லதா மங்கேஷ்கர் ஜே.எஸ். ராகவன்
|
|
பா. விசாலம் |
|
- |மார்ச் 2022| |
|
|
|
|
பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி என்ற சிறு கிராமம் ஒன்றில், குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். காசி விசாலாட்சியின் நினைவாக விசாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும் நாஞ்சில்நாட்டு வட்டாரப்பகுதிகளில் கழிந்தன. இளவயதிலேயே தந்தையை இழந்தார். வாழ்க்கை அனுபவங்களும் சூழல்களும் இவரைப் புடம்போட்டன. பொதுவுடைமை இயக்கமும் அதன் சீர்த்திருத்தக் கருத்துக்களும் இவரை ஈர்த்தன. பல போராட்டங்களில் பங்கு கொண்டார். 'நொய்' என்கிற முதல் சிறுகதை சரஸ்வதி பத்திரிகையில் வெளியானது. பொதுவுடைமை இயக்கம் சார்ந்து இயங்கிய ராஜுவைத் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் இணைந்து இயக்கம் சார்பாக பல சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1973ல் இலங்கையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1975ல் கிழக்கு பெர்லினில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். 'தலைக்கோல்' என்ற நாடகக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
தனது வாழ்க்கை அனுபவங்களையும், பொதுவுடைமை இயக்க வாழ்வையும் பின்புலமாக வைத்து இவர் எழுதிய 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' நாவல் குறிப்பிடத் தகுந்த ஒன்று. 'முன்றில்', 'சதங்கை' போன்ற இதழ்களில் சிறுகதை, கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதியிருக்கிறார். 'உண்மை ஒளிர்க என்று பாடவோ' என்பது இவரது இரண்டாவது நாவல். தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிறித்துவ மதமாற்றம் என்பது எவ்வளவு தீவிரமாக நடைபெற்றது, அதன் பின்புலம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அப்படி மதம் மாறியவர்களிடையே இருந்த உயர் வகுப்பு, தாழ் வகுப்புப் பிரிவினைகள் எனப் பல செய்திகளை அந்நாவலில் மிக விரிவாக இவர் பதிவு செய்துள்ளார். 'அவள் அதுவானால்' என்பது இவரது சிறுகதைகளின் தொகுப்பு. தனது படைப்பு முயற்சிகளுக்காக 'கம்பர் விருது' உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர். (இவரைப் பற்றிய தென்றல் இதழ் கட்டுரையை வாசிக்க) |
|
கணவரை இழந்த விசாலம், தன் மகளுடன் புதுச்சேரியில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாகக் காலமானார். தமிழின் மூத்த எழுத்தாளருக்கு தென்றலின் அஞ்சலிகள்! |
|
|
More
லதா மங்கேஷ்கர் ஜே.எஸ். ராகவன்
|
|
|
|
|
|
|