|
டாக்டர் இரா. நாகசாமி |
|
- |பிப்ரவரி 2022| |
|
|
|
|
தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர், எம்.ஏ. சம்ஸ்கிருதம் பயின்றவர். இந்தியக் கலையியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். சென்னை அருங்காட்சியகத்தின் கலைப்பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பதவியேற்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். முதன்முதலில், பூம்புகாரில் கடலாய்வு செய்து, சங்ககாலச் சோழர்களின் சான்றுகளைக் கண்டறிந்தவர் நாகசாமிதான். தமிழகத்தின் பூண்டியில், வரலாற்றுக்கு முற்பட்ட கால அருங்காட்சியகம், ஆற்காட்டில் இஸ்லாமிய அருங்காட்சியகம் உள்பட, 12 அருங்காட்சியகங்களை நிறுவியவரும் இவரே. உலகப் புகழ்பெற்றுள்ள சிதம்பரம் நாட்டியாஞ்சலி உருவாகக் காரணமே நாகசாமிதான். கரூர், அழகன் குளம், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் இவரால் நடத்தப்பட்ட அகழாய்வுகள் முக்கியமானவை.
ஆங்கில இலக்கியம், சங்க இலக்கியம், சமஸ்கிருதம், வேதம், இதிகாச புராணங்களில் தேர்ந்தவர். கல்வெட்டுக்கள் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து பல்வேறு வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர். தமிழ், ஆங்கிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது 'தமிழ் ஆர்ட்ஸ் அகடமி' தளம் ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டித் தளம். தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மபூஷண் உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். இவர் தென்றல் இதழுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க:
முதல் பகுதி | இரண்டாவது பகுதி
இறுதிவரை சுறுசுறுப்பாக இயங்கி வந்த நாகசாமி, முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுபற்றி பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், “தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாசாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு மற்றும் தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். |
|
டாக்டர் நாகசாமிக்கு தென்றலின் அஞ்சலி! |
|
|
|
|
|
|
|