Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை
Tamil Unicode / English Search
சிறுகதை
நன்றி நவிலல்
- விகாஷ் ரயாலி|நவம்பர் 2022|
Share:
"நெடுந்தூரப் பயணமாயினும் களைப்பே தெரியவில்லை" என்றார் அம்மா.

"முன்னிருக்கையில் அமர்ந்து நன்றாகத் தூங்கினால் களைப்பு வருமோ?" என்று நகைத்தார் அப்பா.

கண்களை உருட்டி, பல்லைக் கடித்தார் அம்மா.

"சரி சரி, தங்கும் விடுதி வந்துவிட்டது. வண்டியில் இருந்து பயண மூட்டைகளை எடுத்துக் கொண்டு, விடுதி வரவேற்பாளரிடம் நமது முன்பதிவுத் தாளைக் கொடுங்கள். நான் வண்டியை நிறுத்திவிட்டு வருகிறேன்" என்றார் அப்பா.

நானும் அம்மாவும் சென்று, அப்பா சொன்னபடிச் செய்தோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில், பயண மூட்டைகளை எடுத்துச் செல்ல விடுதிப் பணியாளர் எங்களுக்கு உதவினார்.

"விரைவாகத் தயாராகுங்கள், நாம் வெளியே சென்று சாப்பிடலாம்," என்றார் அப்பா.

பத்து நிமிடத்தில் மூவரும் தயாரானோம். நீண்ட பயணத்தின் சோர்வும், பசியும் கொஞ்ம் கொஞ்சமாக எங்களிடம் வெளிப்பட்டது. சுமார் பத்து பதினைந்து மைல் ஊரெல்லாம் சுற்றித் திரிந்தோம். நாங்கள் சென்ற எல்லா உணவகங்களும் மூடியிருந்தது. ஏதாவதொரு உணவகமாவது திறந்து இருக்குமா என்றால் இல்லை.

அப்போதுதான் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. இன்று நவம்பர் மாதக் கடைசி வியாழக்கிழமை. இது "நன்றி நவிலல் நாள்". நாடே கொண்டாட்டத்தில் மூழ்கியியிருக்கும் நேரம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்துடன் ஒன்றுகூடி இரவு விருந்தை உண்டு களிக்கும் நேரமிது.

"வெளியே சென்று சாப்பிட நினைத்தோமேயன்றி இதை எப்படி மறந்தோம்?" என்றார் அப்பா.

உடனே அம்மா, "நீங்கள் எதைத்தான் சரியாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்! நம் நிச்சயதார்த்த நாள் நினைவிருக்கிறதா? இல்லை. அதை விடுங்கள், போன வாரம், நம் குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகூட உங்களுக்கு நினைவில் இல்லை" என்றார்.

"அம்மா, அப்பா! இந்தச் சண்டையை நாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். சாப்பாட்டுக்கு என்ன வழி, அதைச் சொல்லுங்கள்" என்றேன்.

"உன் அப்பாவிடம் கேட்காதே, அவர் இப்படி ஏதாவது குளறுபடி பண்ணுவார் என்று தெரிந்துதான் நான் நிறையப் பழங்கள், நொறுக்குத் தீனி எல்லாம் எடுத்துப் பச்சைப் பையில் கட்டி வைத்திருக்கிறேன். அதைச் சாப்பிட்டு இன்று இரவைக் கழித்துவிடலாம்" என ஒரு தீர்வைச் சொன்னார் அம்மா.

"எந்த பச்சைப்பை?" என்றார் அப்பா.

"என்ன! பச்சைப்பையை வண்டியில் வைக்கவில்லையா? நான்தான் ஒன்றுக்குப் பலமுறை ஞாபகப்படுத்தினேன… ஐயோ கடவுளே! அவசரத்துக்குத் தேவைப்படுமென்று கட்டிக்கொண்டு வந்த தீனிப் பையை, இவர் இப்படி மறந்துவிட்டாரே! இப்போது, நாம் என்ன செய்வோமோ? இன்று இரவு பட்டினிதான் போல," புலம்பினார் அம்மா.

அப்பா பதிலேதும் சொல்லாமல் வண்டியைத் திருப்பி மீண்டும் தங்கும் விடுதிக்கு ஓட்டினார். நேரம் செல்லச் செல்ல எனக்குப் பசி அதிகரித்தது. அப்பா விரைவாக வண்டியை ஓட்ட, நாங்கள் விடுதியை அடைந்தோம்.

உள்ளே நுழைகையில் அப்பா விடுதிப் பணியாளரிடம், "நாங்கள் சென்ற உணவகமெல்லாம் மூடியிருந்தது. அருகில் ஏதாவது உணவகம் திறந்து இருக்குமா?" என்று கேட்டார்.

பணியாளர், "இன்று நன்றி நவிலல் நாள். அதனால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன" என இயல்பாகச் சொன்னார்.

அப்படியே அறைக்கு வந்தோம். அப்பா கைபேசியில் உணவு எங்கு கிடைக்கும் என்று துழாவிக் கொண்டிருந்தார். நான், எனக்குப் பிடித்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அம்மா கைபேசியில் முகநூலை நோண்டியபடி, தம் நண்பர்களின் புகைப்படங்களைப் பார்த்தவாறு, "பாருங்கள், மற்றவரெல்லாம் எப்படி திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். நீங்களும் இருக்கிறீர்களே" என அப்பாவைத் துவைத்துக் கொண்டிருந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது.

டக்... டக்... டக்... யாரோ கதவைத் தட்டும் சத்தம்.

அப்பா கதவைத் திறந்ததும், நாங்கள் விடுதிக்கு வந்தபோது, எங்களைப் பார்த்து வணக்கம் கூறி, அறைக்குப் பயண மூட்டைகளைக் கொண்டு வந்து உதவிய அதே பணியாளர் கையில் இரண்டு பைகளுடன் நின்றிருந்தார். சற்றுமுன் வரவேற்பறையில், அப்பா இவரிடம்தான் பேசிக் கொண்டும் இருந்தார்.

"என்ன வேண்டும்?" என்று அப்பா கேட்க, அந்தப் பணியாளர் தன் கையிலிருந்த இரண்டு பைகளை அப்பாவிடம் காட்டி, "ஐயா, இன்று இந்நேரத்தில், இவ்வூரில் உங்களுக்கு உணவு கிடைப்பது அரிது என்பதால், பக்கத்தில் இருந்த ஒரு வீட்டு உணவகத்தில் உணவு இருக்கிறதா என்பதை உறுதி செய்து, நானே சென்று உங்கள் அனைவருக்கும் உணவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்!

மேலும் அவர், "இது உங்களுக்குப் பிடிக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் இருந்த பணத்தில் இதைத்தான் என்னால் வாங்க முடிந்தது" என்று கூறிப் பைகளை அப்பாவிடம் நீட்டினார்.

கண்முன் நடந்தவை, கனவா நனவா என்பதறியாது சிலையாக நின்றார் அப்பா. தொலைக்காட்சியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அங்கு பெரும்மௌனம் நிலவியது. அம்மாவும் நானும் எழுந்து நின்றோம் சிலைகளாக.

"வாங்கிக் கொள்ளுங்கள்" என்று இரண்டு பைகளையும் அப்பாவிடம் மீண்டும் நீட்டினார் பணியாளர்.

அம்மாவின் கண்கள் பனித்ததை நான் கண்டேன். அம்மா சுதாரித்துக் கொண்டு, அப்பாவின் முதுகில் தட்டினார். மௌனம் மேலும் தொடர்ந்தது.

உணவுப் பைகளை வாங்கி அம்மாவிடமும் என்னிடமும் கொடுத்திவிட்டு அப்பா, அவரை ஆரத்தழுவினார்.

என்ன அப்பா ஒரு வார்த்தையும் பேசவில்லை என்று நான் அவரைப் பார்க்க, நன்றி சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி, அவர் கண்களில், கண்ணீரே நன்றியாய்த் துளிர்த்து நின்றது.

நானும், அம்மாவும் அவருக்கு நன்றிகள் பல சொன்னோம். அப்பா சுயநினைவு வந்தவுடன் நன்றி தெரிவித்தார். தன் பணப் பையிலிருந்து, கைக்குக் கிடைத்ததை எடுத்து அவரிடம் கொடுத்து "வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அதை வாங்க மறுத்த அவர், "நான் பணத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. ஆகவே எனக்கு எதுவும் வேண்டாம். குடும்பத்துடன் உணவை உண்டு, நன்றி நவிலல் நாளை நன்றாகக் கொண்டாடுங்கள்" எனக் கூறி உடனே சென்றார்.

"நன்றி நவிலல் நாள்" என்றால் குடும்பத்துடன் ஒன்றாக உணவு உண்பது என்றுதான் இதுநாள்வரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவ்வெண்ணம் முற்றிலும் மாறியது.

யாரும் யாரையும் குடும்பமாக எண்ணலாம். யாரும், யாருக்கு வேண்டுமானாலும் உணவளிக்கலாம். ஏனெனில், நாம் எல்லோரும் ஓர் குலம். நாம் எல்லோரும் ஓர் இனம். நாம் எல்லோரும் ஓர் குடும்பம். நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்பதை நிரூபிக்கும் ஒப்பற்ற சான்றாக இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அமைந்தது.

இதுவரை நான் பலமுறை 'நன்றி நவிலல் நாள்' கொண்டாடியிருக்கிறேன். ஆனால் இம்முறைதான் இந்நாள் உண்மையிலேயே நன்றியை நவிலும் நாளாகவும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் சொற்களைக் கண்முன் காட்டிய நாளாகவும், என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சிறந்ததொரு 'நன்றி நவிலல் நாள்' ஆகவும் ஆனது!
விகாஷ் ரயாலி
Share: 
© Copyright 2020 Tamilonline