|
|
|
மிகநீண்ட பர்வமான வனபர்வத்தைப் பார்த்துவிட்டு, அடுத்ததாக மிகச்சிறிய பர்வமான விராட பர்வத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். வனபர்வத்தின் கால அளவு பன்னிரண்டாண்டுகள்; விராட பர்வத்தின் கால அளவு ஒரே ஓராண்டு என்பதுதான் இந்த வித்தியாசத்துக்குக் காரணமாக இருக்குமோ என்று பார்த்தால், அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற காலமும் பன்னிரண்டு ஆண்டுகள்தாம். ஆனால், அங்கே நடப்பவை கதைப் போக்குக்கு நெருக்கமானவை அல்ல என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தக் கால எல்லைக் கணக்கு, பயனற்றதாகிவிடுகிறது.
போருக்கான முன்தயாரிப்பு விராட பர்வத்தின் இறுதியிலும், உத்யோக பர்வத்திலும் தொடர்கின்றன. இந்தப் பர்வம்
1) பாண்டவப் பிரவேச பர்வம்; 2) சமய பாலனப் பர்வம்; 3) கீசகவத பர்வம்; 4) கோக்ரஹண பர்வம் 5) வைவாகிக பர்வம்
என்று ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சமய பாலனப் பர்வம் என்பது 'சபையை நிர்வகித்த பர்வம்' என்று பொருள்படும். இங்கே பீமசேனன், ஜீமுதன் என்ற மல்லனோடு பொருது அவனைக் கொல்கிறான் என்பதைத் தவிர வேறு செய்தி எதுவும் இல்லை. கீசகவத பர்வம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சைரந்திரி என்ற பெயரோடு அங்கே வசித்த பாஞ்சாலியை, விராட மன்னனுடைய மனைவி சுதேஷ்ணையின் சகோதரனான கீசகன் (சூதர் குலத்தைச் சேர்ந்தவன், சேனாதிபதி) பாஞ்சாலியை விரும்பியதும் அவளை அவமானப்படுத்தியதும் சொல்லப்படுகின்றன. கீசகனையே விராட நகரத்தில் ஒருவன் கொன்றுவிட்டான் என்பதை ஒற்றர்கள் மூலமாக அறிந்த துரியோதனன், விராட மன்னனுடைய பசுக்களைக் கவர்வதற்காக வந்த குறிப்புகளை கோக்ரஹண பர்வம் சொல்கிறது. இங்கேதான் அர்ஜுனன் போர்க்களத்தில் பிருஹன்னளை என்ற ஆணுமற்ற, பெண்ணுமற்ற அலித் தோற்றத்தில் போர்க்களத்தில் வெளிப்படுகிறான். அர்ஜுனன் மகனான அபிமன்யுவுக்கும் விராட மன்னனின் புதல்வியான உத்தர குமாரிக்கும் திருமணம் நடந்த விவரங்கள் வைவாகிக பர்வத்தில் சொல்லப்படுகின்றன.
பாண்டவர்கள் விராட மன்னனின் சபையில் நுழைந்தததிலிருந்து பாண்டவப் பிரவேசப் படலம் தொடங்குகிறது, ஆனால், விராடனின் சபைக்குள் புகுவதன்முன் பாண்டவர்கள் செய்து முடிக்கவேண்டிய சில செயல்கள் மீதமிருந்தன. முதலில் தங்களோடு தங்கியிருந்த சான்றோர்களையெல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். 'நாங்கள் எந்தத் திசையை நோக்கிச் சென்றோம் என்று யாரிடமும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் சொல்லவேண்டாம்' என்ற வேண்டுகோளை அதற்கு முன்னால் அவர்களிடம் வைத்தார்கள். தங்களுடைய புரோகிதரான தௌமியரையும் இன்னும் சிலரையும் துருபதன் ஆளும் பாஞ்சால தேசத்துக்கு அனுப்பினார்கள். அபிமன்யு முதலான உபபாண்டவர்களை (பாண்டவ வனவாச காலத்திலேயே) ஆயுதப் பயிற்சிக்காக கண்ணனுடைய மகன் ப்ரத்யும்னனிடத்தில் அனுப்பியதை வனபர்வத்திலேயே சொல்லியிருக்கிறோம். எனவே உபபாண்டவர்கள் துவாரகையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். பாண்டவர்கள், தாங்கள் செலுத்திக் கொண்டிருந்த தேர்களைப் பாஞ்சாலனிடத்தில் அனுப்பி வைத்தனர். எஞ்சியவை ஆயுதங்கள்தாம். அவை இன்னும் ஓராண்டுக்குத் தேவைப்படப் போவதில்லை. தர்மனுடைய வேல், பீமனுடைய அறுகோண வடிவில் அமைந்த கதை, தனஞ்சயனுடைய காண்டீவம் (நாணைக் கழற்றியது), நகுல சகதேவர்களின் வில் உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லாவற்றையும் ஒரு மாட்டுத் தோலால் மூடிக் கட்டி, அங்கிருந்த ஒரு வன்னிமரத்தில் ஏறி, சகதேவன் தொங்கவிட்டான். வன்னிமரத்துக்கு அருகில் ஒரு சுடுகாடு இருப்பதை அடையாளமாக வைத்துக்கொண்டனர். ஆயுதங்களை மீண்டும் எடுக்கும்போது இடத்தின் அடையாளம் முக்கியமானது.
அதைவிட முக்கியமான ஒன்று இருந்தது. பாண்டவர்கள் ஆளுக்கு ஒரு பெரை வைத்துக்கொண்டு, தங்கள் அடையாளங்களை மறைப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ள நேர்ந்தால், ஒவ்வொருவருக்கு ஒரு அடையாளப் பெயர் தேவைப்படும். சபையில் கங்கன் (Kankan) என்ற பெயரோடு இருக்கப்போகும் தர்மபுத்திரன் தனக்கு ஜயன் என்ற பெயரை வைத்துக்கொண்டார். வல்லபன் என்ற பெயரில் வாழப்போகும் பீமனுக்கு ஜயேசன் என்று பெயர், பிருஹன்னளை என்ற பெயரில் அலியாக வாழப்போகும் அர்ஜுனனுக்கு விஜயன் என்பது அடையாளப் பெயர். நகுல சகதேவர்களுக்கு ஜயத்சேனனன், ஜயபாலன் என்பவை அடையாளப் பெயர்கள். பாஞ்சாலி, அந்தப்புரத்தில் அரசியோடு சைரந்திரி என்ற பெயரில் வாழப் போவதால் அவளுக்கு அடையாளப் பெயர் தேவைப்படவில்லை.
இந்த முன்னேற்பாடுகளுடன் விராட நகரத்துக்குள் நுழைந்தனர். நகரத்தில் நுழைந்ததும் தர்மபுத்திரர் துர்க்கையைத் துதித்து, தங்களுக்குக் காட்சி தரும்படி வேண்டினார். துர்க்கை காட்சியளித்தாள், 'நாங்கள் இந்த அக்ஞாத வாசத்தை வெற்றிகரமாக முடித்து, எங்கள் நாட்டைத் திரும்பப்பெற நீயே துணைநிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு தன் தந்தையான அறக்கடவுள் தந்திருந்த வரத்தின் துணையோடு அந்தணக் கோலம் தரித்துக்கொண்டார். தர்மபுத்திரனுடைய சபையில் அவனுக்கு உயிர் நண்பனாக கங்கன் என்ற பெயரில் வாழ்ந்தவன் என்று சொல்லி, விராடனுடைய துணைவனாக இவர் இருப்பார்.
தர்மனுடைய சமையற்காரன் என்று சொல்லிக்கொண்டு, வல்லபன் என்ற பெயரோடு பீமன் இருப்பான். அர்ஜுனன், பிருஹன்னளை என்ற பெயரில் அரசகுமாரியான உத்தரைக்குப் பாட்டும் நடனமும் கற்பிப்பான். இந்திரலோகத்தில் அவன் கற்ற நடனமும் பாடலும் இங்கே துணையிருக்கும். பாண்டவர்களிடம் குதிரைகளைப் பார்த்துக்கொண்டவன் என்ற புனைவோடு, நகுலன் தாமக்கிரந்தி என்ற பெயரோடு விராடனுடைய குதிரைகளைப் பார்த்துக் கொள்வதற்காககச் சேர்ந்தான். அதைப் போலவே, பாண்டவர்களின் மாடுகளைப் பார்த்துக்கொண்டவன் என்ற வேடத்தில் சகதேவன் தந்திரிபாலன் என்ற பெயரோடு விராடனிடத்தில் சேர்ந்தாள்.
இன்னும் பாஞ்சாலி பாக்கியிருக்கிறாள். பேரழகியும் அரசியுமான அவள் விராடனுடைய மனைவியான சுதேஷ்ணைக்கு சந்தனம் அரைத்துத் தரும் சைரந்திரியாகத் தனியே சேர்கிறாள். அடுத்ததாக அதைப் பார்ப்போம்.
(தொடரும்) |
|
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|