|
தேவர்கள் மனிதன் ஒருவனைச் சோதிக்கும்போது |
|
- |மார்ச் 2022| |
|
|
|
|
சிபி உண்மையான ஆன்ம சாதகன். அவன் பற்றின்மை மற்றும் தியாக உணர்வில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவனது சாதனை ஆழமானதா, அசைக்க முடியாததா எனச் சோதிக்கத் தீர்மானித்தனர் தேவர்கள்.
அக்னியும் இந்திரனும் முறையே புறாவாகவும் பருந்தாகவும் வடிவெடுத்துக் கொண்டனர். வானத்தில் பருந்து புறாவைத் துரத்திக்கொண்டு சென்றது. அரியணையில் அமர்ந்திருந்த சிபியின் மடியில் போய் விழுந்தது புறா. பருந்திடமிருந்து என்னைக் காப்பாற்று என்று மன்றாடியது. தனது தர்மத்துக்கு ஏற்ப, புறாவை அதன் எதிரியிடமிருந்து காப்பேன், முழுப் பாதுகாப்பு அளிப்பேன் எனச் சிபி உறுதியளித்தான். அந்தக் கணத்தில் சக்ரவர்த்தியின் முன் தோன்றிய பருந்து, நான் வேட்டையாடிய எனது இரையை நியாயப்படி எனக்குக் கொடுத்துவிடு என்றது. "எனக்கு ஒரே பசி. புறாவை நான் வேட்டையாடி அடைந்தேன். என் உணவை நீ பறித்துக்கொண்டாய்" என்று புகார் செய்தது. "என் உணவைக் கொள்ளையடித்தால் உன் ஆன்மீகத்தால் என்ன பயன்?" என்று புலம்பியது.
இதைக் கேட்டதும் சிபி, "இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை என் உடலிலிருந்து வெட்டிக் கொடுக்கிறேன். நீ அதை உண்டு பசியாறலாம்" என்றான். பருந்து ஒப்புக்கொண்டது. ஒரு தராசு கொண்டுவரப்பட்டது. ஒரு தட்டில் புறா வைக்கப்பட்டது. மறு தட்டில் சதைத் துண்டுகள் வைக்கப்பட்டன. எவ்வளவு வைத்தாலும் புறா இருந்த தட்டு மேலே ஏறவே இல்லை. அந்தப் பறவைக்கு எங்கிருந்து இத்தனை பாரம் வந்தது என்பது புதிராகவே இருந்தது. இறுதியாகச் சிபி, "சரி, நீ என்னை முழுதுமாக எடுத்துக்கொள். அப்படியே என்னைத் தின்றுவிடு. இதோ நான் உன் கையில்" என்றான்.
அப்படி அவன் கூறிய மாத்திரத்திலேயே பருந்து இந்திரனாகவும் புறா அக்னியாகவும் தமது தெய்வீக ஒளி பொருந்திய வடிவத்தில் அங்கே தோன்றினர்! சிபியின் தியாக உணர்வின் ஆழத்தைக் கண்டு அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அளவற்ற ஆசிகளை அவன்மீது பொழிந்துவிட்டு அவர்கள் கிளம்பினர்.
நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2021 இதழ். |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |
|
|
|
|
|
|
|