Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
தேவி நாச்சியப்பன்
- அரவிந்த்|நவம்பர் 2022|
Share:
சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது, சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்பட பல்வேறு விருதுகளும், கௌரவங்களும் பெற்றிருக்கும் தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள். இவர் ஜூலை 8, 1961 அன்று அழ. வள்ளியப்பா-வள்ளியம்மை ஆச்சி இணையருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் தெய்வானை.

சென்னை மயிலாப்பூரில் 'சில்ரன் கார்டன்' பள்ளியில் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே குழந்தை இலக்கியச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. 'கவிமணி குழந்தைகள் சங்கம்' என்பதன் அமைப்பாளர் பொறுப்பை வள்ளியப்பா, தேவிக்குக் கொடுத்தார். ஆர்வமுள்ள குழந்தைகளை ஒருங்கிணைப்பது, மாதம் ஒருமுறை குழந்தைகளை அழைத்துக் கூட்டம் நடத்துவது, சென்னை வானொலி, தொலைக்காட்சிகளில் சங்கக் குழந்தைகளின் நிகழ்ச்சிகளை வழங்குவது, ஆண்டு விழா நடத்துவது எனத் தந்தையின் ஆலோசனையின்படிச் செயல்பட்டார். அந்தப் பயிற்சியே இவர் பின்னாளில் குழந்தை இலக்கிய எழுத்தாளராக உருவாகக் காரணமாக அமைந்தது.



சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றுவதில் தேவி நாச்சியப்பனுக்கு ஆர்வம் இருந்தது. கோகுலம் இதழில் பல கவிதைகள் வெளியாகின. கதைகளும் எழுதினார். இவருடைய முதல் கதை 1983ம் ஆண்டு கோகுலம் மாத இதழில் வெளியானது. கவிதைகளின் மீது கொண்ட ஆர்வத்தால் புதுக்கவிதைகள் எழுதத் தலைப்பட்டார். ஆனால், தந்தை அழ. வள்ளியப்பா, மரபுக் கவிதை வழியிலேயே செயல்படுமாறு கூறவே, மரபுக் கவிதைகளைத் தொடர்ந்தார். தந்தையின் ஆலோசனைப்படி பிறமொழிச் சிறார் கதைகளை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். ஆங்கிலச் சிறார் நூல்கள் பலவற்றை வாங்கிப் படித்தார்.

உயர்கல்வியை முடித்த தேவி நாச்சியப்பன், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கல்வியியலில் முதுகலைப் பட்டமும், தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். 'குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்' என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு. 1984-ல் நாச்சியப்பனுடன் திருமணம் நிகழ்ந்தது. இவருடைய மொழிபெயர்ப்பு நூல்கள், 'பல தேசத்துக் குட்டிக் கதைகள் - பகுதி 1 மற்றும் 2' இவரது திருமணத்தின் போது வெளியிடப்பட்டன. கணவர் நாச்சியப்பனும் கவிஞர். அவரது கவிதை நூல் 'மௌன ராகம்' என்பதும் திருமணத்தின் போது வெளியிடப்பட்டது. வங்கியில் பணியாற்றி வந்த கணவர் நாச்சியப்பன், தேவியின் இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார். 1990 முதல் கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார் தேவி நாச்சியப்பன். தான் வசித்த காரைக்குடியில் குழந்தை இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார்.



தேவி நாச்சியப்பன் எழுதி, 1997ல், 'பந்தும் பாப்பாவும்' என்ற தலைப்பில் சிறார்களுக்கான சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து 2002ல் 'பசுமைப்படை' என்ற சிறார் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கியக் கழகம் நடத்திய போட்டியில் இவர் எழுதிய 'பசுமைப்படை' என்ற சிறார் சிறுகதை நூலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 'பேசியது கைபேசி' என்ற இவரது நூலுக்கு ராஜபாளையம் மணிமேகலை மன்றம் மற்றும் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசுகள் கிடைத்தன. 'உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்' நடத்திய கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய ஆசிரியர் தினக் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு இவருக்குக் கிடைத்தது. இவருடைய படைப்புகள் தினமணி சிறுவர்மணி, கோகுலம், அமுதசுரபி, இந்து தமிழ் திசை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றைத் தயாரித்து வழங்கியுள்ளார். இவர் எழுதிய 'குழந்தைகள் சென்ற குஷியான பயணம்' என்ற நூல், சிறார்களுக்கான பயண நூலாக மட்டுமல்லாமல், கூட்டுக் குடும்பங்களின் மேன்மையை, உறவுகளின் பெருமையைக் கூறும் நூலாகவும் அமைந்துள்ளது.

அழ. வள்ளியப்பா நூற்றாண்டை ஒட்டி, 'நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்' என்ற நூலை தேவி நாச்சியப்பன் தொகுத்துள்ளார். இந்த நூலில் அழ. வள்ளியப்பாவுடன் பணிபுரிந்த, அவருடன் பழகிய பலர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 'கல்கி' ராஜேந்திரன், சீதா ரவி, எழுத்தாளர் பூவண்ணன், ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்), டாக்டர் கு. கணேசன், எழுத்தாளர் கமலவேலன், இயக்குநர் வசந்த் எஸ். சாய் உள்ளிட்ட பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.



அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இவருக்கு 'பாரதி பணிச்செல்வர்' விருதினை வழங்கிச் சிறப்பித்தது. காரைக்குடி இன்னர் வீல் சங்கம் நடத்திய உலக மகளிர் தின விழாவில் இவருக்கு 'சாதனைப் பெண்மணி' விருது அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை இலக்கியப் பேரவை இவருக்கு 'கவிஞரின் கண்மணி' என்ற விருதை வழங்கிப் பாராட்டியது. தேவி நாச்சியப்பன், 2012ல், தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். 2017ல், தமிழக அரசின் 'தமிழ்ச்செம்மல்' விருது பெற்றார். குழந்தைகள் இலக்கியத்தில் இவரது மொத்தப் பங்களிப்புக்காக 2019-ல், சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கிய 'பால சாகித்ய புரஸ்கார் விருது' பெற்றார். தமிழில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் படைப்பாளி தேவி நாச்சியப்பன்.

தேவி நாச்சியப்பனின் படைப்புகள்
பல தேசத்துக் குட்டிக் கதைகள் – பகுதி 1
பல தேசத்துக் குட்டிக் கதைகள் – பகுதி 2
பந்தும் பாப்பாவும்
பசுமைப்படை
பனிலிங்கமும் படைவீரரும்
தேன் சிட்டுக்கு என்னாச்சி?
சிறுவர்களுக்கான 10 முத்தான கதைகள்
பேசியது கைபேசி
பட்டிமன்றம்
கடவுளைக் கண்டவர்கள்
புத்தகத் திருவிழா
குழந்தைகள் சென்ற குஷியான பயணம்
குழந்தை எழுத்தாளர் சங்கம் (வரலாறு)
நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் (தொகுப்பு நூல்)
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு)
குழந்தைக் கவிஞர் செல்லகணபதி (வாழ்க்கை வரலாறு)
குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள் (முனைவர் பட்ட ஆய்வின் நூல் வடிவம்)


சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம், சென்னை வானொலி தொலைக்காட்சி சிறுவர் சங்கப் பேரவை, காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம், காரைக்குடி மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பு, திருக்குறள் கழகம், காரைக்குடி புத்தகத் திருவிழா போன்ற அமைப்புகளில் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இணைச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளில் தேவி நாச்சியப்பன் பணியாற்றி வருகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றைச் சமர்ப்பித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். சாகித்ய அகாதமி நடத்திய சிறுவர் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டது உள்பட சிறார் அமைப்பினர் நடத்தும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார். 'வள்ளியப்பா இலக்கிய வட்டம்' சார்பாக, 'குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா' என்ற நிகழ்வினை, கவிஞர் செல்லக்கணபதியுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசளிப்பதுடன், 'வள்ளியப்பா இலக்கிய விருது', 'பதிப்பாளர் விருது' போன்ற விருதுகளையும் அந்த அமைப்பின் மூலம் வழங்கி வருகின்றார்.



குழந்தைகள் இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் தேவி நாச்சியப்பன், "பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி நிறைய வாசிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளையும் வாசிக்க வைக்கலாம். குழந்தைகளிடையே வாசிப்பார்வத்தை வளர்க்க இது ஒரு சிறந்த வழி. பள்ளிகளும் மாணவர்களை நூலகத்தைப் பயன்படுத்தச் சொல்லி அதற்குத் தனியாக மதிப்பெண் தரலாம். இது போன்ற செயல்பாடுகளே குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்" என்கிறார்.

பணி ஓய்வுக்குப் பின் தற்போது குழந்தைகளுக்காக எழுதுதல், குழந்தைகளுக்கான சங்கம், குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவித்தல், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று செயல்பட்டு வருகிறார். இவரது மகளுக்கும் எழுத்தார்வம் உண்டு. மகன் பத்திரிகையாளராகச் செயல்பட்டு வருகிறார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார், தேவி நாச்சியப்பன்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline