Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்
- மருங்கர்|மே 2021|
Share:
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள், பாடும் குயில்கள், மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள், அலுமினியக் கேனில் டீக்கடைக்கு பாலைச் சுமந்து செல்லும் மிதிவண்டிகள், கிரிவலத்துக்குத் தயாராகும் பக்தர்கள் எனக் காலமும், மனிதர்களும் தத்தம் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

துளசி திருவண்ணாமலையின் அடிவாரத்தில் கண்களை மூடிக்கொண்டு

ஏதோ ஒரு பிரார்த்தனையில் இருந்தாள். 62 வயது இருக்கும். மாநிறம், சற்றுப் பருமனான உடல். அவளது வயதை முகத்திலிருந்த சுருக்கங்கள் எளிதாகக் காட்டிக் கொடுத்தன.

"அப்பனே, அருணாசலேஸ்வரா! என் வாழ்க்கையில எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவு எடுக்கிற என்னால, இந்தப் பிரச்சனைக்கு சரியான முடிவெடுக்க முடியல. எந்த ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை இருந்தாலும், கிரிவலம் பண்ணா ஒரு தீர்வு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு வழி காட்டப்பா!" என்று நினைத்தவாறே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு கிரிவலத்தைத் தொடங்கினாள்.

பௌர்ணமி முடிந்து மூன்றாவது நாள். 500க்கும் குறைவான பக்தர்களே இருந்தனர். சில மணி நேரத்தில் இந்திர, அக்னி மற்றும் எம லிங்கங்களின் தரிசனத்தை முடித்துவிட்டு, நிருதி லிங்கத்தை தரிசிக்க நடக்க ஆரம்பித்தாள். திடீரென்று லேசான தலைசுற்றல். கண்கள் இருட்டின. அதற்குமேல் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தெரு ஓரத்தில் இருந்த கடையின் வாசலில் உட்கார்ந்தாள்.

அங்கே இருந்த பாட்டி, "என்னமா என்னாச்சு? குடிக்கத் தண்ணி வேணுமா?" எனக் கேட்டாள்.

"இல்லம்மா, கேட்டதற்கு நன்றி. என்கிட்ட இருக்கு" என்று சொல்லிவிட்டுக் கைப்பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து சிறிது தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

"இங்க பக்கத்துல, பெரிய நந்தி கோயில் இருக்கு, இந்த வில்வ இலைகளை அவர் பாதத்தில் வைத்து வேண்டிக்கோங்க. அந்த நந்திதேவர் மத்த லிங்கங்களையும் பாக்குறதுக்கு உங்களுக்கு தெம்பு தருவாரு."

துளசி அந்தப் பாட்டியின் பேச்சில் ஒரு உண்மைத் தன்மையைக் கண்டாள். வில்வ இலைகளை வாங்கிக்கொண்டு மகாநந்தியின் பாதத்தில் வைத்து, "என்னால இதுக்குமேல நடக்க முடியல. நீங்கதான் எனக்கு ஒரு வழி காட்டணும்" என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் கோவிலை விட்டு வெளியே வந்தாள். பின்னிருந்து "அம்மா" என்று ஒரு ஆணின் குரல். கிட்டத்தட்ட 65 வயது இருக்கும். வெள்ளைக் கதர் சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் அழகாக அளவுகோல் வைத்து வரைந்தது போன்று மூன்று கோடுகளுடன் வீபூதிப் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம். பழுத்த சிவப்பழமாகக் காட்சி அளித்தார்.

"என்ன விஷயம்? நீங்க யாருன்னு எனக்குத் தெரியல?"

"என் பெயர் நந்திகேஸ்வரன், நந்துன்னு நண்பர்கள் கூப்பிடுவாங்க. அந்த பூ விக்கிற அம்மா, உங்களுக்குக் கொஞ்சம் உதவி தேவைப்படுதுன்னு சொன்னாங்க. நான் தினமும் எட்டு லிங்கங்களையும் தரிசித்து விட்டுத்தான் வேலைக்குப் போவேன். நான் நடந்துபோறது கிடையாது. என் ஸ்கூட்டரில போய்த்தான் தரிசிப்பேன். என்னோட வரீங்களா?" எனக் கேட்டார்.

முன்பின் தெரியாத ஒருவருடன் செல்ல துளசிக்குச் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் அவரைப் பார்த்தால் மிகப்பெரிய சிவபக்தர் போலத் தெரிந்தது. அங்கிருந்து தெரிந்த பூக்காரம்மா, தனது வலது கையால் சைகையில் அவரோடு செல்லும்படி கூறுவது போல் இருந்தது.

தன் நிலைமையை மனதில் கொண்டு சற்று தயக்கமாக "ஐயா, நான் அருணாசலேஸ்வரர் கிட்ட நடந்து வரேன்னு வேண்டிகிட்டுதான் கிளம்பினேன். எனக்கு இருக்கிற ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேவைப்படுது. இதனால அது பாதிக்கப்படுமான்னு கொஞ்சம் கவலையாக இருக்கு"

நந்து சிரித்துக்கொண்டே "அம்மா எந்த புராணத்திலும் கால்நடையாக மட்டும்தான் கிரிவலம் பண்ணனும் சொல்லல! இந்த எட்டு லிங்கங்களையும் தரிசித்து, அருணகிரி மலையும் சுத்தி வந்தா பலன் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. நான் அதை தவறுன்னு சொல்லலை. முருகன் கூட மயில்லதான் உலகத்தைச் சுற்றினார். அதுபோல நினைச்சுக்கோங்க. இங்கே வர லட்சக்கணக்கான பக்தர்களுள் சிலர் கிரிவலத்தைச் சுற்றுலா இடமாகத்தான் பாக்கறாங்க. போற வழியெல்லாம் விதவிதமா சாப்பிட்டுக்கிட்டு, வெட்டிக்கதை பேசிக்கிட்டுதான் சுத்தி வராங்க. பக்திதான் முக்கியம். அதனால நீங்க என்னோட ஸ்கூட்டர்ல வர்றதால உங்க பிரச்சனையை அருணாசலேஸ்வரர் பார்த்துக்க மாட்டாருன்னு எனக்குத் தோணல" என்று சொன்னார்.

துளசிக்கு அவர் சொல்வது சரியாகப் பட்டது. தன் உடல் நிலையையும் கணக்கில் கொண்டு, அவரது ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்தாள். நிருதி லிங்கம் கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

நந்து அவளிடம் "அம்மா, நீங்க எந்த ஊரிலிருந்து, எதுக்காக வந்து இருக்கீங்க. நீங்கள் அதை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றால், நீங்கள் சொல்ல வேண்டியதில்லை" என்றார்.

"ஐயா, உங்களைவிட நான் வயசுல சின்னவதான். அதனால என்னை துளசி என்றே கூப்பிடுங்க."

"அப்படியே ஆகட்டும், துளசி"

"என் சொந்த ஊர் தீர்த்தமலை. எங்க அம்மா அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தாங்க! எங்க அம்மாவோட ஒரே தம்பி, சோணகிரி மாமா. எனக்கு அவரைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலேய மிலிட்டரில சேர்ந்துட்டாரு. மாமா ஒரு நாத்திகவாதி. அதனால அப்பாவுக்கு அவரைக் கண்டா பிடிக்காது. தீர்த்தமலையில இருக்கிற கோவில்பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

"துளசி, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவண்ணாமலையில இருந்துகிட்டு தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தெரியாம இருக்குமா? அருணகிரிநாதர் பாடின திருத்தலம் அது. அந்த ஊர்ல பிறந்தா உங்க மாமா நாத்திகரா இருந்தாரு? இந்த ஊரு அருணகிரி மலைக்கு சோணகிரின்னு ஒரு பெயரும் இருக்கு."

"அதான் எங்களுக்கும் புரியல. கிட்டத்தட்ட அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு ஒரு நாளைக்கு எங்க வீட்டுக் கதவை யாரோ தட்டினாங்க. நெற்றி நிறைய திருநீறோட மாமா சோணகிரி!!"

அதைக் கேட்டவுடன் நந்து "என்ன ஆச்சரியமா இருக்கு. எதனால அவர் மாறினார்?"

"மாமா இமயமலை எல்லைப் பகுதியில காவல் காக்கும் சமயத்துல, யாரோ ஒரு துறவியைச் சந்தித்து இருக்காரு. அதனால அவர் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் வந்ததுன்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம் நாங்க பார்த்த மாமா வேற. சிவனடியார்களுக்கும், ஊர்ல கஷ்டப்படுற மக்களுக்கும் உதவுவதே தன்னோட கடமையா நினைத்தாரு."

"அந்தத் துறவி அவர் மனசை மாற்ற என்ன காரணம் என்று தெரிந்து கொண்டீர்களா?"

"இல்லீங்க ஐயா! அதப்பத்தி அவர் பேச விரும்பினது கிடையாது. சரியான பதில் எங்களுக்கு எப்பொழுதும் வந்ததில்லை. ஆனா என் மாமாமேல எனக்குக் காதல் ரொம்ப அதிகமாச்சு. ஒரு நாளைக்கு தைரியமா என் காதலை மாமாகிட்ட சொன்னேன். ஆனா அதை அவரு ஏற்றுக் கொள்ளவில்லை. அவரோட மார்க்கம் வேறு என்று சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியல, கதர் வேட்டியில இருந்த எங்க மாமா, காவி வேட்டிக்கு மாறி ஒரு சந்நியாசி மாதிரி ஆயிட்டாரு. ஒருவேளை நான் அடிக்கடி தொந்தரவு பண்ணுவேன்னு நினைத்து அப்படி மாறிவிட்டார் போல" என்று சொல்லும்பொழுது தன் கண்களில் வழிந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.

நந்து ஸ்கூட்டரை ரோட்டிலிருந்து நடைபாதைப் பக்கம் திருப்பி ஓரங்கட்டினார். "துளசி, நிருதி லிங்கம் கோயில் வந்துருச்சு. இறங்குங்க. இவரை வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும் என்று ஒரு நம்பிக்கை. அதனால உங்க கஷ்டம் தீரும் உள்ள வாங்க."

நிருதி லிங்கத்தை வழிபட்டு, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தனர், வருண லிங்கத்தை தரிசிக்க கிளம்பினர். துளசி நந்துவைப் பார்த்து "ஐயா என் கதை பெரிய கதை. நீ இந்த ஊர்ல என்ன பண்றீங்க, சொல்லுங்க" என்றாள்.

"ராஜகோபுரம் சன்னிதித் தெருவில, சக்கர குளத்துக்குப் பக்கத்துல இருக்கற அருணாசலேஸ்வரர் துணிக்கடையில கேஷியரா வேலை பார்க்கிறேன். நானும் உங்க மாமா சோணகிரி மாதிரி தனிக்கட்டைதான். தினமும் அஷ்ட லிங்கங்களைத் தரிசித்து விட்டுத்தான் வேலைக்குப் போவேன். பெரிசா என்னைப்பற்றிப் பேச ஒண்ணுமில்லை. அதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கையில என்ன நடந்தது சொல்லுங்க."

துளசிக்கு நந்து ஐயா முற்றிலும் தெரியாத நபராகத் தெரியவில்லை. மிகவும் பரிச்சயமான நபராகத்தான் தெரிந்தார். அவரிடம் தன் கஷ்டங்களைச் சொல்லும்பொழுது, அந்தக் கஷ்டத்தின் பாரம் குறைந்தது போலத் தெரிந்தது. அதனால் மேலும் தொடர்ந்தாள்.

"கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா மாமாவுக்காக வெயிட் பண்ணினேன். அப்பா, அம்மாவும் பலதடவை பேசினாங்க. அவரை மாத்தமுடியல. அதுக்கு அப்புறம் மாமா எங்க வீட்டுக்கு வரவே இல்ல. ஒரு முழுநேர சன்னியாசி ஆயிட்டாரு. அதுக்கு மேல பொறுமையில்லாம, எங்க அப்பா அம்மா என்னை எப்படியோ சம்மதிக்க வெச்சு வேறு ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டாங்க."

"அருணாசலேஸ்வரா, இது என்ன கஷ்டம்!"

"ஆனால் ஐயா, எனக்குப் புருஷனாக வந்தவரு ரொம்ப நல்ல மாதிரி. கல்யாணத்துக்கு முன்னாடியே சோணகிரி மாமா பத்திச் சொன்னேன். அதை அவர் பெருசா எடுத்துக்கல. அவர் சரின்னு சொன்னதனாலதான் அந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். எங்க வாழ்க்கை ரொம்ப நல்லாதான் போச்சு. எங்களுக்கு மூணு குழந்தைகள். ரெண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. என்னோட புகுந்தவீடு பூம்புகார், அங்கேதான் வாழ ஆரம்பிச்சோம்" என்று புதிய மணவாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் வருண லிங்கக் கோயில் வந்தது.

"துளசி, நெய்தல் எனப்படும் கடல் சார்ந்த பகுதிகளின் தெய்வம் வருணன். நீ உன் புகுந்த வீடு கடல் சார்ந்த பகுதியான பூம்புகார் என்று சொன்னே. அந்த வருண பகவான் தவம் செய்த இடம்தான் இந்த இடம். வா உள்ளே போகலாம்."

வருண லிங்கத்தை தரிசித்துவிட்டு வாயு லிங்கத்தைத் தரிசிக்கக் கிளம்பினர்.

"துளசி, நீ ஏதோ ஒரு பெரிய சுமையைச் சுமக்கிறது போல எனக்குத் தெரியுது. உனக்குப் பிரச்சனை இல்லைன்னா அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்."

"ஐயா, உங்களைப் பார்த்தாலே என் மனசுல ஒரு நிம்மதி வருது. ஏன்னு எனக்குத் தெரியல. என் கஷ்டத்தை உங்ககிட்ட சொல்றேன்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள்.

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, என் கணவர் மாரடைப்பால் இறந்து போய்ட்டாரு. ஆனா அதுக்கப்புறம் என் பசங்க என்னை நல்லாத்தான் கவனிச்சுகிட்டாங்க. திருநெல்வேலியிலதான் என் மூத்தபையன் இருக்கான். நான் அவனோட இருக்க ஆரம்பிச்சிட்டேன். என் மருமகள் டீச்சரா வேலை பாக்குறா. போன வருஷம்தான் பிரசவத்தில இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. நான்தான் அவங்களைக் கவனிச்சுக்கறேன். ஒருநாள் தீர்த்தமலையில் இருந்து, தூரத்து சொந்தகாரர் ஒருத்தர் போன் பண்ணாரு. என் மாமா சோணகிரிக்குக் கண் பார்வை ரொம்ப மங்கிப் போய்விட்டதாகவும், மூச்சுத் திணறல்ல ரொம்பக் கஷ்டப்படறதாகவும் சொன்னாரு" என்று அவள் மாமா படும் கஷ்டங்களை விவரித்தாள். சிறிது நேரத்தில் வாயு லிங்கம் கோயில் வந்தது.
"துளசி, வாயு பகவான் காற்றின் அதிபதி. உன் மாமா மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு ஒரு வழி காட்டுவாரு பாரு!" சிறிது நேரத்தில் வாயுலிங்கத்தைத் தரிசித்துவிட்டு கிளம்பினர்.

"துளசி 18 சிவபுராணங்களில் வாயு புராணமும் ஒன்று. வாயு பகவான் சொன்னதால அதற்கு அப்படி ஒரு பெயர். வாயு புராணத்தில் கிட்டத்தட்ட இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் இருக்கு. எனக்கு ரொம்ப பிரியப்பட்ட வாயு மைந்தன் ஆஞ்சநேய சுவாமிக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தமும் இருக்கு" என்று சொல்லிவிட்டு வாயு புராணத்தைப் பற்றிப் பல செய்திகளைச் சொன்னார்.

"அய்யா உங்க கிட்டே நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன் ரொம்ப நன்றி."

"அப்புறம் உங்க மாமாவுக்கு என்ன நடந்தது?"

"ஒரு மாசத்துக்கு முன்னாடி மாமாவை நேர்ல போய்ப் பார்த்தேன். அவர் கண்பார்வை சுத்தமா போயிடுச்சு. மூச்சுத் திணறலாலே ரொம்பக் கஷ்டப்படுறாரு. அவரால பலன் அனுபவித்த யாரும், அவருக்கு இப்ப உதவி பண்ண ரெடியா இல்ல. அவர்கிட்ட இருந்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சிவத்தொண்டுக்காகவும் ஏழைகளுக்காகவும் செலவழித்து விட்டாரு. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தீர்த்தகிரீஸ்வரர்தான். இந்தக் கஷ்டமான நிலைமையிலும் தன்னைக் குணப்படுத்துன்னு கேட்க மாட்டேங்கிறாரு.

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

இந்தச் சிவபுராணப் பாடலை பத்து தடவையாவது பாடுறாரு. அப்பேர்பட்ட சிவபக்தருக்கு ஏன் இந்தக் கஷ்டம்?" என்று கண்ணீர் மல்கக் கேட்டாள்.

"துளசி, சிவனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு இந்தக் கஷ்டம் ஒண்ணும் புதிதல்ல! 63 நாயன்மார்கள் பலபேர் பட்ட கஷ்டங்களை பார்க்கும்பொழுது இதெல்லாம் ஒன்றுமில்லை. அதாவது கர்மா என்றால் உன் செயல், உன்னுடைய செயல் மட்டுமே. அதை உருவாக்குவது நாமதான், நாம் மட்டும்தான். உன் தலைவிதி உன் செயல்தான். அவர் முன் வாழ்க்கையில, இல்லை நாத்திகராய் இருந்தபொழுது செய்த பாவங்களை, அதாவது கர்ம வினையை அவர் அனுபவிச்சுதான் ஆகணும். ஆனால் அதன் கொடுமையை, அவர் செய்த புண்ணியங்கள் குறைக்கும். சில சமயங்களில் கஷ்டமான சமயத்திலும் தன்னை நினைத்துப் பார்க்கிறானா என்று கடவுள் சோதித்துப் பார்ப்பார். ஒரு பெரிய பலன், அதாவது முக்தி கொடுக்குறதுக்கு முன்னாடி அதுக்கு அவர் சரியான ஆளா என்று ஒரு சோதனை வைத்திருக்கலாம். எனக்கு என்னமோ நீ சொல்றத வச்சு பார்க்கிறப்ப, உங்க மாமா அதுக்கு தயாராயிட்டாருன்னு நினைக்கிறேன்."

"ஐயா, நீங்க சொல்றது எனக்குப் புரிஞ்சாலும்,கொஞ்சம் வசதியுடன் இருந்த மாமா, கையில இருந்த செல்வத்தை இழந்து இப்படி இருக்காரேன்னு கஷ்டமா இருக்கு" என்றாள். சிறிது நேரத்தில் குபேர லிங்கக் கோயில் வந்தது.

"துளசி, இந்த இடம் சிவனோட சிறந்த நண்பரான சிவ சகா என்று சொல்லப்படும் செல்வத்தின் அதிபதி குபேரன் வழிபட்ட இடம். அவருக்கு நல்வழி கிடைக்கும். கவலைப்படாதே." என்றார்.

சிறிது நேரத்தில் எட்டாவது லிங்கமான ஈசானிய லிங்கத்தை தரிசிக்கக் கிளம்பினர்.

"துளசி, நீ கிரிவலம் பண்றதுக்கு காரணம் உங்க மாமா சீக்கிரமே குணமாகணும் என்பதற்காகவா?"

"அதுமட்டும் காரணம் இல்லை. சோணகிரி மாமா சன்யாசத்துல இருந்ததால என் பசங்ககூட தொடர்பில இருந்ததில்லை. என் பசங்களுக்கும் அவர்மீது பெரிய அபிப்பிராயம் இல்லை. ஆன எனக்கு என் மாமா செய்த தியாகங்களைப் பற்றியும், பக்தியைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அதனால நான் அவருக்கு உதவியா அவரோட இருக்கலாம்னு முடிவு பண்ணேன். என் பையன்கிட்ட அதப்பத்தி பேசினப்ப ரொம்ப கோபப்பட்டான். அப்படி ஒரு முடிவு பண்ணா, இனிமே அவனுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனச் சொல்லிட்டான். என் பசங்க ரொம்ப நல்லவங்க. என் கணவரின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் என்னை நல்லாத்தான் கவனிச்சுகிறாங்க. என்னால சரியான முடிவை எடுக்க முடியலை. திடீர்னு ஒரு நாள் கனவுல அஷ்ட லிங்கத்தை தரிசிக்க வா என்று யாரோ சொன்ன மாதிரி இருந்துச்சு" என்று முடித்தாள். அவர்கள் ஈசான லிங்கம் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.

"துளசி காரியத்தடை நீங்க, ஈசான லிங்கத்தை வழிபட்டா நல்வழி கிடைக்கும். சரியான இடத்துக்குதான் வந்திருக்கே."

ஈசான லிங்கத்தை தரிசித்துவிட்டு வெளியே வந்தனர்.

"துளசி என் மனசுல பட்டதைச் சொல்றேன். 63 நாயன்மார்களில், திருக்குறிப்புத் தொண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். சிவனடியாருக்குச் சேவை செய்யறது சிவனுக்கே பணி செய்வதுபோல என நினைத்தவர். அதன்படிப் பார்த்தால் சிவனுக்கும், சிவனடியார்களுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த உங்க மாமாவுக்கு உதவியா நீ போவதே சரியான முடிவு. உன்னோட பசங்க உன்மேல கோபப்பட்டாலும், நீ அவங்களுக்கு செய்யக்கூடிய உதவி பந்தம் சம்பந்தப்பட்டது. நீ இல்லாட்டி கூட அவங்க யாரையாவது வைச்சு, அவங்க குழந்தைகளைப் பார்த்துப்பாங்க. ஒருநாள் புரிஞ்சுக்குவாங்க. அதனால தைரியமா உங்க மாமாவோட இருந்து அவருக்கு உதவி பண்ணு. அந்த சிவன் உன் பசங்களுக்கு ஒரு வழியைக் காண்பிப்பார் "என்று அவர் சொல்லும் பொழுதே துளசியின் உடல் சிலிர்த்தது.

"அப்புறம் துளசி, கடையில நான் இருக்க வேண்டிய நேரம் வந்துருச்சு. நான் அப்படியே கிளம்புறேன். இங்கே இருந்து பெரிய கோயில் பக்கந்தான். நீ ஒரு ஆட்டோ பிடிச்சுக்கோ" என்றார்.

"ஐயா, நீங்க கடவுள் மாதிரி வந்து என் வேண்டுதலை நிறைவேற்றி, எனக்கு ஒரு வழியும் காண்பிச்சுடீங்க" என்று சொல்லிவிட்டு அவருக்கு விடை கொடுத்தார். சிறிது நேரத்தில் திருவண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு அங்கிருந்த மண்டபத்தில் உட்கார்ந்தாள். தாகம் எடுத்தது. கைப்பையைத் திறந்து, தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கும்பொழுது ஒரு சிறிய கைப்பையைப் பார்த்தாள்.

‘ஓம் நமச்சிவாய, இந்த கைப்பை நந்து ஐயாவுடையது. பாத்ரூமுக்கு போறப்ப, என்கிட்ட கொஞ்சநேரம் பார்த்துக்க என்று சொல்லிக் கொடுத்தார். திரும்ப வாங்கிக்கொள்ள மறந்துவிட்டாரே? அவரோட கடை சன்னதி தெருவில் சக்கரக் குளத்துக்கு பக்கத்துல இருக்கு என்று சொன்னாரு. அவரை நேரில் பார்த்து கொடுத்துவிடலாம்’ என்று நினைத்து அந்தக் கடையை நோக்கிச் சென்றாள்.

கடையின் வாசலில் அவளைக் கூட்டிச் சென்ற ஸ்கூட்டர் இருந்தது. அவள் உட்கார்ந்த இருக்கை சற்று கிழிந்து இருந்ததால், எக்ஸ் மார்க்கில் ஒரு தையல் போடப்பட்டிருந்தது. அதே கலர் மற்றும் அதே குறி! சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளோம் என்று நினைத்தபடி கடையின் உள்ளே சென்றாள்.

கேஷியர் இருக்கையில் யாரோ ஒரு பெண் அமர்ந்திருந்தாள்! துளசி அவளிடம் "கேஷியர் நந்து ஐயாவைப் பார்க்கணும். அவரைக் கூப்பிடறீங்களா?" எனக் கேட்டாள்.

"அம்மா இந்தக் கடையில 15 வருஷமா வேலை பார்க்கிறேன். இங்கே இருக்கிற ஒரே கேஷியர் நான்தான்! நீங்கள் கடைமாறி வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள்

"இல்லம்மா, இந்தக் கடை பெயர்தான் சொன்னாரு. என்ன கூட்டிட்டு வந்த ஸ்கூட்டர்கூட வெளியில இருக்கு."

"இந்தக் கடையில வேலை பார்க்கிற எல்லாரும் இன்னைக்கு வந்திருக்காங்க. நீங்க அவங்கள்ள யாராவது ஒருத்தரான்னு பாருங்க."

துளசி எல்லோரையும் நோட்டமிட்டாள். அதில் யாரும் நந்து ஐயாவைப் போல் இல்லை என்று அந்தப் பெண்ணிடம் சொல்லும்பொழுது ஒரு நடுத்தர வயதில் சற்றுக் குட்டையான ஒருவர் வந்தார்.

"அம்மா, இவங்கதான் இந்தக் கடையின் முதலாளி". துளசி தான் வந்த விஷயத்தைச் சொன்னாள்.

"அம்மா, அந்த ஸ்கூட்டரில் நீங்க போய் இருக்கவே முடியாது. இன்னிக்கு காலையில கடைக்கு வரும்போது, இந்தத் தெருமுனையில ஸ்கூட்டர் பஞ்சர் ஆயிடுச்சு. பணம் இல்ல நகை எடுத்துட்டு போயிருப்பான்னு நினைக்கிறீங்களா?" எனக் கேட்டார்.

"ஓம் நமச்சிவாய! அவரைப் பத்தி தயவு செய்து தப்பா சொல்லாதீங்க. அவரோட பொருள்தான் என்கிட்ட இருக்கு"

"அப்படின்னா அது என்னன்னு பாருங்க. இந்தத் தெருவில் இன்னும் மூணு கடை இருக்கு. ஆனால் குளத்துக்கு நேரெதிரா இருக்கிற ஒரே கடை இதுதான்."

துளசி சிறிய பையைத் திறந்தாள். அதனுள்ளே ஒரு சிறிய காகிதத்தில் சிவபுராணத்தில் மாமா பாடும் அதே பாடலின் வரிகள்!

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

அதுமட்டுமல்லாமல் அதில் "நீ செல்லும் பாதை, அந்த ஈசன் காட்டிய வழி. தைரியமாகச் செல்" என்று எழுதியிருந்தது. மற்றுமொரு சிறிய காகிதத்தில் திருநீறு. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தப் பையை அவளிடம் அவர் கொடுத்த இடம் வருண லிங்கம் சன்னிதி. ஆனால் மாமா பாடிய பாடல் பற்றியும், தனது கலக்கத்தைப் பற்றி அவள் விவரித்த இடம் குபேர மற்றும் ஈசானிய லிங்கம் சந்நிதி! "ஓம் நமசிவாய" என்று சொல்லி அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

கடை முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை

"அம்மா என்ன யோசிக்கிறீங்க" எனக் கேட்டார்.

"ஐயா, அவருக்கு இதை திருப்பிக் கொடுக்க வேண்டாம். இது அவர் எனக்கு கொடுத்தது போலத்தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்கும் பொழுது அந்தக் கடையின் ஓரத்தில் மூன்று அடி உயரத்திலும் ஐந்தடி அகலத்திலும் ஒரு நந்தியின் சிலை.

"ஐயா, இந்த நந்தி சிலை பற்றிச் சொல்லுங்கள்" எனக் கேட்டாள்.

"அம்மா நந்திதான் எங்கள் குலதெய்வம். பல தலைமுறைகளாக வழிபடுகிறோம்" என்று சொன்னார்.

"ஐயா, உங்க பேரு"

"நந்திகேஸ்வரன் என்கிற நந்து!"

மருங்கர்,
லேக்வில், மின்னசோட்டா
Share: 




© Copyright 2020 Tamilonline