Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் இரா. நாகசாமி
- அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2010|
Share:
டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்டசோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவர் மேற்கொண்ட மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சொற்பொழிவாளர். இவரது கட்டுரைகளை உலக அளவில் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்த்து யுனெஸ்கோ பதிப்பித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மத்திய அரசின் பல கலை, பண்பாட்டுக் குழுக்களில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றிலும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பண்டைச் சிறப்பை, நாகரிகத்தை உலகுக்குச் சான்றுகளோடு அடையாளம் காட்டியவர். பார்க்க: Tamil Arts Academy தென்றலுக்காகச் சந்தித்துப் பேசிய சென்ற மாத இதழின் தொடர்ச்சியாக.....

கே: தொல்லியல் துறையில் நீங்கள் செய்த முக்கியமான பணிகளாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

ப: பல பணிகளைச் சொல்லலாம். எனது பதவிக் காலத்தில் நானே நேரடியாகப் பல முக்கியப் பணிகளைச் செய்திருக்கிறேன். முதலில் தமிழ் படித்தவர்கள் அதிகம் இத்துறைக்கு வர வேண்டும் என்பதற்காக, முதுகலைப் படிப்பு முடித்தவர்களுக்கு எங்கள் துறையின் கீழ் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா படிப்பில் கல்வெட்டுக்களை எப்படிப் படிப்பது என்பது பற்றிச் சொல்லிக்கொடுத்தோம். அடுத்ததாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வெட்டுக்களைப் படிப்பது பற்றிச் சொல்லித் தந்தேன். அதாவது நமது வரலாறு, பண்பாடு பற்றிய அறிவையும், புரிதலையும் நாங்கள் மட்டுமே மக்களிடம் ஏற்படுத்திவிட முடியாது. அதற்குப் பலரது ஒத்துழைப்பு தேவை. ஆகவே நாற்பது ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அந்த வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, விஞ்ஞானப் பாடத்தில் எவ்வாறு செயல்முறையுடன் சொல்லித் தருகிறார்களோ அதுபோல நேர்முகமாகச் சொல்லித் தந்தோம். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து இதனைச் செய்தோம். பயிற்சி முடிந்து திரும்பிச் சென்ற ஆசிரியர்கள், அவர்கள் பகுதிகளில் கேட்பார் இல்லாமல், வெளி உலகுக்குத் தெரியாமல் கிடந்த ஏராளமான கல்வெட்டுகளையும் சிற்பங்களையும், நடுகற்களையும் கண்டுபிடித்து எங்களுக்குத் தகவல்களை அனுப்பினார்கள். அவர்களில் சிலர் ஒன்றிணைந்து தர்மபுரியில் ஒரு அருங்காட்சியகத்தையே உருவாக்கி எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

அடுத்ததாகப் பள்ளி மாணவர்களைத் தயார் செய்தோம். அவர்களை வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று அது பற்றிய செய்திகளைப் பயிற்றுவித்தோம். அதாவது பல்லவர்கள் பற்றி என்றால் காஞ்சிபுரத்திற்கு, மாமல்லபுரத்திற்கு, சோழர்கள் என்றால் தஞ்சைக்கு என்று அழைத்துச் செல்வோம். இப்படிப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்தினோம். இது நம்முடையது, நமக்குச் சொந்தமானது. நாம்தான் சுத்தமாக இதனைப் பேண வேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னோம். சென்னை முதல் கன்யாகுமரி வரை பல பயிற்சி முகாம்களை அமைத்து இப்பணிகளை மேற்கொண்டோம். வரலாற்று அறிவு என்பது வெறும் உணர்ச்சிபூர்வமானது அல்ல. அது விஞ்ஞானபூர்வமான ஆய்வின் அடிப்படையில், சான்றுகளை வைத்துச் சொல்ல வேண்டியது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இவற்றைச் செய்தோம்.

சங்க இலக்கியத்தில்கூடப் பாறை உள் வெளியாக்கிக் குடைந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக குடைவரை மரபும் நம் மரபுதான் என்பதற்கு பிள்ளையார்பட்டி ஆலயம் மிக முக்கியமான சான்று.
அடுத்து, திருமலைநாயக்கர் மஹாலைச் செப்பனிட்டு அளித்தது ஒரு முக்கியமான பணி. ஆயிரக்கணக்கான வௌவால்கள் அதில் அடைந்து கிடந்தன. அதன் ஒருபகுதியில் கோர்ட் இயங்கி வந்தது. மற்ற இடங்களை சின்னச் சின்ன அறைகளாகத் தடுத்து கோர்ட் அலுவலகங்கள் இயங்கி வந்தன. அதைச் சீர் செய்ய ஆர்வம் கொண்ட திரு. பக்தவ்த்சலம் அவர்கள், அந்தக் கோர்ட் அலுவலகங்களுக்காக தனிக்கட்டிடம் கட்டி அதனை அங்கே இயங்கச் செய்தார். பின்னர் நாங்கள் மஹாலைச் சீர்படுத்தத் தொடங்கினோம். அதை ஒரு வரலாற்றுச் சின்னமாக, அதே பழமையோடும், பொலிவோடும், சிறப்போடும் மீண்டும் உருவாக்கினோம். தமிழகத்தைப் பொருத்தவரை முதன்முறையாக ஒலி-ஒளிக்காட்சி உருவாக்கப்பட்டது அங்கேதான். அதற்கு முன்னால் டெல்லி செங்கோட்டையிலும், கோல்கொண்டா கோட்டையிலும் இருந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமிதான் மஹாலில் அந்த ஒலி-ஒளிக் காட்சியை அமைத்துக் கொடுத்தார். அவர் பெரிய மேதை. அவர் செய்த தொண்டுகள் எல்லாம் மறக்கக் கூடாதது.

தமிழகத் தொல்பொருள் துறை இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் எல்லா விதங்களிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்தது நான் இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில்தான். எங்கள் துறைக்கென்று பெரிய பொருள் ஒதுக்கீடும் அக்காலத்தில் கிடையாது. பெரிய பெரிய துறைகளுக்கு மத்தியில் மிகச்சிறிய குருவி போன்ற துறை எங்களுடையது. இருந்தாலும் அது முன்னோடியாக இருக்கக் காரணம் எங்களுக்கிருந்த ஆர்வமும் உழைப்பும் விடாமுயற்சியும் தான்.

கே: தஞ்சாவூர் ஆலயத்தில் மிக அதிக எடையுள்ள கல்லை கோபுரத்து உச்சியில் வைத்து ஆலயம் சமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தஞ்சையின் சுற்றுவட்டாரத்தில் அத்தகைய கற்களைக் கொண்ட மலைப்பகுதிகள் எதுவும் இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் எப்படி இது சாத்தியமாகியிருக்கும்?

ப: அது ஒரே கல்லினால் ஆனதல்ல. பல கற்களைக் கொண்டுதான் அதனை நிர்மாணித்திருக்கிறார்கள். மேலும் பொன்மலை, திருவெறும்பூர் என மலைகள் அருகில் திருச்சியில் இருக்கின்றன. அங்கிருந்து கொண்டு வந்திருக்கலாம். அந்தக் காலத்தில் எல்லாம் கல் போன்ற அதிக எடை உள்ளவற்றை தரை வழியாகக் கொண்டு செல்வதை விட ஆற்றின் வழியாகக் கொண்டு சென்று விடுவார்கள். அதுதான் மிக வசதியானது. கரைக்குக் கொண்டு வந்து எருமை மாடு பூட்டிய வண்டிகள் மூலம் தேவைப்படும் இடத்திற்குக் கொண்டு சென்று விடுவார்கள். இவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதற்கு பதிலாக இவ்வளவு கற்கள் கொண்டு வந்து போட வேண்டும் என்பதெல்லாம் உண்டு. இது ஒரு தொழிலாகவே அக்காலத்தில் நடந்தது என்று கூடச் சொல்லலாம்.

கே: உங்களது பிள்ளையார்பட்டி ஆய்வைப் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: எழுத்துக்களின் அடிப்படையிலும், குடைவரையின் அடிப்படையிலும் பிள்ளையார்பட்டிக்குத் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஓர் இடம் உண்டு. பிள்ளையார்பட்டி ஆலயம் மலைக்குகையில் குடைந்து செய்யப்பட்ட ஆலயம். அதில் விநாயகர் பிரதானமான கடவுள். அருகே இரு புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. அவை பல்லவ மன்னர்களான மகேந்திர வர்மன் போன்றோரின் சிலை என்று கருதப்பட்டு வந்தன. பின்னர் நான் ஆய்வு செய்து அது ஹரிஹரர், இலிங்கோத்பவர் ஆகிய கடவுளர்களின் உருவங்கள் என்று கண்டுபிடித்தேன். ஹரிஹரர் என்றால் ஒருபுறம் ஜடைமகுடமும், மறுபுறம் க்ரீட மகுடமும் இருக்கும். இது தவிர குடைவரையாய் இருக்கக் கூடிய கர்ப்பக் கிரகத்துள் சிவலிங்கம் ஒன்றும் இருந்தது. அந்தக் குடைந்த பகுதியின் தூண்களில் ஒரு கல்வெட்டு இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அதன் எழுத்துக்களைக் கண்டறிந்தேன். ”எருகாட்டூர் கோன் பெருந் தச்சன்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தச்சன் என்றால் சிற்பி என்று பொருள். சிற்பி மரத்தில், தந்தத்தில், உலோகத்தில், கல்லில் எதிலும் செதுக்குவான். பெருந்தச்சன் என்றால் பெரிய சிற்பி. அந்த எழுத்தை ஆராய்ந்தால் அது சுமார் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருந்தது. ஆக, அந்தக் காலத்திலேயே குடைவரைக் கோயில்களை உருவாக்கும் மரபு நம்மிடத்தே இருந்தது என்பதற்கும், பின்னர் வந்த, குடைவரைக் கோயில்கள் உருவாக்குவதில் தேர்ந்த பல்லவர்களின் ஆட்சிக்கு அது முற்பட்டது என்பதற்கும் அது சான்றானது. மேலும் சங்க இலக்கியத்தில்கூடப் பாறை உள் வெளியாக்கிக் குடைந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக குடைவரை மரபும் நம் மரபுதான் என்பதற்கு பிள்ளையார்பட்டி ஆலயம் மிக முக்கியமான சான்று.
கே: மக்களிடையே வரலாறு குறித்த ஆர்வம் இருக்கிறதா?

ப: நிச்சயமாக. ஆர்வம் அதிகரித்திருக்கிறது. செம்மொழி மாநாட்டில் முற்றிலும் வரலாற்றுக் கண்காட்சியைத்தான் வைத்திருந்தோம். கல்வெட்டுக்கள், கலைகள், பழங்கால மரபுகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை வைத்திருந்தோம். லட்சோப லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றார்கள். அதுவும் நான்கைந்து மணிநேரம் வரிசையில் காத்திருந்து. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானதால் கண்காட்சி நடக்கும் நாட்களை நீட்டித்தார்கள். அதனால் மக்களுக்கு ஆர்வம் முன்பைவிட அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், புராணத்தையும் வரலாற்றையும் மக்கள் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். ஏதோ ஒரு கருத்தைக் கூறுவதற்காக ஆக்கப்பட்டவை புராணங்கள். அவை வேறு, வரலாறு வேறு என்பதை மக்கள் உணர வேண்டும்.

கே: ஆனால் பலரும் நமது கல்வெட்டு, ஓவியம் போன்ற கலைப்பொக்கிஷங்களின் அருமை தெரியாதவர்களாக, அது பற்றிய வரலாற்றுணர்வு இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் இல்லையா?

ப: உண்மைதான். பலருக்கும் பழமையின் அருமை தெரிவதில்லை. சான்றாகப் பழைய ஓவியங்கள், பழைய ஆலயங்கள், பழைய பெயிண்டிங்குகள் மீது புதிது புதிதாகப் பெயிண்ட் பூசுகிறார்கள். மாற்றுகிறார்கள். கேட்டால் அதனைச் சரி செய்கிறோம், புதுப்பிக்கிறோம் என்கிறார்கள். நம் பண்டை இலக்கியங்களில் சில பாடல்கள் கிடைக்கவில்லை. சில பாடல்களில் பாதி வரிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதற்காக மீதி வரிகளை நாமே எழுதி நிரப்பிக் கொள்ளலாமா? அது சரியாகுமா? அதைப் போலத்தான் இருக்கிறது இதுவும். கலைப் பண்பாட்டுப் பொருட்களின் அருமை தெரியாத சிலர், பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யும் செயல்கள் ஒரு வரலாற்றையே பாதித்து விடுகிறது. பழமையை நாம் கெடுக்கக் கூடாது. அது மிகவும் தவறு.

கே: இதை மாற்ற என்ன செய்யலாம்?

கல்வெட்டுக்களை, வரலாற்று ஆதாரங்களை, யார், யாரோ வந்து இடித்தார்கள்; உடைத்தார்கள் என்கிறார்களே, அதைவிட ஐம்பது மடங்கை கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் நாம் இழந்திருக்கிறோம்.
ப: வரலாற்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது மட்டுமல்ல, பாதுகாக்கப்படுவதும் அதைவிட முக்கியம். கல்வெட்டுக்களை, வரலாற்று ஆதாரங்களை, யார், யாரோ வந்து இடித்தார்கள்; உடைத்தார்கள் என்கிறார்களே, அதைவிட ஐம்பது மடங்கை கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் நாம் இழந்திருக்கிறோம். பல கல்வெட்டுக்கள் சிதைந்து விட்டன. பல ஓவியங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. காரணம் பொறுப்பின்மை, அக்கறையின்மை, அலட்சியம்தான். அது ஒரு துண்டு ஓவியமாக இருந்தாலும் சரி, அது அப்படியேதான் பாதுக்காக்கப்பட வேண்டும். எது எப்படி இருக்கிறதோ, அது அப்படியே அந்த நிலையிலேயே பாதுக்காக்கப்பட வேண்டும். அதைச் சரி செய்கிறேன், சீராக்குகிறேன் என்று யாராவது புதுப்பிக்க வந்தால் அதுதான் இந்த மரபிற்கு, இந்தக் கலைக்கு, இந்த வரலாற்றுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். அது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களே சேர்ந்து இதனைச் செய்ய வேண்டும். மக்களிடையே வரலாற்றார்வத்தோடு, வரலாற்றுப் பொருட்களைப் பாதுகாக்கும் ஆர்வமும் அதிகரிக்க வேண்டும்.

கே: தொல்லியல் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

ப: அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால், உண்மையாக உழைப்பவர்களை, வரலாறு தெரிந்தவர்களை, இத்துறையில் ஆர்வமும், திறனும் உள்ளவர்களை அதன் தலைவராகப் போட வேண்டும். நம் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே, ஒரு 30, 40 ஆண்டுகளாக நமது கலை, பண்பாட்டுத் துறைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் போட்டு, அதனால் எந்தவிதப் பயனும் இல்லாமல் மோசமாகப் போய்விட்டது. அதனால் மீண்டும் அந்தந்தத் துறை வல்லுநர்களைத்தான் போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆக, ஒரு பிரதமரே வருத்தப்பட்டுக் கூறும் நிலையில்தான் தற்போதைய நிலைமை இருக்கிறது. இது மாற வேண்டுமானால், அர்ப்பணிப்பு உணர்வுள்ள, உண்மையாக ஆர்வத்துடன் உழைக்கக் கூடிய, வரலாறு தெரிந்தவர்களை தலைவராக நியமிக்க வேண்டும்.

அப்போதுதான் தனது மலேசியச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருந்தும் ஓய்வெதுவும் எடுக்காமல் ஆர்வத்துடன் தென்றலோடு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் டாக்டர் இரா.நாகசாமி. 80 வயதைக் கடந்தும், இன்றும் ஓர் இளைஞர் போல ஆர்வத்துடன் சுறுசுறுப்பாக உழைத்து வரும் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

பெரியவர், மஹா பெரியவர்
பெரியவர் ஒரு மகா மேதை. நல்ல நினைவாற்றல் உள்ளவர். பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். பல விஷயங்கள் தெரிந்தவர். அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. தினம் ஒரு கல்வெட்டைப் பற்றி எழுதி அனுப்பு, நான் படிக்க வேண்டும் என்று ஒருமுறை என்னிடம் கூறினார். கல்வெட்டுக்களைப் படிக்கவும் அவருக்குத் தெரியும். அதை எப்படிப் படிக்க வேண்டும் என்றும் சொல்வார்.

ஒருமுறை ஒரு பேராசிரியர் கம்போடியா கல்வெட்டைப்பற்றிப் பேசினார். கூட்டத்தில் மஹா பெரியவரும் இருந்தார். அந்தப் பேராசிரியர் அங்குள்ள கல்வெட்டிலிருந்து ஒரு அடியை எடுத்துச் சொன்னார். உடனே பெரியவர், ஒரு அடியை மட்டும் சொன்னால் எப்படி? அந்தச் செய்யுளின் பிற அடிகளையும் சொன்னால்தானே எல்லோருக்கும் புரியும் என்றார். அந்தப் பேராசிரியரால் மீதி வரிகளைச் சொல்ல முடியவில்லை. உடனே பெரியவர் மீதி வரிகளை மிகச் சரியாகச் சொன்னார். கம்போடியாவில் உள்ள ஒரு கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் பெரியவர் விளக்கமாக எடுத்துச் சொன்னதைப் பார்த்தும், அவருக்குக் கல்வெட்டுத் துறையில் இருந்த ஈடுபாட்டை, நினைவாற்றலைக் கண்டு அங்கு குழுமியிருந்த எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். கோயில்கள், கோயிற் கலைகள், அதை எப்படி உருவாக்கினார்கள், அதை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் அவருக்குச் சமமானவர் யாருமே இல்லை.

*****


சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி
அந்தக் காலத்தில், உலக அளவில் இந்தியக் கலையை, விஞ்ஞான ரீதியாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்த மிகப் பெரிய மேதை ஆனந்த் குமாரசாமி. சிறந்த வரலாற்றிஞரான அவர் எழுதிய நூல்களுள் ஒன்றுதான் நடராஜ தத்துவம். நடராஜ தத்துவம் என்றால் என்ன என்பதை 'The Dance of Siva' என்ற புத்தகத்தின் மூலம் விஞ்ஞான ரீதியாக உலகுக்கு எடுத்துச் சொன்னவர் அவர்தான். அதனை நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நாட்டியக் கடவுள் நடராஜர் எழுந்தருளியுள்ள தலம் சிதம்பரம்.

பண்டைக் காலத்தில் கோயில் என்பது வழிபாட்டிற்கும், அனைத்து மனிதர்களுக்கும் சாந்தியும், மகிழ்ச்சியும் அளிப்பதற்காகத் தோற்றுவிக்கப் பெற்றது. அது இலக்கியத்திற்கும், கலைக்கும், நாட்டியத்திற்கும், இசைக்கும் இடமளித்தது. அந்தக் கலைகள் வளர்ந்தன. ஆனால் பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்குப் பின்னர், அவர்கள் நாட்டியப் பெண்களைப் பற்றித் தவறாக எழுதியதால், அக்காலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் நாட்டியங்கள் கோயிலில் நடக்கக் கூடாது என்று சட்டம் போட்டனர். ஒரே சட்டத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டு காலக் கலைகள் ஒரே நாளில் ஒடுக்கப்பட்டுவிட்டன. இப்போதும் கூட ஒருசில இடங்களைத் தவிர வேறெங்கும் கச்சேரிகளோ, நாட்டியங்களோ நடப்பதில்லை.

இதைப்பற்றி யோசித்த நான் சுதந்திர இந்தியாவில் அந்த நிலை தொடரக் கூடாது என எண்ணினேன். நாட்டியக் கடவுளான சிதம்பரம் நடராஜர் கோயிலில், அந்தக் கடவுளுக்கு அர்ப்பணமாக, அதே சமயம் கட்டணம் ஏதுமின்றி, கலை, கலாசாரத்தின் வெளிப்பாடாக இருக்குமாறு நாட்டியாஞ்சலி விழாவைத் தொடங்கினேன். நடக்குமிடம் கோயில் என்பதால் அதற்கென்று சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உருவாக்கப்பட்டன. கலைஞர்கள், தங்கள் கலையை, தெய்வத்திற்கு அர்ப்பணிப்பதுதான் விழாவின் குறிக்கோள். இந்தியாவின் தேர்ந்த கலைஞர்கள் அதில் பங்கு கொண்டனர். அவர்களுக்குச் சன்மானம் ஏதும் கிடையாது. பார்க்கவும் கட்டணம் கிடையாது. விளம்பர நோக்கமும் கிடையாது. கடந்த 30 ஆண்டுகளாக அது மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. முதல் 15 வருடங்கள் நானே பொறுப்பேற்று அதை நடத்தினேன். இப்போது அங்குள்ள பொறுப்பாளர்களே நடத்தி வருகின்றனர்.

*****


செம்மொழி மாநாடு
கோவைச் செம்மொழி மாநாடு மிக அழகாக நடத்தப்பட்ட ஒரு மாநாடு. சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அதில் பல பகுதிகள், பிரிவுகள் இருந்தன. ஒவ்வொன்றுமே மிகச் சிறப்பாக, நேர்த்தியாக இருந்தது. Very Great Work. இசை, ஓவியம், நாட்டியம், சொற்பொழிவு, கவிதை, ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளுக்கும் கலைகளுக்கும் இடமளித்திருந்தார்கள். அதில் நடந்த கண்காட்சி வெகு அற்புதமாக இருந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுதான் அதற்குத் தலைவர். நான் துணைத் தலைவர். இரவு 12 மணி, 1 மணி ஆனபோதும் கூட அவர் தூங்கப் போகாமல் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவார். தானே நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றினார். ஒரு நிமிடம் கூட அவர் ஓய்வெடுத்து நான் பார்க்கவில்லை. ஓடி ஓடிப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொன்றிலும் முதல்வர் கலைஞரே நேரடியாகப் பார்த்து, பங்கு கொண்டு, கருத்துச் சொல்லி, ஊக்கம் கொடுத்து உற்சாகத்துடன் பணியாற்ற வைத்ததுதான். இந்த மாநாடு உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை. என் வாழ்நாளில் இது போன்ற ஒரு மாநாட்டை நான் கண்டதில்லை. இனிமேலும் இது போன்ற ஒரு மாநாட்டைப் பார்ப்போமா என்பதும் தெரியவில்லை. ஆனால் நிறைய நடக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
மேலும் படங்களுக்கு
Share: 
© Copyright 2020 Tamilonline