும் இறைநாட்டம் மிக்கவர். பூஜை, பஜனை, தியானம், நாமஜபம் என்று என்னை ஆன்மீக வழியில் வளர்த்தார்.

சிவகாமி (மீனாக்ஷி), ஆயனர் (நிர்மல்குமார்)கே: இலக்கிய ஆர்வம் தோன்றிய காலம், காரணம் எது?
ப: திருவள்ளுவரையும், பாரதியாரையும் எனக்கு அறிமுகம் செய்தது அப்பாதான். அவர் காளிதாசரையும் அறிமுகம் செய்தார். ஆனால் எனக்கு வடமொழியில் அவ்வளவாக நாட்டம் வரவில்லை.

ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பிரசாந்தி நிலையம் எங்களுக்கெல்லாம் தாய்வீடாக இருந்தது. ஆண்டு தோறும் அப்பா எங்களை அங்கு அழைத்துச் செல்வார். அங்கே வேதமும், பஜனையும் எப்போதும் ஒலிக்கும். மனிதர்கள் பேசும் ஒலிகளும், சாதாரண வாழ்க்கையின் ஒலிகளும் அங்கே கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தீவிர அமைதியே தெய்வீகமாகப் போற்றப்பட்டது. அதன் தாக்கமாக எனக்குள் ஏற்பட்ட மாற்றம், நான் அதிகம் பேசுவதில்லை.

பாகீரதி 'நாகநந்தி' ஆன கதை!
சிவகாமியின் சபதம் நாடக ஒத்திகை முழுவதற்கும் தவறாது வந்த நடிகர் ஒருவர் - நாகநந்தி அடிகளாக நடிக்க வேண்டியவர் - ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ச்சியன்று இந்தியாவுக்குச் சென்று விட்டார். பொதுவாக நான் நாடகங்களை எழுதுவேன், இயக்குவேன். நடிப்பில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் நாகநந்தி இல்லாமல் சிவகாமியின் சபதமா? எனவே நானே நாகநந்தி அடிகளாக மேடை ஏறினேன். இரண்டே இரண்டு ஒத்திகைகளுக்குப் பிறகு மேடை ஏறியதால் 'எப்படி வந்ததோ' என்று யோசித்தேன். நாடகம் முடிந்ததும் ஒரு பெரியவர், புத்தரின் வாழ்க்கை பற்றிய ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். மறுநாள் தினத்தந்தி செய்தித் தாளில் எனது படத்துடன் நாடக விமர்சனம் வெளிவந்தது. அவற்றை நான் மிகப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

பாகீரதி சேஷப்பன்


மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதே பாபாவின் உபதேசமாக இருந்தது. திருச்சியில் சாவித்திரி வித்யாலயா விடுதியில் இருந்தபொழுது கூட, நான் அரட்டை அடித்ததில்லை. அமைதியாக இலக்கியப் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன். பாரதியார் எப்போதும் வழிகாட்டியாக இருந்தார். அதுதான் எனக்கு இலக்கியத்திலும், கவிதையிலும் ஆர்வம் ஏற்படக் காரணம். என்னைச் சுற்றிலும் அண்ணாவும் (மதுரபாரதி), அவரது நண்பர்களும் கவிஞர்களாகவும், இலக்கிய ஆர்வலர்களாகவும் இருந்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தவரையில் எங்கு பார்த்தாலும் தூய தமிழ் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலைகள் எனக்குத் தமிழை எளிதாகக் கற்றுக் கொள்ள காரணமாக இருந்தது.

உடன்குடியில் இருந்தபோது, எனக்கு ஒரு பதிமூன்று வயது இருக்கும். பாட்டி நிறைய புராண மற்றும் கம்பராமாயணக் கதைகள் சொல்வார்கள். தாத்தா அந்தக் காலத்தில் 'சீதை வேஷம் போட்டு நடிப்பார்' போன்ற செய்திகளைச் சொல்வார்கள். அது எனக்கு நாடகத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பள்ளியில் நிறைய நாடகங்கள் எழுதி இயக்க ஆரம்பித்தேன். அப்போது, என் அண்ணன் திரு. மதுரபாரதி முதலில் எனக்கு நாடகங்கள் எழுதிக் கொடுப்பார். பிறகு அவர் வேலை காரணமாக வெளியூர் சென்றவுடன் நானே எழுத ஆரம்பித்தேன். அது இன்றுவரை தொடர்கிறது.கே: அமெரிக்கத் தமிழ் அமைப்புகளுடனான உங்கள் தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்...
ப: நான் முதலில் அமெரிக்கா வந்தது 1990ல். அப்போது என்னை வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்கு அறிமுகம் செய்தவர் திரு. நிர்மல் குமார். நான் முதல் முதலாக இங்கு அரங்கேற்றியது 'தமிழகத்தில் தவழ்ந்தாடும் தமிழ்கள்' என்ற, பல்வேறு வகையான வட்டாரத் தமிழ்ப் பேச்சு குறித்த சிறிய நாடகம். பிறகு ஒரு முழுநீள நாடகம் எழுதினேன். ஆனால் அச்சமயம் அது அரங்கேற வாய்ப்புக் கிடைக்கவில்லை.

மீண்டும் 1999 முதல் நானும் என் கணவரும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் தொடர்பில் இருந்து வருகிறோம். அந்த ஆண்டு தலைவராக இருந்த திரு. மணிவண்ணன் எனக்குக் கவிதை வாசிக்க வாய்ப்பளித்தார். பிறகு திரு. தில்லை குமரன் குழுவில் நான் மன்றத்தின் பொருளாளராக இருந்தேன். என் கணவரும் தமிழ் மன்றத் தலைவர் பதவி வகித்திருக்கிறார். சிகாகோ தமிழ்ச் சங்கமும், திரு. அறவாழி அவர்கள் தலைவராக இருந்தபோது எங்களுக்கு வாய்ப்பளித்து ஆதரித்தது.கே: அமெரிக்காவில் நீங்கள் மேடையேற்றிய முதல் நிகழ்ச்சி எது?
ப: 2005ல் திரு. மணிவண்ணன் தலைமையில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்கு 'சக்தி' என்ற நாடகம் அளித்தேன். அதில் என்னுடன் திரு. ஸ்ரீதரன் மைனர் இசையும் திரு.வேணு சுப்பிரமணியம் மேடை நிர்வாகமும் செய்தார்கள். இன்றுவரை எனது எல்லா நாடகங்களிலும் அந்தப் பணிகளை அவர்கள்தான் செய்கிறார்கள்.சுமார் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து, போட்டி பொறாமை இல்லாமல் ஒன்றாக, பொதுநன்மை கருதி உழைக்கும் நாடகக்குழு வளைகுடாப் பகுதியில் நாங்கள்தான் என்று சொல்லலாம்.

வெள்ளோட்டம் குழுவினர்கே: அமெரிக்காவில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்கள் குறித்து... அதில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து...
ப: 'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகத்தையும் மூன்று மணிநேர நாடகமாக 2009ல் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தில் அளித்தோம். பொதுவாக எங்கள் நாடகங்களில், பாடும் பாத்திரத்தில் வருபவரை பாடக் கூடியவராகவே நாங்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆழ்வார்கடியானாகப் பாசுரம் பாடி திரு. அசோக் சுப்பிரமணியம் நாடகத்தைத் தூக்கி நிறுத்தினார் என்றால் அது மிகையல்ல ஸ்ரீதரன் மைனர் பின்னணி இசைக்குழு அங்கே மேடையின் பின்புறத்தில் இருந்து இசை வழங்கியது. இது போன்ற சிறந்த கலைஞர்களின் பங்களிப்பு எங்கள் நாடகங்களைச் சிறப்பித்தது. திரு. அப்துல் ஹமீது ஐயா அவர்கள் விளையாட்டாக 'பொன்னியின் செல்வி' என்று என்னை அழைத்தார். திருமதி. உமையாள் முத்து அவர்கள் அதை வைத்து, புதுகைத் தென்றல் இதழில் 'பொன்னியின் செல்வி' என்ற தலைப்பில் என்னைப் பற்றிக் கட்டுரை எழுதினார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

பொன்னியின் செல்வன் மேடையேறியது எப்படி?
விரிகுடாப் பகுதியில் தமிழ் நாடகங்கள் தழைத்தோங்கிய காலம் கி.பி. 2௦௦௦ முதல் என்று சொல்லலாம். திரு. மணிவண்ணன் 'அக்கினிக் குஞ்சு' நாடகத்தை எழுதி இயக்கினார். திரு. மணிராம், திருமதி. தீபா ராமானுஜம் போன்றோர் நாடகங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். இவ்வளவு போட்டிக்கு நடுவில் எங்கள் குழு ஒரு நாடகத்தை முன்வைத்து அதைத் தமிழ் மன்றம் ஏற்க வேண்டும் என்றால் அதுவே பெரிய சாதனைதான். எனவே நாங்கள் 'பொன்னியின் செல்வன்' என்று முடிவு செய்தோம்.

தமிழ் மன்றத் தலைவர் லேனா கண்ணப்பனைச் சந்தித்து நான் நாடகம் போட வாய்ப்பு கேட்டேன். "பொன்னியின் செல்வனை விடப் பெரிய நாடகமா? உங்களுக்குத்தான் வாய்ப்பு" என்று உடனே ஒப்புக் கொண்டார். நானும், வேணுவும், ஸ்ரீதரும் சுமார் ஓராண்டுக் காலம் அதில் உழைத்தோம். குந்தவையாக நடித்த வசந்தி, இந்தியாவிற்குப் போய், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கொண்டைகள், உடைகள் எல்லாம் வாங்கி வந்தார். பொன்னியின் செல்வர் ஸ்ரீராமன் சபேசன், ஆழ்வார்கடியான் அசோக் சுப்ரமணியம் எல்லோரும் மணியன் செல்வன் வரைந்த ஓவியங்களைப் பார்த்துத் தங்கள் ஒப்பனையைத் தயார் செய்தார்கள். பூங்குழலியாக நடித்த சுகி சிவம் அவர்கள் கல்கி கொடுத்திருந்த தேவாரப் பண்களைச் சிறப்பாகப் பாடி அசத்தினார்கள். சுந்தர சோழராக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாஸா நடித்திருந்தார். பார்த்திபேந்திர பல்லவராக நடித்த இந்திரா தங்கசாமி, நந்தினியுடன் பேசிய வசனங்கள் மிகுந்த கரகோஷத்தைப் பெற்றன. நான் கல்கி அவர்களையே ஆசானாக எண்ணி, பெரும்பாலும் அவரது வசனங்களையே நாடகத்தில் பயன்படுத்தினேன். அது எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தது என்று நம்புகிறேன். நாடகத்திற்கு வந்த கல்கி ரசிகர்கள் பலர், நாங்கள் வசனங்களை நடிகர்களுடன் சேர்ந்து சொன்னோம், அப்படியே இருந்தது என்று பாராட்டினார்கள்.

பாகீரதி சேஷப்பன்


2015ல் திரு. தில்லை குமரன் அவர்கள் தலைமையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் (FETNA), தமிழ் மன்றம் சார்பில் 'சிவகாமியின் சபதம்' நாடகம் வழங்கினோம். அப்போது திரு. சோலை தமிழ் மன்றத் தலைவர். அதில் சிவகாமியாக நடித்த மீனாக்ஷி பரத நாட்டியம் கற்றவர். அவரே நடன அமைப்பும் செய்தார். அவரது நடனமும், வசனமும் எல்லோரையும் கவர்ந்தன. தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்தீர்களா என்று பலர் என்னைக் கேட்டார்கள். நாடகங்களுக்கு நாங்கள் இசையைக் கடன் வாங்குவதில்லை. ஸ்ரீதரன் மைனர் ஆறு பாடல்களுக்கு இசை அமைத்து, அமெச்சூர் பாடகர்களை வைத்து அற்புதமாகப் பதிவு செய்து கொடுத்திருந்தார். கல்கி எழுதி இருந்த அதே பாடல்களையே நாங்கள் இசை அமைத்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் இரண்டிலும் உபயோகித்தோம்.

அதே நாடகத்தை மீண்டும் திரு. கண்ணன் வைரவன், அடையாறு புற்றுநோய் மையத்திற்கு நிதி திரட்டுவதற்காக அரங்கேற்றினார். டாக்டர். சாந்தா அவர்கள் மகிழ்ச்சியுடன் காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை நான் பெரும்பேறாக நினைக்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால், தமிழுக்குச் சங்கம் வளர்த்த பாண்டியரைப் பற்றி ஒரு நாடகம் செய்ய விரும்பினேன். மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் நடந்ததைக் கருவாக வைத்து 'வெள்ளோட்டம்' என்ற நாடகத்தை 2017ம் ஆண்டு மீண்டும் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு நிதி திரட்டுவதற்காக, அமெரிக்கக் கேன்சர் பௌண்டேஷன் மூலம் செய்தோம். 'வள்ளி திருமணம்' என்ற தெருக்கூத்து, 'பாரி வள்ளல் அரசவை' என்ற சிறுவர் நாடகம் இப்படிப் பலவிதமான நாடகங்களை எழுதி இயக்கி இருக்கிறேன்.கே:'தெருக்கூத்து' ஒரு மாறுபட்ட வடிவம். அதற்கான கூறுகளை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? வரவேற்பு எப்படி இருந்தது?
ப: ஒருமுறை பட்டிமன்றம் திரு. ராஜா நிகழ்ச்சியை, தமிழ் மன்றம் ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சிக்கு முன் ஒரு கலைநிகழ்ச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று, ஒரு சிறிய தெருக்கூத்து தரச் சொன்னார்கள். என் பாட்டி பலமுறை தாத்தா நடித்த தெருக்கூத்து பற்றி விவரித்திருக்கிறார். நானும் கோவில் விழாக்களுக்கு தெருக்கூத்துக் கலைஞர்கள் வந்து பார்த்திருக்கிறேன். நான் மட்டுமல்ல. என்னுடைய இசையமைப்பாளர் ஒரு சிறந்த நாட்டுப்புறக் கலைஞர். எனவே நான் எழுத, ஸ்ரீதர் இசையமைக்க, நடனம் மற்றும் இசை தெரிந்த என் நடிகர்கள் நடிக்க, சிறப்பாகவே அமைந்தது.

ரமண மகரிஷி நாடகம்
ரமண மகரிஷி அவர்கள் வாழ்க்கை வரலாற்றை நாடக வடிவில் திரு. பாம்பே சாணக்யா அவர்கள் எழுதி, இந்தியாவில் இயக்கி இருக்கிறார். அவரது குழு அமெரிக்காவில் வந்து இந்த நாடகத்தை வழங்க இருந்தார்கள். சில காரணங்களால் வர முடியவில்லை. எனவே அவரது அனுமதியுடன், கேன்சர் இன்ஸ்டிடியூட் ஃபௌண்டேஷன் அந்த நாடகத்தை என்னை இயக்கி மேடை ஏற்றக் கேட்டுக் கொண்டார்கள். கடந்த ஏப்ரல் 1ம் தேதி, இந்த நாடகத்தை சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நடத்தினோம். அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன், நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனவாசி ராமசாமி ஐயரின் பேத்தி, எச்சம்மா பாட்டியின் பேத்தி, ரமணரின் தம்பி பேரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒரு சேர நாடகம் நன்றாக இருந்ததாகப் பாராட்டிச் சென்றார்கள். அது ரமண பகவானே வந்து ஆசி வழங்கிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பாகீரதி சேஷப்பன்


கே: நீங்கள் அரங்கேற்றிய நிகழ்ச்சிகளில் சவாலாக அமைந்தது எது, ஏன்?
ப: சந்தேகமே இல்லாமல் 'பொன்னியின் செல்வன்' தான். அவ்வளவு பெரிய நாடகத்தைக் கையில் எடுத்த நாங்கள் மூன்றே பேர் கொண்ட குழு. நாடகத்திற்குத் தமிழ் மன்றம் கொடுத்த பட்ஜெட் '0' டாலர். அவர்கள் அரங்கம் மட்டும் முன்பதிவு செய்து அதற்கான பணம் கொடுத்தார்கள். மற்றபடி ஒத்திகை இடம், உணவு, ஆடை அலங்காரம், மேடை அலங்காரம் எல்லாமே என் பொறுப்பாக இருந்தது. நானும் அப்போது புதிய இயக்குநர். சினிமா, தொலைக்காட்சி என்று எந்தப் பக்க பலமும் இல்லை. எனவே அந்த நாடகம் அரங்கேறும்வரை ஒவ்வொரு நாளும் ஒரு மலையேற்றம் போல்தான் இருந்தது. என்னுடைய நாடகமாக்கத்தின் மேல் நான் வைத்த நம்பிக்கையும், திரு. லேனா கண்ணப்பன் (அப்போதைய தமிழ் மன்றத் தலைவர்) கொடுத்த ஊக்கமும், ஸ்ரீதர் மற்றும் வேணுவின் ஆதரவுமே என்னைக் கொண்டு சென்றன. அன்றும் இன்றும் என் நாடகத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தாங்களே செலவு செய்து ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இப்போது எனக்கு ஆடைகள் வடிவமைப்பவர் திருமதி. விஜி ஸ்ரீராமன். மேடை அமைப்புச் செய்பவர்களும் அந்தச் செலவை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் தமிழ் மன்றம் மற்றும் கேன்சர் இன்ஸ்டிடியூட் போன்ற நிறுவனங்களுக்குச் செலவில்லாமல் ஒரு தொண்டாக எங்களால் நாடகங்களை வழங்க முடிகிறது.கே: மேலும் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
ப: நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது இறைவனின் ஏட்டில் அல்லவா இருக்கிறது? நான் இன்னும் அதை sneak-peak செய்ய முயற்சிக்கவில்லை.
திருப்புகழும், அபிராமி அந்தாதியும்
திருப்புகழ்ப் பாடல்களைப் பலர் பொருள் தெரியாமல் பாடி வருகிறார்கள். என்னிடம் சிலர் எங்களுக்குப் பொருள் சொல்லுங்கள் என்று விண்ணப்பித்தார்கள். அவர்களுக்கு மட்டும் சொல்வதை, எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்று யூட்யூபில் போடுகிறேன். எவ்வளவோ அறிஞர்கள் பொருள் எழுதி இருந்தாலும், புத்தகம் வாங்கிப் படிக்கிற வழக்கம் குறைந்து வருகிறது. ஒலி, ஒளிக் காட்சிகள் எளிதில் மக்களைச் சென்று சேர்கின்றன. நம்முடைய எல்லா கலைப் பொக்கிஷங்களையும் இவ்விதம் இணையத்தில் தரவு ஏற்றுவது அவசியமாகிறது. எனவே என்னால் முடிந்தவரை செய்கிறேன்.

அபிராமி அந்தாதி: திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாஸா அவர்களுடன் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் இலக்கியப் பகுதிகளை நான் வழங்கி வந்திருக்கிறேன். அவர் இப்போது 'தமிழ் ஆடியோ புக்ஸ்' என்ற தளத்தில் பல இலக்கிய நூல்களை ஒலி, ஒளி வடிவங்களில் வழங்கி வருகிறார். அவருடன் சேர்ந்து 'அபிராமி அந்தாதி'க்குப் பாடலும் பொருளும் வழங்கி வருகிறேன். பலரும் அதைக் கேட்டு மிகவும் நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

பாகீரதி சேஷப்பன்


அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline