Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆமையும் நானும்
- அம்பிகா ஷங்கர்|அக்டோபர் 2022|
Share:
ஒருநாள் நடைப்பயிற்சி செய்யலாம் என்று கிளம்பினேன். செருப்பை மாட்டிக்கொண்டு கராஜ் கதவைத் திறந்து நான்கு ஐந்து தப்படி நடந்திருப்பேன். டிரைவ்வேயில் ஏதோ உருண்டையாகக் கறுப்பாகத் தெரிந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையின் பந்து வந்து விழுந்திருக்கலாம் என்று நினைத்து எடுக்கப் போனேன். பார்த்தால் அது பந்து அல்ல. ஒரு குட்டி ஆமை. பயந்து அலறினேன்.

இப்பொழுதுதான் எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்களே, அதனால் என் கணவரும், மகளும் "என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டு ஒடிவந்தார்கள். நான் ஆமையைக் காண்பித்தேன். "அது என்ன உன்னைக் கடித்ததா? எதற்காக இப்படிக் கத்தினாய்?" என்றார்கள். "ஆமை கடிக்கல. ஆனா கராஜ் கதவு மூடி இருக்கல்லேனா அது கராஜுக்குள்ள வந்திருக்கும். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுனு சொல்லுவா. எனக்குக் கவலையா இருக்கு" என்றேன். "உனக்கு மூட நம்பிக்க ஜாஸ்தி. அது பாட்டுக்குத் தேமேன்னு போயிண்டிருக்கு. நா வேலய பாக்கப் போறேன்" என்றார் கணவர்.

"இல்லேல்ல, ராமாயணத்துல கூட நிமித்தம் பாக்கறது பத்திக் குறிப்பு இருக்குத் தெரியுமா? நான் பத்தாம் கிளாஸில் கம்ப ராமாயணம் படித்தேன். ராமர் கல்யாணம் பண்ணிண்டு திரும்பிப் போகும்போது சில பறவைகள் பறப்பதைப் பார்த்துத் தீய நிமித்தம் என்று தசரதர் கவலைப்பட்டார். நிமித்தக்காரர்கள் தசரதனிடம் 'மன்னா! கவலைப்படாதே! முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், சரியாகிவிடும்' என்றார்கள். அதைப்போலவே பரசுராமர் வந்தார். இராமனைச் சண்டைக்கு இழுத்தார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது" என்றேன். "இப்ப எனக்குக் கதை கேட்க நேரமில்லை" என்று சொல்லிவிட்டு என் கணவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இதற்குள் என் மகள் " அம்மா! நீயும் அப்பாவும் பேசிண்டிருக்கும் போது நா இன்டர்நெட்ல பாத்தேன். இது ஒன்னும் பண்ணாது. இதுக்குப் பேரு பாக்ஸ் டர்ட்டில். முதுகுல பெட்டி மதிரி இருக்கு பாரு. நம்ப வீட்டுக்குப் பக்கத்துல மழத்தண்ணி கால்வா மாதிரி ஓடறது இல்லியா, அந்த மாதிரி தண்ணி இருக்கற இடத்துலதா இது இருக்கும். நீயே படிச்சுப் பாரு" கைபேசியை நீட்டினாள்.

"ஃப்ளாரிடா பைத்தான் இல்ல இது, நீ பயப்படறதுக்கு" என்று சொல்லிவிட்டு அவளும் போய்விட்டாள்.

ஆமை என்னவோ இருந்த இடத்திலேயே இருந்தது. ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டிருந்தது.

இதை எங்கே எப்படிக்கொண்டு விடுவது என்று யோசித்தேன். நீர்ப்பாங்கான இடத்தில்தான் இருக்கும் என்றால் சாட்டஹூச்சி ஆற்றின் கரையில் கொண்டு விட்டுவிடலாம் என்று தோன்றியது.

ஒரு முறமும் துடைப்பமும் கொண்டுவந்து வாரி ஆமையை ஒரு வாளியில் போட்டேன். இரண்டு லெட்யூஸ் இலைகளையும் கேரட் துண்டுகளையும் போட்டேன். இதைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விடப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். திடீரென்று தோன்றியது, ஆமை வாளியைவிட்டு வெளியே வந்துவிட்டால்? ஒரு பெரிய குப்பைப் பையைக் கொண்டுவந்தேன். அதன் வாயை விரியத் திறந்து அதற்குள் ஆமையைப் போட்டேன். ஆமை மூச்சுவிட வேண்டுமே என்று நினைத்துக் காற்றை உள்ளே வைத்துப் பையை உப்பலாகக் கட்டினேன். 3 மைல் தள்ளியிருந்த ஆற்றங்கரைக்குக் கிளம்பினேன்.

வண்டி ஓட்டும்பொழுதெல்லாம் ஆமை பையைக் கிழித்துக்கொன்டு வெளியில் வந்துவிடுமோ என்கிற பயம். 5, 6 நிமிடங்களுக்குள் சாட்டஹூச்சியின் கரையில் இருந்த பூங்காவிற்கு வந்தேன்.

நல்லவேளை ஆமை பையிலேயே இருந்தது. பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன். நாயை நடத்துபவர்கள் எல்லாம் இப்படித்தானே ஒரு பையுடன் நடக்கிறார்கள். நம்மை யாரும் விநோதமாகப் பார்க்கமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனாலும் எல்லோரும் என்னை ஒரு விதமாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. என் கையில் பை இருந்தது. ஆனால் என்னுடன் நாய் இல்லை.

ஆனாலும் நான் கவலையே இல்லாததுபோல் ஆற்றங்கரைக்கு வந்தேன். படிக்கட்டுகளில் அங்கங்கே மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் ஆளில்லாத இடமாகத் தேடி நடந்தேன். பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியாள் ஒருவர் பெரிய குப்பைத்தொட்டிகளில் குப்பையைக் கட்டிப் புதுப்பைகள் போட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் "ஐ கேன் டேக் தட்" என்றார். நான் "இல்லை வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தேன்.

நல்லவேளை, ஆள் நடமாட்டமில்லாமல் ஒரு இடம் தெரிந்தது. உட்கார்ந்து ஐபேடைப் பிரித்துப் படிப்பதுபோல் பாவனை செய்தேன். என்னருகில் இருந்த ஆமை கட்டியிருந்த பையில் பெரிய ஓட்டை செய்தேன் - ஆமைக்குப் பிராணவாயு கிடைக்கட்டுமென்று. ஆமை உயிருடன் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன்.

ஆமையை வெளியே தள்ளிவிடவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் ஏதோ குழந்தையோ, நாயோ, மனிதர்களோ வந்து போய்க்கொண்டிருந்தார்கள். எப்படித்தான் யாரெல்லாமோ தாங்கள் கொலை செய்ய உபயோகித்த துப்பாக்கி, கத்தி போன்றவற்றை யாரும் அறியாமல் ஆற்றில் வீசி எறிகிறார்களோ என்று வியந்தேன்.

ஒருவழியாகக் கூட்டம் குறைந்தது. ஆமையை வெளியே தள்ளிவிட்டேன். வெளியில் வந்த ஆமை இருந்த இடத்திலேயே இருந்தது. நகரவில்லை. ஆமையைக் கொன்றால் என்ன பாவம் என்றெல்லாம் நடுங்கினேன். ஒருவழியாகப் பத்து நிமிடம் கழித்து ஆமை நகரத் தொடங்கியது. எனக்கு அப்பாடா என்றானது.

வீடு திரும்பினேன். "உனக்கு வேற வேலயில்ல" என்றார் என் கணவர். ஆமையைப் போல முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
அம்பிகா ஷங்கர்,
நார்கிராஸ், அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline