Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
அரை விலைக்கு ஓர் அறை!
- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி|மே 2021|
Share:
"அப்பா, இந்தத் தடவை விடுமுறைக்கு எங்கேயாவது வெளியூர் போயே ஆகவேண்டும்" பள்ளியாண்டு கடைசி தினம். பள்ளி முடிந்து வீடு செல்லக் கதவைத் திறந்து காரில் கால் வைப்பதற்கு முன்பே பையன் புலம்ப ஆரம்பித்தான்.

விடுமுறைக்கு வெளியூர் போகவேண்டும் என்று நீண்ட நாள் கனவு இருந்தாலும்கூட அந்த நாள் வந்தவுடன் எனக்கு லேசாகத் தலைசுற்ற ஆரம்பித்து விடுகிறது. ஒரு பக்கம் எங்கே போவது என்று குழப்பம். ஒரு நாள் டின்னருக்கு எந்த ஹோட்டல் செல்லலாம் என்பதற்கே ஒரு மணிநேரம் குழம்பும் குழாம், சுற்றுலா எங்கு போகலாம் என்று முடிவு எடுக்குமுன் விடுமுறையே முடிந்துவிடும்! ஒருவழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்குப் பிளேன் டிக்கட், தங்குமிடம், வாடகைக் கார் என்று ஒவ்வொன்றாக முன்பதிவு செய்வது குழப்பவாதியான எனக்குக் கொடுமையான தண்டனை.

நல்லவேளை, இந்த முறை இடத்தை நான் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன். நிற்க. இது அப்பட்டமான பொய்! இடத்தை ஏற்கெனவே மற்றவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

"என்னடா, இத்தனை நாளில் ஒரு தடவைகூட ஹவாய் போனதில்லையா?"

இந்தக் கேள்வியை ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் நண்பர்களிடம் இருந்து நானூறு முறையாவது நாராசமாகக் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது! அங்கு போகாமல் இருப்பது ஒரு குற்றம்போல மேலும் கீழும் பார்க்கிறார்கள். குழந்தைகளும் விடுமுறை என்றாலே ஹவாய், ஹவாய் என்று டபாய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

அதென்னமோ தெரியவில்லை ஹவாய் செல்ல இதுவரை பிராப்தி கிடைக்கவில்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதுபோல ஒருவருக்கு விடுமுறை கிடைத்தால் இன்னொருவருக்கு கிடைக்காது. அல்லது எல்லோரும் விடுமுறை எடுத்தால் யாராவது ஒருவருக்குச் சொல்லி வைத்ததுபோல உடம்பு சரியில்லாமல் போய்விடும். ஒரு தடவை ஏற்பாடும் செய்து, அதிசயமாக முன்பதிவும் செய்திருந்தேன்.

என் பெருமை எனக்கே தாங்காமல் தலைக்கனம் கொஞ்சம் தூக்கியபோது யார் கண்ணோ பட்டுவிட்டது! எங்கிருந்தோ ஹரிக்கேன் மரியாவோ, மரிக்கொழுந்தோ ஒரு படுபாவிப் புயல் நாங்கள் போகவிருந்த நாளில்தான் கரை கடப்பேன் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டது. நல்லவேளை, சிறிது முன்னமே தெரிய வந்ததால் கடைசி நேரத்தில் எல்லவற்றையும் கேன்சல் செய்துவிட்டோம்.

"டீல், டீல் என்று தள்ளுபடி விலையில் வாங்கினால் இப்படிச் சூறாவளி காலத்தில்தான் கிடைக்கும்," வாங்கிக் கட்டிக்கொண்டு சிலநாள் இருக்குமிடம் தெரியாமல் ஒதுங்கினேன். இந்த வருடம் அதற்கான பிராயச்சித்தம். ஹவாய் செல்வதுதான்.

முன்பதிவை இன்டர்நெட்டில் செய்துவிடலாம் என்பது நூற்றில் தொண்ணூற்றொன்பது பேருக்குத் தெரியும். நண்பர்கள் யாரைக் கேட்டாலும், "ட்ரிப் கௌன்சலர் போ. ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம்" என்று ஓங்கி அடிக்கிறார்கள். அங்கே ஆயிரக்கணக்கில் ஹோட்டல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரெவியூக்கள்! ஒரு பக்கம் 5 ஸ்டார் ரெவியூ பார்த்தால் "இந்த ஹோட்டல் சுவர்க்கம்! வாசலில் தேவதைகள் ரத்தினக் கம்பளத்தில் பதவிசாக நடந்து வந்து வரவேற்றார்கள். பரிசுத்தமான கடல்வெளி, மேகமில்லா நீலவானம், கூட்டமில்லா நீச்சல்குளம். குழந்தைகள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்து வீட்டுக்கு அழைத்து வரவே மனமில்லை. அங்கே விட்டுவிட்டு வந்துவிட்டோம்" என்கிற வகையில் ஒரே புருடா!

மறுபக்கம் அதே ஹோட்டலுக்கு ஒரு நட்சத்திர ரெவியூ படித்தால் "கண்றாவி ஹோட்டல். ஒரே மூட்டைப் பூச்சித் தொல்லை. கடல் பக்கத்தில் ஐந்து நிமிடம்தான் என்றார்கள். ஆனால் அது ஹெலிகாப்டரில் போனால்தான் என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மோசடிக் காரர்கள். போக்குவரத்து நெரிசலில், காரில் கடற்கரை செல்ல முப்பது நிமிடத்துக்கு மேல் பிடித்தது" என்று ஒரே ஒப்பாரி! இதில் யாரை நம்புவது?

இரண்டு ராத்திரி தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு தேடியதில் கடைசியாக ஒரு நல்ல விடுதி மாட்டியது. எல்லாருமே ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்திருந்தார்கள். விலையும் கையைக் கடிக்காது போல் இருந்தது. "அப்பாடா" என்று மனைவியிடம் காண்பித்தால், "அதோ பார். யாரோ ஒரு நட்சத்திரம்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள். எட்டு தடவை பார்த்த என் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் அவளுக்கு மட்டும் எப்படித்தான் தெரிந்ததோ!

படித்துப் பார்த்தேன். "இடம் சௌகர்யம், கடற்கரை அழகு. எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. ஆனால் விடுதியில் உணவருந்தும் இடத்தில் வேலை செய்பவன் என்னை அறைந்துவிட்டான். தயவுசெய்து இந்த விடுதியைத் தவிர்க்கவும்."

படித்தவுடன் மனைவி "இந்த இடம் மட்டும் நிச்சயம் வேண்டாம்" என்றாள். நான் கடகடவென்று சிரித்துவிட்டேன்.

"இந்த மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லை. யாராவது அறை வாங்கி நீ பார்த்திருக்கிறாயா? அவன் எதாவது திரிசமம் செய்திருப்பான்."

"நான் சொல்றதச் சொல்லிட்டேன். அங்க போய் ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நான் பொறுப்பில்லை" என்று விலகினாள்.

நப்பாசை யாரை விட்டது? விலைகுறைவு என்பதால் அங்கேயே 'அறை' முன்பதிவு செய்தேன். கொஞ்சம் சல்லிசு என்பதால் கூட மூன்று நாள் சேர்த்துப் பத்து நாள் தங்க முடிவு செய்தேன்.

பதிவு செய்யும்போது, "வாடிக்கையாளர் கவனத்துக்கு: உங்கள் சௌகர்யத்துக்காக நாங்கள் மதிய உணவு தருவோம். வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். இல்லை என்றால் இங்கு சுட்டவும்" என்றது. உடனே என் மனைவி "மதிய உணவு கிடைத்துவிட்டால் ஒரு பெரிய தலைவலி தீரும். கட்டாயம் வாங்கிவிடு" என்று சொல்லிவிட்டு காச்மூச் என்று கத்திக்கொண்டு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் பையனைக் கவனிக்கக் கிளம்பினாள். நான் உணவு வேண்டும் என்று சுட்டியவுடன் விலை திடீரென்று இரண்டு மடங்கு ஆகிவிட்டது. "ஆஹா, இப்படித்தான் நீங்கள் ஊரை ஏமாற்றுகிறீர்களா" என்று எனக்குள் புலம்பிவிட்டு உணவில்லாமல் தங்குவதற்கு மட்டும் பதிவு செய்துவிட்டு, அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சிறு வயதில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரு பெரிய பட்டியல் வரும். "அடுப்பு அணைச்சாச்சா? லைட் எல்லாம் அணைச்சாச்சா? வாசல் கதவு, பின் கதவு பூட்டியாச்சா?". பட்டியல் நீண்டுகொண்டே போய் கிளம்புவதற்கு அரைமணி நேரம் ஆகும். இப்போது எல்லாவற்றையும் இன்டர்நெட்டிலிருந்தே கண்காணிக்கலாம் என்பதால் சுருக்கக் கிளம்பி விடலாமா என்றால் கிடையாது. அந்தக் கேமரா ஆன் செஞ்சாச்சா, இந்தக் கேமரா ஆன்லைன்ல இருக்கா, போஸ்ட் ஆபிஸ்ல டெலிவரி நிறுத்தச் சொல்லியாச்சா என்று நவீன பட்டியல் பழையகாலப் பட்டியலைப் போல நான்கு மடங்கு நீளம்! எல்லாம் ஒழிந்து அப்பாடா என்று கிளம்புவதற்குள் வாசலில் ஊபர் டிரைவர் இரண்டு நிமிடத்துக்குள் வண்டியில் ஏறவில்லை என்றால் உங்கள் பதிவை கேன்சல் செய்துவிட்டு அடுத்த சவாரிக்குப் போய்விடுவேன் என்கிறான். ஓடிப்போய் ஏறிக்கொண்டு எல்லோரும் ஆஜர் என்பதால் சற்று பெருமூச்சு விடும்போது பின்னாலிருந்து மனைவியின் குரல் "செக்யூரிட்டி அலாரம் ஆன் செய்தாயா?". சுத்தமாக ஞாபகம் இல்லை. தொண்டையில் கவ்விய ஒரு சிறிய பயத்தை விழுங்கி "எல்லாம் பண்ணியாச்சு" என்றேன்.

விடுதி மிகவும் நன்றாகவே இருந்தது. கடற்கரையும் ரம்மியமாக இருக்கவே குழந்தைகள் மணலை விட்டு நகரமாட்டோம் என்று சத்தியாக்கிரகம் செய்தார்கள். சரி, விடுதியில் இருந்து சாப்பாடு வாங்கி வரலாம் என்று சென்றேன். விலைப்பட்டியல் பார்த்தால் மாரடைப்பு தாக்கியது! இரண்டு யானை விலை எல்லாவற்றுக்கும். இது சரிப்படாது, சற்று வெளியில் சென்று ஏதாவது ஒரு கடையில் வாங்கலாம் என்று கிளம்பினேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இருபது மைல் அலைந்து வாங்கி வருவதற்குள் எனக்கு இரண்டு வயது கூடிவிட்டது. குழந்தைகளும் பசி தாங்கமுடியாமல் குறை சொல்லிக்கொண்டு மனைவியைப் படுத்தி எடுத்திருந்தனர். உணவைக் கண்டவுடன் முன்பின் பார்க்காதது போல் பறந்தடித்து மேய்ந்தனர்! இனிமேல் வெளியே சென்று வாங்கவேண்டாம். விலை அதிகம் என்றாலும் விடுதி உணவுதான் இனிமேல் என்று மனைவி கடுமையாகச் சொல்லிவிட்டாள் .

அன்றிரவு குயுக்தி ஒன்று தோன்றியது. மதிய உணவுக்கு அலையாமல், விடுதியில் காலை உணவு உண்டபிறகு அப்படியே கொஞ்சம் அமுக்கி அறைக்கு எடுத்து சென்றுவிடலாமே! கேட்டேன். குடும்பம் ஒற்றுமையாகத் தலையில் அடித்துக்கொண்டு "சில ஆயிரம் செலவு செய்து பல்லாயிரம் மைல் பறந்து வந்துவிட்டு இப்படி சில்லறைத்தனமாக உணவை மறைத்து, மறைத்து எடுத்து வந்தாவது சாப்பிடவேண்டுமா?" என்று புலம்ப ஆரம்பித்தது. இருந்தாலும் எனது மூன்றாம் உலக வளர்ப்பு ஒரு சப்பைக்கட்டு கண்டுபிடித்து சமாதானம் செய்து கொள்ளச்செய்தது. ஒவ்வொரு நாளும் காலை உணவு முடிந்தவுடன், சாப்பிட்ட தட்டில் மீதி இருப்பதற்கு மேல் கைக்கு அகப்பட்டதை அமுக்கிக்கொண்டு, யாரும் பார்க்காவிதம் பதவிசாக நடந்து அறை வந்து அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு கடற்கரைப் பக்கம் செல்வேன். அங்கு வேலை செய்யும் ஒருவன் என்னையே முறைத்துப் பார்ப்பதுபோல் ஒரு பிரமை ஒவ்வொரு நாளும். எனவே குனிந்த தலை நிமிராமல் அறை சென்று அடைவேன்.

நான்கைந்து நாட்கள் நகர, இந்த விளையாட்டு கொஞ்சம் பழகிவிட்டது. ஒருநாள் நான் மிகவும் தைரியமாக என் தட்டை எடுத்துக்கொண்டு நடக்கும் போது எதிரில் என்னை முறைக்கும் வேலையாள்! என்னவோ ஒரு தற்காப்பு உணர்வு எச்சரிக்கையில் தலை குனிந்து விரைவாக நடக்க ஆரம்பிக்கும் முன் நான் பயந்த அந்த நிகழ்வு நடந்துவிட்டது!

சுதாரிப்பதற்கு முன்னால் என் கன்னத்தில் அவன் அறைந்த அறை இடிபோல இறங்கியது. என் கையில் இருந்த தட்டு பறக்க, நான் மறைத்து எடுத்து வந்த பிரட் துண்டுகள், ஜாம் வகையறா அந்தரத்தில் ஸ்லோ மோஷனில் பறந்து நீச்சல் குளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த இருவர்மேலும் பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தட்டிலும் விழுந்து சகல குழம்பு வகைகளையும் அவர்கள் முகங்களில் தெறித்தது. அதிர்ச்சியில் அனைவரும் செய்வதை நிறுத்திவிட்டு என்னைக் கொலைவெறியுடன் முறைத்தனர். எல்லார் முன்னும் அறை வாங்கியது மட்டுமல்லாமல் என் அமுக்கல் அம்பலமாகிவிட்ட அவமானம் தாங்காமல் நான் குனிந்த தலை நிமிராமல் அறைக்கு ஓடி ஒளிந்தேன்.

அன்று நான் கடற்கரைப் பக்கம் செல்ல முடியாமல், அறையிலேயே படுத்துக் கிடந்தேன். மதியம் யாரோ கதவைத் தட்ட, கொஞ்சம் பயத்துடன் திறந்தேன். விடுதி மேலாளர்! ஐயையோ, கதி அதோகதிதான் என்று பயந்துகொண்டே அவரை உள்ளே அனுமதித்தேன்.

"இன்று காலை நீங்கள் அறை பட்ட விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார்.

போச்சுடா! என் வண்டவாளம் வெளிப்பட்டு விட்டதே என்று நினைத்தாலும் கொஞ்சம் தன்மானம் தலைதூக்க "நீங்கள் இப்படித்தான் விருந்தினரை உபசரிப்பதா?" என்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

"அறைந்தவன் என் மகன்தான். அவனுக்கு மனநிலை சரியில்லை. நீங்கள் அவனை தயவுசெய்து மன்னிக்க வேண்டும். அவனுக்குப் பச்சை நிறம் என்றால் மரண பயம். நீங்கள் எல்லா நாளும் விதவிதமான பச்சைச் சட்டைகளைப் போட்டு கொண்டிருந்தீர்கள். அதனால் நீங்கள் அவனைக் கொல்லவந்த அடியாள் என்று நம்பிவிட்டான். உங்களிடம் பயந்து ஒதுங்கியே இருந்தான். இன்று அவன் ஒதுங்க இடம் கிடைக்காததால் உங்களைத் தாக்கிவிட்டு தப்பித்தேன் என்று என்னிடம் சொன்னான்."

"ஹா! இது வேறு கதை போல இருக்கிறதே. அதனால்தான் என்னை அப்படி முறைத்தானா" என்று நான் நிமிர்ந்து கேட்கலானேன்.

"இந்த விஷயம் மேலாளர்களுக்குத் தெரிய வந்தால், எங்கள் இருவருக்கும் வேலை போய்விடும். நீங்கள் தயவுசெய்து இதைப்பற்றிப் புகார் செய்யாமல் இருந்தால் உங்களுடைய செலவில் பாதியைத் தள்ளுபடி செய்கிறேன்" என்றார்.

நம்ப முடியாமல் வாயைத் திறந்து கேட்ட நான் ஒருமுறை என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். "அடித்ததுடா யோகம்!" என்று உள்ளுக்குள் கொண்டாடினாலும் "ஆகட்டும், யோசித்துச் செய்கிறேன்" என்று பிடி கொடுக்காமல் அவரை அனுப்பி வைத்து விட்டு அறைக்கதவு சாத்தியதும் "ஹூஹூ" என்று ஒரு குதி போட்டேன்.

கடற்கரையில் ஆடிவிட்டு ஈரமாக வந்த குழந்தைகள், மேசைமேல் இருந்த வெறும் தட்டைப் பார்த்து "அப்பா, இன்னைக்குச் சாப்பாடு எடுத்து வரவில்லையா?" என்று முகம் சுளித்தனர்.

"இல்லை! இன்று நாம் விடுதியிலேயே சாப்பிடப் போகிறோம்" என்றேன் பெருமையாக. "ஐஸ்கிரீம் சேர்த்து!"
பின்குறிப்பு:
1. இந்த மாதிரி ஏடாகூடமாக அவமானப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், மனைவி சொல்வதைத் தட்டாமல் கேட்கவும்.
2. அரை விலைக்கு விடுதி கிடைக்கும் என்றால் ஒரு அறை வாங்கினாலும் தகும் என்று நினைப்பீர்கள் என்றால், இருபத்து ஐந்து டாலர் காசோலையுடன் என் முகவரிக்கு எழுதவும். இந்த விடுதி விபரம் மற்றும் எந்தப் பச்சை அணிந்தால் சல்லிசாக 'அறை' கிடைக்கும் என்பதையும் சொல்கிறேன்.

சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline