Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
அதுதானே சரி…
சார்பட்டா
- அபுல்கலாம் ஆசாத்|ஏப்ரல் 2021|
Share:
மீர்சாகிப்பேட்டையிலிருந்து போரூருக்குக் குடிபெயர உசேனுக்கு விருப்பம் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்டி ஊரடங்கு முடிந்ததும் உசேனைப் போரூருக்கு அழைத்து வந்தார்கள். போரூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு உசேனுக்கு சரிப்பட்டு வரவில்லை.

எவ்வளவு பரந்த புல்வெளி! சிலம்பம் எடுத்து சிலா வரிசை முடித்து அலங்காரப் பாடம் துவங்கினால் ஆடிக்கொண்டே இருக்கலாம். புல்வெளியில் விளையாட அனுமதி இல்லை. அது அழகுக்குதான். விளையாட்டென்றால் அதற்கென உள்ள மணல்வெளியில்தான். மணல்வெளியில் சிலம்பத்துக்கு இடம் இல்லை. பூப்பந்தும் கைப்பந்தும் கிடைத்த இடத்தில் கால்பந்துமாக நடக்கின்றன. திறந்தவெளியில் எடைப்பயிற்சி கிடையாது. அதற்குத் தனியாக இடம் உள்ளது. ஊரடங்குத் தளர்வுக்குப் பின் முகக்கவசத்துடன், உடல்வெப்பத்தைச் சோதித்துதான் உள்ளே அனுப்புவார்கள்.

காலையில் லுங்கி அணிந்து ரப்பர் செருப்புடன் சென்ற உசேனை உள்ளே அனுமதிக்கவில்லை. ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருக்க வேண்டும், உடற்பயிற்சிக்கான உடையும் அணிந்திருக்க வேண்டும் எனச் சொல்லி மறுத்துவிட்டார்கள்.

அன்று மாலை மருமகள் கேட்டுவிட்டாள்.

"மாமா, பெரியவன் சொன்னான். ஜிம்ல உங்களை அலோ பண்லியாமே. இங்கல்லாம் அப்படித்தான் மாமா. வேணும்னா உங்களுக்கு ஆன்லைன்ல ட்ராக் சூட்டும் ரன்னிங் ஷூவும் ஆர்டர் பண்ணிரட்டுமா?"

"இல்லம்மா இருக்கட்டும், பின்ன பார்த்துக்கலாம். இவன் சவூதிலேர்ந்து வரும்போது கொணாந்தா போதும்."

"இல்ல மாமா அவர் இப்பத்திக்கு சவூதிலேர்ந்து வர்ரது கஷ்டம். சார்ட்டட் ஃப்ளைட்ல டிக்கெட் வாங்கி வந்தாலும் துபை வழியாவோ ஓமான் வழியாவோத்தான் ரிடர்ன் ஆகணும். கொரோனா டெஸ்ட்டெல்லாம் இருக்கு. வேணான்றார். எமர்ஜென்சி எதாவதுன்னாதான் - நவூதுபில்லாஹ் - சாரி - வருவார் மாமா.

மீர்சாகிப்பேட்டையில் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த உசேனுக்கு போரூரில் அடுக்குமாடிக் குடியிருப்பும் அதன் நடைமுறைகளும் பிடிபடவில்லை.

உசேன் பணிஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. சென்னையில் இருக்கும் 200+ மாநகராட்சி விளையாட்டுத் திடல்களுள் மூன்று திடல்களில் அந்நாள்களில் உசேனைத் தெரியாதவர்கள் கிடையாது. சேப்பாக்கம், கோபாலபுரம், சாந்தோம். மாற்றலாகி மாற்றலாகி இந்த மூன்று திடல்களில் உடற்பயிற்சிக் கருவிகளுக்கு உசேன்தான் பொறுப்பாளராக இருந்தார். நேரு ஸ்டேடியத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உடற்பயிற்சி எடைக்கற்கள், கர்லாக்கட்டைகள் விற்கும் கடைகளில் உசேனைத் தெரியாதவர்கள் அந்நாள்களில் கிடையாது.

உசேன் ஆறடிக்கு மேல் வளர்ந்தவர். மல்லனுக்கு ஏற்ற உடல்வாகு. ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் மீர்சாகிப்பேட்டையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது உண்டான கைகலப்பில், கவுன்சிலரின் மீது நாட்டு ஓடுகளைக் கூரையிலிருந்து பிரித்து வீசினார்கள். சிறிதும் யோசிக்காமல் உசேன் இடையில் பாய்ந்து ஓடுகளைத் தன் முதுகில் வாங்கிக்கொண்டார். ஒரு ஓடு அவருடைய மண்டையில் விழுந்து காயத்தை உண்டாக்கியது. கட்சிக்காரர்கள் காவலர்கள் எனக் கூட்டம் அதிகமான பின் கைகலப்பு நின்றது.

உசேனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டுப்போட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் உசேனைப் பார்க்க வந்தார். கல்வித் தகுதியைக் கேட்டார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த உசேனுக்கு தினக்கூலி அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் வீட்டுக் கிணறுகளை சுத்தப்படுத்தி குளோரின் கலக்கும் வேலை கிடைத்தது. அதிலிருந்து தற்காலிகமாக மாற்றலாகி விளையாட்டுத் திடலில் எடைக்கற்கள் இருக்கும் அறையை சுத்தம் செய்ய, பூட்டித் திறக்கச் சென்றார். கடைசியில் தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற பயிற்சிக்கூட உதவியாளர் பொறுப்பை அடைந்தார். கல்வித்தகுதி இல்லாததால் அதிலேயே நிரந்தரமாகிவிட்டார்.

மூன்று மாநகராட்சி விளையாட்டுத் திடல்கள், ரிப்பன் பில்டிங், நேரு ஸ்டேடியம், அன்றைய மூர் மார்க்கெட், ஹஜ்ஜுக்குச் சென்றது, இவை தவிர்த்து உசேனின் வாழ்க்கையைப் பார்த்தால், பிறந்தது, வளர்ந்தது, வேலைக்குப் போனது, திருமணம் செய்துகொண்டது, பிள்ளைகளைப் பெற்று வளர்த்தது, ஓய்வு பெற்றது, மனைவியை இழந்தது, வாழ்ந்துகொண்டிருப்பது அனைத்தும் மீர்சாகிப்பேட்டையை மையமாகக் கொண்டு, ஒருபக்கம் விவேகானந்தர் இல்லம் இன்னொரு பக்கம் சர்ச் பார்க் பள்ளிக்கூடம் இவற்றிடையே நீளும் மூன்று கிலோமீட்டர் சாலைக்குள் முடிந்துவிடும். அவர் அன்றுவரையில் அப்படி ஒரு எல்லைக்குள்தான் வாழ்ந்தார்.

மாலை நேரத்தில் மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கும் காலிமனையைச் சுத்தம் செய்து பேட்டை இளைஞர்களுக்கு சிலம்பம் விளையாடக் கற்றுத்தரும் மைதானமாக்கியிருந்தார். உசேன் சிலம்பப் பயிற்சி தருவதால், அந்தக் காலி மனைக்குப் பாதுகாப்புதான் என்பதால் யாரும் எதுவும் சொல்வதில்லை. எடைக்கற்கள் சிலம்பம் இரண்டுக்கும் வெளியே அவருக்குப் பிடித்த இன்னொரு இடம் டாக்டர் பெசண்ட் சாலை ஹமீதியா டீக்கடை.

அதிகாலைத் தொழுகைக்குப் பின் ஹமீதியா டீக்கடையில் சேரும் நண்பர்களிடம் பேசிக்கொண்டே 'அவுன்ஸ் டீ' குடித்துவிட்டுக் கையசைத்து, உடனே மிதிவண்டியை எடுப்பார். காலையில் இளைஞர்கள் சேப்பாக்கத்துக்கு வருமுன் இவர் எடைக்கற்கள் இருக்கும் அறையைத் திறந்துவிடுவார். சாந்தோம், கோபாலபுரத்தில் பணியில் இருக்கும்போதும் அப்படித்தான். பதினைந்து நிமிடத்தில் திடலுக்குச் சென்றுவிடுவார். மாலையில் பேட்டை இளைஞர்களுக்கு சிலம்பப் பயிற்சி.

"நம்ப பரம்பரை பேர் என்ன?"

"சார்பட்டா பாய்."

"ம்ம்ம்.. பீச் ரோட்டைப் பார்த்து நிண்ணா நாலு வூடு. ஜானிஜான்கான் ரோட்டைப் பார்த்து நிண்ணா எட்டு வூடு, ராயப்பட்டா ஆஸ்பத்திரி பன்னண்டு, வியெம் ஸ்ட்ரீட் பதினாறு. நாலும் நாலு திசை. கிழக்கு வடக்கு தெற்கு மேற்கு. இதான் வூடுங்க. மறப்பியா?"

"மறக்கமாட்டேன் பாய்."

"முகராசி படம் பார்த்திருக்கியா? ப்ளாக் அன் வைட். எம்ஜியார் படம்."

"இல்ல பாய்."

"எம்ஜியார்து என்ன படம் கடைசியா பார்த்த?"

"உரிமைக்குரல் பாய்."
"அது போதும். தோ பார் இந்த நாலு ரவுண்டு இதான் வூடு. ஃபர்ஸ்ட் ரெண்டு ரவுண்டுல லெஃப்ட் கால் முன்ன, ரைட்டு கால் பின்ன. இதான் ஸ்டான்ஸ். அப்டியே ரைட்டுக் காலை எடுத்து சைடுல வெச்சு ரைட்ல ஒர் சுத்து சுத்தி லெஃப்ட் காலை பின்னால வை. லெஃப்ட் சைடு ஃபுல்லா பாணா கவர் பண்ணிரும். பின்ன லெஃப்ட் காலை பழைய எடத்துல வெச்சு லெஃப்ட்ல ஒர் சுத்தி சுத்தி ரைட் காலை பின்னால வை. ரைட் சைடு ஃபுல்லா பாணா கவர் பண்ணிரும். ஒர்த்தன் கிட்ட வரமுடியாது. செய் பாக்லாம்."

சார்பட்டா பரம்பரை ஆள்கள் மீர்சாகிப்பேட்டையில் சிலம்பத்தை பாணா என்பார்கள். உசேனும் அப்படித்தான். வெளி ஆள்களுடன் பேசும்பொழுது கவனமாக சிலம்பம் எனக் குறிப்பிட்டாலும் அவர் பேச்சில் சமயத்தில் 'பாணா' வெளிப்பட்டுவிடும்.

போரூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உடற்பயிற்சிக் கூடத்துக்குள் உசேனை அனுமதிக்காத அன்று இரவு அவருடைய மகன் ஸ்கைப்பில் வந்தான். நலம் விசாரிப்புக்குப் பின் தயங்கித் தயங்கி அந்தக் குடியிருப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு சிலம்பப் பயிற்சி தேவையென்றால் தான் தருவதாகச் சொன்னார். மகனும் தன் மனைவியிடம் தொலைபேசியைத் தரச் சொன்னான். நலச் சங்கத்தில் கேட்டுப் பார்ப்பதில் தவறு எதுவும் இல்லையென்று மருமகளும் ஒத்துக்கொள்ள, அடுத்த நலச்சங்க கூட்டத்திற்கு முன்பே மருமகள் செயலாளரிடம் சொல்லிவிட்டார்.

நலச்சங்கக் கூட்டத்தில் அவருடைய சான்றிதழ்களைக் கேட்டார்கள்.

"வாஸ் ஹீ எ சர்டிஃபைடு ட்ரெய்னர் இன் ராயப்பட்டா? நௌ ரிடையர்ட், கரெக்ட்? டஸ் ஹீ ஹேவ் டிப்ளமோ இன் சிலம்பம்? ஆர் டிப்ளமோ இன் ஃபிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர்?"

உசேனிடம் எதுவும் இல்லையென்பது மருமகளுக்குத் தெரியும்.

"லெட் மீ செக் இட் வித் ஹிம் அன் கம் பேக் டூ யூ. தேங்ஸ் செக்ரட்டரி சார்," சொல்லி மருமகள் நிலைமையைச் சமாளித்தார்.
உசேன் ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உடற்பயிற்சிக் கல்வியில் பட்டயப் படிப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. தமிழ்நாடு சிலம்ப விளையாட்டுக் குழுக்கள், சம்மேளனங்கள், தமிழ்நாடு 'ஒலிம்பிக் விளையாட்டல்லாத' விளையாட்டுக் குழுமம், இவை பரவலாக அறியப்படுவதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் உசேன். இவை எவையும் அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் மாநகராட்சி விளையாட்டுத் திடல் உடற்பயிற்சிக்கூடமும் சார்பட்டா பரம்பரை சிலம்ப விளையாட்டும்தான். குடியிருப்புக்குள் உசேனால் சிலம்பம் கற்றுத்தர இயலாது என்று முடிவானது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் லுங்கி அணியாமல் பேண்ட் அணிந்து, ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு முகக்கவசத்துடன் குன்றத்தூர் சாலையில் இருக்கும் ஹயாத் பாஷா தர்காவை நோக்கி நடக்கத் துவங்கினார். நடந்து சென்றுவிடலாம், திரும்பும்போது சோர்வாக இருந்தால் ஆட்டோ பிடித்துத் திரும்பிவிடலாம் என்பது அவருடைய திட்டம்.

மகனும் மகளும் அவரிடம் வற்புறுத்திச் சொல்லியிருப்பது எப்பொழுதும் 'டேட்டாவை' அணைக்கக்கூடாது. 'லொக்கேஷன் ஷேரிங்' எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் அவருக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. நடை பழகச் சென்ற மாமா எங்கு இருக்கிறார் என மருமகள் அடிக்கடி பார்த்துக்கொள்வார்.

ஹயாத் பாஷா தர்காவை அடைவதற்கு முன்பாக கெருகம்பாக்கத்தில் ஒரு தேநீர்க் கடையில் இரண்டு மூன்று இளைஞர்களைப் பார்த்தார். 'காஞ்சிபுரம் மாவட்டம் - சிலம்பக் கலைக் குழு' அடர்நீல வண்ணத்தில் வெள்ளை எழுத்துகளில் பெயர் அச்சிட்ட சட்டைகளை அணிந்திருந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். சாலையைக் கடந்து அவர்களை நெருங்கினார்.

"தம்பீ நீங்கலாம் பாணா சுத்துவீங்களா?"

"சாருக்கு சிட்டியா?"

"ஆமாம்பா."

"இங்கதான் சண்டேல கெருகம்பாக்கம் உள்ளோ பிராக்டீஸ் பண்ணுவோம். ன்னா மேட்டர்?"

"இங்கேர்ந்து எவ்ளோ தூரம்? ஆட்டோ வருமா? நான் வந்து பார்க்கலாமா?"

தலைவனைப் போலிருந்த இளைஞனை இன்னொரு இளைஞன் அனுமதிக்காகப் பார்த்தான். தலைவனைப் போலிருந்தவன் எதுவும் பேசாமல் தலையை மட்டும் சாய்த்து ஒப்புதல் அளித்தான்.

"வர்ணும்னா எங்ளோட வந்துருங்க. ரிடர்ன் இங்கியே கொணாந்து வுட்டுர்ரோம். டீக்கடைலேர்ந்து ஆட்டோ புட்சு போயிருங்க."

அவர்களுடைய சிலா வரிசை சார்பட்டாவிலிருந்து மாறுபட்டு வேறு மாதிரியாக இருந்தது. குடியாத்தம் பகுதில் இப்படியான சிலா வரிசை எடுப்பதுண்டு. வாத்தியார் குடியாத்தத்தைச் சேர்ந்தவரா என உசேன் கேட்டதும் இளைஞர்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர் புன்னகைத்தார். தானும் ஒருகாலத்தில் சிலம்பம் விளையாடியவன்தான் என்றும் இப்போது அனுமதியும் சிலம்பமும் தந்தால் முன்னைப்போல் விளையாட முடிகிறதா என விளையாடிப் பார்த்துக்கொள்வேனென்றும் கேட்டுக்கொண்டார். மீண்டும் தலைவனிடம் அனுமதிக்கான பார்வை. தலைவன் தலையசைத்ததும் உசேன் சிலம்பத்தை பயபக்தியுடன் எடுத்துத் தொட்டு முத்தமிட்டார்.

காலையில் சூரியன் நன்றாக மேலே வந்திருந்தது. சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி நின்றார். இடது கால் முன்னும் வலது கால் பின்னும் இருந்தன. சிலம்பத்தை உயர்த்திப் பிடித்து சிலா வரிசைக்கு ஆயத்தமானார். படகில் துடுப்பு வலிப்பது போல் சிலம்பத்தை ஓட்டி, அதனுடன் இணையாக இடது காலைப் பின்னுக்குக் கொண்டுவந்தார். சட்டென வலக்கையை மடக்கி சிலம்பத்தை உள்ளுக்குள் இழுத்தார். இழுக்கும்போதே வலது காலை முன்னே வைத்துக் காற்றில் துள்ளித் திரும்பினார். திரும்புகையில் காற்றில் சிலம்பத்தை வீசினார். அது விஷ்க் என ஒலியெழுப்பியது. ஒரு வினாடி தரையிலிருந்து உயர்ந்து காற்றைக் கிழிக்கும் உசேனின் சிலம்ப வீச்சை இளைஞர்கள் வியந்தார்கள்.

அவ்வளவுதான், தரையில் கால்களை வைத்து அடுத்த அசைவுக்குச் செல்லுமுன் சுழன்று கீழே விழுந்தார். வலது இடுப்பும் தோளும் தரையில் மோதின. சிலம்பம் கைகளிலிருந்து விடுபட்டு பட்பட்டென இரண்டு முனைகளும் மாறிமாறித் தரையில் பட்டு கால்களை அகலமாக வைத்து நடக்கும் மனிதனைப்போல் இரண்டடிகள் நடந்து தரையில் படுத்துக்கொண்டது. தலைவன் வந்து கைகொடுத்துத் தூக்கினான்.

‘ன்னா பெரியவரே, ன்னா ஆச்சு? பாலன்ஸ் அவுட்டாவ்துன்னா பிராக்டீஸ் இல்லன்னுதான் அர்த்தம் பெரியவரே. மத்தபடிக்கு உங்க ஸ்டான்ஸ்லாம் சான்ஸே இல்ல. ஆடிட்டன் பெரியவரே'

தரையில் உட்கார வைத்தார்கள். ஒரு இளைஞன் உசேனின் முதுகுக்குப் பின்னால் நின்று அவரைத் தன் கால்களில் சாய்ந்துகொள்ளாச் சொன்னான். சாய்ந்தார். மூச்சு வாங்கியது. சோடா வாங்கி வரவா எனக் கேட்டார்கள். பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்கள். புன்னகைத்துக் கைகாட்டி வேண்டாம் என்றார். சட்டைப்பையில் இருந்து ஒரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

"பெரியவரே சுகரா?"

புன்னகைத்தார். கால்களைச் சாய்மானத்துக்குத் தந்த இளைஞனுக்கு நன்றி சொல்லிவிட்டு கைகளைப் பின்னால் தரையில் ஊன்றிக் கால்களைப் பரப்பி நீட்டிக்கொண்டு அமர்ந்தார். மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார். வலது கையை உயர்த்தி சுழற்றிப் பார்த்தார். பாதிப்பு எதுவும் தெரியவில்லை. அப்படியே வலக்கை விரல்களைக் கூம்பு போலாக்கி வலப்பக்க இருப்பில் வைத்து அழுத்தி அழுத்தி உருட்டினார், கீழே விழுந்த வலிதான் உறுத்தியது. இடுப்பிலும் பாதிப்பு இல்லாததை உணர்ந்தார். ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும் எனச் சொல்லிவிட்டு இளைஞர்கள் அவர்கள் பயிற்சியைத் தொடரலாம் என்றார்.

மிட்டாயிலிருந்த சர்க்கரை அவருக்குத் தெம்பு தருவதற்குப் பத்து நிமிடங்களுக்கும் மேல் ஆனது. மெதுவாக எழுந்து மணலைத் தட்டிக்கொண்டு சிலம்பத்தைக் கேட்டார்.

கிழக்கு நோக்கி நின்றார். ஒரு இளைஞன் அவருடைய விளையாட்டை கைப்பேசியில் படம் பிடிக்கத் துவங்கினான். சார்பட்டா பாணி சிலா வரிசையை அனாயாசமாக முடித்தார். சார்பட்டா பரம்பரையின் ஏழு தட்டுப் பாடம் செய்வதாகச் சொல்லி நாலு வீடு, எட்டு வீடு, பன்னிரண்டு வீடு, பதினாறு வீடு ஆகிய நான்கு நிலைகளிலும் நின்று ஏழு இடங்களில் சிலம்பத்தால் தரையில் தட்டிப் பாடத்தை முடித்தார். சிலம்ப அசைவுகள் பகுள், தலைவார், ஜபுர், எல்லாமும் இயல்பாகப் பாடத்தில் வந்து சுழன்றதால், பாடத்தை உசேன் முடிக்கும்போது இளைஞர்கள் கைதட்டினார்கள்.

கைபேசியில் படம் எடுத்த இளைஞன், "பெரியவரே சார்பட்டா ஆட்டம் முன்னயே பார்த்திருக்கேன், ஆனா இவ்ளோ சுளுவா சிலம்ப ஓட்டம் பார்த்ததில்ல பெரியவரே. தலவார்ல மேல எடுத்துத் தட்றீங்ளே, சான்ஸே இல்ல பெரியவரே."

"சார்பட்டால தல்வார்னு எங்களுக்கு சொல்லிக்குடுத்தாங்க. நானும் உருது தல்வார்னுதான் ரொம்ப நாளா நினைச்சுக்குனு இருந்தேன். தல்வார்னா என்ன, தலைவார்னா என்ன, தாயைக் காத்த தனயன்ல எம்ஜியார் அடிக்றாப்ல அடிச்சமா அது போதும்ல" மீண்டும் புன்னகைத்தார்.

தலைவன் இளைஞன் ஓடிவந்து உசேனின் கைகளைப் பிடித்துக்கொண்டான். மோட்டார் சைக்கிளில் அவரை வீடுவரை கொண்டுவிடச்சொன்னான். உசேன் மறுத்துவிட்டார். தேனீர்க் கடையில் விட்டால் போதும் ஆட்டோ பிடித்துச் சென்றுவிடுவதாகச் சொன்னார்.

"மாமா, ஹயாத் பாஷா தர்காவுக்குப் போறதாச் சொன்னீங்க கெருகம்பாக்கத்துல உள்ள எங்கியோ லொக்கேஷன் காட்டுச்சு. வழியை மிஸ் பண்ணிட்டீங்களா? ஸ்ட்ரெய்ட் ரோடுதான? லெஃப்ட்லயே தர்கா வந்துருமே," மருமகள் கேட்டார்.

சிலம்பாட்டக் கதையைச் சொல்லி முடித்தார். மருமகளும் கொரோனா குறித்த கவலையைச் சொல்லிவிட்டு, தெரியாத இடங்களுக்குச் சென்றால் கவனமாக இருக்கச் சொன்னார். சர்க்கரை குறித்து இனியும் அசட்டையாக இருக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். தேவையென்றால் எதற்கும் மருத்துவமனைக்குச் சென்று கீழே விழுந்ததால் ஏதும் எலும்பு முறிவு உண்டாகியிருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்போமா என்றார்.

உடற்பயிற்சியில் முறையான படிப்பு இல்லையென்றாலும் பயிற்சி தொடர்பான அனுபவம் உள்ளதாகவும், எலும்பு முறிவு எதுவும் இல்லையென்றும் உசேன் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்தார். சிராய்ப்புகளுக்கு மருந்து போட டெட்டாலையும் பஞ்சையும் கேட்டார். மருமகள் மீண்டும் ஒருமுறை கொரோனாவை நினைவுபடுத்திவிட்டு டெட்டால் எடுக்கச் சென்றார்.

மற்றொரு நாள் உசேன் பையை எடுத்துக்கொண்டு மதனதபுரம் மீன் அங்காடிக்குச் சென்றார். மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டில் மீன் வாங்கியவர்க்கு மதனதபுரம் அங்காடி சிறியதாகத் தெரிந்தது.

"நெத்திலி கெளுத்திலாம் இங்க வராதாப்பா."

"வராது சார். வௌவால், வஞ்சிரம், சுறா இப்படித்தான் வரும்."

மீன் வாங்கிவிட்டு ஆட்டோவுக்காகக் குன்றத்தூர் சாலைக்கு வரும்போது, "பெரியவரே பெரியவரே" எனக் குரல் கேட்டது. உசேன் திரும்பிப் பார்த்தார். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பக் கலைக்குழு இளைஞன்தான் அழைத்தான்.

உசேனிடம் அதே புன்னகை. திரும்பி இளைஞனை நோக்கி நடந்தார். அவர் நடக்கும்போது, சிகப்பு நிற கேடியெம் மோட்டார் சைக்கிளில் தலைவன் வந்து குறுக்குத் தெருவில் இருந்து திரும்பி இணைந்துகொண்டான். உசேன் நெருங்கியதும் வண்டியைச் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கிப் பணிவாக நின்றான். பெரியவரே என்றழைத்த இளஞனும் தலைவனின் அவனருகில் நின்றுகொண்டான்.

"பெரியவரே, உங்க பேரு அன்னிக்குக் கேட்காம விட்டுட்டேன்."

"என் பேரு உசேன்'பா."

தலைவன் கைபேசியை எடுத்து எண்களைத் தட்டினான். யாரிடமோ பேசினான்.

"உங்களாண்ட தரச் சொன்னாங்க. மாஸ்டர், குடியாத்தத்துலேர்ந்து."

உசேன் பேசிவிட்டு, கைபேசியைத் தலைவனிடம் தந்தார்.

"பெரியவரே நீங்க ஆடுன ஆட்டத்த வீடியோ எடுத்தோம்லயா? அதை மாஸ்டருக்கு அனுப்புனோம் அவரு அவங்க அப்பாவுக்கு அனுப்புனாரு. மாஸ்டர் அப்பா குடியாத்தத்துல இருக்காரு. ஒங்க ஆட்டத்தைப் பார்த்துட்டு எங்கேர்ந்தாலும் தேடிக் கண்டு புட்சு மரியாத செய்யச் சொல்லியிருக்காரு. கெருகம்பாக்கம் வந்தா உங்களைப் பார்க்கணும்னும் சொல்லியிருக்காரு. உங்க செல் நம்பர் வேணும். அடுத்த ஞாயித்திக்கெழமை உங்களை வீட்டாண்ட வந்தே கிரவுண்டுக்குக் கூப்டுக்குனு போயிர்ரோம். கண்டிப்பா வரணும். நாங்க மரியாத செய்ணும்."

தலைவன் கைகூப்பினான்.

"ஆமாப்பா, இப்பதான் செல்லுலயும் சொன்னாரு. சார்பட்டாதுலேர்ந்து சண்டைப்பாடம் கொஞ்சம் காட்டித்தரச் சொன்னாரு. எப்படியாச்சம் ஃப்ரீயா இருந்தா கிரவுண்டுக்கு வந்துபோகக் கேட்டுக்குனாருப்பா. நானு ஃப்ரீயோ ஃப்ரீதான். இன்னும் ரெண்டு வாரத்துல எங்களுக்கு ரம்ஜான் மாசம் வந்துடும். நோன்பு வெப்போம். பகல்ல கிரவுண்டுக்கு வரமுடியாதுல்ல. அதுக்கு மின்னயே அடுத்த ஞாயித்திக் கெழமை காலைல கிரவுண்டுக்கு வந்துர்ரனே. அதுக்கப்புறம் ரம்ஜான் ஒரு மாசம் முடிஞ்ச பின்ன ஒவ்வொரு ஞாயித்திக் கெழமையும் கிரவுண்டுக்கு வந்துர்ரேன்."

"நல்லது பெரியரே. இனிமேப்பட்டு உசேன் பாய்னு கூப்புடலாங்களா?"

"உங்காருங்க உசேன் பாய், உங்கள உங்க வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் வந்து இவன பிக்கப் பண்ணிக்கறேன். டேய் மொனைலயே நில்றா, உசேன் பாயை ட்ராப் பண்ணிட்டு வந்துர்ரேன்."

கேடியெம் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பழக்கமில்லாத உசேன் பாய், மீன் கூடையைப் பிடித்துக்கொண்டு அப்படி அமர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்வதைத் தரையில் இருந்து மூன்றடி உயரத்தில் உடல் பறப்பதைப் போல உணர்ந்தார். அவருடைய மனம் உண்மையில் அப்படித்தான் பறந்துகொண்டிருந்தது.

அபுல்கலாம் ஆசாத்,
சென்னை
More

அதுதானே சரி…
Share: 
© Copyright 2020 Tamilonline