Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அலமாரி
மகாத்மா காந்தியுடன் ஒருநாள்
- தி.சு. அவினாசிலிங்கம்|அக்டோபர் 2022|
Share:
மகாத்மா காந்தியை நான் முதன்முதலில் 1919ஆம் ஆண்டிற் சந்தித்தேன். அப்போது சென்னைக் கலாசாலையில் முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தேன். ஒத்துழையாமை சம்பந்தமாக அவர்கள் அதுசமயம் சென்னைக்கு வந்திருந்தார். அன்று மாலை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்குச் சென்று அவரைத் தரிசித்தவர்களில் நானும் ஒருவன். அடுத்த தடவை நான் அவரைச் சந்தித்தது 1927ஆம் ஆண்டில். அப்பொழுது அவர் கதர்ப் பிரசாரத்திற்காக வந்திருந்தார். திருப்பூரை அவர் தன்னுடைய கதர் இராஜதானி என்று சொல்லிக்கொள்வது வழக்கம். திருப்பூர் எனது சொந்த ஊராகவும் இருந்தது. நான் என் சட்டப் பரீட்சை முடிந்து திருப்பூரில் தொழில் ஆரம்பித்திருந்தேன். அப்பொழுதுதான் அவரிடம் முதன்முதல் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு 1934ஆம் ஆண்டு ஹரிஜன முன்னேற்றத்திற்காக அவர் வந்தபோது கோவை, நீலகிரி ஜில்லாக்களில் அவர் சுற்றுப்பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் பேற்றையும் பெற்றேன். அச்சுற்றுப் பிரயாணம் நிகழ்ந்து இப்பொழுது ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அவருடன் கழித்த நாட்கள் இன்னும் என் மனதில் இருந்து கொண்டிருக்கின்றன. அவருடைய அன்பு நிறைந்த பேச்சும், கனிவு நிறைந்த சொற்களும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தச் சுற்றுப் பிரயாணத்தின்போது நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளையே இங்கு எழுதுகின்றேன்.

காந்திஜியைக் காணும் ஆவல்
மகாத்மாஜி காலையில் திருப்பூர் வந்து சேர்ந்தார். நேராகப் பொதுக் கூட்டத்திற்குச் சென்று கூட்டத்தை முடித்துக்கொண்டு தாம் தங்கியிருந்த விடுதிக்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டார். மத்தியானம் ஏறக்குறைய இரண்டரை மணிக்குப் பல்லடம், சூலூர் முதலிய ஊர்களைத் தாண்டி கோவை போய்ச் சேருவதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. அன்று வெயில் மிகக் கொடுமையாக இருந்தது; அவர் ஏறும் காரின் மேல்மூடி கழற்றப்பட்டிருந்தது. வெயிலின் வெப்பத்தை உத்தேசித்து, "வெயில் மிக அதிகமாக இருக்கிறது; காரின் மேல்மூடியைப் போட்டுக்கொள்ளலாமே" என்று நான் கேட்டேன். மகாத்மாஜி வழக்கம்போல் கொல்லென்று சிரித்து, "ஆம், வெய்யில் அதிகமாக இருக்கிறது; ஆனாற் கூட்டத்தின் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்குமே" என்றார். அதன் கருத்து எனக்கு அப்பொழுது விளங்கவில்லை. பல்லடம் சென்றதும் விஷயம் விளங்கிற்று. மகாத்மாஜி செல்லும் இடங்களிற் பத்தாயிரக் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். மேல்மூடி போட்ட காரில் அவர் செல்வாரானால், மக்கள் அவரைக் காணவொட்டாமல் தடுக்கும் அந்த மூடியைப் பிய்த்து எறிந்து விடுகிறார்கள். தவிர, மகாத்மாஜியைக் காணும் ஆவலில், ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு முன்வருகிறார்கள். அதன்மூலம் குழப்பம் அதிகமாகப் பல சமயங்களிற் காரின் கண்ணாடி முதலியன உடைந்து போய்விடுகின்றன. வெய்யிலின் கடுமையைவிட மக்களின் வேகத்தால் உண்டாகும் இந்நிலைமை அதிகத் தொந்தரவாயிருக்கும் என்பதுதான் அவர் சொன்ன வார்த்தைகளின் கருத்து. எனவே, அனைவரும் அவரை நன்றாகப் பார்க்க இயலும் பொருட்டு மேல்மூடி எடுக்கப்பெற்ற திறந்த காரிலேயே அவர் சுற்றுப் பிரயாணம் செய்வது வழக்கம்.



மந்திர சக்தி
மாலையிற் பிரமாண்டமான கூட்டம் நடைபெற்றது. பல இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். ஜில்லாவில் எல்லாப் பாகங்களிலிருந்தும் பதினாயிரக் கணக்கான மக்கள் அதிகாலையிலிருந்து உணவும் ஓய்வும் இல்லாமற் பலமணி நேரம் அந்தக் கடும் வெய்யிலிற் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர் வந்தபோது கூட்டத்தில், "மகாத்மாஜி வந்துவிட்டார் - வந்துவிட்டார்" என்ற பரபரப்பும் சப்தமும் ஏற்பட்டது. "மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற சப்தங்கள் வானைப் பிளந்தன. ஆனால் அவர் மேடையின்மேல் உட்கார்ந்து, சாந்தமாயிருக்கும்படி தன் கைகளாற் சமிக்கை செய்ததும், அந்த இலட்சக்கணக்கான மக்களும் மந்திர சக்தியாற் கட்டுண்டது போல் ஆங்காங்கே நிசப்தமாக அமர்ந்து அவர் வாயிலிருந்து வரும் அமுத வெள்ளத்தை எதிர்பார்த்திருந்தனர். ஹரிஜனங்களை உயர்த்த வேண்டிய அவசியத்தைப் பற்றியே அன்றைய பேச்சு இருந்தது. அனைவரும் பக்தி சிரத்தையுடன், கூட்டம் முடியும்வரை ஒரு சிறிதும் சப்தமில்லாமற் கேட்டனர். கூட்டம் முடிந்ததும் முன் போட்டிருந்த திட்டப்படி இரவு தங்க வித்தியாலயத்திற்குச் சென்றோம்.

வழியில் ஒரு சம்பவம்
போகும் வழியில் நேர்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. கோவை நகர எல்லை வரையில் ஜனத்திரள் அதிகமாயிருந்தது. ஆதலாற் கார் மெதுவாகச் செல்லவேண்டியிருந்தது. நகர எல்லை தாண்டியதும் கார் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. கார் எவ்வளவு வேகமாய்ப் போயினும் அதைப் பற்றி மகாத்மாஜிக்கு கவலை கிடையாது. மணிக்கு 50, 60, 70 மைல் தான் போனாலும் அவர் ஏதும் சொல்லமாட்டார். போத்தனூர் சென்றதும் தெற்கே திரும்பிச் செல்லவேண்டும். அங்கு ஒரு வளைவில் ஒரு புகையிரதக் கடவை உண்டு. வளைவாக இருந்தபடியாற் கொஞ்சத் தூரத்திலிருந்தும் அது புலப்படாது. கார் ஓட்டுபவனுக்கு அந்த வீதி பழக்கமில்லாததால் அவனுக்கு அந்தக் கடவை இருப்பது தெரியாது. அவன் வழக்கம்போல் வேகமாக ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறான். கடவை எதிர்பாராத விதமாக மூடப்பட்டிருந்தது. அது மூடியிருப்பதைப் பார்த்ததும் ஓட்டுபவன் காரைத் திடீரென நிறுத்தினான். மிகவும் சமீபத்தில் வந்து நிறுத்தியதால் கார் 'கிரீச்'சென்று சத்தம் செய்து கடவையின் மேல் மோதியது. மோதிய வேகத்திற் கடவையின் மேல் மாட்டியிருந்த இரும்பு விளக்கு மேலே பறந்து எனக்கும் கார் ஓட்டுபவனுக்கும் மத்தியில் வீழ்ந்தது. அதைக் கண்டதும் எனக்குக் கலவரமாகிவிட் டது. மகாத்மாஜி என்ன சொல்வாரோ என்று ஒரே பயம். ஆனால் மகாத்மாஜியின் கொல்லென்ற சிரிப்பின் சப்தமும், "அவினாசி, என்ன நேர்ந்துவிட்டது" என்று அன்புடன் அவர் கேட்ட கேள்வியும் என் பயத்தைப் போக்கின. ஒரு கணத்தில் விஷயத்தை அறிந்து கொண்டார். அவர் முகத்திற் கோபம் ஏதும் தோன்றவில்லை. இதனால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. வசைமொழி ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. 'ஏன் முன் எச்சரிக்கையாக இருக்கவில்லை?' என்றுகூட அவர் கேட்கவில்லை.

இன்மொழியும் சிரிப்பும்
அன்று நடந்த சம்பவமும், அதன்பின் அவர் இன்மொழியும் சிரிப்பும் என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. மகாத்மாஜி அன்று நடந்துகொண்ட வகை என் மனத்திற் பசுமரத்தாணிபோற் பதிந்திருக்கிறது. நிறைகுடம் தளும்பாது. அதுபோல நிறைந்த சுபாவமுள்ளவர்கள் சகிப்பும், மன்னிப்பும் உடையவர்களாக இருப்பார்கள் என்று புத்தகத்திற் படித்திருக்கிறோம். ஆனால், நம் வாழ்க்கையில் அவ்விதம் இருப்பவர்களைக் காண்பது அருமையிலும் அருமை. அன்று எனக்குக் கிடைத்த அனுபவமும், நாம் அத்தகைய அரிய மனிதரின் முன்னிலையில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. கோபமும் தாபமும் பலவீனத்திற்கு அடையாளங்கள். அன்பும், அடக்கமும், சகிப்புத்தன்மையும், மன்னிப்புமே உயர்ந்த அறிவுக்கும், பலத்திற்கும் அறிகுறியாகும். கோடிக்கணக்கான மக்கள் அவரைப் போற்றிப் பேணியதற்குரிய காரணமொன்றை அன்று நான் அச்சம்பவத்திற் கண்டேன்.

வித்தியாலயத்தில்
அன்றிரவு வித்தியாலயத்திலே தங்கினார். அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் இங்கு எழுத முடியாது. அந்த நினைவுகள் மனதில் ஆயுள் முழுவதும் போற்றி வைக்கப்படவேண்டியவை. குழந்தைகளிடமும், ஊழியர்களிடமும் அன்புடன் பேசினார். ஆசிரியர் ஒருவரால் வரையப்பட்ட அவர் திருவுருவப் படத்தில், "வித்தியாலயக் குழந்தைகள் உண்மையைப் பின்பற்றி, இறைவனிடம் பக்தியுடன் வாழ்வார்களாக" என்று அவர் திருக்கரத்தால் எழுதி குஜராத்தியிலும் தமிழிலும் 'காந்தி' என்று அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தது எங்களுக்கு என்றும் அழியாப் பொக்கிஷமாக இருந்து கொண்டிருக்கிறது. அடுத்தநாள் காலை புறப்படுமுன் வித்தியாலயக் கட்டிடத்திற்கு அடித்தளக்கல் நாட்டியருளினார். இன்று வித்தியாலயம் குருகுல முறையில் நடத்தப்பெறும் உயர்தரப் பள்ளிக்கூடம், ஆசிரியர் பள்ளி, ஆசிரியர் கல்லூரி, டிகிரி பெற்றவர்களுக்கு ஆதாரப் பயிற்சி சாலை, கிராம குரு சேவா நிலையம் முதலிய பகுதிகளுடன் இம்மாகாணத்தில் முக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றாக விளங்குகின்றதெனில், அதற்குக் காரணம் அவர் அன்பு கனிந்த ஆசியும், அவர் கொள்கைகளைப் பின்பற்றுவதுமேயாகும். அவர் அன்று போட்ட அடித்தளக்கல் வித்தியாலயத்தின்பால் அவருக்கிருந்த அன்புக்கும் ஆசிக்கும் ஸ்தூல சின்னமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.



பெருமையின் சிகரம்
மகாத்மாஜி மறைந்து இப்பொழுது ஆறு ஆண்டுகள் ஆகின்றன. பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக மாசுகள் படிந்து அழுக்கேறியிருந்த நமது சமூகத்தை ஒரு அரை நூற்றாண்டிற்குள் தூய்மைப்படுத்திய பெருமை அவரையே சாரும். அசைக்க முடியாதென்று கருதப்பட்ட அன்னிய அரசாட்சியை மாற்றி மக்கள் ஆட்சியை ஏற்படுத்தினார். மக்கள் மனதிற் குடிகொண்டிருந்த பயமும், பீதியும் போய் அதற்குப் பதிலாக தெளிவும், தைரியமும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பேரில் நெடுங்காலச் சாபம் போலிருந்த தீண்டாமை அகற்றப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் எங்கும் சுதந்திர மக்களாக மதிக்கப்பட்டுக் கௌரவத்துடன் வாழ்கிறார்கள். இவை அனைத்திற்கும் காரணமாகவிருந்த மகாத்மா காந்தியைப் பாரதத்தின் தந்தையென்று நம் மக்கள் அழைப்பது ஆச்சரியமான விஷயமல்ல. 'புரட்சி, புரட்சி' யென்று மக்கள் பேசிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால், மிகக் கேவலமாகப் பேசியவர்கள் மூலம் அப்புரட்சி உண்டாகவில்லை. பேச்சிலும் வீண் சண்டைகளிலும் அவர்கள் சக்திகளனைத்தும் செலவாகிவிட் டன. ஆனால், மகாத்மாஜி தனது ஒப்பற்ற அன்பின் மூலமும், சேவையின் மூலமும் அப்புரட்சியை முதலில் மக்கள் மனத்தில் உண்டாக்கி, பின்னர் தேசத்தில் உண்டாக்கினார். யுத்தமின்றி இரத்தமின்றி இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற்றார் என்பதல்ல, அவர் பெருமையின் சிகரம். உலகுய்ய அன்பு நெறியொன்று காண்பித்ததே அவருக்கு அனைத்திலும் பெருமையாகும்.

என்றென்றும் வழிகாட்டி
அவர் காலமான பிறகு நம் நாடும் மக்களும் வழிகாட்டியின்றி வானத்திற் சூரியனும் சந்திரனும் இன்றி, நட்சத்திரங்களும் மேகத்தால் மூடப்பெற்று, உலகம் இருளிற் கவ்வப்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது. அவர் மறைந்த இவ்வளவு சீக்கிரத்தில் சேவையும், தியாகமும் மறைந்து, சுயநலமும் பொறாமையும் வளர்ந்து, கை லஞ்சமும் ஊழலும் மலிந்திருப்பது தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் அனைவர் மனதிலும் மிகுந்த சோர்வையும் வருத்தத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது. மகாத்மாஜியின் புனித இலட்சியங்களே நமது சோர்வை அகற்றிப் பலம் கொடுக்கக் கூடியனவாகும்.

அவர் கருத்துக்களை விளக்கக் கூடிய பாட்டு ஒன்று இன்றும் இனிமையூட்டி வருவதாகவே யிருக்கின்றது :

எத்தனை ஜென்மங்கள் வந்து பிறந்தாலும்
இந்திய மண்ணிடை வேண்டுவனே
சத்திய ஆர்வமும் நித்திய சேவையும்
சாகஸ வாழ்க்கையும் வேண்டுவனே
பித்தனாய் மாறியே தொண்டுகள் செய்திடும்
பெருமையாம் வாழ்க்கையை வேண்டுவனே
ஏழை எளியவர் எங்கள் நன் னாட்டிலே
என்றும் பசியாற வேண்டுவனே
கோழைக ளில்லாமல் வீரத் தொழில் செய்யும்
கூட்டமிந் நாட்டிலே வேண்டுவனே
தேசம் அழைத்திடின் பாசம் களைந்திடும்
தெய்வீக நல்லருள் வேண்டுவனே
நீசம் அகன்றிட நீதி துலங்கிட
நேர்மையாய்த் தொண்டுக ளாற்றுவனே
முப்பது கோடிக்கு நன்மைகள் செய்வதே
முத்தி நிலை என்று சாற்றுவனே
இப்பணி செய்வதில் எவ்வகைத் துயரமும்
ஏற்றிடு வேனிது சத்தியமே.


அவருடைய ஆத்மா நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருந்து நம் நாடும் மக்களும் முன்னேற அறிவும் ஒளியும் அளிக்குமாக!

நன்றி: ஈழகேசரி வெள்ளிவிழா ஆண்டு மலர்
தி.சு. அவினாசிலிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline