Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை
Tamil Unicode / English Search
சிறுகதை
சுத்தி சுத்தி வந்தீக
- மருங்கர்|செப்டம்பர் 2022|
Share:
(கதாசிரியர் முன்னுரை: இது டைம் லூப்பை (Time loop) அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைகதை. டைம் லூப்பில், சில கதாபாத்திரங்கள் ஒரு கால இடைவெளியில் சிக்கி, மீண்டும் மீண்டும் செயல்படும் சூழ்நிலை உருவாகும். அதிலிருந்து வெளியேறும் வழியும் உண்டு. இக்கதையில் டைம் லூப்பில் மாட்டியது ஒரு பெண் கதாபாத்திரம். பொதுவாக, அறிவியல் புனைகதைகளில் ஆண் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகம். இக்கதையின் நாயகி ஒரு பெண். மேலே வாசியுங்கள்...)

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. ஷிவாங்கி கண்ணை மூடிக்கொண்டே ஸ்னூஸ் பொத்தானை அழுத்தினாள். பத்து நிமிடங்கள் ஓடின. மீண்டும் அலாரம்! வேகமாகச் சுழலவிட்ட பம்பரம் வட்டத்தை விட்டு வெளிய போக நினைப்பது போல, புத்தகத்தின் மேல் இருந்த ஐஃபோன் அதிர்ந்தபடி கீழே விழுவது போலப் பாசாங்கு செய்தது. கண்ணில் யாரோ அமிலம் ஊற்றியது போல இருந்தது. கண்களைப் பாதி திறந்தும் திறக்காமல் ஐஃபோனைப் பார்த்தாள். மதியம் 1 மணி.

"ஐயோ!" அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள். மிக முக்கியமான அலுவலகச் சந்திப்பு. மதியம் 2:00 மணிக்குள் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 15 நிமிடத்தில் காலைக்கடன், குளியல். மேக்கப்புக்கு 15 நிமிடம். வீட்டிலிருந்து 20 நிமிடத்தில் அலுவலகம். உள்ளே போக 5 நிமிடம். 5 நிமிட பஃபர். 1:30க்குக் கிளம்பிவிட வேணும் என்று பிளான் போட்டதில் 5 நிமிடங்கள் போயின. பஃபர் காற்றில் பறந்து போனது! "ஓ மை காட்!" என்று அலறி அடித்துக்கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள்.

ஷிவாங்கி குளிக்கும் நேரத்தில் அவளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளலாம். சொந்த ஊர் கோயம்புத்தூர். ஒரு படத்தில் கிண்டலாகச் சொல்வது போல, நைட் எல்லாம் வேலை செய்துவிட்டு பகலில் ஆபீஸ் பஸ்சில் ஜன்னலில் தலையை வைத்து தூங்கிகொண்டே வீட்டுக்குப் போய்ச் சேரும் ஐ.டி. வேலை! நான்கு பெண்கள் ரூம் எடுத்து ஒன்றாக உள்ளனர். மற்ற மூவரும் அலுவலகம் போய்விட்டனர். ஷிவாங்கி நேற்று இரவு நைட் டூட்டி செய்த களைப்பில் நன்கு தூங்கிவிட்டாள்! மீதிக் கதைதான் உங்களுக்குத் தெரியுமே!

பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். மணி 1:25; இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ஒரு பரபரப்புடன் ஆஃபீஸ் லேப்டாப், கைப்பையைத் தேட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அவளை கொஞ்சம் வர்ணிப்போம்!

ஷிவாங்கி ஐந்து அடி ஐந்து அங்குலம் இருப்பாள். கோதுமை நிறம். சுருளான முடி.. "இட்ஸ் ஃப்ரைடே, ஈட் அவுட்" என்று பிரிண்ட் செய்த வெள்ளை சட்டை, அதன்மேல் பட்டன் போடாமல் கருப்பு பிளேசர், நீல நிற ஜீன்ஸ் பேண்ட். ஒரு கையில் ஐவாட்ச், மற்றொரு கையில் அதற்குப் பொருத்தமாக பல நிறங்கள் கொண்ட 'அகேட்' பாசி மணி வளையல். மூக்கில் சிறிய வளையம். நீண்ட 'பீப் டோ' ஷூஸ் அவளது உயரத்தை இரண்டு அங்குலம் கூட்டிக் காண்பித்தது. இப்போது புரிந்திருக்கும். மேக்கப் செய்ய ஏன் கூடுதல் 15 நிமிடங்கள் என்று!

எல்லாவற்றையும் தேடி எடுத்து, வீட்டின் கதவைப் பூட்டியபோது மணி 1:33. அது சிறிய வராண்டாவுடன் மாடி போர்ஷன். அந்தப் பகுதி கொத்தவால் சாவடி போல இருந்தது. சாப்பாடு வாங்கிவந்த பிளாஸ்டிக் பைகள், நியூஸ் பேப்பர் என்று குப்பையும் கூளமுமாக இருந்தது. அவர்களுடைய நல்ல நேரம், வீட்டு ஓனர் ஊரில் இல்லை. பலத்த காற்று வேறு. ஒரு சில பிளாஸ்டிக் பைகள் அடித்த காற்றின் வேகத்தில் அங்கே சுற்றிக் கொண்டிருந்தன. அதைப்பற்றி அவள் கவலைப்படவில்லை. முடி கலைந்து விடாமல் ஹெல்மெட் போடுவதில் மும்முரமாக இருந்தாள். கீழே இறங்கி ஹோண்டா ஆக்டிவாவை வெளியே எடுத்தபொழுது மணி 1:37. அவளது அவசரம் அவள் ஆக்சிலரேட்டரை முடுக்கிய வேகத்தில் தெரிந்தது.

அவளைப் பார்த்தவுடன் எதிர்க் கடையில் வேலை செய்யும் பையன் "அக்கா" என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்தான். கிளம்பிய வேகத்தில் பிரேக் போட்டாள்.

"டேய், நானே செம லேட், என்ன விஷயம்?" என்று எரிச்சலுடன் கேட்டாள்.

"நேத்திக்கு சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இன்னும் துட்டு வரலை" என்றான்.

"டேய், கடுப்பு ஏத்தாதே. ஊர விட்டா ஓடிட்டோம், அப்புறம் பேசலாம்" என்று அவனை முறைத்துக் கொண்டே மீண்டும் ஆக்சிலரேட்டரை முடுக்கினாள். 25 அடிகூடப் போயிருக்க மாட்டாள். பூக்காரி, அவளது ரூம்மேட்டின் பாய் ஃபிரண்டு எனப் பல இடைஞ்சல்கள்! ஒரு வழியாக மெயின் ரோடை அடைந்த பொழுது மணி 1:45, "அப்பாடி" என்று பெருமூச்சு விட்டாள். அங்கே இருந்து அவள் அலுவலகத்திற்கு பன்னிரண்டு நிமிடத்தில் போய்விடலாம். சில நிமிடங்கள் தாமதமாக மீட்டிங்கிற்குப் போனால் பரவாயில்லை என்று தன்னையே தேற்றிக் கொண்டாள்.

அந்த மேனேஜர் 'சூடு கொட்டை' சுப்பிரமணி ஒரு கடியன், சீக்கிரமாய்ப் போனால் நமக்கு நல்லது என்று நினைத்தபடியே வண்டியை விரட்டினாள். சுப்பிரமணியின் பட்டப்பெயர் 'சூடு கொட்டை'. சரியான கோபக்காரன்!

அவள் இருந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 அடி தொலைவில் இருந்த ஒரு தெருவிளக்கின் கீழே யாரோ ஒருவர் நின்றவாறே கேஸ் அடுப்பில் பக்கோடா போட்டுக் கொண்டு இருந்தார். அந்த இடம் மற்றொரு தெரு, பிரதான தெருவுடன் சேரும் இடம். அவள் இருந்த இடத்திலிருந்து அந்தத் தெரு முழுவதுமாகத் தெரியவில்லை. அங்கு இருந்து, சற்று நிதானத்தை இழந்தபடியே வந்த ஒரு ஸ்கூட்டர், தடுமாறி கேஸ் அடுப்பில் மோதியது. அந்த வேகத்தில் எரியும் அடுப்பு, எண்ணெய்ச் சட்டி, கேஸ் சிலிண்டர் எல்லாம் வெவ்வேறு திசைகளில் சிதறி, கேஸ் சிலிண்டரில் நெருப்பு பற்றியது. சில நொடிகளில் அது வெடித்துச் சிதறியது. தீபாவளி சமயம் வேறு. பட்டாசுக் கடை, கேஸ் சிலிண்டர் கடை, கூரைப்பந்தலுடன் ஃபேன்சி ஷாப் போன்ற பல விதமான கடைகள். சில நிமிடங்களில் அந்த இடமே எரிமலை கொப்பளித்த தீப்பிழம்பாய் காட்சி அளித்தது.

அங்கிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து, கறுப்புநிறப் புகை வானத்தை நோக்கிச் சென்றது. கேஸ் சிலிண்டர் கடை, தீ மூச்சு விடும் டிராகன் வீட்டிற்குள் இருப்பது போலத் தீப்பிடித்து எரிந்தது. தீ பலவிதமான திறப்புகள் வழியாகக் கடைக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. தீப்பிழம்புகள் அடர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சிலர் உடம்பெல்லாம் நெருப்புடன், கடையில் இருந்து அவள் பக்கம் ஓடி வருவதைப் பார்த்தாள். சிலர் அங்கேயே கருகிச் சாவதையும் பார்த்தாள்.

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. டக்கென்று பயத்துடன் விழித்தாள் ஷிவாங்கி!

"அய்யோ சாமி, கனவுபோல! என்ன மோசமான கனவு!" என்று நினைத்தபடி ஐஃபோனைப் பார்த்தாள். மதியம் 1 மணி. அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள்.

"இன்னைக்கு மிக முக்கியமான அலுவலகச் சந்திப்பு. அதனால் மதியம் 2:00 மணிக்குள் அலுவலகத்தில் இருக்கவேண்டும். இந்தக் கனவு வேற, நம்ம நாளையே பாதிச்சிருச்சு" என்று சொல்லிக்கொண்டே பாத்ரூம் பக்கம் ஓடினாள்.

மணி கிட்டத்தட்ட 1:35. பலத்த காற்று. ஒரு சில பிளாஸ்டிக் பைகள் அடித்த காற்றின் வேகத்தில் அங்கே சுற்றிக் கொண்டிருந்தன. தற்செயல் என்று நினைத்தப்படி ஆக்சிலரேட்டரை முடுக்கி வண்டியை எடுத்தாள். அவளைப் பார்த்தவுடன் எதிர்க்கடையில் வேலை செய்யும் பையன் "அக்கா" என்று சொல்லிக் கொண்டே ஓடிவந்தான். கிளம்பிய வேகத்தில் பிரேக் போட்டாள். அவளுக்குச் சற்று கவலை தொற்றிக் கொண்டது.

"நான் கனவில் கண்டதுபோல இருக்கு" என்று நினைத்தபடி விசாரித்ததில் பணம் விஷயம்தான். போகும் வழியில் பூக்காரி, அவளது ரூம்மேட்டின் பாய் ஃபிரண்டு என அதே இடைஞ்சல்கள்! மெயின் ரோடை அடைந்தபோது மணி 1:45. "என்ன நடக்கப் போகுதோ" என்று விழி பிதுங்க நின்றாள்.

அவள் எதிர்பார்த்தபடி, அந்த ஸ்கூட்டர் தடுமாறி, கேஸ் அடுப்பில் மோதியது. சில நிமிடங்களில் அந்த இடமே எரிமலையில் இருந்து வரும் தீப்பிழம்பாகக் காட்சி அளித்தது. உடம்பெல்லாம் நெருப்புடன், கடையில் இருந்து அவள் பக்கம் மக்கள் ஓடிவந்தனர்.

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. டக்கென்று விழித்தாள் ஷிவாங்கி!

"இந்தத் தடவை, 1:45க்கு முன்னாடி அங்கு போய், அந்த ஸ்கூட்டர் வருவதைத் தடுத்துப் பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு வேகமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, கையில் கிடைத்த ஆடையைப் போட்டுகொண்டு கிட்டத்தட்ட 1:25க்கெல்லாம் போய்ச் சேர்ந்தாள். அந்தப் பெரியவர் கேஸ் அடுப்பில் பக்கோடா போட்டுகொண்டு இருந்தார். காட்சி அமைப்பு மாறவில்லை என்று சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அந்தத் தெருவின் முனையில் நின்று, அந்த ஸ்கூட்டர், கேஸ் அடுப்பில் மோதாமல் தடுக்கலாம் என்று மனத்தில் நினைத்துக் கொண்டு முன்னோக்கி சென்றாள். "அவென்ச்சர் எண்ட் கேம்" படத்தில் வரும் வகாண்டாவின் போர்ஸ் பீல்ட் போன்று ஒரு அமைப்பு அங்கு இருந்தது. அவளால் அதைக் கடந்து மறுபுறம் செல்ல முடியவில்லை. அவளது பைக் உள்ளே சென்ற வேகத்தில் தடுமாறி விழுந்தது. ஆனால் மற்றவர்களால் அந்தக் கவசத்தைக் கடக்க முடிந்தது. அவள் கூப்பிட்டதையும், விழுந்ததையும் யாரும் கவனிக்க வில்லை. ஒருவேளை தான் ஓர் ஆவியோ என்று பயந்து, தன்னையே கிள்ளிப் பார்த்தாள். வலித்தது!

மணி 1:45. சில நொடிகளில் அந்த ஸ்கூட்டர் கேஸ் அடுப்பில் மோதியது. மற்ற நிகழ்வுகள் எதுவும் மாறவில்லை!

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. டக்கென்று விழித்தாள் ஷிவாங்கி!

அதற்குப் பின், அவள் வெவ்வேறு விஷயங்களை முயற்சித்தாள், ஆனால் இறுதி முடிவை அவளால் மாற்றவே முடியவில்லை. நடுவில் சில நிகழ்வுகள் மாறினாலும், அவள் எழுந்த நேரமும், தீ விபத்து நிகழ்ந்ததும் மாறவில்லை. அப்பொழுதுதான் நேரச் சுழற்சியில் (டைம் லூப்) தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்தாள்!

யோசிக்க ஆரம்பித்தாள்.

"இங்குள்ள யாரும் நேரச் சுழற்சியில் மாட்டிக்கொள்ளவில்லை. தலைவர் படப் பாட்டு 'சுத்தி சுத்தி வந்தீக!' மாதிரி இங்கேயே நம்மளைச் சுத்தி சுத்தி விடுதே இது. இங்கு எதையோ மாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அது என்ன? அதை நான் கண்டுபிடிக்கணும். அதுதான் இந்த டைம் லூப்பில் இருந்து வெளியே வரத் தீர்வு" என்று தீர்மானித்தாள்.

இந்தமுறை 1:25க்கு எல்லாம் அந்த இடத்தை அடைந்தாள். சுற்றுப்புறத்தை நோட்டமிட்டாள். அதே மனிதர்கள், ஆனால் அவர்களால் எந்த மாற்றமும் இல்லை. வேறு என்னவாக இருக்கும் என்று தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் காற்றின் வேகம் மட்டும் மாறவில்லை. ஆனால் அதற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று நினைத்து குழம்பினாள்.

மணி 1:44. அப்பொழுது ஒரு பிளாஸ்டிக் பை காற்றில் சுற்றிக்கொண்டே பறப்பதைப் பார்த்தாள். அது அந்த வளையத்தை எளிதில் கடந்தது. உற்று கவனித்தாள். அந்தப் பை தெருவில் நுழைந்தது. மணி 1:45. சில நொடிகளில் அந்த ஸ்கூட்டர் கேஸ் அடுப்பில் மோதியது. மற்ற நிகழ்வு எதுவும் மாறவில்லை!

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. டக்கென்று விழித்தாள் ஷிவாங்கி! மீண்டும் அதே இடத்திற்க்கு வந்தாள். இந்தமுறை பிளாஸ்டிக் பையை உற்றுப் பார்த்தாள். அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. நேற்று இரவு அவள் ரூமுக்குச் சாப்பாடு கொண்டு வந்து அவர்கள் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பை! அவர்கள் முறையாக அப்புறப்படுத்தாத பை. இப்பொழுது அவளுக்கு எல்லாம் புரிந்தது. இந்தப் பைதான் அந்த ஸ்கூட்டர் ஓட்டுபவரின் ஹெல்மட்டில் பட்டு, அவரது கவனத்தை மாற்றியுள்ளது. மணி 1:45. சில நொடிகளில் அந்த ஸ்கூட்டர் கேஸ் அடுப்பில் மோதியது. மற்ற நிகழ்வு எதுவும் மாறவில்லை!

ஐஃபோனில் கிர்...கிர்... என்று அலாரம் அடித்தது. டக்கென்று விழித்தாள் ஷிவாங்கி! இந்த முறை விரைவாக ரெடியாகி வீட்டின் வெளியே வந்து குப்பையும் குளமுமாய் இருக்கும் அந்த இடத்தைச் சரி செய்தாள். 1:43க்கு எல்லாம் அந்த இடத்தை அடைந்தாள். மணி 1:44. பிளாஸ்டிக் பை வரவில்லை! 'போர்ஸ் ஃபீல்ட்' இல்லை! வேகமாக அந்த இடத்தைக் கடந்தாள். அவளால் கடக்க முடிந்தது! மணி 1:45, குறுக்குத் தெருவில் இருந்து அந்த ஸ்கூட்டர் கேஷுவலாகத் திரும்பி, பத்திரமாக அவள் முன்னால் சென்றது. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்!

சிறிது தூரம் சென்றவுடன், அந்த ஸ்கூட்டரை ஓட்டியவர் சற்று ஓரங்கட்டினார். அவளைப் பார்த்து கை காட்டி நிற்கச் சொன்னார். ஹெல்மட்டை அந்த உருவம் கழட்டியது. அவளது கடி மேனேஜர்! 'சூடு கொட்டை' சுப்பிரமணி!

"என்ன ஷிவாங்கி, என்னோட கார் ரிப்பேர், அதான் நான் லேட். இரண்டு மணிக்கு மீட்டிங், இன்னும் என்ன இங்க பண்ணிகிட்டு இருக்க. உனக்கு பங்ச்சுவாலிட்டி பற்றி கிளாஸ் எடுத்தே, எனக்கு போர் அடிச்சுப் போச்சு" என்று நடுரோட்டில் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

"சார், இன்னும் பத்து நிமிஷத்துல ஆபீஸ்ல இருப்பேன்" என்று சொல்லிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஆக்சிலரேட்டரை முடுக்கினாள்.

மனதில் "இந்த ஆள்கிட்ட நடந்ததை நான் சொன்னா, எனக்குப் பைத்தியம் என்று இந்த லூசு எனக்கு பட்டம் கட்டிடும். ஆனா இந்த 'சூடு கொட்டை' சுப்பிரமணி ஹெல்மெட் போட்டதுனால தப்பிச்சான். நான் மட்டும் அவனைப் பார்த்திருந்தா, நான் லூப்புல மாட்டினாலும் பரவாயில்லை என்று இவனை அங்கேயே கருகவிட்டு இருப்பேன்" என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே பைக்கின் வேகத்தைக் கூட்டினாள்!
மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா
Share: 
© Copyright 2020 Tamilonline