|
ஸ்வராத்மிகா ஸ்ரீகாந்த் |
|
- அரவிந்த், திரு. பிரகாஷ்|மார்ச் 2022| |
|
|
|
|
திறமை எங்கிருந்தாலும் அவர்களை அடையாளம் காட்டத் தென்றல் தயங்கியதில்லை. இதோ, கர்நாடக இசை உலகிற்குப் புதுவரவான இளம் இசைக்கலைஞர் ஸ்வராத்மிகாவுடன் ஓர் உரையாடல். கேட்பவரை மெய்மறக்கச் செய்யும்படிப் பாடுவதில் வல்லவர். இனிய குரல்வளமும், பாவங்களும், புன்னகை முகமும் இவரது தனித்த அடையாளம். பல்வேறு சபாக்கள், அரங்குகள் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் லைவிலும் நிறையக் கச்சேரிகளைச் செய்கிறவர். இதோ பாடுகிறார்... இல்லை, பேசுகிறார். கேட்போமா?
★★★★★
கே: உங்கள் இசைப் பயணம் துவங்கியது எப்போது, எப்படி? ப: எனது குடும்பத்தில் அனைவரும் கர்நாடக இசைத் துறையைச் சேர்ந்தவர்கள். என் தாய், தந்தை, பாட்டி மூவருமே சங்கீத வித்தகர்கள். வீட்டில் எப்போதும் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டே இருக்கும். அப்படியொரு இசைச்சூழலில் வளர்ந்தேன். மூன்று வயதுமுதலே நான் பாட ஆரம்பித்துவிட்டேன்.
ராஜாஜி தம்பூரா விருது பெறும் தந்தை ஸ்ரீகாந்த்
கே: அரங்கேற்றம் எங்கே, எப்போது? ப: எனது முதல் மேடைக்கச்சேரி மைலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் எனது 12ம் வயதில் நடைபெற்றது. அன்று எல்லோரும் என்னை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனது தந்தையின் முகத்தில் அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னால் அதனை விவரிக்கவே முடியாது. அது ஒரு இனிமையானதொரு கச்சேரியாக, மறக்க முடியாததாக அமைந்தது.
இசைக் குடும்பம் ஸ்வராத்மிகாவின் பாட்டி திருமதி லீலாவதி கோபாலகிருஷ்ணனுக்கு வயது 83. இவர் ஜி.என்.பி.யின் சீடர் 'டவுன் பாலு' என அறியப்பட்ட திரு டி.எஸ். பாலசுப்ரமணியம் அவர்களின் பிரதம சிஷ்யை. முசிறி சுப்பிரமணிய ஐயரிடமும் கர்நாடக இசை பயின்றவர். 60 வருடங்களுக்கும் மேலாகப் பலருக்கு இசை பயிற்றுவித்து வருகிறார். பரத் சுந்தர், கல்யாணி கௌரிஷங்கர் உள்பட பலர் இவரிடம் இசை பயின்றவர்கள்தாம்.
ஸ்வராத்மிகாவின் தந்தை திரு. ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன் 30 வருடங்களாகப் பல கச்சேரிகளும், இசைப் பட்டறைகளும் நடத்தி வருகிறார். பல அரிய கீர்த்தனைகளை அழிவின் விளிம்பிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஸ்வராத்மிகாவின் தாயார் திருமதி ஆனந்தி ஸ்ரீகாந்த், கலாக்ஷேத்ராவில் பயின்று பட்டயம பெற்றவர். பல மாணவர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்து வருகிறார்.
கே: பெற்றோர் இருவருமே இசைக் கலைஞர்கள் என்பது எந்த விதத்தில் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது? ப: தந்தை திரு ஸ்ரீகாந்த் கோபாலகிருஷ்ணன், என்னுடைய பாட்டி திருமதி லீலாவதி கோபாலகிருஷ்ணன் இருவருமே எனக்குக் குருதான். தந்தையிடம் நிறைய உருப்படிகள், மனோதர்ம சங்கீதம் எல்லாம் கற்றுக்கொண்டேன். இன்றும் கற்றுக் கொள்கிறேன்.
என் பாட்டி ஓர் இசைக்களஞ்சியம் எனப் புகழ்பெற்றவர். அவரிடமிருந்து பலப்பல க்ருதிகள், தமிழ்க் கீர்த்தனைகள் பயின்று வருகின்றேன். என் தந்தையே எனது குருவாக அமைந்ததால் நான் நினைத்த நேரத்தில் நினைத்த பாடலைக் கற்றுக்கொள்ள முடிவது எனக்கு மிகப்பெரிய அனுகூலமாக உள்ளது.
ராஜாஜி தம்பூரா விருது பெறும் பாட்டி லீலாவதி
கே: உங்கள் மற்ற குருநாதர்கள் பற்றி... ப: எனது தந்தையும் பாட்டியுமே முதல் குருமார்களாக அமைந்தது என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். சமீப காலமாக நான் கலைமாமணி நெய்வேலி திரு சந்தான கோபாலன் மற்றும் விதூஷி திருமதி ப்ரேமா ரங்கராஜன் ஆகியோரிடம் கற்றுக் கொண்டு வருகிறேன். இவர்கள் எனக்கு மிகுந்த ஆசையுடனும் அர்ப்பணிப்புடனும் கற்றுத் தருகிறார்கள்.
லய விஷயங்களைத் தற்போது லய வித்வான் ஸ்ரீ குரு ராகவேந்திரா அவர்களிடம் கற்றுக்கொண்டு வருகிறேன்.
ராஜாஜி தம்பூரா விருது பெறும் ஸ்வராத்மிகா
கே: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சாதகம் செய்வீர்கள்? ப: ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் சாதகம் செய்வேன். எப்பொழுது நேரம் கிடைத்தாலும் நானும் அப்பாவும் பயிற்சி செய்வோம். இரவு 10 மணிக்கு மேல்கூட எங்களது இசைப்பயிற்சி தொடரும்.
கே: உங்கள் கல்வி மற்றும் பிற துறை ஆர்வங்கள் குறித்து... ப: நான் சென்னை MOP வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில், பி.எஸ்ஸி. எலக்ட்ரானிக் மீடியா படித்து வருகிறேன். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
கே: உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞர்கள் யார் யார்? ப: எம்.எல். வசந்தகுமாரி., ஜி.,என். பாலசுப்ரமணியன், முசிறி சுப்ரமண்ய ஐயர், ராதா ஜெயலக்ஷ்மி மற்றும் வோலேட்டி வெங்கடேஸ்வரலு ஆகியோர் என் மனம் கவர்ந்தவர்கள். லால்குடி ஜயராமன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இருவரது இசையையும் மிகவும் ரசித்துக் கேட்பேன்.
கே: மறக்க முடியாத கச்சேரி என்று எதனைச் சொல்வீர்கள்? ப: இந்த லாக்டௌன் காலங்களில் நிறைய ஆன்லைன் கச்சேரிகள் செய்தேன். அதில் ஒரு FB PAGE LIVE பாடி முடித்தவுடன் என் தந்தை, "இன்று மிகவும் நன்றாகப் பாடினாய்" என்று கூறினார். அவரிடம் நல்லபெயர் வாங்குவது மிகவும் கஷ்டம். மற்றபடி எல்லாக் கச்சேரிகளுமே எனக்கு நல்ல Learning Experince தான். மறக்க முடியாத கச்சேரிகள்தாம்.
கே: உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்? ப: ஒரு சங்கீதப் போட்டியில் பங்கேற்றுப் பரிசு வென்றேன். அதில் நடுவர்களாக இருந்த நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் மஹாராஜபுரம் ராமசந்திரன் அவர்கள், நான் பாடிய 'வராளி' ராகப் பாடலை மிகவும் பாராட்டிப் பேசினர். அது எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்று சொல்லலாம்.
ஸ்வராத்மிகா பெற்ற விருதுகள் * திருச்சி ஆர்.ஆர். சபாவின் எல்.வி. நினைவு விருது (L.V. Memorial Award). * சண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த பாடகருக்கான விருது. * ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் 'சங்கீத யாத்ரா' இசைப் போட்டியில் முதல் பரிசும், 'பால ஸங்கீத ப்ரவீணா' பட்டமும். * 'கந்தர்வ கான யுவ கலாமணி', 'பால ப்ரதிபா' உள்ளிட்ட பல பட்டங்கள்.
தமிழிசைச் சங்கம் நடத்திய இசைப் போட்டியில் கலந்துகொண்டு 'ராஜாஜி தம்புரா' பரிசு பெற்றேன். முன்னர் அதே பரிசினை எனது பாட்டியும், எனது தந்தையும் பெற்றதுபோல நானும் பெற்றேன் என்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்று. (பார்க்க: 01-Rajaji Thambura Father Image, 02-Rajaji Thambura Grand Mother Image மற்றும் 03-Rajaji Thambura Swarathmika Image)
மற்றபடி ஒவ்வொரு கச்சேரியின்போதும் பார்வையாளர்களும் ரசிகர்களும் கூறும் ஒவ்வொரு வார்த்தையுமே எனக்குப் பாராட்டுதான். ஆசிர்வாதம்தான்.
கே: திரைப்பாடல்களில் ஆர்வம் உண்டா? ப: பழைய பாடல்களை விரும்பிக் கேட்பேன். குறிப்பாக, கர்நாடக இசையை மையமாகக் கொண்ட எம்.எல்.வி., எம்..எஸ்., பி. லீலா பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. இன்றையை பாடல்களையும் கேட்கிறேன். இனிய இசை எந்த விதத்தில் இருந்தாலும் ரசிக்கிறேன்.
ஸ்வராத்மிகாவின் யூட்யூப் சேனல் | இன்ஸ்டாக்ராம் | முகநூல் பக்கம்
கே: கோவிட்-19 சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்? ப: உண்மையில் இந்தக் கோவிட்-19 காலம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பல FB/Youtube கச்சேரிகள் செய்தது இந்தக் கர்நாடக சங்கீத உலகில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ரசிகர்கள் பலர் என்னை உற்சாகப்படுத்தினர். அது மட்டுமில்லாமல் சாதகம் செய்ய நிறைய நேரமும் வாய்ப்பும் கிடைத்தது. அதை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன்.
கே: இசையில் என்னென்ன செய்ய உங்களுக்கு ஆசை? ப: எனது பாட்டியும் தந்தையும் பல இசை நூல்களைச் சேகரித்து வைத்துள்ளனர். அது எனக்கு வரமாக அமைந்துள்ளது. Hand written Notations எல்லாம் எனக்குக் கிடைத்த பொக்கிஷங்களாகும். அதை நான் முறையாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே என் ஆசை. என் பாட்டிக்கு 83 வயதாகிறது. இப்பொழுதும் ஒரு புதிய பாடலைக் கேட்டால் ஆர்வத்துடன் ஸ்வரம் எழுதி எனக்குக் கற்றுக் கொடுப்பார்.
நான் பி.எஸ்ஸி முடித்ததும் எம்.ஏ. மியூசிக் செய்ய வேண்டும். இசையில் ஆராய்ச்சி செய்து Ph.D பெற வேண்டும் என்பவை என் ஆசைகள். பாடிக்கொண்டே இருக்க வேண்டும். என் பெற்றோரும் சமூகமும் பெருமை கொள்ளும்படி நல்ல பாரம்பரிய சங்கீதத்தை வளர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
ஸ்வராத்மிகாவின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறோம். |
|
உரையாடல்: அரவிந்த் உதவி: திரு. பிரகாஷ், நங்கநல்லூர் சபா |
|
|
|
|
|
|
|