Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
சிறுகதை
ஏடெடுத்த உழவர்கள்
புதிர்
- ஸிந்துஜா|நவம்பர் 2020|
Share:
பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது.

"ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். "உடம்புக்கு எதாவது பண்ணறதா?"

"எல்லாம் திடமாத்தான் இருக்கு. இன்னிக்கி என்னமோ போக வேண்டாம்னு தோணிடுத்து. ஒரு நா, ஒரு போதுக்கு ரெஸ்ட்டுன்னு வச்சுக்கோயேன்" என்றார் பூவராகன்.

"நேத்திக்கிதான் எதுத்தாத்து மாமி சொல்லிண்டிருந்தா" என்றாள் காவேரி.

"என்ன நான் இன்னிக்கி கடைக்குப் போகமாட்டேன்னா?" என்று சிரித்தார். அவர் மனைவியும் சேர்ந்து சிரித்தாள்.

"இல்லே, அந்த மாமியும் அவாத்து மாமாகிட்ட சொன்னாளாம். எதுக்கு ஆபீசையே என்னமோ நீங்க ஒருத்தர்தான் தலையிலே தூக்கி வச்சுண்டு நிக்கற மாதிரி ஒருநாள் கூட ரெஸ்ட் எடுத்துக்காம, சனி ஞாயிறுன்னு கூடப் பாக்காம ஓடறேள்? ஒரு நா ஆபீஸ் போகாட்டா என்ன ஆயிடப் போறதுன்னாளாம். அதுக்கு அந்த மாமா இந்த காக்கா, குருவில்லாம் லீவு எடுத்துக்கறதா? நேத்திக்கு ஞாயித்துக்கிழமைன்னு பேரு, டாண்னு வழக்கமா வர்ற ஒம்பதரை மணிக்கு உன்னோட சமையல் கட்டு ஜன்னல்கிட்ட அந்தக் காக்கா வந்து நின்னுதோல்லியோன்னாராம்."

"அவர் தன்னை காக்கா குருவின்னுட்டார். நான் அடுத்தாத்துப் பூனை" என்று சிரித்தார் பூவராகன்.

"இது என்ன கேலிக்கூத்து?" என்றாள் காவேரி.

"அது எப்பவாவதுதானே வந்து பாலைக் குடிச்சுட்டு ஓடறது? போகட்டும், சூடா ஒரு காப்பி கொடேன். எப்பப் பாரு ஜிலீர்னு இந்தக் குளிர்ல கீழே காலை வைக்க முடியலே. வெளிலே ஒரு வாக் போகலாம்னா, சூட்டு கோட்டு எல்லாம் போட்டுண்டாதான் நகரவே முடியும்போல. மூணு மணிக்கே இருட்டிக்க ஆரமிச்சுடுத்து. இப்ப அஞ்சரைதான் ஆறது. லைட் போடாம ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடி அப்படி ஒரு இருட்டு. இந்த உபத்திரவத்தை எல்லாம் பாத்தா அக்கடான்னு மெட்றாசைப் பாக்கப் போயிடலாமான்னு தான் இருக்கு" என்றார்.

"ஆரமிச்சிட்டேளா. உங்களுக்கு எப்பவும் இந்த ஊரைக் கரிச்சுக் கொட்டிண்டு இருக்கணும். அந்த குடாப்பு மெட்றாஸ்லே எப்படித்தான் மனுஷா இருக்காளோ?" என்று சொல்லியபடி சமையல் அறைக்குச் சென்றாள் காவேரி

காவேரி இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவள் அல்ல. அவள் சென்னை வெய்யிலில் ஊறி வளர்ந்தவள். இந்த பெங்களூரை ஏர்கண்டிஷன்டு ஊர் என்று எந்தக் காலத்திலோ வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். இப்போது ஒரே காங்க்ரீட் காடாக மாறிவிட்டது. ஆனாலும் அவள் சென்னையைவிடப் பெங்களூர் குளிர்ச்சியான தேசம் என்று மாய்ந்து போவாள். பூவராகனும் சென்னை என்றது சென்னையை அல்ல. அவருக்கு இந்த ஊருக்கு வந்து முப்பது வருஷமாகி விட்டாலும் இன்னும் மதுரைதான் மனசில் இருக்கிறது. அங்கேயும் புழுதியும் சாக்கடையும் கட்டிடங்களும் வந்து ஊரை மாற்றிவிட்டன. ஆனால் அவருக்கென்னவோ மனதில் உள்ள பிரேமை கொஞ்சமும் குறையவில்லை.

மதுரை மாறியிருப்பது இருக்கட்டும். அந்த மீனாட்சியம்மன் கோயிலின் கம்பீரமும், விகசிப்பும் எப்படி மாறியிருக்கும்? ஊருக்கு நடுவே நான்கு திசைகளிலும் தமிழ் மாதங்களின் பெயர்களைச் சூடிக்கொண்டு இரவு என்று ஒன்றே இல்லாததுபோல அப்படி ஒரு சுறுசுறுப்பும், கலகலப்பும், ஆர்ப்பாட்டமும் குதித்து ஆடும் நகரில் கழித்த நாள்கள் பிரிவின் உளைச்சலால் நினைவில் ஏக்கத்தை எழுப்புகின்றன. மதுரையே மீனாட்சிதான். ஒரு பெண்ணைப்போல என்ன ஒரு அழகு! என்ன ஒரு அடக்கம்! என்ன ஒரு வீர்யம்!

ஆனால் வெளிக்குத்தான் காவேரி சென்னை வெய்யிலைக் குற்றம் சொல்லுகிறாள் என்று பூவராகன் நினைத்தார். அவளுக்கு அங்கே இருக்கும் அவளது மனுஷாளைப் போய்ப் பார்க்க விருப்பமில்லை. உறவுக்கூட்டம் அவ்வளவு உற்சாகக் கூட்டமாயில்லை என்று அவள் ஏதாவது விசேஷத்தை முன்னிட்டுப் போனாலொழிய அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பது இல்லை. காலத்தைப்போல் மனிதர்களும் மாறி விடுகிறார்கள் போலும். பின்னால் திரும்பி ஓடும் கடிகாரத்தை இனிமேல்தான் கண்டு பிடிக்கவேண்டும்.

காலிங் பெல் அடித்தது. பூவராகன் எழுந்து சென்று கதவைத் திறந்தார். சோமயாஜுலு.

"வாங்கோ உள்ளே" என்று அவரை வரவேற்றார். சோமயாஜுலு பூவராகனின் கடைக்கு அடுத்தாற்போல உள்ள வைரவன் செட்டியாரின் சிறிய ஃபேக்டரியில் வேலை பார்க்கிறார். கணக்கெழுதும் உத்தியோகம். வேலையில் மன்னன். செட்டியாருக்குக் கணக்கு எழுதும் கையைவிடப் பணம் எண்ணுவதில் சுத்தமாயிருக்கும் கைமீதுதான் பிரியமும், மரியாதையும் ஜாஸ்தி.

"பூவு! இந்த சோமுகிட்டே ஃபேக்டரியைக் கொடுத்திட்டு உலகத்தைச் சுத்திப் பாக்கிறேன்னு ஒரு வருஷம்கூட நான் போயிட்டு வரலாம். வச்சது வச்ச இடத்துல இருக்கும். சித்திரகுப்தன் கூட கணக்குல வீக்கா இருப்பான். ஆனா சோமுகிட்ட அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே" என்பார்.

பூவராகனுக்கு சோமயாஜுலுவைப் பல வருஷங்களாகப் பழக்கம். இரு குடும்பத்து மனிதர்களும் விசேஷங்களுக்கு மற்றவர் வீட்டுக்கு வந்து போகிற நெருக்கம் இருந்தது. சோமயாஜுலு பூவராகனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவர் ஐந்தாறு வருஷமாவது பூவராகனைவிட வயதில் சிறியவராயிருக்க வேண்டும். ஆனால் வேலைக் களைப்போ வாழ்க்கைக் களைப்போ ஏதோ ஒன்று அவரை முதியவராகக் காண்பிப்பதில் ஆசை கொண்டிருந்தது.

"இன்னிக்கி நீங்க கடைக்கு வரலையே, அதான் வீட்டுக்குப் போற வழியிலே வந்து பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். உடம்புக்கு ஒண்ணும் சுகக்கேடு இல்லியே?" என்று கேட்டார் சோமயாஜுலு

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. அங்க ஓட்ற ஈயை ஒரு நா வீட்டிலே ஓட்டலாமேன்னுதான். இங்க படுத்துண்டே கொஞ்சம் சௌகர்யமா அதைப் பண்ணமுடியுமே!" என்று சிரித்தார் பூவராகன்.

சோமயாஜுலு புன்னகை பூத்தார். "செட்டியார் காது கேக்கற மாதிரி சொல்லிறாதீங்க. இதென்னடா மாசம் ஈ ஓட்டி ஆயிரக்கணக்குல சம்பாதிக்கிற வேலைன்னு கேக்கறதுக்கு உங்க வீட்டுக்கே ஓடி வந்திருவாரு!"

பூவராகன் வாய்விட்டுச் சிரித்தார்.

சத்தம் கேட்டு காவேரி உள்ளேயிருந்து வந்தாள். அவரைப் பார்த்து "வாங்கோ. நன்னாயிருக்கேளா? தாட்சாயணி எப்படி இருக்கா? பாத்து ரொம்ப நாளாச்சு இல்லியா? அவளையும் கூட்டிண்டு வந்திருக்க மாட்டேளோ?" என்றாள்.

"அவர் ஆபீஸ் விட்டு ஆத்துக்குப் போயிண்டிருக்கார். உன்னை மாதிரி அவரும் என்னை ஏன் கடைக்குப் போகாம டிமிக்கி கொடுத்தீர்ன்னு கேட்டுண்டு இருக்கார்."

மற்ற இருவரும் சிரித்தார்கள்.
"இருங்கோ, காப்பி எடுத்துண்டு வரேன்" என்று காவேரி உள்ளே சென்றாள்.

பூவராகன் "பாக்டரி எப்படி நடந்துண்டிருக்கு?" என்று விசாரித்தார்.

"உங்களுக்குத் தெரியாததா? இந்த தொத்துநோயின்னு வந்தாலும் வந்துச்சு. சாகறதுக்கில்ல, உசிரோட வாழறதுக்கில்லே பயப்படுற மாதிரி கொண்டு வச்சிருச்சு?" என்றார் சோமயாஜுலு.

பூவராகன் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார். உலகம் பூராவும், டெலிஃபோனிலும், டிவியிலும், ஒருவருக்கு ஒருவர் நேரே பேசிக் கொள்ளும் போதும் சாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்க, இது என்ன புதுப் பார்வை? ஆனால் சோமயாஜுலுவின் வார்த்தைகளில் உண்மை தொக்கிக் கொண்டிருக்கிறதை யாரால் மறுக்கமுடியும்?

"ஃபேக்டரில மாசத்துல ஒரு வாரம் ஓடினா பெரிசுன்னு ஆயிருச்சு இந்த ரெண்டு மாசமா. முக்கால்வாசி ஆளுங்களை வேலைக்கி வரவேண்டாம்னு நிப்பாட்டி வச்சிருக்கு. பணத்தைப் போட்டு செஞ்சு வச்சிருக்கிற சாமான்லாம் வெளில போகாம கொடோன்ல மொடங்கிக் கெடக்கு. வரவேண்டிய பணம் வராததால, கொடுக்க வேண்டியவங்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லே. ஒரு இடம் போகமுடியலே. வர முடியலே. என்ன கண்ணராவி! குத்தம் ஒண்ணும் செய்யாமியே எல்லாரும் கைதி கணக்கா ஆயிட்டம் பாருங்க" என்றார் சோமயாஜுலு.

"சம்பளம் எல்லாம்?" என்று கேட்டார் பூவராகன்.

"வேலை பார்க்கறவங்க, வரவேணாம்னு நிப்பாட்டி வச்சிருக்கிறவங்க ஆக எல்லாருக்கும் செட்டியார் மொத மாசம் முக்காப் பணம் கொடுத்தாரு. போன மாசம் அது அரையாயிட்டுது. செட்டிநாட்டு வள்ளல்ம்பாங்களே, அது மாதிரிதான் கைக்காசு போட்டு செய்யிறாரு. தங்கமான மனுஷன். உங்களுக்குத்தான் தெரியுமே. ஆனா வரப்போற மாசம் அதே பாதி சம்பளம் கெடைச்சாலே அதிர்ஷ்டந்தான். இல்லே அதுவும் காலாயிருமோ என்னமோ தெரியலே" என்றார் அவர்.

"இப்ப இருக்கற விலைவாசிலே சம்பளம் வந்தாக்கூட வாய்க்கரிசி போடற மாதிரிதானே இருக்கு. இதுலே பாதி, காலுன்னு சம்பளம்னா?" என்றார் பூவராகன்.

"அதுவுங் கிடைக்காம இருக்கறவங்களை நினைச்சு சமாதானமா இருடான்னு கடவுள் சொல்லுறார் போல" என்றார் சோமயாஜுலு.

மனிதன் எப்படித் துருவித் துருவிப் பார்க்கிறான் என்று பூவராகன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

அப்போது காவேரி காப்பி எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். கூடவே ஏழெட்டு முறுக்கும் கொஞ்சம் மிக்சரும் நிரம்பிய ஒரு தட்டைப் பக்கத்தில் வைத்தாள்.

சோமயாஜுலு பூவராகனிடம் "நான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத் தொந்தரவு பண்ணத்தான் வந்திருக்கேன்" என்றார் சற்று உடைந்த குரலில்.

"அதுக்கென்ன, பண்ணுங்கோ" என்று பூவராகன் சிரித்தார்.

"நீங்க தப்பா நினச்சிரக் கூடாது. என் பொண்ணு காலேஜு படிப்புக்குன்னு ஆறு மாசம் முன்னால இருபதாயிரம் வட்டிக்குக் கடன் வாங்கினேன். மாசா மாசம் ரெண்டாயிம் கட்டணும். மூணு மாசம் கட்டினேன். அதுக்கப்புறம் ஒரு நயாபைசாகூட கட்ட முடியலே. கடன் குடுத்தவனும் என்ன பண்ணுவான்? நகையை அடமானம் வச்சுதான் கடன் வாங்கினது. இந்த மாசமும் அவனுக்கு ஒண்ணும் குடுக்கலேன்னா நகையை வித்துர்றேன்னு பயமுறுத்தறான்...." பேசிக் கொண்டிருந்தவர் மிச்சத்தைப் பூவராகன் புரிந்துகொள்ளட்டும் என்றோ என்னவோ நிறுத்தி விட்டார்.

"அதான் நான் தாட்சாயணியப் பாக்கறப்போ கழுத்துல வெறும் கவரிங் செயின் போட்டுண்டு இருந்தாளா?" என்று காவேரி கேட்டாள்.

சோமயாஜுலு தலையை அசைத்தார்.

பிறகு பூவராகனைப் பார்த்து "நீங்க எனக்கு ஒரு பதினைஞ்சாயிரம் கடனா தர முடியுமா?" என்று கேட்டார்.

அப்போது காலிங் பெல் ஒலித்தது. காவேரி சென்று கதவைத் திறந்தாள். "அட, அம்மா, அப்பா! வாங்கோ வாங்கோ. வரேன்னு ஒரு ஃபோன்கூடப் பண்ணலியே ! வாங்கோ" என்று அவர்களை வரவேற்றாள். காவேரியின் பெற்றோர் பசவன்குடியில் இருந்தார்கள். நாலில் இரண்டில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அது இன்று வாய்த்திருக்கிறது.

அவர்கள் வந்த சில நிமிடங்களில் சோமயாஜுலு விடை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார். அவர் கூடவே வாசல்வரை சென்ற பூவராகன் "நாளைக்குப் பாக்கலாமா?" என்றார். திரும்பி வந்த போது பூவராகவனின் மாமியார் காவேரியிடம் "ஆடிக் கார்த்திகைன்னு சேகர் உன்கிட்டே பணம் வச்சுக் கொடுக்கச் சொன்னான். ஒரு தட்டு கொடு" என்றபடி கையில் வைத்திருந்த பையிலிருந்து பழம், பூ, வெத்திலை பாக்கு, ஒரு புடவை, ரவிக்கைத் துணி எல்லாவற்றையும் எடுத்தாள். காவேரி கொண்டுவந்த தட்டில் அவற்றை வைத்துவிட்டு அதன் மேலாக ரூபாய் நோட்டுக்களை வைத்தாள்.

"ஐயாயிரமா? எதுக்கமா இவ்வளவு?" என்றாள் காவேரி.

"ஏதோ கொடுக்கறான். வாங்கி வச்சுக்க வேண்டியது மட்டும்தான் உன் பொறுப்பு" என்று அவளுடைய அப்பா சிரித்தார்.

சேகர் காவேரியின் அண்ணா. அவன் வாஷிங்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். காவேரி அம்மாவை நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தாள். அவர்கள் எல்லோரும் சற்றுநேரம் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு காவேரியின் அம்மா அப்பா விடைபெற்றுச் சென்றார்கள்.

பூவராகன் "பாவம், அந்த சோமயாஜுலு என்னமோ கேக்க ஆரமிச்சு உங்கப்பாம்மா வந்ததாலே கேக்காம போயிட்டார்" என்றார்.

"அதான் பதினைஞ்சாயிரம் கடனா கேட்டாரே!" என்று காவேரி அவரை உற்று நோக்கினாள் 'என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்பதுபோல.

"பாத்தா பாவமா இருக்கு" என்றார் பூவராகன். "ரொம்ப நல்ல மனுஷன்!"

"கடனை வாங்கிண்டு போறவரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்லவளாத்தான் இருப்பா" என்றாள் காவேரி.

'ஏன் இவ்வளவு நிஷ்டூரமாப் பேசறே?' என்பது போல் பூவராகன் மனைவியைப் பார்த்தார்.

"நானும்தான் இந்தாத்துல இருந்து பாத்துண்டு வரேனே. மூணு வருஷம் மின்னாலே உங்க அண்ணா பொண்ணு பிசினஸ் பண்ணப் போறேன் சித்தப்பா. ஷூரிட்டி பணமா அஞ்சு லட்சம் கட்டணும். எப்படியோ நாலரை லட்சம் பொரட்டிட்டேன். எனக்கு நீங்க ஒரு அம்பதாயிரம் தருவேளான்னு ஒரு வாரமா கேட்டுண்டு வந்து வாங்கிண்டு போனா. எங்க குடும்பத்திலேயே பிசினஸ் பண்ணப்போற முதல் பொண்ணுன்னு தலைக்கு மேலே ஏத்தி வச்சு கூத்தாடிண்டு போய்க் கொடுத்தேள். அதுலேர்ந்து இன்னி வரைக்கும் ஒரு பைசா வந்ததா? மாசா மாசம் ஸ்டாஃபுக்கு சம்பளம் தரா. பவர் பில் கட்டறா. சேல்ஸ் டாக்ஸ்காரன், இன்கம்டாஸ்காரன்லாம் கண்ணுக்குப் படறான்கள். எல்லா டாக்சும் கட்டறா. பழைய காரை வித்துட்டு பேங்க் லோன் போட்டேன்னு சொல்லி புதுக் கார் வாங்கிட்டா. ஆனா சித்தப்பாக்கு இன்னிவரைக்கும் ஒரு ஆயிரம் ரூபாகூட திருப்பித்தர மனசு வரலே. அம்பதாயிரம் பிச்சைக்காசுன்னு நினைச்சிட்டா போல."

"சோமயாஜுலுக்குக் கொடுக்க வேணாங்கறியா?" என்று கேட்டார் பூவராகன்.

"நீங்களே யோசிச்சுப் பாருங்கோ" என்றாள் காவேரி. "இந்த மாசமே கால் சம்பளம்தான் வரலாம்னார். அடுத்த மாசம் அதுகூட வருமோ என்னவோ? பேப்பர்லயும் டிவிலயும் போறவா வரவா எல்லாம் இந்த வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கற வரையிலும் இப்படியேதான் இழுபறி நடந்துண்டு இருக்குங்கறா . மருந்து கண்டுபிடிச்சு விக்கக் கொண்டு வரதுக்கு இன்னும் ஒரு வருஷம் ஒண்ணரை வருஷம் ஆகுமாமே. இதெல்லாம் தெரிஞ்சிண்டே தெருவிலே காசை இறைக்கனுமா?"

"சரி போ. காலமே பாத்துக்கலாம்" என்றார் அவர்.

"இதெல்லாம் பாத்தா 'எனக்குக் கடன் கொடு'ன்னு நாமளே முந்திண்டு போயி கடன் கேக்க வரவாகிட்டே கை நீட்டிடலாம் போல இருக்கு" என்றாள் காவேரி.

"சீ அல்பம் மாதிரி பேசிண்டு" என்றார் பூவராகன்

"அப்படியே கொடுக்கணும்னு நினைச்சாக்கூட ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுக்கலாம். அது திரும்பி வரலேன்னாலும் பரவாயில்லே" என்றாள் காவேரி.

"சொல்றதை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் கொஞ்சம் கொடுங்கிறியே. பாவம். தாலியை அடகு வச்சுக் கடன் வாங்கியிருக்கா புருஷனும் பொண்டாட்டியும் சேந்து. இந்த ஆளுக்குப் பதிலா செட்டியார்கிட்ட வேறே எவனாவது வேலை பாத்துண்டிருந்தா இந்த நேரத்துக்கு அவன் மத்தவாளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்திண்டிருப்பான்."

"ஆமாம். கவரிங் செயினைப் போட்டுண்டு அவளைப் பார்க்கக் கண்ராவியாதான் இருந்தது" என்று சொல்லிக்கொண்டே காவேரி உள்ளே சென்றாள். ஆனால் அவள் கடன் கொடுப்பதுபற்றி மேலே வேறு எதுவும் சொல்லாமல் போகிறாளே என்று பூவராகன் நினைத்தார்.

★★★★★


மறுநாள் யஷ்வந்த்பூர் போய்க் கடையில் உட்கார்ந்ததும் முதல் வேலையாக அவர் கடையிலிருந்து ஆளனுப்பி சோமயாஜுலுவைக் கூட்டிவரச் சொன்னார். திரும்பி வந்தவன் அவர் அன்று வேலைக்கு வரவில்லையாம் என்று தெரிவித்தான். வேறு எங்காவது பணத்தைத் தேடிக் கொண்டு போயிருக்கிறாரோ என்று பூவராகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு பதினைந்தாயிரம் கேஷாக வாங்கிக் கொண்டார். அவர் ஆட்டோ பிடித்து பதினைந்தாம் கிராஸ் முனையில் இறங்கிக்கொண்டார். எதிர்ப்பட்ட சம்பிகே மெயின் ரோடு வழக்கம்போலக் கூட்டமும் இரைச்சலுமாக இருந்தது. அவர் இடதுபக்கம் திரும்பி கரூர் வங்கியைத் தாண்டிச் செல்லவேண்டும். மெயின் ரோடில் இடப்பக்கம் திரும்பினார். யதேச்சையாக அவர் பார்வை வங்கியின் வாசலில் விழுந்தபோது காவேரி வங்கியை விட்டு வெளியே வந்து படிகளில் இறங்குவதைப் பார்த்தார்.

நேற்று அவள் பெற்றோர் கொடுத்த பணத்தை வங்கியில் போட ஒருவேளை வந்திருப்பாள் என்று பூவராகன் நினைத்தார். அவள் இப்போது வங்கி வாசலிலிருந்து வலப்பக்கம் திரும்பி அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டும். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள நேரிடும். அவர் எதற்காகக் கடையை விட்டு இந்த நேரத்தில் இங்கே வந்தார் என்று நிச்சயம் கேட்பாள்.

ஆனால் அவள் வங்கி வாசலிலிருந்து இடப்பக்கம் திரும்பி சற்றுத் தூரம் நடந்து சாலையைக் கடந்து எதிர்ப்புறத்திற்குச் சென்றாள். ஒரு வேளை சுனில் ஃபேஷனில் டிரஸ் வாங்கப் போகிறாளோ என்று நினைத்தார். ஆனால் அவள் அந்தக் கடையையும் கடந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மெயின் ரோட்டிலிருந்து கீழே இறங்கிச் சென்ற தெருவில் நடந்தாள்.

அந்தத் தெருவில்தான் சோமயாஜுலுவின் வீடு இருந்தது.

ஸிந்துஜா,
பெங்களூரு
More

ஏடெடுத்த உழவர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline